தமிழ்நாட்டில் மிகப் பிரபலமாக விளங்கி வரும் சிவஸ்தலமான திருவண்ணாமலையை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
இன்னொரு திருவண்ணாமலை!
தமிழ்நாட்டில் மிகப் பிரபலமாக விளங்கி
வரும் சிவஸ்தலமான திருவண்ணாமலையை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். இன்னொரு திருவண்ணாமலை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளதை அறிவீர்களா? இங்கே ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில் கொண்டு
அருள்பாலித்து வருகிறார். 'தென்
திருப்பதி' என்றும் பக்தர்களால் இக்கோயில் அழைக்கப்பட்டு
வருகின்றது. பிரசாதத்தில் பாதம் பதிக்கும் பெருமாள் என்று இங்குள்ள இறைவனைச் சொல்கிறார்கள்.
இந்தப் பெருமாளை வேண்டிக் கொண்டால், காலில் உண்டாகும் அனைத்து நோய் நொடிகளும் தீர்ந்து விடுகின்றன.
அதற்காக காலணிகளை (செருப்புகளை) பக்தர்கள் இங்கே கொண்டு வந்து காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்!!.
மேலும் திருப்பதி வெங்கடாசலபதிக்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகள் எதுவானாலும் இங்கே
கொண்டு வந்து இப்பெருமாளின் சந்நிதியிலேயே அதைச் செலுத்தலாம் என்றும் கூறுகிறார்கள்.
இக்கோயிலின் வரலாறு சுவை மிகுந்தது.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்
ஒருவர் திருப்பதி சென்று ஸ்ரீவெங்கடாசலபதியைத் தரிசித்து அருள் பெறத் திருப்பதி நோக்கிப்
பாத யாத்திரை மேற்கொண்டார். வழியில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு மடத்தில் தங்கி இருந்தார். அங்கு
அயர்ந்து தூங்கும் நேரத்தில் அவரது உடைமை அனைத்தும் திருட்டுப் போனது. கையில் சிறிதும்
காசு மிஞ்சாததால், உணவு
வாங்க வழியின்றி பட்டினியால் வாடினார். அங்கு இருந்தவாறே ஏழுமலையானை மனதில் நினைத்து
தன் நிலைமையைக் கூறி வேண்டினார். பிறகு களைப்பில் அப்படியே தூங்கியும் போனார். அவர்
கனவில் வெங்கடாசலபதி தோன்றி. ''என்னைத்
தரிசிக்க வேண்டும் என்று திருப்பதி வரை நீண்ட தூரம் வந்து சிரமப்பட வேண்டாம். உனது
சொந்த ஊரின் அருகிலேயே நான் எழுந்தருளி அருள்பாலிப்பேன், அப்படி எழுந்தருளும் இடத்தை விரைவில்
தெரிவிக்கிறேன்....." என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலையில் அந்தப் பக்தர் கண்
விழித்துப் பார்த்த போது, திருட்டுப்போன
அத்தனை பொருட்களும் அவர் அருகிலேயே இருந்தன. மகிழ்ச்சியில் திக்குமுக்காடியவர், அவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து
புறப்பட்டார். சிறிது தூரம் நடந்ததும் அவர் கடந்து செல்ல முடியாத அளவுக்கு கட்டெறும்புகள்
மிகப் பெரும் கூட்டமாக ஒரு இடத்தில் இருந்து சாரை சாரையாக மறுபுறம் சென்றன. அதைப் பார்த்தவர்
ஆச்சரியம் அடைந்தார். அருகில் இருந்த கோயில் அர்ச்சகரிடம் அதுபற்றிக் கூறினார்.
அதற்கு அந்த அர்ச்சகர், "இது பெருமாளின் திருவிளையாடலாகத்தான்
இருக்கும். இதே எறும்புகளை நாம் பின் தொடர்ந்து செல்வோம்!...." என்றார். அதற்கு
பக்தரும் சம்மதிக்க அவர்கள் இருவரும் எறும்புகள் செல்லும் மார்க்கத்திலேயே சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை
என்ற அந்தப் பாறையின் மேல் ஏறி, ஒருசிறிய
பொந்துக்குள் சென்று கட்டெறும்புகள் மறைந்தன. அர்ச்சகரும், அந்த பக்தரும் அந்த இடத்தை அடைந்ததும், அங்கே இறைவன் குடி கொண்டிருப்பதாக ஒரு
அசரீரி கேட்டது. உடனே அவர்கள் அந்த இடத்தை வணங்கி, ஸ்ரீ வெங்கடாசலபதியின் திருவருளைப் பெற்றனர். பின்னர், பலரின் ஒத்துழைப்போடு அங்கே கோவிலும்
எழுப்பப்பட்டது.
பக்தர்களின் பிரார்த்தனைகள் எதுவாக
இருந்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றித் தரும் ஆலயமாக இக்கோயில் விளங்கி வருகிறது.
குழந்தை வரம் வேண்டுவோர் இங்கே வந்து
தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.
இங்கே யோக நரசிம்மர், பால நரசிம்மர், கருடாழ்வார், நவநீத கிருஷ்ணன் ஆகியோருக்குத் தனித்தனிக்
கோவில்கள் உள்ளன. பில்லிசூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே வந்து பலன் பெறுகிறார்கள்.
புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக் கிழமைகளிலும் இங்கே சிறப்பு வழிபாடுகள், கருட சேவை நடை பெறுகின்றன. தினமும்
இருவேளை பூஜை. காலை ஏழு மனியில் இருந்து மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி
முதல் இரவு எட்டு மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நான்கு
கிலோ மீட்டர் தொலைவில் இத்திருவண்ணாமலை ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து
வசதிகள் இருக்கின்றன.
அடிவாரத்திலிருந்து 240 படிகள் ஏறி மேலே சென்று, சகல நலன்களையும் தரும் பெருமாளைத் தரிசித்து
மகிழலாம். வேண்டும் வரம் தரும் 'தென் திருப்பதி' இது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : இன்னொரு திருவண்ணாமலை! - ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில் [ பெருமாள் ] | Perumal : Another Thiruvannamalai! - Srinivasapperumal Temple in Tamil [ Perumal ]