எல்லா ஊர்லையும் தானே திருவிழா நடக்குது? எல்லா ஊர்லையும் தான உற்சவர் வலம் வர்றாங்க? அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்..
அழகர் திருவிழா
எல்லா ஊர்லையும் தானே
திருவிழா நடக்குது? எல்லா ஊர்லையும் தான உற்சவர் வலம் வர்றாங்க?
🙏🏻🔥🌀அழகரு_வருஷத்துல ஒரு தடவ
மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்..
தங்கச்சி மீனாச்சி
கல்யாணத்தப் பாக்க ஆசப்பட்டு அழகர்மலையில இருந்து மதுரைக்கு கிளம்புவாரு…
சும்மால்லாம் கிளம்பிட முடியாது,
🙏🏻🔥அங்க_காவல் தெய்வமான #பதினெட்டாம்படிக்_கருப்புகிட்ட உத்தரவு
வாங்கிட்டு தான் கிளம்ப முடியும்.
அங்க இருக்கிற ஒத்த
கருப்ப சாமி ஓராயிரம் கருப்பசாமியா மாறி பக்தர்களுக்குள்ள இறங்கி பாதுகாப்புக்குக் கூடவே வரும்.
சாமி இறங்கினவங்க
’திரி’ப் பந்தம் ஏந்தி, கையில் மொரட்டு அருவாளைத் தூக்கிக்கிட்டு #கருப்பன்_அருளோட சாமியாடிட்டு
வருவதை எதிரில் நின்னு பார்த்தா அடிவயித்துல அமிலம் சுரக்கும்.
வருஷத்துக்கொரு தடவ
வெளியே வர்றவர சும்மா விட்டுட முடியுமா?
வர்ற வழியில கள்ளந்திரி,
அப்பன் திருப்பதின்னு
எல்லா ஊர்லயும் மண்டகப்படி போட்டு மரியாத
பண்ணி கொஞ்சிக் கூத்தாடும் பக்தர்கள் அன்புல தங்கச்சி கல்யாணத்துக்கு
நேரத்துக்குப் போகணும்ங்கிறதையே மறந்துடுவாரு.
🙏🏻💃🏻🔥இந்தப்பக்கம் எங்க அன்னை
#அகிலாண்ட_கோடி_பிரமாண்ட_நாயகி மீனாச்சிக்கும், எங்கப்பன் சொக்கனுக்கும் கல்யாணம் நடந்திடும்.
எங்க வீட்டுக் கல்யாணக் கொண்டாட்டத்துல அந்தப் பக்கம் அழகர் இன்னும்
வரலைங்குறதையே இவய்ங்களும் மறந்துடுவாய்ங்க… மங்கையர்க்கரசி
திருக்கல்யாணத்துக்காகவே வருஷம் பூராம் காத்திருந்து மதுரை மகராசிக பூராம்
மாங்கல்யம் மாத்துவாங்க.
💃🏻🙏🏻அதாவது,_அன்னிக்கு அம்புட்டு
வீட்லயும் கல்யாணம்தான்
ஆத்தாவையும் அப்பனையும் தேர்ல வச்சு ஊர்வலம் சுத்தி வந்தப்புறம் தான்,
ஐயய்யோ அழகரு வாராம
எல்லாம் நடந்துடுச்சேன்னு இவங்களுக்கு சுருக்குனு இருக்கும்.
இருந்தாலும் எப்படியாவது
சமாதானப் படுத்துவோம்னு தென்கரையில நினைச்சுட்டு இருக்கிற நேரத்துல, வடகரையில அழகரு ஆடி
அசஞ்சு மதுரைக்குள்ள வந்துடுவாரு.
இராத்திரி கொஞ்சம்
காலாறுவோம்னு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு போயிட்டு, அங்க ஏற்கனவே வந்து
காத்திருக்கும் நம்ம ஆண்டாள் நாச்சியின் மாலைய தோளில் வாங்கிச் சாத்திக்கிட்டு,
மறுபடி தங்கக் குதிரையில
ஏறி கோயில விட்டு வெளியே வரும் அழகைப் பார்த்ததும், ” கோயிந்தா…. கோய்ய்ந்தோவ்வ்வ்
”னு இலட்சக்கணக்கான குரல்கள் ஒன்னா கூப்பிடும் பாருங்க…..
ஆத்மா
சிலிர்த்தெழுறதுன்னா என்னானு அப்ப தெரியும்...
சித்திர மாசக் கத்திரி
வெயிலுல இத்தன இலட்சம் பேரு கூடியிருந்தா வெந்து போயிட மாட்டீங்களானு
வெளியூர்க்காரங்களுக்கு தோணலாம். ஆனால், தண்ணீர் பீச்சும்
பக்தர்கள் தோள் வலிக்க வலிக்க சந்தோசமா
தோப்பறையில தண்ணிய
நெப்பிக்கிட்டு ரோட்டிலேயும் ஆகாசத்திலும்
தண்ணியப் பீச்சிப் பீச்சு மதுரையவே குளிர வச்சுடுவாங்க… (தோலினால் செய்யப்பட்ட பை.
ஒரு பக்கம் பெரிய துவாரம் வழியாக நீரை ஊற்றி அடைத்துவிட்டு இன்னொரு பக்கம் சின்னதா
ஒரு துவாரம் வழியாக நீரினைப் பீச்சி அடிப்பது).
இப்படி ஒவ்வொரு
மண்டகப்படியா அழகரை இழுத்துப் பிடிச்சு வாங்கய்யா வாங்கய்யானு மதுரக்காரய்ங்க
பாசத்தைக் கொட்டிக் கொட்டி அலைக்கழிச்சு ஆத்துக்குள்ள இறங்கிறப்ப விடிஞ்சுடும்…
விடியக்காலம் அழகர்
ஆற்றில் இறங்கும் போது ஒட்டு மொத்த மதுரையும்,
இலட்சக்கணக்கான குரலில் அடிமனசிலிருந்து
“ கோவிந்தாஆஆஆஆ…..”னு கூப்பிடும் போது பாற்கடலிலிருந்து #பரந்தாமன் லேசா திரும்பி
மதுரையைப் பாப்பாரு… எங்க அழகர் தங்கக் குதிரையில் பட்டுடுத்தி பவனிக்கும் அழகில்
மயங்கி மறுபடி சயனத்துக்கே போயிருவாரு..
இதான் #எங்க_ஊரு_திருவிழா...உலகில்
வேறெங்கும் இவ்வளவு உயிரோட்டமாய் ஒரு திருவிழா சாத்தியப்படுமா..?
தெரிலை...
எங்க
பெண் வாரிசுகளை மீனாட்சியாகவும்..ஆண் வாரிசை அழகராகவும் கொண்டாடுவோம்பா..
ஒட்டு மொத்த மதுரை
மக்களின் பொதுவான குலதெய்வமாய் அழகரும் மீனாட்சியும் கொண்டாடுவோம்..
நம்ம_மதுரை_சொர்க்கம் பா.
அண்ணே!...
அழகரு வர்றப்ப கூடுற
கூட்டத்தில் இருக்கிற 90% பேருக்கு திவ்யப் பிரபந்தம் தெரியாது! முக்காவாசி
பேருக்கு பெரியாழ்வாரைத் தெரியாது. பாதி பேருக்கு மேலே ராமானுஜரைத் தெரியாது.
ஆனால், நெத்தி நிறைய நாமம்
போட்டுக்கிட்டு கோவிந்தாஆஆஆ.... கோபாலாஆஆனு அழகரை வர்ணித்து பாடி ஆனந்தமா
கொண்டாடுறாங்க.
அங்கே யாருக்கும் எந்த
வேண்டுதலும் இல்லை! எங்க அழகர் வர்றாரு... அவரை வரவேற்கணும் . நல்லா கவனிச்சு
பூப்பல்லாக்குல வழியனுப்பணும். அதுக்கு மேலே எதுவுமே சிந்தனையில இருக்கிறதில்லை.
இது வேற எங்கேயெல்லாம் நடக்குதுனு சொல்லுங்க பார்ப்போம்? இதுக்கெல்லாம் காரணம்
என்ன தெரியுமா?
மத்த எல்லா இடத்திலும்
நாம சாமியைப் பார்க்க மைல் கணக்கா பயணம் பண்ணி கோவிலுக்குப் போவோம். இங்க, எங்க அழகரு மைல் கணக்கா பயணம் பண்ணி எங்களைப் பார்க்க
வர்றாரு... இதுக்கு மேலே வேற என்ன வேணும் இந்த மனுச ஜென்மங்களுக்கு!
அழகர் ஆற்றில்
இறங்கும்போது இந்த ஐந்தினை அனுபவிக்காத பக்தர்கள் யாரும் இருக்க முடியாது.
1, நீர் மோர்/பானகம்
உள்ளிட்ட தண்ணீர்ப் பந்தல்.
2,. சர்க்கரைச் சொம்பு
கர்ப்பூர ஆரத்தி
3, பூச்சாண்டி, சேக்காளி, கோமாளி வேஷம் கட்டுதல்
4, திரி எடுத்து ஆடுதல்.
5, தண்ணீர்ப் பீச்சுதல்.
விழாக் காலம் முழுவதும் ஆங்காங்கே, நீர் மோர், புளி -வெல்லம் -சுக்கு
போட்டு கரைத்த பானகரம்(பானகம்) மற்றும் தண்ணீர் வழங்கும் பந்தல்கள் பக்தர்களுக்காக
அன்புடன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்.
ஒரு சொம்பில், சர்க்கரை நிறைத்து அதை
வாழை இலை கொண்டு மூடி அதன்மீது கற்பூரம் வைத்து ஏற்றி அழகருக்கு ஆராதனை செய்வது.
கிட்டத்தட்ட சர்க்கஸ்
கோமாளிகள் போல வேடம் அணிந்து விழாக்களம் முழுக்க வலம் வருவார்கள். சோவிகள் (சோழி)
கொண்டு வாய் மற்றும் பற்களை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
திரியெடுத்து ஆடுதல்:
இது மதுரையின் சிறப்பு. அதாவது, இப்படி திரியெடுத்து ஆடி வருபவர்கள், அழகர் மலையின் காவல் தெய்வமான
கருப்பசாமிகளின் பிம்பங்கள் எனலாம். அழகர் மதுரைக்குக் கிளம்பும்போது அவருக்குத்
துணையாக கருப்பசாமியும் உடன் வருவார். ஒற்றை ஆளாக வராமல், பக்தர் மீது இறங்கி
ஆயிரக்கணக்கான கருப்பசாமியாக துணை வருவார்.
இப்படி அருள் இறங்கிய
பக்தர்களின் ஒரு கையில் பெரிய அரிவாளும், இன்னொரு கையில் எரிந்து கொண்டிருக்கும் திரியும்
இருக்கும். இந்தத் திரியானது கிட்டத்தட்ட கூம்பு வடிவில், எண்ணெயில் பல நாட்களாக
ஊற வைக்கப்பட்ட துணிகள் கொண்டு செய்யப்பட்டிருக்கும்.
அழகர் இரவில்
பயணிக்கும்போது வெளிச்சத்திற்காக இந்த கொளுத்திய திரியும், பாதுகாப்புக்கு
அரிவாளும் எடுத்து ஆடி வருவார்கள். கூட்டத்தில் இவர்களைக் கண்டால் பக்தகோடிகள்
இவர்களிடம் ஆசி பெற்று, திரியில் இருக்கும் கருக்கலை (கரியை) நெற்றியில் பூசிக்
கொள்வார்கள்.
தண்ணீர்ப் பீச்சுதல் :
இதுவும் மதுரையில் அதுவும் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தில் மட்டும் நிகழக்கூடிய
சேவை. அழகர் மதுரைக்குள் நுழையும்போது எதிர்சேவை செய்வதில் தொடங்கி அடுத்த நாள்
இரவு ராமராயர் மண்டபம் அடையும் வரை தண்ணீர்ப்பீச்சுதல் சேவை இருக்கும்.
தண்ணீர்ப் பீச்சுதல்
என்பது கள்ளழகருக்கான நேர்த்திக் கடனாக யாரும் செய்வதில்லை. அதாவது ஏதேனும்
வேண்டிக் கொண்டு, அது நிகழ்ந்தால் இதைச் செய்வதாக யாரும் செய்வதில்லை. காரணம், இது அழகருக்கான
சேவையாகவும்,
அவரை தரிசிக்க வரும்
அடியவர்களுக்கான சேவையாகவும் செய்து வருகின்றனர். இது பெரும்பாலும் மதுரையைச்
சுற்றியுள்ள கிராமத்தினர் செய்யும் சேவையாகவே இருந்து வருகிறது.
தோப்பறை (தோலினால்
செய்யப்பட்ட அறை) பாடம் செய்யப்பட்ட ஆட்டுத் தோலினில் இரண்டு துளைகள் விட்டுத்
தைத்திருப்பர். ஒரு துளை மிகக் குறுகலாகவும், இன்னொரு துளை சற்றே பெரியதாகவும் இருக்கும். குறுகலான
துளையில் ஒரு குழாயினைச் செறுகி (குழாய்கள் பிற்பாடு பல வகைகளில் வந்துவிட்டன)
அதனை இறுகக் கட்டி விடுவர். பெரிய துளையை அவ்வப்போது கட்டிக் கொள்ளவும்
அவிழ்த்துக் கொள்ளும்படியும் இருக்கும்.
அதன் வழியே தண்ணீரினை
ஊற்றி நிரப்பி கட்டி விடுவார்கள். இவ்வாறு கட்டப்பட்ட தோப்பறையை தன் தோளில்
போட்டுக் கொண்டு அதிலிருக்கும் தண்ணீரை ஆகாயத்தில் பீச்சியடிப்பார்கள், சித்திரை வெயிலில்
பெரும் கூட்டத்திலிருக்கும் மக்களின் வெப்பம் போக்க இது பெரிதும் உதவும். வெயிலின்
தாக்கம் தெரியாமல் அழகரை தரிசிக்க அடியவர்களுக்கு சேவை செய்யும் அடியவர்களாக
இவர்கள் இருப்பார்கள்.
தண்ணீர்ப்
பீச்சுபவர்களின் இன்னொரு அற்புதமான ஒரு சேவை, இவர்கள் சும்மா தண்ணீரை மட்டும் பீச்சிக் கொண்டு
செல்லமாட்டார்கள். கிராமத்தில் சந்ததி சந்ததியாக வாய்வழியாகப் பாடப்பட்டு வரும்
அழகர் வர்ணனையைப் பாடிக் கொண்டே வருவார்கள்.
வர்ணனைகளில் அந்தந்த
வட்டார வழக்குச் சொற்கள் எந்தளவுக்கு நம்மை ஆச்சர்யப்படுத்துமோ, அந்தளவிற்கு இலக்கியத்
தமிழும் கலந்திருக்கும். சிலர் வர்ணித்துப் பாடும்போதே ஆனந்தத்தில் அழுது கொண்டே
பாடுவார்கள். கள்ளழகர் மீதான அவர்களின் கட்டுக்கடங்காத பிரியம் அது.
அழகருக்கு இப்படி சேவை
செய்பவர்கள் யாரும் அவரது பக்தர்கள் கிடையாது. பக்தர்கள் என்பவர்கள் வணங்கி
எதையாவது வேண்டுபவர்களாகி விட்டனர். இந்த வெள்ளந்தி மக்கள் தன் வீட்டுப் பாட்டனோ, பூட்டனோ அவரது பூர்வீக
கிராமத்திலிருந்து தன்னைப் பார்க்க வருகிறார். அவரைப் பிரியத்துடன் வரவேற்று, அவரைக் குளிர்வித்து, அவரைச் சிறப்பித்து
வணங்கி ஆசி பெற்று திரும்பவும் பூர்வீகத்திற்கு பூப்பல்லக்கில் அனுப்பி வைக்கும்
பிரியமான பேரக் குழந்தைகள் போலதான் நடந்து கொள்வார்கள்.
ஆம்! கள்ளழகர் ஆற்றில்
இறங்கித் திரும்பிப் போகும்வரை தரிசித்துத் திரும்பும் எந்த மக்களிடம்
வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்... எதுவும் வேண்டி
விண்ணப்பித்திருக்கமாட்டார்கள். மற்ற எந்தத் திருவிழாவிற்கும், மதுரையின் சித்திரைத்
திருவிழாவிற்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இதுவே! அதனாலேயே இந்தத்
திருவிழா அவரவர் வீட்டு விசேஷமாக மதுரை எங்கும் கொண்டாடப்படுகிறது🙏
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பண்டிகைகள்: குறிப்புகள் : அழகர் திருவிழா - குறிப்புகள் [ ] | Festivals: Notes : Alaghar festival - Tips in Tamil [ ]