பைரவர் என்றால், பயத்தைப் போக்குபவர், பயத்தைத் தருபவர் என்று இரு பொருள் உண்டு.
அஷ்ட பைரவர்கள் இருக்கும் கோயில்!
ஒரே கோயிலில் அஷ்ட பைரவர்கள் அருள்வது
வேறெங்கும் காணவியலாத அபூர்வமான ஒன்று. கள்ளக்குறிச்சி - ஆத்தூர் சாலையில் சேலம் போகும்
வழியில், சின்னசேலம் வி-கூட்டு ரோட்டிலிருந்து
இரண்டு கி.மீ தொலைவில் உள்ள ஆறகழூரில் அமைந்திருக்கும் ஆலயத்தில்தான் இது காணப்படுகின்றது.
முருகப் பெருமான் அவதரிப்பதற்கு முன்னரே தோன்றிய மிகப் பழமை வாய்த்த திருத்தலம் அது.
பைரவர் என்றால், பயத்தைப் போக்குபவர், பயத்தைத் தருபவர் என்று இரு பொருள்
உண்டு. தன்னை வணங்கும் பக்தர்களின் பயத்தைப் போக்கியும், அவர்களின் எதிரிக்குப் பயத்தைத் தருவதும்
பைரவரின் அருளாகும்! இத்தல அஷ்ட புஜ கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று உலக நன்மைக்காக
பைரவ யாகம் நடைபெறுகிறது. இவரே (கால பைரவர்). அஷ்ட ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதி என்கிறது
'வாருணபத்ததி' என்னும் நூல்.
ஒன்பது அமாவாசை தினங்களில் 27 மிளகுகள் கட்டிய துணியைத் திரியாக்கி, கால பைரவரின் சன்னிதியில் விளக்கேற்றி
தயிர்சாதம் நிவேதித்து வழிபட, இழந்த
சொத்துக்கள் திரும்பக் கிடைப்பதாக ஐதீகம்!
மேலும் அஷ்ட பைரவர்களில் குரு பைரவர், சூரிய பகவானின் அருகில் எழுந்தருளியுள்ளார்.
டமருகம், மான், கத்தி, கபாலம் ஆகியவற்றை ஏந்தி அருளும் இவரது
சக்தியே மாஹேஸ்வரி.
சண்ட பைரவர், சந்திரனுக்கு அருகில் அருள்கிறார்.
அமாவாசை அன்று சிறப்பு வழிபாடுகள் பெறுகிறார். வில், அம்பு, கத்தி
கபாலம் ஏந்தி காட்சி தரும் இவரது சக்திதான் கௌமாரி.
குரோதன பைரவர், ஈசன் சன்னிதி முன்பு சங்கு, சக்கரம், கபாலம், கதை ஏந்தி அருள்பாலிக்கின்றார். இவரது
சக்தி வைஷ்ணவி.
அஸிதாங்க பைரவர் தன் ஆறுகரங்களில் கதை, கபாலம், பானபாத்திரம், கட்கம், கமண்டலம், ஜபமாலை ஏந்தி திகம்பரராகக் காட்சியளிக்கிறார்.
இவரது சக்திதான் பிராம்மி. பிரகாரத்தில் உன்மத்த பைரவர், ஞானத் திருமுகத்துடன் உலக்கை, கபாலம், கேடயம், அபயஹஸ்தம் காட்டி அருள்கின்றார். இவரின்
சக்தியாகத் திகழ்வது வராகி. ராஜகோபுரத்தின் உள்ளே பக்கவாட்டில் கபால பைரவர் வீற்றிருக்கிறார்.
இவரின் சக்தி 'ஐந்த்ரீ' என்பவள்.
பீஷண பைரவர் நான்கு கால் மண்டபத்தில்
பலிபீட வடிவில் காட்சியளிக்கிறார். முதலில் இவரைக் குனிந்து வணங்கிய பின்பே, ராஜகோபுர கபால பைரவரைத் தரிசிக்கிறார்கள்.
இவரது சக்தி சாமுண்டா தேவி. பிரகாரத்தில் வாராஹி, ஜேஷ்டாதேவி, ரௌத்ரி ஆகிய மூவரும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
காசியைப் போலவே பைரவர். அன்னபூரணி, விஸ்வநாதர், விசாலாட்சி, வாராஹி ஆகிய ஐவரும் அருள்புரிகிறார்கள். எனவே இத்தலம் காசி தரிசனத்திற்கு
நிகரானது என்று கருதப்படுகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : அஷ்ட பைரவர்கள் இருக்கும் கோயில்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Ashta Bhairav Temple! - Tips in Tamil [ spirituality ]