அந்த கோவிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோவிலுக்கு முன்புள்ள கதவுக்குத் தான் பூஜை நடைபெற்று வருகிறது.
சிலைகள் இல்லாத கோவில்; கதவுக்கே பூஜை
அந்த கோவிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோவிலுக்கு முன்புள்ள கதவுக்குத் தான்
பூஜை நடைபெற்று வருகிறது. இங்கு நெய் தீபமின்றி வேறு தீபம் ஏற்றப்படுவதில்லை. அன்ன
நைவேத்தியம் கிடையாது. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமுமே நைவேத்தியம்.
தேவதானப்பட்டி, மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் தான் இந்த வித்தியாசமான
நடைமுறை உள்ளது.
காஞ்சனா என்னும் காட்டுப் பகுதியை உள்ளடக்கிய வங்கிசபுரி
எனும் நகரைத் தலைநகராகக் கொண்ட நாட்டை சூலபாணி என்னும் அசுர மன்னன் ஆண்டு வந்தான்.
இந்த மன்னன் சிவபெருமானை வேண்டி மிகவும் கடுமையான தவம் செய்து பல அரிய வரங்களைப் பெற்று
இருந்தான். அதில் தன்னைக் காட்டிலும் அதிக வலிமையுடன், தான் பெற்ற அரிய சக்திகளுடன் ஆண் மகன் ஒருவன் தனக்கு பிறக்க
வேண்டும் என்பதும் ஒன்று.
இந்த தவத்தின் பலனால் அவனுக்கு ஆண்மகன் ஒருவன் பிறந்தான்.
அவனுக்கு வச்சிரதந்தன் எனும் பெயர் சூட்டி வளர்த்து வந்தான். தவத்தின் பலனாக பல
அரிய சக்திகளுடன் பிறந்த அவன் பின்னர் அப்பகுதியின் அரசனானான். அவனுக்கு
மாங்குசாசனன் என்பவன் அமைச்சராகவும், துட்டபுத்தி என்பவன் தளபதியாகவும் இருந்தனர். இவர்கள்
இருவரின் ஆலோசனைப்படி காட்டுப் பகுதியிலிருந்த தவசிரேஷ்டர்களையும், வேத விற்பன்னர்களையும்
கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அவன் பிறந்த
பிறப்பிலேயே பல விதமான சக்திகளைப் பெற்றிருந்ததால் யாராலும் அவனை எதிர்க்கவே
முடியவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் அவனுடைய தொல்லைகள் பற்றி பிரம்மனிடம்
சென்று முறையிட்டனர். அவரும் வச்சிரந்தனை அழிக்க தேவேந்திரனை அனுப்பி வைத்தார்.
தேவேந்திரன் வச்சிரதந்தனின் தளபதியான துட்டபுத்தியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க
முடியாமல் தனது படையையும் இழந்து போர்க்களத்தில் இருந்து ஓடிவிட்டான்.
அப்படி ஓடிய தேவேந்திரன், வச்சிரதந்தனை பராசக்தியால் தான் அழிக்க முடியும் என்று நினைத்து
மற்ற தேவர்களுடன் பராசக்தி காமாட்சியம்மனாக எழுந்தருளி உள்ள காஞ்சிபுரம் சென்று அம்மனிடம் வேண்டினர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்ற காமாட்சியம்மன் அவனை அழிக்கப் புறப்பட்டார். வங்கிசபுரி
வருகின்ற வழியில் பன்றி மலை என்ற வராகமலையில் இறங்கி அங்கே துர்க்கையை
வச்சிரதந்தனுடன் போரிடவும் அனுப்பி வைத்தார்.
துர்க்காதேவி அங்கிருந்து புறப்பட்டு வங்கிசபுரி வந்து
வச்சிரதந்தனுடன் போர் புரிந்தார். அவனுடைய தலையைத் துண்டித்தார். சில நிமிடங்களில்
அவன் சிங்கத் தலையுடன் நின்றான். அந்தத் தலையையும் துண்டித்தார். சில நிமிடங்களில்
அவன் புலித் தலை பெற்று நின்றான். அந்தத் தலையையும் துண்டித்தார். சில
நிமிடங்களில் அவன் கரடித் தலையுடன் நின்றான். அந்தத் தலையையும் துண்டித்தார். சில
நிமிடங்களில் அவன் காட்டெருமைத் தலையுடன் நின்றான். இப்படியே ஒவ்வொரு தலையாகத்
துண்டிக்கப்பட, சில
நிமிடங்களில் பல காட்டு விலங்குகளின் தலையுடன் மாறி மாறித் தோன்றிக்
கொண்டிருந்தான். இந்த அரக்கனை ஒழிக்க காமாட்சி அம்மன் ஒருவராலேயே முடியும் என்ற
நோக்குடன் துர்க்காதேவி அங்கிருந்து திரும்பினார்.
துர்க்காதேவி காமாட்சியம்மன். அழைத்துக் தோல்வியுடன் திரும்பியது
கண்டு கோபத்துடன் துர்க்காதேவியையும் கொண்டு அங்கிருந்து வங்கிசபுரி வந்தார்.
வச்சிரதந்தன் ஏவுகின்ற ஆயுதங்கள் காமாட்சியம்மனை மூன்று முறை வலம் வந்து மறுபடியும்
அவனிடமே திரும்பிச் சென்றது. வச்சிரதந்தனும் அந்த அம்மனை வணங்கினான். பின்னர்
அம்மனுடன் போரிடத் தொடங்கினான். துர்க்கையுடன் போரிட்டது போல் பல்வேறு தலைகளுக்கு
மாறினான். காமாட்சி அம்மன் துர்க்கையிடம், வச்சிரதந்தன் தலை துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தவுடன்
அதைக் காலால் நசுக்கி அழித்து விடும்படி கூறி வச்சிரதந்தனின் தலையைத்
துண்டித்தார். துர்க்கையும் அந்தத் தலையை காலால் நசுக்கி அழித்தார். அசுரன் மறு
தலை எடுக்க முடியாமல் அழிந்தான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
அவன் ஆண்ட வங்கிசபுரிக்கு தலேச்சுரம் என்ற மற்றொரு பெயரும்
உண்டு. இது தெய்வங்களை வழிபடுவதற்காக
பாண்டிய மன்னனால் தானமாக அளிக்கப்பட்டதால் தெய்வதானப்பதி என்று அழைக்கப்பட்டது.
பின்னர் இந்தப் பெயர் மருவி தேவதானம் என்று ஆனது. தற்போது இது தேவதானப்பட்டி
என்றாகி விட்டது.
இங்குதான் உருவம் இல்லாத கோலத்தில் மூங்கிலணைக் காமாட்சி
அம்மன் கோவில் கொண்டுள்ளார். இன்றைய தேவதானப்பட்டி, நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் ராஜகம்பள நாயக்கர்
சமூகத்தைச் சேர்ந்த பூசாரி நாயக்கர் என்பவரின் தலைமையிலான பாளையத்தின் ஆட்சியாக
(ஜமீன்தார் ஆட்சி) இருந்து வந்தது.
இந்த ஜமீனைச் சேர்ந்த மாடுகளை ஒருவன் மேய்க்கக் கொண்டு
செல்வான். அவன் மேய்க்கக் கொண்டு செல்லும் மாடுகளில் ஒன்றான ஈனாத குட்டி போடாது பசு
ஒன்று தினமும் அந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று மாலையில்தான் திரும்ப
வரும். அந்த ஒரு பசு மட்டும் எங்கே செல்கிறது? எதற்குச் செல்கிறது? என்று அறிய ஆவல் கொண்ட அவன் ஒருநாள் அந்தப் பசுவைப்
பின்தொடர்ந்து சென்றான்.
அங்கு மூங்கில் புதர் ஒன்றில் அழகிய வடிவமான தேவ அம்சம்
பொருந்திய பெண் அந்த பசுவிடம் பால் அருந்துவதை கண்டான். அவன் கண்டது சாதாரண பெண்
அல்ல. அது காமாட்சி அம்மன். ஒளிப்பிழம்பாய் விளங்கும் அந்த அன்னையை பார்த்தவுடன்
மாடுமேய்ப்பவன் கண்கள் குருடாகிப் போய்விட்டன.
அவன் ஜமீன்தாரிடம் சென்று நடந்ததைக் கூறினான். இது தெய்வக்
குற்றமாக இருக்கும் என்று கருதிய ஜமீன்தார் பூஜைகள் செய்தார். அப்போது அசரீரியாக,
இந்தப் பகுதியில் வச்சிரதந்தன் என்ற அசுரனை அழித்து
அமைதிக்காக தவமிருக்கும் என்னைக் கண்ட மாடுமேய்ப்பவன் என்னுடைய ஒளி தாங்காமல் அவன்
கண்களை இழந்தான். வரும் ஒரு வாரத்திற்கு உள்ளேயே இந்த ஆற்றில் பெருமழை பெய்து
வெள்ளம் பொங்கி வரும். அந்த வெள்ளத்தின் பொழுது நான் வெள்ளத்தில் மிதந்து வருகின்ற
மூங்கில் பெட்டியில் உக்கார்ந்து வருவேன். ஒரு இடத்தில் மூங்கில் புதர் கொண்டு
அணையிட்டு பெட்டியைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பெட்டியை எடுத்து வைத்து வழிபட்டால் பார்வை இழந்த
மாடு மேய்ப்பவனுக்குக் கண்கள் தெரியும். கன்னித் தெய்வமான என்னருகில் இல்லறத்தில்
இருப்பவர்கள் குடியிருக்கக் கூடாது. நெய்விளக்கு தவிர வேறு விளக்குகளை ஏற்றக்
கூடாது. தேங்காயும், பழமும்
நைவேத்தியம் செய்தால் போதும். அன்ன நைவேத்தியம் கூடாது என்று கூறினார்.
அம்மனின் வாக்குப்படி மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வந்தது.
ஜமீன்தாரும் அந்த ஊர் மக்களும் மஞ்சளாற்றின் கரையில காத்து நின்றனர். ஆற்றில்
மூங்கில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. பெட்டியைக் கண்ட உடனே அவர்கள் மூங்கில்
புதர் அணையிட்டு பெட்டியை அவர்கள் நிறுத்தினார்கள். கண்களை இழந்த மாடுமேய்ப்பவன்
அந்தப் பெட்டியை எடுத்தான். அந்தப் பெட்டியைத் தொட்டவுடன் அவனுக்கு கண்கள் உடனே தெரியத்
தொடங்கியது. காக்கும் தெய்வம் காமாட்சி அம்மனின் சக்தியை நேரில் கண்ட மக்கள்,
பக்தியுடன் வணங்கத் தொடங்கினர். அம்மன் அசரீரியாக கூறிய
நடைமுறைதான் இன்றளவும் இந்த கோவிலில் பின்பற்றப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகிலுள்ள
தேவதானப்பட்டி என்னும் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர்
தொலைவில் இந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : சிலைகள் இல்லாத கோவில் - கதவுக்கே பூஜை - தலவரலாறு, காமாட்சியின் சக்தி, அமைவிடம், ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : A temple without idols - Puja only at the door - Historical history, power of Kamakshi, location, spiritual references in Tamil [ spirituality ]