நரம்பியல் நோய்களுக்கும் முதுமைப் பருவத்துக்குமிடையே நெருக்கமான தொடர்பு உண்டு.
வயதாகி விட்டதா! உங்களுக்கான டிப்ஸ்! நரம்பியல் நோய்களுக்கும் முதுமைப் பருவத்துக்குமிடையே நெருக்கமான தொடர்பு உண்டு. வயது முதிர முதிர உடலின் உறுப்புக்கள் வலிமை இழக்கின்றன தங்கள் செயல் திறனை இழக்கின்றன. இந்தக்காரணத்தால் இளம் பருவத்தில் இருந்த அளவுக்கு முழு ஆரோக்கியத்துடன் முதுமைப் பருவத்தில் இருக்க முடிவதில்லை. இளமைப் பருவத்தில் செயற்பட்டது போல அவ்வளவு சுறுசுறுப்பாக வேகமாக முதுமைப் பருவத்தில் செயற்பட முடிவதில்லை. ஆனால் முதுமைப் பருவம் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிவுக்கு வந்து விட்டது எனக் கருதக் கூடாது. ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை உண்டு. அந்தந்தப் பருவத்திற்கு அந்த வாழ்க்கை இன்பம் தருவதாக இருக்கும். இதே போன்று முதுமைப் பருவத்திற்கென ஒரு வாழ்க்கை உண்டு. அந்த வாழ்க்கை முதுமைப் பருவத்திற்கான இனிய - இன்ப சூழ்நிலையை அமைக்கவே செய்யும். முதுமைப் பருவத்தில் நரம்பியல் சக்தி உடலில் ஒரேயடியாக அழிந்துவிடும் என்று நினைக்கக் கூடாது. சரியான விதிமுறைகளைக் கையாண்டு செயற்பட்டால் முதுமைப் பருவத்திலும் நரம்பு மண்டலம் நல்ல ஆரோக்கியத்துடன் செயற்படும். முதுமைப் பருவத்தில் மற்ற உறுப்புக்களின் வலிமையை நம்பிச் செயற்பட முடியாது. உடல் உழைப்புடன் கூடிய கடினமான பணிகளை முதுமைப் பருவத்தில் செய்ய இயலாது. செய்வதற்கான உடல் வலிமை அப்போது உடலில் அமைந்திருக்காது. ஆனால் நரம்பு மண்டலம் மட்டும் முதுமைப் பருவத்தில் சக்தியிழப்பதில்லை. நரம்புகளின் ஆற்றலைச் சீர்குலைக்காமல் அவற்றின் வலிமையை கட்டிக்காத்து வந்தால் முதுமைப் பருவத்திலும் அரிய பல சாதனைகளை மனிதனால் ஆற்ற முடியும். உணர்ச்சிகள் நரம்பு மண்டல இயக்கத்தால் தான் உருவாகின்றன. உணர்ச்சிகளை ஆதாரமாக வைத்துச் சாதிக்கக் கூடிய பல காரியங்களை முதுமைப் பருவத்தில் சாதிக்க முடியும். கலை தொடர்பான செயல்கள், உதாரணமாக எழுத்து, கவிதைகள் இயற்றுதல், இசை, நாடகம் போன்றவற்றில் முதுமைக் காலத்தில் சிறப்பாக பணியாற்ற முடியும். அந்தச் சாதனைகளுக்கு கை கொடுப்பது நரம்பு மண்டல வலிமைதான். ஆகவே முதுமைக் காலத்தில் நரம்பு சக்திகளை வீணாக்காமல் அவற்றைக் கட்டிக்காத்து அதை எப்போதும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும். முதுமைப் பருவத்தில் எதிலும் மிதமாக இருக்கப் பழகிக் கொள்ளவேண்டும். நமது அன்றாட உணவு மிகவும் எளிதாகவும் மிதமானதாகவும் இருக்க வேண்டும். வயிறு புடைக்க உண்ணுவதை எந்த அளவுக்கு முதுமைப் பருவத்தில் கை விடுகிறோமோ அந்த அளவுக்கு முதுமைப் பருவத்தில் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். நோய்கள் நம்மை நெருங்க மாட்டா. முதுமைப்பருவத்தில் அதிகக் கடினமான உணவு வகைகளை வயிறு புடைக்க உண்ணும் போது நமது உடலின் ஜீரண சக்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது. முதுமைப் பருவத்தில் ஜீரண உறுப்புகளின் செயற்பாடு மிகவும் பலவீனமாக இருப்பதால், நாம் உண்ணும் கடின உணவு - மிகை உணவு செரிமானமாவதில்லை - ஜீரண உறுப்புக்களும் விரைவில் பழுதடைந்து செயல் திறன் குறைந்து விடுகின்றன. முதுமைக் காலத்தில் ஏற்படக் கூடிய கடுமையான பிணிகள் ஜீரணக் கோளாறுகளிலிருந்து தான் தொடங்குகின்றன. அஜீரணக் கோளாறுகள் பெருகும் போது அது நரம்பு மண்டல செயற்பாட்டைக் கடுமையாகப் பாதிக்கிறது என்று முன்னரே நாம் கூறியிருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். முதுமைப் பருவம் உழைக்க முடியாத பருவம் என்றும் அதனால் முதியவர்கள் உழைக்கச் சக்தியற்றவர்களாக இருப்பார்கள் என்றும் சிலர் கூறுவதுண்டு. உழைப்பு என்பது எந்தப் பருவத்திலும் புறக்கணிக்கக் கூடாத ஒன்றாகும். ஓர் இளைஞன் அளவுக்கு ஒரு முதியவர் செயற்பட முடியாது என்பது உண்மையாக இருக்கலாம். என்றாலும் முதுமைப் பருவத்திற்குத் தக்க விதத்தில் உழைக்க முடியும். உழைக்க வேண்டும். தங்கள் சக்திக்கு ஏற்ப உடல் உழைப்பு தரும் சிறு சிறுதொழில்களை முதியவர்கள் செய்யலாம். உழைப்பதற்கு வாய்ப்பு அதிகம் இல்லையென்றால் இலேசான உடற்பயிற்சிகளை முறைப் படியும் தொடர்ந்தும் முதியவர்கள் செய்து வரலாம். முதுமைப் பருவத்திற்கு ஏற்ற யோகாசனங்களையும் படிக்கலாம்.ம் முதுமைப் பருவத்தில் மேற்கொள்ளக் கூடிய உடற்பயிற்சிகளில் குறிப்பிடத்தக்கதும், பயன் விளைவிப்பதும் சுவாசம் தொடர்பான பயிற்சிகள் தான். எளிய சுவாசப் பயிற்சிகளை தக்க முறையில் அறிந்து அவற்றை நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கையாள வேண்டும். முதுமைப் பருவத்தில் இருதயம், நுரையீரல் போன்ற உறுப்புக்களின் ஆற்றல் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். நுரையீரல்களின் இயக்கத்தையும் இருதய செயற்பாட்டையும் ஒழுங்காக ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் முதியவர்கள் தங்கள் ஆயுட்காலத்தை நீடித்துக் கொள்ள முடியும். முக்கியமாக நினைவில் இருக்க வேண்டியது, நமது உணர்ச்சிகளை ஒரு. கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடக்கியாள வேண்டும் என்பதாகும். கோபதாப உணர்ச்சிகளுக்கு முதுமைப் பருவத்தில் இடமளிக்கக் கூடாது. பொறாமை, எரிச்சல், ஆவேச மனப்போக்கு போன்றவை முதுமைப் பருவத்தில் சீர்செய்ய முடியாத அளவுக்கு நரம்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தி விடக் கூடும். மன நிலையை அமைதியாக வைத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். ஆத்திரமடையக் கூடிய சந்தர்ப்பம் நேர்ந்தாலும் மனத்தை அடக்கி கட்டுக்குள் வைத்திருக்கப் பழக வேண்டும். உணர்ச்சிகளைப் பாதிக்கக் கூடிய எந்த நிகழ்ச்சியினையும் தவிர்க்க வேண்டும். முதுமைக் காலத்தில் மனத்தைச் சம நிலையில் வைத்திருக்க ஆன்மிகச் சிந்தனை பெரிதும் உதவும். தெய்வ நம்பிக்கை, காலந்தவறாமல் இறைவனை வழிபடுதல், புண்ணிய தலங்கள் யாத்திரை செய்தல் போன்ற செயல்கள் முதுமைப்பருவத்தில் நல்ல மன அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்க உதவும். முதுமைப் பருவம் என்றாலும் முற்றிலும் ஓய்வு பெற்று அமர்ந்திருக்கும் பருவம் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். முதுமைப் பருவத்தில் ஒரேயடியாக ஓய்ந்து அமர்ந்து விடுவதே பலவிதமான மனநிலைக் கோளாறுகளைத் தோற்றுவித்து விடும். யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படுதல் - எரிந்து விழுதல், காரணமின்றி மற்றவர்களைக் குறை கூறிக் கொண்டிருத்தல், எதிலும் திருப்தி கொள்ளாத மனநிலை முற்றிலுமாக ஓய்ந்து அமர்ந்து விட்ட முதியவர்களிடம் தானா அமைந்துவிடும். முதுமைப் பருவத்திலும் தங்கள் சக்திக்கு ஏற்ப நாள் முழுவதும் சுறுசுறுப்பாக ஏதாவது செய்துக் கொண்டிருக்க வேண்டும். அதிகாலையில் விழித்தெழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும்வரை ஒன்று மாற்றி ஒன்று என தங்களால் இயன்ற பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் உடல் நலமும் மன நலமும் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும். முதுமைப் பருவத்தினர் தங்களை எந்த விதத்திலும் தனிமைப் படுத்திக் கொள்ளக் கூடாது. சுற்றுப்புறத்தில் உள்ள அனைவரிடமும் கலகலப்புடனும் நட்புறவுடனும் பழக வேண்டும். குறிப்பாக இளைஞர்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தங்கள் வாழ்க்கை அனுபவங்கள் அடிப்படையில் வழிகாட்டி உதவ வேண்டும். இவ்வாறு முதியவர்கள் செயற்பட்டால் நரம்பு தொடர்பான எந்தவிதமான பிணிகளுக்கும் இலக்காகாமல் மகிழ்ச்சியுடனும் மன அமைதியுடனும் வாழ முடியும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்வயோதிகப் பருவமும் நரம்பு நோய்களும்
முதுமைப் பருவம்
மருத்துவ குறிப்புகள் : வயதாகி விட்டதா! உங்களுக்கான டிப்ஸ்! - வயோதிகப் பருவமும் நரம்பு நோய்களும், முதுமைப் பருவம் [ மருத்துவம் ] | Medicine Tips : Are you old? Tips for you! - Aging and Neurological Diseases, Old Age in Tamil [ Medicine ]