அம்பாள் அனுக்கிரகம் பெற...

உமா மகேஸ்வரி அம்மன்

[ அம்மன்: வரலாறு ]

Ambal to get grace... - Uma Maheshwari Amman in Tamil

அம்பாள் அனுக்கிரகம் பெற... | Ambal to get grace...

அம்பாளை உபாசிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்புமயமான அம்பிகையைத் தியானிப்பதை விடப் பேரானந்தம் எதுவும் இல்லை.

அம்பாள் அனுக்கிரகம் பெற...

 

அம்பாளை உபாசிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்புமயமான அம்பிகையைத் தியானிப்பதை விடப் பேரானந்தம் எதுவும் இல்லை. பெரிய பெரிய சித்தாந்தங்கள், மதங்கள் எல்லாம் எத்தனையோ இருக்கின்றன. இவைகள் எல்லாவற்றுக்கும் முடிவாக, பயனாகக் கிடைக்கிற பெரிய பலன் அம்பாளைத் தியானிப்பதால் லகுவாகக் கிட்டி விடுகிறது.

 

''அம்மா! நான் எத்தனையோ தோஷம் உள்ளவன் என்றாலும் உன்னை நம்பி விட்டேன். நீ கடாட்சித்து விட்டால், எத்தனை எத்தனை தோஷமானாலும் தூர ஓடி விடும்! நான் எப்படி இருக்க வேணுமோ அந்த மாதிரியாக இருக்கும்படியாக நீயே பண்ணு.." என்று அவளிடம் நம்மை ஓயாமல் ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும். அதைவிடப் பெரிய மதமோ, சித்தாந்தமோ, அநுஷ்டானமோ இல்லை. எல்லாம் அவள் சித்தப்படி ஆகட்டும் என்று விட்டு விட்டு, நாம் பஞ்சு மாதிரி மனசில் எந்த கனமும் இல்லாமல் இலேசாகி விட்டால் அதைவிடப் பேரானந்தம் கிடையாது!!

 

அம்பாளை உபாசிப்பவர்கள் தனியாக லக்ஷ்மி, சரஸ்வதியை உபாசிக்க வேண்டியதில்லை. அவர்கள் இரண்டு பேரும் அன்னையின் இரண்டு பக்கத்திலும் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள். இது லலிதா சகஸ்ர நாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சகல சக்திக்கும் ஆதாரமான பராசக்தியை உபாசித்தால் இவளே சரஸ்வதியையும், லக்ஷ்மியையும், கடாக்ஷிக்கச் செய்கிறாள். ஆகவே சரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷ்ம் இரண்டும் அம்பாள் அனுக்கிரகத்தால் கிடைத்திடும்!

 

அம்பாளிடம் நாம் இன்னின்ன வேண்டும் என்று சொல்லிப் பிரார்த்திக்க வேண்டிய அவசியமே இல்லை. "உனக்கு நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா? ஆனாலும், மலயத்துவஜ பாண்டியனின் புத்திரியான மீனாட்சி!.... மனசில் உள்ள குறைகளை வாய்விட்டுச் சொல்லாவிட்டால்,அது உள்ளுக்குள்ளே உறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இப்படி பிரார்த்தனை பண்ணுகிறேன்!!..." என்ற நீலகண்ட தீட்சிதர் 'ஆனந்த ஸாகரஸ்தவம்' என்கிற ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்!

 

ஆகவே, நாம் கேட்காவிட்டாலும் அம்பாளை உபாசித்து விட்டால், அவளே அநேக அனுக்கிரகங்களைப் பண்ணுகிறாள். முதலாவதாக நல்ல புத்தி உண்டாகிறது. மனசில் நல்ல எண்ணங்களே உண்டாகின்றன. நல்லதைச் செய்வதற்கான வழி புத்தியிலே பளீரென்று அடிக்கிறது. லோக சேமத்தைச் செய்வதற்கான திரவிய பலமும் தானே கிடைக்கின்றது.

 

உமா மகேஸ்வரியான அம்பாளை நாம் பலவிதமான ரூபங்களில் வணங்கி வருகிறோம். இதெல்லாம் சூட்சும ரூபங்கள். நம் போன்ற சாதாரண ஜனங்களுக்காக ஸ்தூலமாகவே லலிதா, துர்க்கா, புவனேஸ்வரி என்று பலவித ரூபங்களில் அம்பாள் காட்சி தருகின்றாள். இந்த ரூபங்கள் நம் கண்ணுக்குத் தெரிகின்ற மாதிரிப் புண்ணிய க்ஷேத்திரங்களில் விக்கிரகங்களாக இருக்கின்றன.

 

வடக்கே ஹிமாச்சலத்தில் பர்வத ராஜகுமாரியாகப் பிறந்தவள், தென்கோடியில் கன்னியாகுமரியாக நிற்கின்றாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேசுவரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாட்சியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜாபவானியாகவும், குஜராத்தில் அம்பாஜி யாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும், வங்காளத்தில் மகாகாளி யாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் இப்படித் தேசம் முழு வதிலும் பலவிதமான சொர்ணமயமான ரூபங்களில் கோயில் கொண்டு எப்போதும் அருள்மழை பொழிந்து அனுக்கிரகம் பண்ணி வருகிறவள் அவளே ஸ்ரீ சௌந்தர்ய வல்லியான அந்த உமையவளைச் சரணடைந்தால் வாழ்வில் நாம் எண்ணியவை எண்ணியவாறே பலிதமாகும்!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

அம்மன்: வரலாறு : அம்பாள் அனுக்கிரகம் பெற... - உமா மகேஸ்வரி அம்மன் [ அம்மன் ] | Amman: History : Ambal to get grace... - Uma Maheshwari Amman in Tamil [ Amman ]