நாம் சாப்பிடும் உணவிலுள்ள சுவைகளான இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளின் மாறுபாடும் நோயை உண்டாக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அறுசுவை உணவுகள் மருத்துவமா? மகத்துவமா?
நாம் சாப்பிடும் உணவிலுள்ள சுவைகளான இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும்
அறுசுவைகளின் மாறுபாடும் நோயை உண்டாக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இனிப்பு - நீரும் மண்ணும்
புளிப்பு - தீயும் மண்ணும்
உப்பு - தீயும் நீரும்
கசப்பு - காற்றும் விண்ணும்
கார்ப்பு - காற்றும் தீயும்
துவர்ப்பு - காற்றும் மண்ணும்
இணைவதால் உண்டாகின்றன. எடுத்துக்காட்டாக உப்பு, புளிப்பு, கார்ப்பு ஆகியவற்றை உணவில்
அதிகமாகச் சேர்க்கும் போது, தீ எனும் பித்தம் அதிகரித்து நோயை
உண்டாக்குகிறது.
இனிப்பு : மனத்துக்கு மகிழ்ச்சி, ஐம்புலன்களுக்குப்
புத்துணர்ச்சி, உடலுக்கு இலகு தன்மை, ஏழு
உடற்தாதுக்களுக்கும் ஊட்டம் கொடுத்தல், ஈரத்தன்மை மற்றும் குளிர்ச்சியைத்
தருதல்.
கசப்பு : வாயில் அழுக்கை நீக்குதல், சுவைகளை
உணரச் செய்தல், பசியையும் ஜீரணத்தையும் அதிகரித்தல், வறட்சியை உண்டாக்கு தல், குளிர்ச்சி உண்டாக்குதல்,
கட்டிகளை நீக்குதல் ஆகிய செயல்களைச் செய்தல்.
துவர்ப்பு: உடலில் உள்ள தாதுக்களை நெறிப்படுத்துதல், நாக்கின் சுவை அரும்புகளைச் சுருங்கச் செய்தல்,
மற்ற சுவையை உணர்தலைத் தடுத்தல்.
உப்பு: ஜீரணத்தை அதிகரித்தல், உமிழ்நீரைச்
சுரத்தல், உடலுக்கு ஈரத்தன்மை தருதல், மிதமான
வெப்பம் தருதல், தொண்டை கரகரப்பு ஆகிய செயல்களைச் செய்தல்.
புளிப்பு: உமிழ்நீரைச் சுரத்தல், கண்,
புருவத்தைச் சுருக்கல், வாய் சுத்தப்படுதல்,
ஜீரணத்தை அதிகப்படுத்துதல், உடலை வலுப்படுத்துதல்,
உடலுக்கு வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் தருதல்.
கார்ப்பு: பசி அதிகரித்தல், வறட்சியை உண்டாக்குதல்,
உடலுக்கு வெப்பம் தருதல், எரிச்சலை உண்டாக்குதல்.
அறுசுவைகளின் அதிகரித்தல் மற்றும் குறைதலால் ஏற்படும்
விளைவுகள்
சுவை : அதிகரிப்பு : குறைவு
இனிப்பு : எடை கூடுதல் : அதிக தூக்கம், பசியின்மை,
சோம்பல், உடல் வலி, உடல்
அசதி, உடல் வன்மை குறைதல், உடல் இளைத்தல்
கசப்பு : உடல் பருமன் : உடல் வன்மை குறைதல், நாவறட்சி, மூட்டு வலி, உடல் எரிச்சல்,
செரியாமை.
துவர்ப்பு : வாய் வறட்சி, வயிறு உப்புசம்,
வாய் குழறல், வாயில் நீர் ஊறுதல் : ஜீரண பாதிப்பு
உப்பு : மயக்கம், தாகம், உடல் சூடு, உடல் அரிப்பு : தசை மெலிவு, புண்கள், கொப்புளங்கள் உண்டாகுதல், வாந்தி, சுவையின்மை, செரியாமை.
புளிப்பு : தாகம் அதிகரித்தல், பித்தம் அதிகரித்தல்
: உடல் வீக்கம், ரத்தம் கெடுதல், உடல் வெப்பம்
குறைதல், பசியின்மை, வாயில் நீர் சுரத்தல்,
மூட்டுவலி
கார்ப்பு : மலட்டுத் தன்மை, இரைப்பைப் புண்,
தலைச் சுற்றல், மயக்கம், நடுக்கம், தாகம், வாய்ப்புண் :
பசியின்மை, சுவையின்மை, செரியாமை
உயிர்த்தாது என்னும் வளி, அழல்,
ஐயம் மூன்றும், பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உண்டாவது.
'தேரையர் மருத்துவ பாரதம்' என்ற நூலில்,
வாதம் - காற்றும் ஆகாயமும் சேர்ந்து உருவாகிறது.
பித்தம் - தீ தனித்து உருவாக்குகிறது.
கபம் - மண்ணும் நீரும் சேர்ந்து உருவாகிறது.
மேற்கூறிய சுவைகளில்,
வாதத்தை அதிகப்படுத்தும் சுவைகள்: ‘கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு’. ஏனெனில், இம்மூன்று சுவைகளிலும் காற்றின்
கூறு உள்ளதால், இவை வாதத்தை அதிகப்படுத்தும்.
பித்தத்தை அதிகப்படுத்தும் சுவைகள் : 'உப்பு, புளிப்பு,
கார்ப்பு' இம்மூன்று சுவைகளிலும் தீயின் கூறு உள்ளதால்
பித்தத்தை அதிகப்படுத்தும்.
கபத்தை அதிகப்படுத்தும் சுவைகள் : 'இனிப்பு, புளிப்பு,
உப்பு' இவற்றில் மண் கூறும், நீர்கூறும் சேர்வதால் கபம் மிகுதியாகிறது.
வாத, பித்த, கபத்தைச் சமப்படுத்த தேவையான சுவைகள் : அதிகரித்த வாதத்தைச் சமப்படுத்த,
கபத்தை மிகுதிப்படுத்தும் சுவைகளான இனிப்பு, புளிப்பு,
உப்பு சுவைகளையும், அதி கரித்த கபத்தைச் சமப்படுத்த,
வாதத்தை மிகுதிப்படுத்தும் சுவைகளான கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு சுவைகளையும், அதி கரித்த பித்தத்தைச் சமப்படுத்த இனிப்புச் சுவையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
சித்த மருத்துவத்தில் எட்டு வகைப் பரிசோதனை முறைகள் இருக்கின்றன. இருப்பினும், நாடியால் கணிக்கும் முறையே பிரதானமாகக் கருதப்படுகிறது.
உடலில் உள்ள எண்ணற்ற நாடி, நரம்புகளில் பெருநாடிகள் என்றழைக்கப்படும்
பத்து நாடிகளில் மூலாதார நாடிகளான இடகலை, பிங்கலை, சுழு முனை இவை மூன்றுடன், கீழ் நோக்கிய காற்று (அபானன்),
சுவாசக்காற்று (பிராணன்) நடுக்காற்று (சமானன்) இவை முறையே சேர்ந்து வளி
(வாதம்), அழல் (பித்தம்), ஐயம் (கபம்) உண்டாகின்றன.
'வாதமாய்ப் படைத்து
பித்த வன்னியாய் காத்து
சேட்ட சீதமாய் துடைத்து'
என்கிறார். அதாவது வாதம், படைக்கும்
தொழிலையும்; பித்த மான தீ, காக்கும் தொழிலையும்
; கபம் என்னும் சீதம், அழிக்கும் சக்தியாகவும்
கொண்டு உடலில் இயங்கி வருகின்றன.
சித்த மருத்துவத்தில் நாடியால் நோயைக் கணிப்பதையே பிரதானமாகக் கொண்டிருந்தனர்.
வாத, பித்த, கபம் என்னும் மூன்று நாடிகளும்,
ரத்த சுற்றோட்டத்தின்போது ரச தாது (உணவு செரிக்கும்போது உறிஞ்சப்படும்
அன்ன ரசம்) மற்றும் ரத்த தாதுக்களின் வழியாக உடல் முழுவதும் விரவிக் காணப் படுகின்றன.
நாடியைக் கணிக்கும் போது, ஆள்காட்டி விரலில் உணரும் வாத நாடியானது
மென்மையாகவும், சிறிய அதிர் வுடனும், லேசான
அழுத்தத்திலும், நாடியை அடைக்கும் தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும்.
வாத நாடியைப் பாதி அழுத்தம் கொடுத்து அடைத்தாலும் ரத்த ஓட்டத்தில் எவ்விதத் தடையையும்,
விரலில் அதிர்வையும் உணர முடியாது.
பித்த நாடி, லேசுத்தன்மையுடன் இருந்தாலும்
சிறிது நீர்த்துவமும் (Liquidity), நிலைத் தன்மையும் உடையது.
எனவே, லேசான அழுத்தத்தில் விரல்களுக்கு அதிர்வுகளைக் காட்டும்
தன்மை உடையது.
கப நாடி, கடினத்தன்மையும் நிலைத்தன்மையும்
ஒன்றாகப் பெற்று சற்றே மெதுவாக நகரும் தன்மையுடையது. எனவே, லேசான
மோதிர விரல் அழுத்தமே, விரலில் அதிர்வுகளை நன்கு உணரச் செய்யக்கூடியது.
பொதுவாக, நாடியை உணரும்போது மூன்று
விரல்களையும் அழுத்தியும் தளர்த்தியும் உணரலாம். எனினும், பின்னர்
மென்மையாக நாடிநடை காணும் இடத்தில் விரல்களை வைத்து உணருவதே சிறந்தது.
நாடியைக் கணிக்கும் போது, நோயாளியின்
வன்மை, நோயாளியின் உடல் வெப்பம், சுற்றுப்புறச்
சூழ்நிலையின் வெப்பம், நோயாளியின் மனநிலை, நோயின் தன்மை இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சித்தர்கள், நாடியை விளக்கும் போது
வாத, பித்த, கப நாடிகளின் உணரும் தன்மையை
நாடி நடை என்று அழைத்தனர். நாடி நடையை சில மிருகங்கள் மற்றும் பறவைகளின் நடைக்கு ஒப்பிட்டு
விளக்கியுள்ளனர். பொதுவாக வாத நாடி - அன்னம், கோழி, மயில் இவற்றின் நடைக்கு ஒப்பானதாகவும்; பித்த நாடி -
ஆமை, அட்டை இவற்றின் நடைக்கு ஒப்பானதாகவும்; கபநாடி - தவளை, பாம்பு போன்றும் இருக்கும்.
பெண்களுக்கான நாடி நடையைப் பற்றிக் கூறும் போது, வாத நாடி - பாம்பு போலவும்; பித்த
நாடி - மண்டூகம் என்னும் தவளை போலவும்; சிலேத்தும (கப) நாடி
- அன்னம் போல வும் இருக்கும் என்று சித்த மருத்துவப் பாடல்கள் தெளிவு படுத்துகின்றன.
மேற்கண்ட, சித்தர்களின் நாடிமுறைகளைப்
படித்தறியும் போது, நாடிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தையும்,
நாடியின் நடையைக் கொண்டு நோயைக் கணித்த முறைகளையும் கண்டு தெளிவடையலாம்.
மருத்துவரின் வலது கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல், மூன்றையும் நோயாளியின் வலது மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் (2.5 செ.மீ.) கீழே
ஆரை நாடியின் (Radial Artery) மேல் வைத்துப் பார்க்கும் போது,
ஆள்காட்டி விரலில் உணரப்படுவது வாதம் என்றும், நடுவிரலில் உணரப்படுவது பித்தம் என்றும், மோதிர விரலில்
உணரப்படுவது கபம் என்றும் அறியலாம். இவை, முறையே 1 : ½ : ¼ என்ற விகிதத்தில் இயங்கினால் நோயற்ற நிலையாகும்.
நாடியைக் கணிக்கும் போது, நடுவிரலில் உணரும் பித்த நாடியை நடுநாயகமாகக்
கொண்டு மற்ற இரு நாடிகளின் தன்மையை உணர வேண்டும்.
புறச் சூழ்நிலையாலோ, உணவுக் குற்றத்தாலோ,
பத்தியம் மற்றும் கால மாற்றத்தால் தன்னிலையில் மாறுபட்ட ஒரு நாடி மற்ற
இரு நாடிகளையும் பாதித்து நோயை உண்டாக்குகிறது.
• நாடி தவிர நாக்கு, நிறம், மொழி, விழி, மலம், சிறுநீர் இவற்றைக் கொண்டும் நோயாளியைப் பரிசோதிக்கலாம்.
• சிறுநீர்ப் பரிசோதனையில் சிறுநீரின் நிறம், மணம், அளவு, படிவு இவற்றைக் கொண்டும் நோயைக் கண்டுபிடிக்கலாம்.
• மேலும், நெய்க்குறி என்று சொல்லப்படும்
பரிசோதனையில், சிறுநீரை அகன்ற பாத்திரத்தில் பிடித்து அதன் மீது
நல்லெண்ணெய் ஒரு துளிவிட்டு அது பரவும் தன்மையைக் கொண்டும் நோயை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, சிறுநீரின் மீது விடப்பட்ட நல்லெண்ணெய்,
பாம்பு போல் நீண்டு பரவினால் வாதம் என்றும், முத்து
போல் நின்றால் கபம் என்றும், மோதிரம் போல் பரவினால் பித்தம் என்றும்
தெரிந்து கொள்ளலாம்.
• நோயைக் கண்டு கொண்ட பிறகு, அந்நோயாளிக்கு
இருக்கும் அறிகுறிகளை வைத்து, அந்நோய் தீரும், தீராது, விரைவாகத் தீரும் என்று தெளிவாகச் சொல்லிவிடலாம்.
மருந்துகள் :
சித்த மருத்துவத்தின் மருந்துகள் அனைத்தும், தாவரப் பொருள்கள், தாதுப் பொருள்கள்,
ஜீவப் பொருள்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றோ பலவோ இணைத்து உருவாக்கப்படுகின்றன.
தாவரப் பொருள்கள் :
மூலிகைத் தாவரங்களின் இலை, பூ,
காய், பட்டை, வேர்,
கிழங்கு, கனி, வேர்ப்பட்டை,
கொட்டை, கனியின் தோல் மற்றும் முழு தாவரம் போன்றவற்றில்
இருந்து மருந்துகள் உருவாக்கப்படுகின்றன.
தாதுப் பொருள்கள் :
1. உலோகங்கள் : இரும்பு, செம்பு,
வெள்ளி ....
2. காரசாரங்கள் : கல் உப்பு, கறி
உப்பு, பச்சைக் கற்பூரம் .....
3. பாஷாணங்கள்: கந்தகம், வீரம்,
பால் துத்தம் .....
4. உபரசங்கள்: காவிக்கல், நீலாஞ்சனம்,
கல்நார், மயில் துத்தம்....
நாடி நடை இயல்பாகவும், நோய் நிலையிலும் உள்ளதற்கான மிருகங்களை ஒட்டிய நாடி அமைப்பு:
பாம்பு நடை கப நாடி (இயல்பு)
தவளை நடை பித்த நாடி (இயல்பு)
அன்ன நடை வாத நாடி (இயல்பு)
அட்டை நடை முழங்கால் நோய்கள்
புழு நடை குடல் புழு, கப நோய்கள்
எறும்பு நடை உயிரைப் போகச் செய்யும் நோய்கள்
மயில் நடை வாத நாடி (இயல்பு)
குயில் நடை வயிறு, குடல் நோய்கள்
காடை நடை சிறுநீரக நோய்கள்
காக நடை இதய நோய்கள்
புறா நடை மூச்சிரைப்பு
சேவல் நடை சிறுநீர், பிறப்பு உறுப்பு நோய்கள்
ஒட்டக நடை இதய நோய்கள்
யானை நடை நிணநீர் கோள நோய்கள், உடல்
பருமன்
மலை நடை இதய சுற்றோட்ட தடை
கதித்து மீறிய நடை தீவிர இதய நோய்கள்
முரசு நடை சிறுநீரக செயல் இழப்பு
தாமரை (பத்ம) நடை வாத, பித்த, கப நாடி இயல்பான ஆரோக்கிய நடை
இறகுகள், எலும்புகள், கோரோஜனை, சங்கு, சிப்பி,
பறவைகளின் முட்டைகள், பால், தேன் போன்றவைகளைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு நோய்களைத் தீர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக, மருந்துகள் உள்மருந்து,
வெளிமருந்து என்று இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. வெளிமருந்துகள்,
முப்பத்திரண்டாகவும்; உள்மருந்துகள், முப்பத்திரண்டாகவும் சொல்லப்பட்டுள்ளன.
மாத்திரைகள், சூரணங்கள், சாறு, தண்ணீர் (கஷாயம்), கற்கம்
(மூலிகை துவையல்), பிட்டு, வெண்ணெய்,
மணப்பாகு, ரசாயனம், எண்ணெய்,
தீநீர் (ஓமதிராவகம்), பற்பம் (பஸ்பம்),
செந்தூரம், மெழுகு , சுண்ணம்
போன்றவை மருந்துகளில் குறிப்பிடத்தக்கவை. இவற்றின் ஆயுள்காலங்களும் மாறுபடுகின்றன.
மிகக் குறைந்த ஆயுளாக சாறு, தண்ணீர் போன்றவை மூன்று மணி நேரமும்;
செந்தூரம் எழுபத்து ஐந்து ஆண்டுகளும்; பற்பம் நூறு
ஆண்டுகளும்; சுண்ணம் ஐந்நூறு ஆண்டுகளும் ஆயுள்காலம் உடையதாகக்
கூறப்பட்டுள்ளன.
மருந்துகளைப் பதப்படுத்தி வைக்க தேங்காய்க் குடுக்கை, மூங்கில் குழை, யானைத் தந்தம் சிறந்தவை
என்றும், இவற்றில் வைக்கப்படும் மருந்துகளின் வீரியம் அதிகரிக்கும்
என்றும், வெண்கலம், இரும்பு, மரக்கட்டைகள், மிருகக் கொம்புகளில் வைக்கும் மருந்துகள்
அதே வீரியத்துடன் இருக்கும் என்றும் பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனினும் வெள்ளி, தங்க,
மண் பாத்திரங்களில் வைக்கப்படும் மருந்துகளும் நன்மையே தரும்.
விந்து குறைபாடு நோய்கள், மூச்சிரைப்பு,
மனநோய்கள் இவற்றுக்கு ஓராண்டும்; சிறுநீர் நோய்கள்,
சிறுநீரகக் கல், புண், நீரிழிவு
இவற்றுக்குப் பத்து மாதங்களும்; வயிறு சம்பந்தமான நோய்களுக்கு
ஏழு மாதங்களும்; கட்டி, ரத்தம் தொடர்பான
நோய்களுக்கு ஆறு மாதங்களும் மருந்து சாப்பிட வேண்டும்.
எந்தவகை நோயாக இருந்தாலும், எந்த
வகை மருந்தாக இருந்தாலும், நோயாளி மருந்து சாப்பிடுவதற்கு முன்பாக
கழிச்சல் மருந்தைக் கொடுத்த பின்னரே நோய்க்கான மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை
சித்த மருத்துவம் தெளிவாக வலியுறுத்துகிறது. அப்படிச் செய்வதால் மருந்தை உடல் ஏற்றுக்
கொள்வதற்கும், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதற்கும் சுலபமாகிறது.
பொதுவாக, வாத நோயாளிகளுக்கு உணவுக்கு முன்னரும்; பித்த நோயாளிகளுக்கு உணவுக்கு இடையிலும்; கப நோயாளிகளுக்கு
உணவுக்குப் பின்னரும் மருந்தை உட்கொள்ளச் செய்ய வேண்டும்.
மருந்துகளைப் பயன்படுத்தும்போது, முதலில்
மூலிகையினால் ஆன மருந்துகளையும், நோய் தீராவிட்டால் படிப்படியாக
தாது, ஜீவ பொருள்களால் ஆன பற்ப, செந்தூர
மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நாளை ஒரு நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சித்தா மருத்துவம் : அறுசுவை உணவுகள் மருத்துவமா? மகத்துவமா? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Are junk foods medicine? Greatness? - Siddha medicine in Tamil [ Health ]