உடலியல் காரணங்களை விட மனவியல் காரணங்கள்தான் நரம்பு நோய்களுக்கு முக்கியமான காரணமாக அமைகின்றது என அடிக்கடி கூறி வந்திருக்கிறோம்.
மனக் கொந்தளிப்பும் நரம்பு நோய்களும் உடலியல் காரணங்களை விட மனவியல் காரணங்கள்தான் நரம்பு நோய்களுக்கு முக்கியமான காரணமாக அமைகின்றது என அடிக்கடி கூறி வந்திருக்கிறோம். இது நரம்புப் பிணிகள் தொடர்பான முக்கியமான விஷயமாதலால் இது குறித்து இன்னும் சற்று விரிவாகக் கவனிப்போம். அச்சம், பீதி, கொந்தளிப்பு, கவலை, விரக்தி போன்ற மனவியல் உணர்வுகள் ஒரு தொடர் கதையாகி விடுமானால் ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் நரம்புத் தளர்ச்சி மற்றும் அது தொடர்புடைய பிணிகளின் நிலைக்களனாகி விடுவான். சிலரிடம் காரணம் தெரியாத நிலையில் நரம்பியல் பிணிகள் மறை பொருளாக அமைந்திருப்பதுண்டு. அதாவது ஒரு நோய் என்ற அளவில் அவர்களிடம் நரம்புத்தளர்ச்சி போன்றவை வெளிப்படையாகத் தெரியமாட்டா. அவை அவர்களுடைய இயல்பு நடவடிக்கைகளில் காணப்படும் வினோதமான தன்மைகளை வைத்து அவர்களிடம் ஏதோ ஒரு விதமான நரம்பியல் கோளாறு இருக்கிறது என தெரிந்துக் கொள்ள முடியும். குழந்தைப் பருவத்திலிருந்து ஏற்பட்டு வரும் சூழ்நிலைப் பழக்கத்தின் காரணமாக வயது வந்த பின்னரும் இயல்பாகவே நரம்புத் தளர்ச்சிப் பிணிகளுக்கு இலக்காகக்கூடும். இது ஒரு பிணி என்ற அளவுக்குத் தெரியா விட்டாலும் ஒரு விதமான நோயாளியாக அவர்கள் இருப்பார்கள். இவ்வாறு வளர்ந்தவர்களிடம் மனத்திடம், துணிவு ஆகியவற்றை எதிர்பார்க்க முடியாது. பெற்றோரின் அன்பு பாசம் போன்ற உணர்ச்சி பூர்வமான அரவணைப்புகளுக்கு வாய்ப்பின்றி வளர்ந்த பிள்ளைகள் தன்முனைப்புடன் தானாகத் துணிந்து செயற்படும் ஆற்றலைப் பெற்றிருக்க மாட்டார்கள். எதைச் செய்வதாக இருந்தாலும் ஒரு விதத் தயக்கமும் குழப்பமும் அவர்களது மனத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும். பயந்து பயந்து வாழ்க்கை நடத்துவார்கள். வாழ்க்கையில் சிறு பிரச்சினைகள் தலை காட்டினாலும் இவர்கள் நிலை குலைந்து விடுவார்கள். யாரவது ஒருவர் கடினமான சொல் ஒன்றைச் சொல்லி விட்டால் கூட சிலரால் அதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. மனங்குலைந்து நிலை தடுமாறி ஏதோ நடக்கத் தகாதது நடந்து விட்டதாக சஞ்சலமடைவார்கள். சிலர் இந்த மாதிரி அற்ப நிகழ்ச்சிகளைத் தாளமாட்டாமல் தற்கொலை செய்துக் கொள்வதுகூட உண்டு. இந்த மாதிரிப் பிரச்சினைகளைச் சிந்தையிலே கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும். குழந்தைகளாக இருக்கும் போது அவர்கள் பெற்றோரைச் சார்ந்து தான் வாழ வேண்டியிருக்கும். ஆனால் அவர்கள் வளர்ந்து ஆளாகி விட்டால் பரந்த உலகில் சுதந்திரமாக தன் சக்தியை மட்டுமே நம்பி வாழ வேண்டிவரும். இந்த உண்மையினை கவனத்தில் கொண்டு பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும். ● குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கக் கூடாது. எல்லா விஷயங்களிலும் தங்களைச் சார்ந்து வாழுமாறு பழக்காமல் தாமாக சுதந்திரமாக அவர்களை செயற்படவிட வேண்டும். ● குழந்தைகள் நண்பர்களுடன் விளையாடும் போது அவர்களது விளையாட்டில் பெற்றோர் எந்த விதத்திலும் தலையிடக் கூடாது. விளையாடுவதைக் கண்டிக்கக் கூடாது. ● விளையாட்டுத் தோழர்களிடையே ஏதாவது சச்சரவு ஏற்பட்டால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காகப் பரிந்து பேசக் கூடாது. நண்பர்களிடையே ஏற்படும் சச்சரவை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விட்டு விட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் அவர்களது சச்சரவைத் தீர்ப்பதற்கு ஆலோசனைகளைக் கூறலாம். அவர்கள் சச்சரவு வன்முறை என்ற அளவுக்கு மேல் சென்று விடாமல் வேண்டுமானால் தடுக்க முன் வரலாம். ● குழந்தைகள் எப்போதும் தனிமையில் இருக்குமாறு விடக் கூடாது மற்ற குழந்தைகளுடன் தாராளமாகக் கலந்து பழகி விளையாடுவதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். ● நண்பர்களிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளை குழந்தைகளாகவே சமாளித்துக் கொள்ள முயன்றால்தான் அவர்கள் பிற்காலத்தில் பெரியவர்கள் ஆன பிறகு வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சினைகளை மனங்கலங்காமல் எதிர்க் கொண்டு சமாளிக்கும் மன வல்லமை அவர்களிடம் அமையும். ● உலகத்தில் உள்ள எந்தக் குழந்தையுமே மோசமான மன இயல்பு கொண்டவை அல்ல. அவர்களிடம் மனத்திடமும் ஆளுமைச் சக்தியும் இயல்பாகவே அமைந்துள்ளன. குழந்தைகளைச் சரியான வழியில் வளர்த்துப் பழக்குவதன் மூலம் அவர்கள் உள்ளத்தில் ஆழ்ந்து கிடக்கும் திறமையை, அறிவாற்றலை, ஆளுமைச் சக்தியை வெளிக் கொணர்ந்து செயற் பட வைக்க வேண்டும். நிறைய சகோதர சகோதரிகள் சூழ்ந்த ஒரு குடும்பத்தில் வளரும் குழந்தை இயற்கையாகவே நல்ல மதி நுட்பத்துடனும், செயல் திறன் மிக்கவர்களாகவும் ஆவதைக் காணுகிறோம். ● பல்வேறு குணமாறுபாடுகளைக் கொண்ட சகோதர சகோதரிகளுடன் பழக நேரிடும்போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும், கோப தாப உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு பழகவும், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் மனத்திலே துவேஷ உணர்ச்சி கொள்ளாமல், சச்சரவை மறந்து அன்போடு பழகவும் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. சகோதர, சகோதரிகள் இல்லாமல் தன்னந்தனியாக வாழும் சூழ்நிலையில் உள்ள குழந்தை மனவளர்ச்சி இன்றி செயல்திறன் பெருகாமல் மந்தமாக அவர்கள் இருப்பார்கள். இத்தகைய சூழ்நிலை அமைந்து விட்ட குழந்தைகளை மற்ற அக்கம் பக்கத்தில் வாழும் குழந்தைகளுடன் வலிய சென்று விளையாடிப் பழக அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களது மன வளர்ச்சி சீராக இருக்கும். அவர்களிடம் உள்ள திறமையும் ஆற்றலும் உள்ளடக்கமாக பிரகாசித்து வெளியே வரும். இவ்வாறு முறையாக வளர்க்கப் பெறாத வளர வாய்ப்பு இல்லாத குழந்தைகள் சின்ன வயதிலேயே நரம்பியல் தொடர்பான மனக் குறைபாடுகளுக்கு இலக்காகி பிற்கால வாழ்க்கையில் நோஞ்சான்களாக மன நோயாளிகளாக ஆகி வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறார்கள். மனத்திற்கும் நரம்புகள் இயக்கத்துக்கும் எப்போதுமே நெருக்கமான தொடர்பு உண்டு என்ற உண்மை பலருக்கு விளங்குவதே இல்லை. நரம்புகள் மற்ற குடல், இரைப்பை, கல்லீரல் போன்ற ஓர் உள்ளிருப்பு உறுப்புகள் என்ற அளவுக்குத்தான் நரம்புகளைப் பற்றிப் பலர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மனிதனை ஆட்டிப் படைக்கும் மனவியல் தொடர்பான நன்மை தீமைகளுக்கு நரம்புகள் தான் காரணம் எனபதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால் நரம்பு தொடர்பான பல பிணிகள் வராதபடி தடுத்து விட முடியும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்செய்யக்கூடாதவைகள்:
மருத்துவ குறிப்புகள் : மனக் கொந்தளிப்பும் நரம்பு நோய்களும் - மருத்துவ குறிப்புகள், செய்யக்கூடாதவைகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Anxiety and Nervous disorders - Medicine Tips, Don'ts in Tamil [ Medicine ]