சில வேளைகளில் கெடுதலாகவும், சில வேளைகளில் நன்மையாகவும் மனவியல் நெருக்கடிகள் (Tension) நம் வாழ்க்கையில் பல ஏற்படுகின்றன.
அடிக்கடி டென்ஷன் ஆகுபவர்களா நீங்கள்? சில வேளைகளில் கெடுதலாகவும், சில வேளைகளில் நன்மையாகவும் மனவியல் நெருக்கடிகள் (Tension) நம் வாழ்க்கையில் பல ஏற்படுகின்றன. திறமையுடன் நெருக்கடிகளைச் சமாளிப்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க முடியும். இந்த மாதிரியான நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாதபோது வாழ்க்கையும் சீர் கேடு அடைகிறது. உடல் நலம் நரம்பு மண்டலம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. பேறு காலத்தில் தாயும் சேயும் நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர். ஒரு சிறுவன் முதன் முதலாக பள்ளிக்குள் செல்லும் போதும், ஒரு மாணவன் முக்கியமான ஒரு தேர்வினை எழுதும் போதும் 'டென்ஷன்' என அழைக்கப்படும் மன நெருக்கடிக்கு இலக்காகிறார்கள். சர்க்கஸ் கூடாரத்திலே உயிராபத்தை விளைவிக்கும் பல சாகசச் செயல்களைச் செய்துக் காண்பிக்கும் சர்க்கஸ் தொழிலாளியும், அதை வேடிக்கை பார்க்கும் மக்களும் ஒரே நேரத்தில் டென்ஷன் எனப்படும் மனப்பரபரப்புக்கு இலக்காகிறார்கள். அலுவலகத்தில் வீட்டில் வேலை செய்யும் போது உள்ள பிரச்சினைகளையும், வீட்டில் இருக்கும்போது அலுவலகத்துப் பிரச்சினைகளையும் நினைத்துக் கொண்டு கவலையடையும் ஒருவனும் மிக எளிதாக மன நெருக்கடிக்கு இலக்காக வேண்டியுள்ளது. நாள்தோறும் நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவரை நடு இரவு நேரத்தில் வந்து அழைத்தால் அவர் மனம் டென்ஷனுக்கு இலக்காகிறது. யாராலும் 'டென்ஷன்' எனப்படும் நெருக்கடி யிலிருந்து தப்பி வாழமுடியாது. ஏனெனில் நெருக்கடியே இல்லையெனில் வாழ்க்கையே இல்லை. நெருக்கடியைத் தூண்டும் பல காரியங்களை நாம் நாள்தோறும் பலநேரங்களில் சந்திக்கிறோம். சமய சந்தர்ப்பங்களின் தேவைக்கு இணங்க உடலில் ஏற்படும் மாறுதல்களே நெருக்கடியின் கருப்பொருளாகும். அன்றாட வாழ்விற்குத் தேவையானதும் சுவையூட்டக் கூடியதும் நெருக்கடியேயாகும். ஒவ்வொரு மனிதனும் கலைகளிலும், விஞ்ஞானத்திலும், வாணிபத் துறையிலும் மற்றும் பல துறைகளிலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், பல படைப்புகளை வெளிப்படுத்தவும், தங்கள் சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தவும் நெருக்கடிகளே காரணமாகின்றன. அவை மனிதனுள் வேகத்தையும் மிகுந்த பலத்தையும் உண்டு பண்ணுகின்றன. அற்புதமான கலைப்படைப்பும், கடினங்களுக்கிடையே ஒரு விளையாட்டு வெற்றியும் இலாபகரமான ஒரு வாணிப கைமாற்றுதலும் இன்பகரமான (டென்ஷன்) நெருக்கடிகளாகும். இவையன்றி மிகத் துன்பகரமான நெருக்கடிகளும் உண்டாகலாம். எடுத்துக்காட்டாக வாணிபத்திலோ, தொழிலிலோ ஏற்படும் இழப்புகள், உடலையும், மனத்தையும் வருத்தும் கடின வேலைகள், குடும்பத்தில் உள்ள ஒருவரின் இறப்பு பயம், முதலியவை நமது வழக்கத்துக்கு மாறான வழியில் நடந்து கொள்ளச் செய்கின்றன. நெருக்கடி (டென்ஷன்)யின் போது நமது உடலில் உள்ள பல சுரப்பிகளும் ஹார்மோன்களும் நமது உடலினைச் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நெருக்கடிகளைச் சமாளிக்க மாற்றுகின்றன. இம்மாறுதல் நமது உடலினை அழிக்கக் கூடியவை - ஊறு விளைவிக்கக் கூடியவை அல்ல. என்றாலும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் மனத் திட்பம் மன வலிமை இல்லாவிட்டால் இந்த நெருக்கடிகளே மனித உடலை - அவன் மனத்தை அறிவை சீர்குலைத்துக் கெடுத்துவிடக் கூடும். இந்த நெருக்கடியான மனத்திலே ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளே நேரடியாக நரம்புகளைத் தாக்கி அவற்றின் சக்தியை செயல் திறனை அழித்து விடுகின்றன. நெருக்கடிகள் தோன்றும் உடலில் இயற்கையாக அமைந்திருக்கும் நரம்புச் சக்தியினைப் பயன்படுத்தி நெருக்கடிகளைச் சமாளித்து வெற்றி கொள்ளலாம். நரம்பாற்றலைச் சரியானபடி பயன்படுத்தி அதன் காரணமாக மனத்தை வலிமையுடையதாக்கி எந்த நிலைமையினையும் எதிர்த்து நிற்கும் பேராற்றலை முயன்று நாம் பெற்று விட்டால் நெருக்கடிகளை எண்ணி நாம் அஞ்சவே தேவையில்லை. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இவ்வாறு அவனது உடல் செயற்பட்டு வந்திருக்கிறது. குகைகளில் வாழ்ந்து வந்த ஆதி மனிதன் தன்னைத் தாக்க வந்த பயங்கர விலங்கிடமிருந்து எவ்வாறு தப்பினான்? ஒருவன் தனக்கு நேரவிருக்கும் கேட்டினை அறிந்த உடன் அவனது உடலில் ஒரு புத்துணர்ச்சியும் வேகமும் பிறக்கிறது. அவனது சுரப்பிகளிலிருந்து சுரக்கும் நீர்கள் அவனது இரத்தத்தில் கலந்து அவனுக்கு மிகுந்த பலத்தையும் அளிக்கின்றன முக்கியமாக நரம்புகளின் ஆற்றல் ஒருவருடன் இணைந்து முறையான கட்டளைப்படி செயற்பட்டு புது வித வேகம் பெறுகிறது. முறையான உதவியுடன் அவனுடைய உடல் உறுப்புகள் அனைத்தும் தீவிரமாகச் செயற்படுகின்றன. தன்னைத் தாக்கும் விலங்கின் பலத்தை மனிதன் தன் மனத்தால் எடை போட்டுப் பார்க்கிறான். விலங்கை எதிர்த்து நின்று சமாளிப்பது கடினம் என்று தோன்றினால் அவன் அந்த இடத்தை விட்டுத் தப்பியோடி தன்னைக் காத்துக் கொள்கிறான். இவ்வாறு நெருக்கடியைக் கடந்த பிறகு அவனது உடலின் உறுப்புகள் அமைதியடைகின்றன. அவன் மிகுந்த தளர்ச்சி அடைகிறான். தளர்ச்சியைப் போக்க அவன் ஓய்வெடுக்கிறான். அப்போது நெருக்கடியினால் ஏற்பட்ட காயங்கள் ஆறுகின்றன. இழந்த சக்தி திரும்ப வந்தடைகிறது. அதாவது நரம்புகள் தங்கள் இழந்த சக்தியினை மீண்டும் பெறுகின்றன. ஆனால் தற்கால நெருக்கடிகள் முற்றிலும் மாறுபட்டவை. நமது உடல், நெருக்கடிகளுக்கு ஏற்ப நம்மை மாற்றி அவற்றை சமாளிக்க உதவுகின்றன என்றாலும் நாகரிக நகர வாழ்க்கையில் ஒரு மனிதன் பல வித நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. நாம் அவற்றைச் சமாளித்து வெற்றியடைகிறோம். ஆனால் எப்போதும் அல்ல. சில வேளைகளில் நாம் மிகுதியாகச் செயற்பட்டு மேலும் நெருக்கடிகளுக்கு ஆளாகிறோம். சிலர் தங்களை அறியாமலே நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர். மேலதிகாரியின் சீற்றத்திற்கு உட்பட்ட போதும், பதவி உயர்வு கிடைக்காத போதும் எதிர்பார்த்த அளவு முயற்சிகள் வெற்றியடையாத போதும் சிலர் மனச் சமநிலை இழந்து வருத்த மடைகின்றனர். அதன் காரணமாக டென்ஷனுக்கு ஆளாகிறார்கள். ஜான் எச்.ஹோவார்டு என்பவர் நிர்வாக நெருக்கடிகளைப் பற்றி குறிப்பிடும் போதும் முடிவெடுக்கும் செயல்களை மேற்கொள்ளும் போதும், முடிவு எடுத்த பின் அதனால் விளையும் இன்ப துன்பங்களுக்குப் பொறுப்பு ஏற்கும் போதும் முடிவு எடுத்த பின் அதனால் விளையும் இன்ப துன்பங்களுக்குப் பொறுப்பு ஏற்கும் போதும் ஒரு மனிதனிடம் டென்ஷன் எனப்படும் மன நெருக்கடிகள் தோன்றுகின்றன என்று கூறுகின்றார். இக்கருத்துக்கு எடுத்துக்காட்டாக நான்கு ஜோடிக் குரங்குகளை வைத்துச் செய்த ஆராய்ச்யினை மேற்கோள் காட்டுகிறார். அவ்வாராய்ச்சியில் ஒவ்வொரு ஜோடியிலும் உள்ள இரண்டு குரங்குகளின் உடலிலும் பல இடைவெளிகளுக்கு ஒரு முறை மின்சாரம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு குரங்கு ஒரு விசையின் மூலம் மின்சாரப் பாய்ச்சலைத் தடுக்க முடியும். மற்றொரு குரங்கினால் இதனைச் செய்ய முடியாது. எப்போதும் மின்சாரம் பாயும் என்பதை அறிந்து விசையின் அருகே இருக்கும் குரங்கு அதனை அவ்விசையின் மூலம் தடுக்கவேண்டும். சில வாரங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஜோடியிலும் விசையின் அருகே இருந்த குரங்கு இறந்தது ஆனால் அதே அளவு மின்சாரம் தாக்கிய மற்ற குரங்கு ஒவ்வொரு ஜோடியிலும் உயிர் வாழ்ந்தது. அதாவது ஒரு விசையின் மூலம் மின்விசை தாக்கும் போது கட்டுப்படுத்தும் வசதி அமைந்த குரங்குகள் பிழைத்தது. மின் அதிர்ச்சி ஏற்படும் போது அதற்கு டென்ஷன் ஏற்பட்டது. அந்த டென்ஷனைச் சமாளித்துத் தற்காத்துக் கொள்ள அதற்கு வசதியும் இருந்தது. அதாவது அந்த வசதியைப் பயன்படுத்தும் அறிவும் இருந்தது. வாழ்க்கையில் மன நெருக்கடி எதிர்ப்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அந்த நெருக்கடியைச் சமாளித்து வெற்றி கொள்ளும் ஆற்றலை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் காரணமாக நரம்பு மண்டலத்தில் ஏற்படும் அதிர்ச்சியை கிளர்ச்சியை சமனப் படுத்த முடியும். ஆகவே நரம்பு தொடர்பான பிணிகள் ஏற்பட வழியில்லாமல் போய்விடுகிறது. மன இயல் நெருக்கடிகளைச் சமாளிக்க இயலாமல் திண்டாடுவோரின் நாம்பு மண்டலம் தொடர்ந்து அதிர்ச்சியுற்று பலவீனமடைகிறது. இதன் காரணமாகப் பலவிதமான நரம்பு நோய்களுக்கு இவர்கள் இலக்காக நேரிடுகிறது. இன்றைய நவீன உலகில் மன நெருக்கடிகள் எவ்வாறு தோன்றுகின்றன? அவை உடலில் என்ன மாதிரியான விளைவுகள் தோற்றுவிக்கின்றன என்பதைக் காண்போம். அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் ஒருவனைக் கற்பனை செய்துக் கொள்ளுங்கள். அவனுடைய மேலதிகாரி அவன் மேற்கொண்ட காரியம் ஒன்றினைக் குறை கூறி கடிந்து கொள்கிறார். தன் தவறை உணர்ந்து அவன் வெட்கப்படுகிறான். இதனால் அவர் மீது கோபம் கொள்ளுகிறான். அவனது நாடித்துடிப்பு அதிகரிக்கின்றது. இரத்த அழுத்தம் மிருதுவாகின்றது. ஹார்மோன்கள் அவனது இரத்தத்தில் கலக்கின்றன. அவனது உறுப்புக்கள் முறுக்கேறி அவனை ஏதாகிலும் செய்யத் தூண்டுகின்றன. அவனால் என்ன செய்ய முடியும்? தன் கோபத்தை மேலதிகாரியிடம் காண்பிக்கமுடியுமா? ஆகவே அவனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. இதனால் அவனுள் உருவாகிய கோபம் அவன் மேலேயே திரும்புகிறது. இக்கோபம் அவன் உடலில் பல உறுப்புக்களைத் தாக்கி அவனே தெரிந்து கொள்ள இயலாத சேதங்களை விளைவிக்கிறது. பல தடவை இம்மாதிரி (டென்ஷன்) அவனுக்குள் நெருக்கடிகள் விளையுமானால் அவனது உடல் உறுப்புக்கள் நெருக்கடிகளைச் சந்திக்க அவனைத் தயார் செய்யும் சக்தியை இழந்து விடுகின்றன. இதனால் அவன் பலவிதமான நரம்பு நோய்கள், மாரடைப்பு, தலைவலி, புற்று நோய், மனக்களைப்பு முதலிய நோய்களுக்கு இரையாகிறான். இந்நோய்கள் பல நெருக்கடிகளை உருவாக்கி நச்சுக் குவியலாக மாறும். நெருக்கடிகளை உருவாக்கும் வாய்ப்புக்கள் நாள் தோறும் வருவதில்லை. ஆனால் அவை உருவாக்கும் ஒவ்வொரு நெருக்கடியும் உடலுக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதில்லை. அடிக்கடி நெருக்கடிகளைச் சந்திப்பதில் சேதங்கள் மேன்மேலும் பெருகி உடலின் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒத்துப் போகக் கூடிய சக்தியை அழிக்கிறது. விமானப் போக்குவரத்து கண்ட்ரோலர்களுக்கு இதுபோன்ற உடற்குறைகள் சாதாரணமாக ஏற்படுவது உண்டு. பொதுவாகச் சொல்லப்போனால் மனவியல் நெருக்கடியின் (டென்ஷன்) போது உடலின் உறுப்புகள் வருத்தப்படுகின்றன. அது நரம்பு முறுக்கேறும் போதும் உடலில் காயம் ஏற்படும் போதும், நோய்க்கிருமிகள் உடலைத் தாக்கும் போதும், கடினமான வேலை கொள்ளும் போதும் அதிகரிக்கின்றது. நெருக்கடிகளை உடல் சந்திக்கத் தயாராகிறபோது பல ஹார்மோன்கள்களை சுரப்பிகளிலிருந்து மேற்சுரந்து உடலில் கலக்கின்றன. இச்சுரப்பிகள் சரியாக இயங்கவில்லையென்றால் உடலின் நெருக்கடிகளை எதிர்க்கப் போதிய சக்தி கிடைப்பதில்லை. அதாவது நரம்புகளின் இழந்த பலம் திரும்பப் பெறுவதில்லை. இதன் காரணமாகப் பலவிதமான நரம்பு நோய்கள் உடலில் தோன்றி வருத்து கின்றன. நரம்பு தொடர்பான பிணிகள் தோன்றாமல் தடுக்க உள்ள பல வழிகளில் 'டென்ஷன்' எனப்படும் மனவியல் நெருக்கடிகளை சாமார்த்தியமாக சமாளிப்பது ஒன்று ஆகும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்மன நெருக்கடிகளும் நரம்புநோய்களும்
நெருக்கடிகள்:
மருத்துவ குறிப்புகள் : அடிக்கடி டென்ஷன் ஆகுபவர்களா நீங்கள்? - மன நெருக்கடிகளும் நரம்புநோய்களும், நெருக்கடிகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Are you often tense? - Mental crises and nervous diseases, Crises in Tamil [ Medicine ]