சித்த மருத்துவம் ஒரு அறிமுகம்

சித்தா மருத்துவம்

[ சித்தா மருத்துவம் ]

An Introduction to Siddha Medicine - Siddha medicine in Tamil

சித்த மருத்துவம் ஒரு அறிமுகம் | An Introduction to Siddha Medicine

தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான திராவிட நாகரிகத்தின் வளர்ச்சியினிடையே தோன்றிய மருத்துவ முறையே சித்த மருத்துவம்.

சித்த மருத்துவம் ஒரு அறிமுகம்

 

தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான திராவிட நாகரிகத்தின் வளர்ச்சியினிடையே தோன்றிய மருத்துவ முறையே சித்த மருத்துவம். முதலில் அனைவருக்கும் அனுமானமாக தெரிந்த விசயங்கள், மருத்துவ முறைகள், நாளடைவில் மேற்கொள்ளப்பட்டு அதன் மருத்துவ, யோக, ஞான, வர்ம, வாத முறைகள், கல்வெட்டுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் பாடல்களாகவும், மறைபொருள் பாடல்களாகவும் இருந்து வந்தன. பின்பு அவை படிப்படியாக அச்சிடப்பட்டு பல்வேறு நூல்களாக வெளி வந்தன. இப்போதும் வந்து கொண்டிருக்கின்றன.

நாட்டுப்புற மருத்துவம், வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், பரம்பரை மருத்துவம், வழக்கு மருத்துவம் என்று பல்வேறு பெயர் களால் அழைக்கப்படுகிறது இத்தமிழ் மருத்துவம்.

யோக நிலையை அடைந்த சித்தர்கள், கீழ்க்கண்ட பேராற்றல்கள் உடையவர்களாக விளங்கினர்.

சித்த மருத்துவத்தைப் பின்பற்றியவர்கள் சித்தர்கள். இவர்கள் மருத்துவ முறைகள் மட்டுமின்றி யோகம், ஞானம், சோதிடம், பஞ்சபட்சி சாத்திரம், மனையடி சாத்திரம், வானசாத்திரம், நோயின்றி வாழும் முறைகள் மற்றும் சமூகவியல் சிந்தனைகளிலும் சிறப்புற்று விளங்கினர். சித்தர்கள் அனைத்தையும் உணர்ந்து செயல்படுவார்கள். மனிதன் இயற்கையோடு ஒன்றிருந்தால் நோயற்ற நிலையை அடையலாம் மற்றும் நோயற்ற நிலையை அடைவதற்கு வழிமுறைகளையும் சொல்லி இருக்கின்றார்கள். குறிப்பாக தங்கள் மன வலிமையை கொண்டு ஒரு எட்டு வகையில் சில செயல்களை செய்து வருவதன் மூலம் பேரின்ப நிலையை கடந்தவர்கள் ஆவார்கள். அந்த எட்டு வகைகள் அட்டாங்க யோகம் என்று சொல்லுவார்கள்.

1. இமயம் : நல்ல சிந்தனைகளை மற்றும் எண்ணுதல்

2. நியமம் : நல்ல செயல்களை செய்து வருதல்.

3. ஆசனம் : குறிப்பிட்ட சில இருக்கைகளை பின்தொடர்ந்து அப்படியே அமர்தல்.

4. பிராணயாமம் : யோகமுறையில் மூச்சு பயிற்சிகள் செய்து கொண்டு வருதல்.

5. பிரத்யாகாரம் : நிலையான எண்ணங்களுடன் இருந்து வருதல்.

6. தாரணை : நிலையான பொருளான இறையாண்மையை நினைத்து வருதல்.

7. தியானம் : மூச்சு பயிற்சிகள் மற்றும் இறையை நினைத்தல்யும் தொடர்ந்து செய்து வந்து மனதை ஒரு நிலைப்படுத்துதல்.

8. சமாதி : உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு சம ஆதி நிலையை அடைதல். இப்படியான பல வகை நிலைகளையும் அடைந்து அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைக் கடந்து வீடுபேறு நிலைகளை அடைந்தனர். முக்தி நிலை அல்லது வீடுபேறு என்பது துன்பமின்றி இன்பத்தை மட்டுமே உடலும், உடலில் உறைந்து இருக்கும் உயிரும் எந்நாளும் துய்க்கும் பேரின்ப நிலையைக் குறிப்பதாகும்.  

மேற்கண்ட நிலைகளை அடைந்த சித்தர்கள், கீழ்க்கண்ட பேராற்றல்கள் கொண்டவர்கள்.

1. அணுமா - அணுவைப்போல் மிகச்சிறியதாக மாறுதல்

2. மகிமா - மலையைப் போல் பெரிய தோற்றம் கொள்ளுதல்

3. இலகுமா - காற்றில் பஞ்சு போல் மிதத்தல்

4. கரிமா - நீரின் மேல், நெருப்பின் மேல் நடத்தல்

5. பிராப்தி - வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ளுதல்

6. பிரகாமியம் - வேண்டியவர்களுக்கெல்லாம் வேண்டியதைக் கொடுத்தல்

7. வசித்துவம் - எல்லோரும் விரும்பும் நிலையை அடைதல்

8. ஈசத்துவம் - ஈசனின் குணங்களையும் ஆற்றலையும் அடைதல்.

உடலும் உலகமும், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற ஐம்பூதங்களால் ஆனவையே என்றும், இரண்டுக்கும் தொடர்பு உண்டு

"அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே.''

என்று சட்டைமுனி விவரிக்கிறார். உடல் இயங்கும் முறைக்கும் உலகம் இயங்குவதற்கும் பெரும் தொடர்புண்டு என்றும் விளக்குகிறார்.

இதை விளக்கும் போது, தமரகம் என்றழைக்கப்படும் இதயம் - சூரியனைப் போல் இயங்குவதாகவும் ; மூளை - சந்திரனைப்போல் இயங்குவதாகவும்; பித்தப்பை - செவ்வாய் கிரகத்தைப் போல் இயங்குவதாகவும்; சிறுநீரகமும், பிறப்பு உறுப்புகளும் சுக்கிரன் (வெள்ளி) கிரகத்தைப் போல இயங்குவதாகவும் ; நுரையீரல் - புதன் கிரகத்தைப் போல இயங்குவதாகவும்; கல்லீரல் - குரு என்று அழைக்கப்படும் வியாழன் கிரகத்தைப் போலவும் ; மண்ணீரல் - சனி கிரகத்தைப் போலவும் இயங்குவதாக சித்த மருத்துவம் கூறுகிறது. எனவே, யோக முறைகளில் வல்லமை பெற்ற சித்தர்கள் தமது எட்டு வகை யோக முறைகளால் தம் உடலையும், உறுப்புகளையும் அறிந்து, அதன்மூலம் மேற்சொன்ன கிரகங்களையும் அவற்றின் இயக்கங்களையும் அறியும் திறன் பெற்று இருந்தனர்.

பிறக்கும் ஒவ்வோர் உயிரும் பேரின்ப நிலையை அடைய வேண்டும் என்றும், அந்நிலையை அடையும் முயற்சியில் நோய்களால் தடை ஏற்படா வண்ணம் தங்களைக் காத்துக் கொள்ள, பல்லாயிரம் மருந்துகளையும், அம்மருந்துகளின் பயன்படும் முறைகளையும் சித்தர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். அவற்றுள் சில முறைகள் :

1. ஏக மூலிகைப் பிரயோகம் : சில மூலிகைகளை ஐம்பூத முறைகளின்படி சேர்த்து மருந்தாக்கிப் பயன்படுத்துவது.

2. மாரணப் பிரயோகம் : மருந்துகளை உருவாக்கப் பயன்படும் பொருள்களின் நட்பு, பகை குணங்களைக் கொண்டு மருந்துகள் செய்யும் முறை.

3. திராவகப் பிரயோகம் : உபரசங்களைக் கொண்டு திராவகம் செய்து, அதன் உதவியால் பொருள்களை மடியவைத்து மருந்துகளாகச் செய்தல்.

4. செயநீர் பிரயோகம் : சில மருந்துப் பொருள்களை நீர் வடிவாக மாற்றி, தீயில் புகையும் பொருள்களைத் தடுத்து மருந்துகள் தயார் செய்தல்.

5. முப்புப் பிரயோகம் : பூநீறு என்னும் உப்பை எடுத்து அதைச் சுண்ணமாக மாற்றி, தீராத நோய்களுக்கும், ரசவாதம் என்னும் தாழ்ந்த உலோகங்களை, உயர் உலோகமாக மாற்றுவதற்கும் பயன்படுத்துவதாகும்.

இத்தகைய பிரயோக முறைகளில் கைதேர்ந்து விளங்கிய சித்தர்கள், ரசம் (பாதரசம்), ரசக் கலப்புள்ள (Mercurial Compounds) மற்றும் பாடாண (Arsenical compounds) மருந்துகளின் சுத்தி முறைகளையும், மருந்தாக்கும் முறைகளையும், முறையாக முடிக்கப்படாத மருந்துகளின் பக்க, எதிர் விளைவுகளையும், அத்தகைய எதிர் விளைவுகளுக்கான பரிகார முறைகளையும் நன்கு தெளிவு பெற அறிந்து அவற்றைப் பதிவும் செய்துள்ளனர்.

ஒரே மருந்தை வெவ்வேறு அனுபானங்களில் (பால், வெந்நீர், மோர், தேன், தண்ணீர்) பல்வேறு நோய்களுக்குக் கொடுத்து சித்தர்கள் குணமாக்கியுள்ளனர்.

 

சித்த மருத்துவத்தின் அடிப்படை

 

உயிர்த் தாது

வாதம் (வளி), பித்தம் (அழல்), கபம் (ஐயம்) எனப்படும் மூன்றும் முத்தாது அல்லது உயிர்த் தாது என்று அழைக்கப்படுகின்றன. உடல் நல்ல நிலையிலிருந்து இயங்க இம்மூன்றுமே ஆதாரமாகும். இம்மூன்றுமே, முறையாக படைத்தல், காத்தல், அழித்தல் செயலை உடலில் செய்கின்றன. இயல்பு நிலையில், இம்மூன்றும் 1: ½ : ¼ என்ற விகிதத்தில் செயல்படும். மனிதனுடைய முழு ஆயுள் காலத்தில் முதல் பகுதி வாதகாலமாகவும், இடைப் பகுதி பித்தகாலமாகவும், கடைசிப் பகுதி கப காலமாகவும் பிரிக்கப்படுகிறது.

 

வளி (வாதம்)

இது உடலுக்கு ஊக்கம் உண்டாக்கல், மூச்சு விடல், மூச்சு வாங்கல்; மனம், மொழி, மெய்களுக்கு செயல் தருதல், சிந்தனை செய்தல்; உணர்வுகள், உடல் தாதுக்களுக்கு அனிச்சைச் செயல் தருதல்; தொழில் செய்யும் முனைப்பைத் தருதல்; மலம், சிறுநீர், விந்து, நாதம் இவற்றை வெளியேற்றல்; கண்களுக்கு ஒளி தருதல்; கண், காது, நாக்கு, மூக்கு, தோல் போன்ற ஐம்பொறிகளுக்கு வன்மை தருதல் போன்ற செயல்களைச் செய்கிறது.

வளி, தன்னிலையில் இருந்து மாறி நோய் நிலையை அடைந்தால், உடல் வலி, உடல் உறுப்புகள் செயல் இழத்தல், தசை வலி, தசை மெலிவு, மூட்டு வலி, மூட்டு நழுவல், தோல் வறட்சி, மலச்சிக்கல், நீர் சுருக்கு, வயிறு உப்புசம், உடல் சோர்வு, தூக்கமின்மை , மயக்கம் ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.

 

அழல் (பித்தம்)

உடலுக்கு வெப்பத்தைத் தருதல், உணவைச் செரித்தல், தோலுக்கு நிறத்தையும் பளபளப்பையும் தருதல், பார்வை தருதல் போன்ற செயல்களைச் செய்கிறது. அழல், தன்னிலையில் இருந்து மாறி நோய் நிலையை அடைந் தால் மலம், சிறுநீர், தோல் போன்றவை மஞ்சள் நிறமடைதல், அதிக பசி அல்லது பசியின்மை, உடல், கண் எரிச்சல், அதிக வியர்வை, தோல் சிவத்தல், நாவறட்சி, தாகம், புண்கள், கட்டிகள் தோன்றல் ஆகியவை ஏற்படும்.

 

ஐயம் (கபம்)

உடலுக்கு வலிமை, மூட்டுகளுக்கு வலிமை, தோலுக்கு பளபளப்பு, கண்ணுக்குக் குளிர்ச்சி, தோல், மலம், சிறுநீர்க்கு நிறம் தரு தல், உடலுக்கு மென்மை, வளமை, பொறுமை தருதல், நாவுக்கு இனிப்புச் சுவை தோன்றல் போன்ற செயல்களைச் செய்கிறது.

நோய் நிலையில், உடல் குளிர்தல், அரிப்பு, மந்தம், உடல் பார மாக இருத்தல், உடல் எண்ணெய்ப் பசையாக இருத்தல், உணர் விழப்பு, நாவில் அதிக இனிப்பு சுவை காணுதல், தொழில் செய்ய உற்சாகமின்மை, பசியின்மை, உமிழ்நீர் சுரப்பு அதி கரித்தல், இருமல், மேல் மூச்சு, அதிக தூக்கம், தலைச்சுற்றல், தோல் வறட்சி, நெஞ்சு படபடப்பு ஆகிய அறிகுறிகள் தோன்றும்.

 

வாத, பித்த, கப உடலைக் கொண்டவர்களின் உடல் அமைப்பு முறைகள்


1. முகம் :

• வாத உடம்பைப் பெற்றவர்களுக்கு, மெல்லிய, எலும்புகள் நன்றாகத் தெரியக்கூடிய, நீண்ட முகம் இருக்கும்.

• பித்த உடம்பைப் பெற்றவர்களுக்கு, முகங்கள் தெளிவாக நல்ல முறையில் இருக்கும்.

• கப உடம்பைப் பெற்றவர்களுக்கு, வட்டமான, முக உறுப்புகள் மூக்கு, கண், உதடு, நெற்றி, புருவம் போன்றவை தெளிவாகத் தெரியக்கூடிய அழகிய முக அமைப்பு இருக்கும்.

 

2. நிறம் :

• வாத உடம்பு வகையினருக்கு, கறுப்பு மற்றும் ப்ரௌன் நிறத்தை பெற்றிப்பார்கள்

• பித்த உடம்பு வகையினருக்கு, மஞ்சள் நிறம் பெற்றிப்பார்கள்.

• கப உடம்பு வகையினருக்கு, வெள்ளை மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தை பெற்றிப்பார்கள்.

 

3. உடல் இயக்கம் :

வாத உடம்பினருக்கு, லேசான நடுக்கத்துடன் கூடிய உடல் இயக்கம் இருக்கும். பித்த மற்றும் கப உடம்பினருக்கு, தெளிவான, நிலையான உடல் இயக்கம் இருக்கும்.

 

4. உடல் எடை :

• வாத உடம்பினருக்கு, லேசான, இயல்பாக இருக்க வேண்டிய உடல் எடைக்கும் குறைவாக இருக்கும்.

• பித்த உடம்பினருக்கு, மிதமான உடல் எடை இருக்கும்.

• கப உடம்பினருக்கு, உடல் எடை இயல்பான எடையைவிட கூடுதலாக இருக்கும்.

 

5. உடல் அமைப்பு:

• வாத உடம்பினருக்கு, மெல்லிய, மிக உயரமான அல்லது உயரம் குறைந்த உடல் அமைப்பு இருக்கலாம்.

• பித்த உடம்பினருக்கு, மிதமான உடல் அமைப்பும் உயரமும் இருக்கும்.

• கப உடம்பினர், அதிக உடல் சதையும், பெரிய உடம்பும், உயரம் குறைவாகவும் இருப்பார்கள்.

 

6. தோல் அமைப்பு:

• வாத உடம்பினருடைய தோல், வறண்ட, தடிப்பான, மிக நுண்ணிய வெடிப்புகள் உடையதாக இருக்கும்.

• பித்த உடம்பினருடைய தோல், மென்மையான, நெய்ப்புத் தன்மையும், வறட்சியும் இல்லாத மிதமான, எளிதில் பாதிப் படையக்கூடிய, மச்சங்களை அதிகமாகப் பெற்று இருக்கும்.

• கப உடம்பினருடைய தோல், மென்மையாகவும், அதிக எண் ணெய்ப் பசையை உடையதாகவும் வழவழப்பாகவும் இருக்கும்.

 

7. தோலின் பசைத்தன்மை :

வாத உடம்பினருக்கு, வறட்சியான தோலும்; பித்த உடம்பினருக்கு, சற்று எண்ணெய்ப் பசையுடைய தோலும்; கப உடம்பினருக்கு, அதிக எண்ணெய்ப் பசையுடைய தோலும் இருக்கும்.

 

8. உடல் வெப்பம் :

• வாத உடம்பினருக்கு, இயல்பாகவே உடல் வெப்பம் குறைந்தும், கைகள், கால்கள் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

• பித்த உடம்பைப் பெற்றவர்களுக்கு, உடல் வெப்பம் அதிகமாகவும், கைகள், கால்கள் வெதுவெதுப்பாகவும் இருக்கும்.

• கப உடம்பைப் பெற்றவர்களுக்கு, உடல் வெப்பம் குறைவாகவும், உடல் குளிர்ச்சியாகவும், கைகள், கால்கள் அதிக குளிர்ச்சியாகவும் இருக்கும்.

 

9. உடல் சக்தி :

வாத உடம்பினர், எளிதில் சோர்வடையக் கூடியவர்கள். பித்த உடம்பினர், மிதமான சக்தியும், எளிதில் சோர்வடையாத தன்மையும் உடையவர்கள். கப உடம்பினர்கள், அதிக பலமும், அதிக நேரம் உழைக்கும் ஆற்றலும் உடையவர்கள்.

 

10. கண்ணின் அமைப்பு:

• வாத உடம்பினருடைய கண்கள் சிறியதாக இருக்கும். சிறிய மெல்லிய இமையும், இமையில் முடி குறைவாகவும் இருக்கும்.

• பித்த உடம்பினருக்கு, ஊடுருவக்கூடிய பார்வையும், மெல்லிய செம்மை கலந்த கறுப்பு நிற இமை முடியும் புருவமும் பெற்றிருப்பார்கள்.

• கப உடம்பினர், பெரிய, அழகான கண்களும், அடர்ந்த புருவமும் பெற்றிருப்பார்கள்.

 

11. உடல் முடி :

வாத உடம்பினருக்கு முடி குறைவாக இருக்கும். பித்த உடம்பினருக்கு மிதமாகவும், கப உடம்பினருக்கு அடர்த்தியாகவும் இருக்கும்.

 

12. உதடுகள் :

வாத உடம்பினருக்கு வறட்சியான, அடர்ந்த நிறமுடைய, சிறிய வெடிப்புகளுடன் கூடிய உதடு இருக்கும். பித்த உடம்பினருக்கு மென்மையான, தாமிர நிறமும், இளஞ் சிவப்பு நிறமும் கொண்ட உதடு இருக்கும். கப உடம்பினருக்கு பெரிய, தடித்த, வழவழப்பான எண்ணெய்ப் பசையுடன் கூடிய வெண்மையான உதடு இருக்கும்.

 

13. விரல்கள் :

வாத உடம்பினருக்கு, நீண்ட, தடித்த விரல்கள் இருக்கும். பித்த உடம்பினருக்கு, மிதமான நீளமுடைய மெல்லிய விரல் கள் இருக்கும். கப உடம்பினருக்கு, மிதமான நீளமுள்ள அல்லது குட்டையான அழகான விரல்கள் இருக்கும்.

 

14. நகங்கள் :

• வாத உடம்பினருக்கு குட்டையான, வறட்சியான, பளபளப்பு இல்லாத நகங்கள் இருக்கும்.

• பித்த உடம்பினருக்கு தாமிர அல்லது இளஞ் சிவப்பு நகங்கள் இருக்கும்.

• கப உடம்பினருக்கு நீளமான, தடித்த, வழவழப்பான பளபளப்புடைய நகங்கள் இருக்கும்.

 

15. நாக்கு :

• வாத உடம்பினரின் நாக்கு, அடர்ந்த நிறத்துடன், தடித்து, வெடிப்புடன் இருக்கும்.

• பித்த உடம்பினரின் நாக்கு, அடர்சிவப்பு அல்லது இளஞ் சிவப்பு நிறத்துடன், நீளமாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.

• கப உடம்பினரின் நாக்கு, இளஞ்சிவப்பு நிறத்துடன் வெளுத்து, தடித்து, வழவழப்புடன் இருக்கும்.

 

வாத, பித்த கப உடம்பினரின் பழக்க வழக்கங்கள், விருப்பங்கள், வெறுப்புகள்


 

1. செயல்கள்

வாதம் : அதிக வேகமாக இருக்கும்

பித்தம் : மித வேகம்

கபம் : மெதுவாக இருக்கும்

2. மனநிலை

வாதம் : எளிதில் மாறுபடும்

பித்தம் : மிதமான மாற்றம் இருக்கும்

கபம் : மெதுவான மாற்றம் அல்லது நிலையாக இருக்கும்

3. கற்றுக் கொள்ளும் திறன்

வாதம் : வேகமாக இருக்கும்

பித்தம் : மிதமாக இருக்கும்

கபம் : மெதுவாக இருக்கும்

4. மனத்தின் தன்மை

வாதம் : விரைவாகச் சிந்திக்கும் தன்மை, அதிக கற்பனை, ஆனால் அமைதி இல்லாமல் இருக்கும்

பித்தம் : கூர்மையான அறிவும் புத்திசாலித் தனமும் இருக்கும்

கபம் : நிலையான ஆனால் மந்தமாக இருக்கும்

5. செரிமானம்

வாதம் : அதிகமாகவும் குறைவாகவும் மாறி மாறி இருக்கும்

பித்தம் : நிலையாக இருக்கும்

கபம் : மிதமாகவும் மெதுவாகவும் இருக்கும்

6. பசி

வாதம் : மாறிக்கொண்டே இருக்கும்

பித்தம் : அதிக பசி; சாப்பிடாமல் இருக்க முடியாது

கபம் : மிதமான பசி; சாப்பிடாமல் இருக்க முடியும்

7. உணவின் அளவு

வாதம் : மாறும்

பித்தம் : அதிகம்

கபம் : குறைவு

8. சுவை

வாதம் : இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவைகளில் விருப்பம்

பித்தம் : இனிப்பு, கசப்பு, துவர்ப்புச்சுவைகளில் விருப்பம்

கபம் : கசப்பு, துவர்ப்பு, காரச்சுவைகளில் விருப்பம்

9. உணவு

வாதம் : வெதுவெதுப்பான, ஈரத்தன்மையுடைய உணவுகளை விரும்பி உண்பார்கள்.

பித்தம் : குளிர்ச்சியான உணவு மற்றும் பானங்களை விரும்பி உண்பார்கள்

கபம் : வெதுவெதுப்பான வறட்சியான உணவுகளில் விருப்பம் இருக்கும்.

10. உடல் உறவில் விருப்பம்

வாதம் : குறைந்த விருப்பம்

பித்தம் : மிதமான விருப்பம்

கபம் : அதிக விருப்பம்

11. தூக்கம்

வாதம் : ஐந்து முதல் ஆறு மணி நேரம் தேவை

பித்தம் : ஆறு முதல் எட்டு மணி நேரம் தேவை

கபம் : எட்டு மணி நேரம் நேரத்துக்கு மேல் தூக்கம் தேவை

12. பேச்சு

வாதம் : எப்போதாவது தடுமாற்றம்

பித்தம் : வேகமான, சுருக்கமான பேச்சு

கபம் : இனிமையான, மெதுவான, தெளிவான பேச்சு

மேலே கூறிய வளி (வாதம்), அழல் (பித்தம்), ஐயம் (கபம்) இம்மூன்றையும் தனித்தனியே பெற்றுள்ள உடல் அமைப்பைக் கொண்டவர்களின் இயல்புகள், உடல் அமைப்பு, விருப்பங்கள், வெறுப்புகள் விளக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி வளி, அழல், ஐயம் இவை இரண்டிரண்டாக சேர்ந்த கலப்புத் தன்மை யுடைய உடலினருக்கு, அதற்கேற்றவாறு உடலின் இயல்பு, தன்மை, விருப்பங்கள் மாறுபட்டுக் காணப்படும்.

 

பஞ்சபூதங்கள்:

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் நம் உடலிலும், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் விரவிக் காணப்படுகின்றன என்பது சித்தர்களின் கொள்கை. எனவே, உடலிலுள்ள அந்த பஞ்சபூத செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றமே நோய் நிலையை உண்டாக்கும் என்பதும், உலகத்தின் புறச்சூழலின் மாறுபாடுகளும் நோயை உண்டாக்கும் என்பதும் சித்தர்களின் கருத்து.

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன்  நாளை ஒரு நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

 

சித்தா மருத்துவம் : சித்த மருத்துவம் ஒரு அறிமுகம் - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : An Introduction to Siddha Medicine - Siddha medicine in Tamil [ Health ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்