ஆ. தூதுவளை : உலர்ந்த செடியின் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட சுவாச நோய்கள் குணமாகும்.
பொதுவான நோய்களும் அவற்றின் கைமுறை மருந்துகளும் - தொடர்ச்சி
8. சுவாச நோய்கள்
அ. கண்டங்கத்தரி : இரைப்பு நோய்க்கு இச்செடியை நன்றாக உலர்த்திப் பொடி செய்து, ஒரு கிராம் வீதம் காலையிலும் மாலையிலும் தேனில் கலந்து
சாப்பிட வேண்டும்.
ஆ. தூதுவளை : உலர்ந்த செடியின் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட சுவாச நோய்கள் குணமாகும்.
இ. வெள்ளெருக்கு : வெள்ளெருக்கம் பூவின் இதழை, மிளகுடன்
சம அளவு சேர்த்து அரைத்து மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு, தினமும் காலை இரண்டு மாத்திரைகளும், இரவில் இரண்டு மாத்திரைகளும் தேனில் குழைத்துச் சாப்பிட மூச்சிரைப்பு குணமாகும்.
ஈ. திப்பிலி : ஆடாதோடை இலைச்சாற்றில் திப்பிலியை ஒரு நாள் ஊறவைத்து, பின் முசுமுசுக்கை இலைச் சாற்றில் ஒருநாள் ஊறவைத்து நன்கு
உலர்த்தி பின் தூளாக்கி ஒரு கிராம் வீதம் தேனில் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட
சுவாச நோய்கள் குணமாகும்.
9. தோல் நோய்கள்
அ. வெட்பாலை: சோரியாஸிஸ் (SORIASIS) என்ற தோல்
நோய்க்கு, வெட்பாலை இலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு வெய்யிலில்
மூன்று நாள்கள் வைக்க வேண்டும். (தினமும் இலையைப் புதிதாக மாற்ற வேண்டும்) பிறகு,
அந்த எண்ணெய்யை உடலில் பூசி பின் குளித்து வந்தால் நோயின் தீவிரம் குறைந்து
வரும்.
ஆ. அறுகு : கணபதி பத்திரம் என்றழைக்கப்படும் அறுகம்புல் பொதுவாக எல்லா தோல் நோய்களுக்கும்
ஏற்றது. இதன் சூரணத்தைத் தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும், இதன் இலைச்சாற்றை தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி
அதைத் தோலில் தடவி வரலாம்.
இ. பறங்கிப்பட்டை : இம்மூலிகையின் வேரில் இருக்கும் கிழங்கைத் தூளாக்கி பாலில் ஒரு கிராம்
வீதம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர கரப்பான், படை, தேமல் போன்ற தோல் நோய்கள் தீரும்.
ஈ. சீமையகத்தி : சீமையகத்தி இலை, மஞ்சள்,
வேப்பிலை இவற்றை அரைத்து பூச படர்தாமரை, தேமல்
நீங்கும்.
10. மூட்டு வலி
அ. சேராங்கொட்டை : சேராங்கொட்டை சேர்ந்த மருந்தான சேங்கொட்டை நெய் ஒரு தேக்கரண்டி அளவுக்குக்
காலை, மாலை சாப்பிட்டு வரவேண்டும். மருந்து சாப்பிடும் போது,
உப்பில்லா பத்தியம் இருக்க வேண்டும்.
ஆ. சித்திரமூலம் : வெண்கொடி வேலி என்று அழைக்கப்படும் வேர்ப்பட்டை 100 கிராம், மிளகரணை வேர்ப்பட்டை 100) கிராம், நொச்சி வேர்ப்பட்டை 100 கிராம் இவற்றைப் பொடி செய்து, காலையிலும் மாலையிலும் 500 மி.கி. முதல் ஒரு கிராம் வரை, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட மூட்டுவலி
தீரும்.
இ. நொச்சி : நொச்சி இலையைக் குடிநீரிட்டு பனை வெல்லம் சேர்த்துக் கொடுத்து வந்தால்
மூட்டுவலி, ஜுரம், தலைவலி
நீங்கும்.
நொச்சி இலையை, ஆமணக்கு எண்ணெய்யில்
போட்டுக் காய்ச்சி மூட்டு வலிக்கு மேல் பூச்சாகத் தடவலாம்.
ஈ. எட்டி : எட்டிக் கொட்டையை சிறு துண்டுகளாக்கி வேப்ப எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய்யில்
போட்டுக் காய்ச்சி தடவி வந்தால் மூட்டு வலி குறையும்.
11. தலைவலி
அ. சிறுதேக்கு : சிறுதேக்குப் பொடியைத் தேனில் கலந்து, காலை யிலும் மாலையிலும் ஒரு கிராம் வீதம் நாற்பது நாள்கள் சாப்பிட்டு வர ஒற்றைத்
தலைவலி நீங்கும்.
ஆ. ஆடாதோடை : ஆடாதோடை இலை, அதிமதுரம், சுக்கு, மிளகு இவற்றைச் சேர்த்து 60 மி.லி. வீதம் காலை
மாலை ஐந்து நாள்கள் சாப்பிட்டால், மூக்கடைப்பால் வந்த தலைவலி
தீரும்.
இ. வெண்தாமரை : வெண்தாமரை இதழ் சூரணத்தை பாலில் கலந்து 500 மி.கி. முதல் ஒரு கிராம்
வரை சாப்பிட்டால், தலைவலி குறையும்.
ஈ. வசம்பு : வசம்பு இரண்டு பங்கு, அதிமதுரம்
ஒரு பங்கு, திப்பிலி ஒரு பங்கு இவற்றைப் பொடியாக்கி தேனில் கலந்து
சாப்பிட்டால் சளி மற்றும் ஜுரத்தால் வரும் தலைவலி தீரும்.
12. மூலம்
அ. கருணைக்கிழங்கு : கருணைக்கிழங்கு சூரணத்தை நெய்யில் கலந்து, ஒரு தேக்கரண்டி வீதம் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு
வந்தால் மூலம் குணமாகும்.
ஆ. துத்தி : துத்தி இலையைக் காயவைத்து, பொடித்து
ஒரு கிராம் வீதம் மூன்று வேளை தேனில் கலந்து சாப்பிடவும்.
இ. இம்பூரல் : இம்பூரல் சூரணத்தை, கருணைக்கிழங்கு
சூரணத்துடன் சேர்த்து சாப்பிட்டால், ரத்த மூலம் குணமாகும்.
ஈ. நிலவாகை : சென்னா' என்று அழைக்கப்படும்
நிலவாகைச் சூரணத்தை இரவில் படுக்கச் செல்லும் முன் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து
சாப்பிட்டு வந்தால், மூலம் குணமாகும்.
13. இருமல்
அ. இண்டு : இண்டு என்னும் மூலிகையின் இலையோடு , தூது வளை, இசங்கு, திப்பிலி,
கண்டங்கத்தரி, சுக்கு இவற்றைச் சேர்த்துக் கொதிக்க
வைத்த நீரைக் குடித்து வந்தால், தீராத இருமலும் தீரும்.
ஆ. ஆடாதோடை : ‘ஆடாதோடைக்குப் பாடாத நாவும் பாடும்'
என்பதற்கு ஏற்ப ஆடாதோடை, மிளகு சேர்ந்த தண்ணீர்
இருமலைப் போக்கும்.
இ. சிற்றரத்தை : சிற்றரத்தைப் பொடியைத் தேனில் கலந்து தினமும் காலையிலும் மாலையிலும்
சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
ஈ. திரிகடுகு : சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்றும் ‘திரிகடுகு' எனப்படும். இவற்றுடன் அதிமதுரம் சேர்த்து காலையிலும் மாலையிலும் தேனில் கலந்து
சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
சித்த மருத்துவத்தின் துணை மருந்துகள்
சித்த மருத்துவத்தில் ஒவ்வொரு நோய்க்கும் தகுந்த மருந்து களைச் சாப்பிடும்
பொழுது, அந்த மருந்தின் வீரியத்தை அதிகரிக்கச் செய்யவும்,
மருந்துகளுக்குப் பக்க விளைவுகள் இல்லாமல் செய்யவும், தேவைப்படும் உறுப்புகளுக்கு மருந்து சென்று செயல்படவும் மருந்தோடு சேர்த்துக்
கொடுக்கப்படும் பால், தேன், நெய்,
இளநீர் போன்றவற்றை அனுபானங்கள்' (VEHICLE) அல்லது
துணை மருந்து என்று சொல்வார்கள். சிறப்புத்தன்மை மிக்க துணை மருந்துகள் சிலவற்றின்
மருத்துவ குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
பால் : அமுது, கீரம், பாகு, துத்தம் என்றழைக்கப்படும் பால் தொன்றுதொட்டே தமிழர்களின்
உணவாகவும் மருந்தாகவும், மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும்
இருந்து வந்துள்ளது. பாலிலேயே சிறந்தது பசும்பால் என்பதும், குறிப்பாக
கபிலைப் பசு, காராம் பசு, செந்நிறப்பசு
இவற்றின் பால், மருந்துகளுக்காகவும் உணவுக்காகவும், சித்தர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்ததை பல சித்த நூல்களில் இருந்து
தெரிந்து கொள்ளலாம்.
பாலின் ஐம்பூதத் தன்மைகள் :
பால் - ஆகாயத்தின் தன்மையாகவும்
தயிர் - காற்றின் தன்மையாகவும்
நெய் - தீயின் தன்மையாகவும்
மோர் - நீரின் தன்மையாகவும்
வெண்ணெய் - மண்ணின் தன்மையாகவும் கருதப்படுகின்றன.
முதலிலே குறிப்பிட்டது போல், குழந்தைகள்
பெரியவர்கள், நோயாளிகள் அனைவருக்கும் பசுவின் பால் ஏற்றது. வெள்ளை
நிறம் உடைய பசுவின் பால், களைப்பைப் போக்கும் என்றும்;
காராம் பசுவின் பால், தாகத்தைத் தணிக்கும் என்றும்;
செந்நிறமுடைய பசுவின் பால், இருமல் நோயையும்;
புள்ளி களையுடைய பசுவின் பால், தோல் நோய்களைக்
குணப்படுத்தும் என்றும்; காய்ச்சாத பால், பசியை அதிகப்படுத்தும் என்றும்; காய்ச்சிய பால்,
உடல் வெப்பத்தைத் தணிக்கும் என்றும் 'தேரையர்'
தம் நூலில் விளக்கியுள்ளார்.
காராம் பசுவின் பால் : இப்பசுவின் பால், கண் நோய்கள்,
இருமல், காசம், பித்த நோய்கள்,
ரத்த நோய்கள், இவற்றுக்கு ஏற்றது. உடலுக்கு ஒளியையும்
வனப்பையும் தரும்.
எருமைப் பால் : எருமைப்பால் உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். எனினும், உடலுக்கு மதமதப்பான நிலையைக் கொடுத்து, புத்திக் கூர்மையையும், நல்ல மருந்தின் வீரியத்தையும்
கெடுக்கும் தன்மை கொண்டது என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளாட்டுப் பால்: வெள்ளாட்டுப் பாலைக் குடித்தால், வாதம், பித்தம், கபம், மூச்சு இரைப்பு, போன்றவை
நீங்கி நல்ல பசி உண்டாகும்.
பாலைக் காய்ச்சும் முறை : வெள்ளாட்டுப் பால், பசும்பால் இவற்றுக்கு
எட்டில் ஒரு பங்கு நீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். செம்மறி ஆட்டுப் பால்,
எருமைப் பால் இவற்றுக்கு சம அளவு நீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.
எந்தப் பாலாக இருந்தாலும் அப்பாலில் சிறிதளவு சுக்கு, சிறிதளவு
சிறுகாஞ்சொறி (பூனைக்காஞ்சிரம்) வேர் சேர்த்துக் காய்ச்சினால், அது வெள்ளாட்டுப் பாலின் குணத்துக்கு ஒப்பாகும்.
தாய்ப்பால் : தாய்ப்பால், வாதம், பித்தம், கபம், இவற்றினால் ஏற்படும்
எல்லா நோய்களையும் நீக்குவதோடு, ஜுரம், நாவறட்சி இவற்றைப் போக்கி உடலுக்கு வலிமையைத் தரும்.
தயிர் : பித்தத்தினால் ஏற்படும் நோய்களை நீக்கி, உடலுக்கு உறுதியையும் வலிமையையும் தரும்.
மோர்: வாத, பித்த, கப குற்றங்களை உடலில் சேராமல் உடலைக் காப்பாற்றும். பசுவின் மோரினால் வீக்கம்,
ரத்தசோகை, பித்தம், மந்தம்,
தாகம், பேதி போன்றவை குணமாகும்.
வெண்ணெய் : வெண்ணெய், உடலில் விந்து உற்பத்தியை
அதிகரிப்பதோடு, உடலுக்குக் குளிர்ச்சி, பலம் இவற்றைத் தரும்.
நெய் : நெய்யை அளவாகச் சாப்பிட்டால் உணவைச் செரிக்க வைப்பதோடு, உடலுக்குப் பலத்தை கொடுத்து, வாந்தி,
பித்தம், இருமல், விக்கல்,
மூலம், வயிற்றெரிச்சல் ஆகியவற்றைப் போக்கி உடலுக்கு
வனப்பைத் தரும்.
மேலே குறிப்பிட்டுள்ள பால் மற்றும் பால் பொருள்களின் மருத்துவக் குணங்களை
நன்கு தெளிந்து உணர்ந்த சித்தர்கள், அவற்றை
மருந்துகளுக்கு அனுபானமாகப் பயன்படுத்தி மருந்தின் வீரியத்தைப் பெருக்கி விரைவில் நோய்
தீர்க்கும் முறையை அறிந்திருந்து பயன்படுத்தியுள்ளனர்.
இளநீர்: பல்வேறு சித்த மருந்துகளின் துணை மருந்தாகப் பயன் படுத்தப்படும் இளநீர், தாகம், நாவறட்சியை நீக்கும். சிறுநீர்
நோய்க்கான மருந்துகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தலையில் தேய்த்துக் குளிக்கப்
பயன்படும் தைலங்களிலும் சேர்க்கப்படுகிறது.
தேன் : தேன், சித்த மருத்துவத்தில்
முக்கியப் பங்கு வகிக்கிறது. தேன் தன் மருத்துவக் குணங்களாலும், மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்கச் செய்வதாலும், மருத்துவத்தில்
தனி இடம் பெற்றுள்ளது. தேனின் மருத்துவக் குணங்களைக் காண்போம்.
தேன் கூட்டில் இருந்து புதிதாக எடுக்கப்படும் தேன், தெளி வாகவும், இனிப்பும்,
லேசான துவர்ப்பும் கொண்ட சுவையுட னும் இருக்கும். பொதுவாக, தேனுக்குக் குடல் புண்களை ஆற் றும் தன்மையும், மலத்தை
இளக்கும் தன்மையும், தொண்டை யில் கட்டும் கோழையை வெளியேற்றும்
தன்மையும், பசியை அதிகமாக்கும் தன்மையும், தூக்கம் உண்டாக்கும் தன்மையும், உடலுக்கு பலத்தை அளிக்கக்கூடிய
தன்மையும் உண்டு.
1. மலை தேன் : மலை தேனால் கபம், மூச்சிரைப்பு,
விக்கல்,இருமல், உடல் வெப்பம்
போகும். பசி அதிகமாகும்.
2. கொம்புத் தேன் : வாத, பித்த, கபம் போன்ற பிரச்னைகளை நீக்கி பசியை உண்டாக்கும்.
3. மரப்பொந்து தேன் : மரப்பொந்து தேன் சாப்பிட்டால், பசி
அதிகரிக்கும், வாந்தி, மந்தம், விக்கல், நாவில் சுவையின்மை, உடல்
எடை கூடுதல் ஆகியவை நீங்கி உடல் சுகம் பெறும்.
4. புற்றுத் தேன் : புற்றில் இருந்து எடுக்கப்படும் தேன், கபம், இருமல், மூச்சிரைப்பு,
வாந்தி, கண்நோய்களை நீக்கும்.
5. மனைத் தேன் : வீடுகளில் கட்டப்படும் கூட்டில் இருந்து கிடைக்கும் தேன் - புண், புரையோடிய புண், கரப்பான் என்னும்
தோல் நோய் இவற்றை நீக்கி பசியை அதிகரிக்கச் செய்யும். மேலும் புழுவெட்டு, இருமல், கபம் இவற்றை நீக்கி உடலுக்கு நன்மை தரும்.
6. புதிய தேன் : ஆயுளை அதிகரிக்கச் செய்யும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். நாவில் சுவையின்மையைப்
போக்கும். உடலுக்குள் உள்ள கபத்தை நீக்கி, உடலுக்கு
அழகைக் கொடுக்கும்.
7. பழைய தேன் : சிறிது இனிப்பும், அதிக
புளிப்பும் உடைய பழைய தேன், வாதத்தை அதிகப்படுத்தி, வயிறு எரிச்சலைத் தரும். மருந்தின் குணத்தைக் கெடுக்கும்.
தேன், சித்த மருந்துகளில் லேகியங்களிலும்,
சில மணப்பாகு களிலும், பல்வேறு மருந்துகளிலும்
சேர்க்கப்படுவதுடன், பல் வேறு மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும்
பயன்படுகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நாளை ஒரு நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சித்தா மருத்துவம் : பொதுவான நோய்களும் அவற்றின் கைமுறை மருந்துகளும் - தொடர்ச்சி - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Common Diseases and their Manual Remedies – Contd - Siddha medicine in Tamil [ Health ]