பக்திக்குக் கிடைத்த கவுரவம்!

பெருமாள்

[ பெருமாள் ]

Bhakti's honor! - Perumal in Tamil

பக்திக்குக் கிடைத்த கவுரவம்! | Bhakti's honor!

பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பார்கள். அதுவும், புரட்டாசி சனி என்றால் சொல்லவே வேண்டாம்.

பக்திக்குக் கிடைத்த கவுரவம்!

 

பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பார்கள். அதுவும், புரட்டாசி சனி என்றால் சொல்லவே வேண்டாம். எல்லா பெருமாள் பக்தர்களும் தவறாது விரதம் மேற்கொள்வார்கள்.

 

அவ்வாறு, பெருமாளை வேண்டி சனிக்கிழமை அன்று விரதம் இருந்தால் அவரது அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியவர்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவன் பீமன் என்பவன். மகாபாரத்தில் வரும் மாவீரன் பீமன் அல்ல இவன். உலகிலேயே அதிக வருமானம் கொட்டும் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருப்பதியில் வசித்து வந்த சாதாரண குயவன் தான் இந்த பீமன்.

 

மிகச் சிறந்த பெருமாள் பக்தனான இவன், தனது ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் செய்து கொண்டாள். அதன்படி விரதம் இருந்து வந்தான்.

 

இந்த பீமனின் குடும்பம் ஏழ்மையானது என்பதால் மண் பாண்டம் ஏதேனும் செய்து விற்றால்தான் அன்றைய தினம் பசியைப் போக்க முடியும்! அதனால், பெரும்பாலான நேரம் தனது மண்பாண்டத் தொழிற்கூடத்திலேயே இருப்பான். அதே நேரம், அவனது மனம் முழுக்க பெருமாள் நிறைந்திருப்பார்! எப்போதும் தொழிலே கதி என்று கிடந்ததால் இவனால் சனிக்கிழமை அன்று கூட ஏழுமலையான் கோயிலுக்குச் செல்ல நேரம் கிடைக்கவில்லை. ஆகவே எப்போதாவதுதான் கோவிலுக்குச் செல்வான். பெருமாளுக்கு காணிக்கை கொடுக்கக் கையில் பணம் இருக்காது என்பதால், மனதாரப் பெருமாளை வழிபட்டு விட்டு திரும்பி விடுவான்!

 

ஒருமுறை அவன் மனதில் வித்தியாசமான ஒரு எண்ணம் தோன்றியது. 'நாம்தானே பெருமாளைத் தேடி கோவிலுக்குச் செல்கிறோம். அதே பெருமாள் நம்மைத் தேடி வந்தால் இன்னும் ஈஸியாக இருக்குமே?...' என்று கருதினான்.

 

உடனே, அதற்கான செயலில் இறங்கினாள். வேகமாகக் களிமண்ணில் ஆன பெருமாளின் சிலை ஒன்றைச் செய்தான். அந்தச் சிலைக்கு அணிவிக்க பூ வாங்கும் அளவுக்கு அவனிடம் பணம் கிடையாது என்பதால், தான் வேலை செய்து முடித்தபிறகு எஞ்சிய மண்ணைச் சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்துச் சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தான்!

 

இந்தக் குயவன் பீமன் வாழ்ந்து வந்த அதே ஊரில் வாழ்ந்த அந்த நாட்டின் மன்னன் தொண்டைமானும் தீவிர பெருமாள் பக்தர். சனிக்கிழமை தோறும் வழிபாட்டுக்காகக் கோவிலுக்கு வரும் அவர், தங்கத்தால் ஆன பூமாலை ஒன்றை பெருமாளுக்கு அணிவித்து மகிழ்வார்.

 

ஒருமுறை அவ்வாறு தங்கப்பூமாலை அணிந்து விட்டு, மறு வாரம் வந்தார். அப்போது பெருமாளின் கழுத்தில் மண்ணைச் சுட்டு செய்த பூமாலை தொங்கிக் கொண்டிருந்தது. கோவில் அர்ச்சகர்கள் தான் இவ்வாறு செய்கிறார்களோ என்று எண்ணினார் மன்னர். ஆனால், அது பற்றி கேட்கவில்லை! அன்றைய தினம் இரவும் அதே சிந்தனை அவருக்கு எழுந்தது. அவரது மனம் குழம்பிய நிலையில் காணப்பட்டது. அன்று அவரது கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். குயவனான பீமனின் பக்தி பற்றியும் எடுத்துரைத்தார். அந்தக் குயவன் விருப்பத்துடன் அணிவித்த மாலைதான் அது என்றும் சொன்னார்/

 

ஒரு குயவன் பற்றி பெருமாளே தன்னிடம் கூறியதால், மறுநாள் காலை அந்தக் குயவனின் இல்லத்திற்குச் சென்றார் மன்னர் தொண்டைமான். சிறிய குடிசை வீடுதான் குயவனின் வீடு. அந்த வீடு இருந்த சிறிய இடத்திலேயே மண்பாண்டங்கள் செய்து வந்தாள்.

 

பெருமாள் மீது தீவிர பக்தி இந்த பக்தன் கஷ்டப்படக்கூடாது என்று கருதிய மன்னர், அவனுக்குத் தேவையான பொருளுதவியைச் செய்ய முன்வந்தார். ஆனால், குயவனோ அதை வாங்க மறுத்து விட்டான். 'பெருமாளுக்கு தொண்டு செய்வது தான் என் பிறவிப் பணி. அதற்கு தாங்கள் எந்தவிதமான இடையூறும் செய்ய வேண்டாம்' என்று பெருந்தன்மையாகக் கூறினான் குயவன்.

 

அதன்படியே, பெருமாள் பக்தனாக வாழ்ந்த குயவன், இறுதிக் காலத்தில் வைகுண்டத்தை அடைந்தான்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : பக்திக்குக் கிடைத்த கவுரவம்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Bhakti's honor! - Perumal in Tamil [ Perumal ]