இறைவனைத் தேடி பயணிக்கும் பக்தர்களின் ஆன்மீக தேடல் அவர்களுக்கு நிச்சயம் மன அமைதியை தந்தாக வேண்டும்.
திருப்பம் தரும் சதுரகிரி யாத்திரை இறைவனைத் தேடி பயணிக்கும் பக்தர்களின் ஆன்மீக தேடல் அவர்களுக்கு நிச்சயம் மன அமைதியை தந்தாக வேண்டும். அதனால்தான், சிரமம் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் அவர்களது இறைத்தேடல் தொடர்கிறது. அந்த வகையில் அமைந்ததுதான் சதுரகிரி யாத்திரை. மேற்குத் தொடர்ச்சிமலையில் மதுரை – விருதுநகர் மாவட்டங்கள் இணையும் இடத்தில் இந்த மலை அமைந்துள்ளது. கயிலாய மலைக்கு அடுத்தபடியாக இறைவன் சிவபெருமான் விரும்பி அமர்ந்த இடம் இந்த சதுரகிரி என்பதால், இம்மலைக்கு தென்கயிலாயம் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இங்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என இரண்டு வடிவங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் சிவபெருமான். சிறப்பு மிக்க அந்த இடத்திற்கு நாமும் பயணிப்போம். பார்த்த மாத்திரத்தில் பிரமிப்போடு சற்று மிரளவும் வைக்கும் மலைதான் சதுரகிரி மலை. சித்தர்களின் நடமாட்டம் இன்றும் இருப்பதாகக் கருதப்படும் இந்த மலையில் அபூர்வ மூலிகைகள் ஏராளம் விளைகின்றன. அபாயகரமான விலங்குகளுக்கும் இந்த மலை புகலிடமாகத் திகழ்கிறது. மலை உச்சிவரை செல்லும் பாதை மக்கள் நடந்து நடந்தே உருவானதுதான். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தாணிப்பாறை இதுதான் சதுரகிரி மலையின் அடிவாரப்பகுதி. இங்கு வரைதான் வாகனத்தில் செல்லமுடியும். அதன் பிறகு மலை உச்சியை நோக்கி நடைபயணம்தான். தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து சுமார் இரண்டை மணி நேரத்திற்கும் மேலாக நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். 7 மலைகளைக் கடந்தால் இறைவன் சிவபெருமான மிகவும் எளிமையாய் கோவில் கொண்டுள்ள மகாலிங்க சன்னதியை சென்றடையலாம். தாணிப்பாறைக்கும் மகாலிங்கம் கோவிலுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 10 கிலோ மீட்டர். சுற்றியுள்ள 4 மலைகளும் சதுர வடிவில் அமைந்துள்ளதால் இம்மலைக்கு சதுரகிரி என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். சதுர என்றால் நான்கு. கிரி என்றால் மலை என்று பொருள். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகர் அருள்பாலிக்கிறார். சதுரகிரி யாத்திரை செல்லும் பக்தர்கள் இவரை வழிபட்ட பின்னரே தங்களது பயணத்தை துவங்குகின்றனர். கரடு முரடான செங்குத்தான மலைப்பாதையில் பயணம் தொடர்கிறது. செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோவில்கள் அமைந்துள்ளன. இதனை அடுத்து வருவது குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள். அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தின் தரிசனம் நமக்கு கிடைக்கிறது. தொடர்ந்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில்தான் சிவபெருமான் துறவி வேடம் கொண்டு காராம்பசுவின் மடுவில் பால் அருந்தியதாக சொல்கிறார்கள். அங்கிருந்து சிறிது தூரம் மலையேறினால் கோரக்க சித்தர் தவம் செய்த குகையையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கத்தையும் தரிசிக்கலாம். கோரக்கர் குகைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று தூரத்தில் ஒரு லிங்கம் உள்ளது. இங்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. அடுத்ததாக நாம் தரிசிப்பது இரட்டை லிங்கம். அங்கிருந்து சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதி வழியாக சென்றால் நாவல் ஊற்று என்கிற நீரூற்று வருகிறது. நீரிழிவு நோய் என்கிற சர்க்கரை நோயை குணமாக்கும் மகிமை இந்த நீரூற்றுக்கு இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் இங்கு வரும் பக்தர்கள் இந்த நீரூற்று நீரை தவறாது பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தொடர்ந்து மலையேறினால் பச்சரிசிப்பாறை, வனதுர்க்கா கோவில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோவில்களை தரிசிக்க முடியும். இவ்வளவு தெய்வங்களையும் தரிசித்துவிட்டு வந்தால் நாம் நடைபயணம் துவங்கி சுமார் இரண்டரை மணிநேரம் கடந்திருக்கும். வேகமாக மலையேறியிருந்தால் இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். இதற்குப் பின்தான் நாம் தேடிவந்த இறைவன் மகாலிங்கமாகவும், சந்தனலிங்கமாகவும் அருள்பாலிப்பதை தரிசிக்க முடியும். அவர்களை தரிசிக்கும் முன்பு, அந்த தெய்வங்கள் இங்கே தோன்றிய தலவரலாற்றை புரட்டி விடுவோம். சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள கோட்டையூரைக் சேர்ந்த தில்லைக்கோன் - திலகமதி தம்பதியரின் மகனான பச்சைமால் என்பவன் பசுக்களை மேய்த்து பிழைத்து வந்தான். பச்சைமாலுக்கு சடைமங்கை என்ற மனைவி இருந்தாள். இவள் தினமும் தனது மாமனார் வீட்டில் கணவன் கறந்து தரும் பசும்பாலைக் கொடுத்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தாள். ஒருமுறை பால் கொண்டு சென்றபோது எதிரில் வந்த துறவி ஒருவர், அவள் கொண்டு சென்ற பாலை தனக்கு கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தான் அங்கு தங்கியிருக்கும்வரை தனக்கு பால் தருமாறு கேட்டார். சடைமங்கையும் சம்மதித்தாள். தான் கொண்டு சென்ற பாலில் துறவி அருந்த தேவையான பாலை மட்டும் கொடுத்து வந்தாள். அடுத்த சில நாட்களில், வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கண்ட சடைமங்கையின் மாமனார். இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தகவல் தெரிவிக்க... பச்சைமால் தனது மனைவியை பின்தொடர்ந்து சென்று சோதனையிட்டான். தனது மனைவி துறவிக்கு பால் கொடுத்ததை கண்ட அவன் கோபம் கொண்டு அவளை அடித்தான். சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட துறவி, அவளை 'சடதாரி' என்ற மக்களை காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தினான். தனது மனைவி துறவிக்கு செய்த சேவையை இவனும் செய்ய ஆரம்பித்தான். சிவபூஜைக்கு தேவையான பாலையும் கொடுத்து வந்தான். ஒருநாள் சிவபெருமான் துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் பச்சைமால் வளர்த்து வந்த காராம் பசுவின் மடுவில் வாய் வைத்து பால் குடித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட பச்சைமால் கடும்கோபம் கொண்டு துறவியின் தலையில் கம்பால் அடித்து விட்டான். சட்டென்று திரும்பிய துறவி உருவில் இருந்த சிவன், பக்தனின் அறியாமையை நீக்க புலித்தோல் அணிந்து இறைவனாக காட்சி கொடுத்தார். இறைவனை அடித்து விட்டோம் என்று அறிந்த பச்சைமால் அதற்காக வருந்தி அழுதான். அப்போது இறைவன், நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு, பூலோகத்தில் மனிதனாகப் பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன். என்று கூறி அவனுக்கு முக்தியும் அளித்தார். அதோடு, சித்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சுந்தரமகாலிங்கம் என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார் என்கிறது சதுரகிரி புராணம். இன்றும் கூட இறைவன் மகாலிங்கத்தின் லிங்கத் திருமேனி சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம். இனி, கயிலாயத்தில் ஒருநாள்... இறைத்தம்பதியர் சிவபெருமான் - பார்வதியை தரிசிக்க வந்த தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் அனைவரும், அவர்கள் இருவரையும் வலம் வந்து வணங்கினர். ஆனால், பிருங்கி என்ற மகரிஷி மட்டும் பார்வதியை கண்டுகொள்ளாமல், சிவனை மட்டும் வணங்கினார். இதைப் பார்த்த பார்வதிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஏன் அவர் என்னை வணங்கவில்லை என்று சிவனிடமே கேட்டார். சிவனும் விளக்கம் அளித்தார். "பூலோகத்தில் அனைத்தையும் துறந்துவிட்டு மோட்ச கதியைத் தேடி வருபவர்களுக்கு நான் மோட்சத்தை அளிக்கிறேன் அல்லவா?" "சரி... அதற்கும் இவர் என்னை புறக்கணித்தற்கு என்ன சம்பந்தம்?" "அவசரப்படாதே பார்வதி, உலக இன்பங்களை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் அவற்றை அடையும் சக்தி தேவியாகிய உன்னிடம் இருந்து பெறுவதால் நம் இருவரையும் சேர்த்து வணங்குகிறனர். ஆனால் பிருங்கி முனிவரோ தமக்கு மோட்ச கதி மட்டும் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார் போலும். அதனால்தான் அவர் என்னை மட்டும் வணங்கி இருக்கிறார்." என்றார் சிவன். இந்த சம்பவத்தால், தன்னை சிவனுடன் இணைத்துக் கொண்டால் மட்டுமே தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என எண்ணிய பார்வதி, பரமனின் உடலில் சரிபாதியை பெற தவம் செய்ய முடிவு செய்தார். அதற்காக அவர் தேர்வு செய்த இடம் தான் இந்த சதுரகிரி. சட்டநாதர் என்ற முனிவரின் உதவியுடன், சந்தனத்தைக் குழைத்து அதன் மூலம் லிங்கம் ஒன்றை அங்கு பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கத்தை அனுதினமும் தவறாது பூஜித்து கடும் தவம் மேற்கொண்டார். மனமுருகிய சிவன், தேவியின் தவத்தினை மெச்சி தன்னில் சரிபாதியை அவராக்கினார். சிவன் அர்த்த நாரீஸ்வரர் ஆனார். இப்படியாக உருவானதுதான் சந்தன மகாலிங்கம் என்கிறது சதுரகிரி தலபுராணம். சுந்தர மகாலிங்கம் கோவிலில் இருந்து சற்று மேடான பகுதியில் சந்தனமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்முதலில் சுந்தரமகாலிங்கத்தின் கதை:
சந்தன மகாலிங்கம் உருவான வரலாறு:
ஆன்மீக குறிப்புகள் : திருப்பம் தரும் சதுரகிரி யாத்திரை - முதலில் சுந்தரமகாலிங்கத்தின் கதை, சந்தன மகாலிங்கம் உருவான வரலாறு [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Chaturagiri Yatra is a turning point - First is the story of the Sundaramakalingam, the history of the creation of the Sandalwood Mahalingam in Tamil [ spirituality ]