இறைவனின் தோழன்

குபேரன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: குபேரன் ]

Companion of God - Kuberan - Spiritual notes in Tamil

இறைவனின் தோழன் | Companion of God

நவநிதிகளுக்கும் அதிபதி குபேரன். பத்மம், மஹா பத்மம், மகரம், கச்சபம், குமுதம், நந்தம், சங்கம், நீலம், பத்மினி – இவை தான் குபேரனின் நவ நதிகள்.

இறைவனின் தோழன்


நவநிதிகளுக்கும் அதிபதி குபேரன். பத்மம், மஹா பத்மம், மகரம், கச்சபம், குமுதம், நந்தம், சங்கம், நீலம், பத்மினி – இவை தான் குபேரனின் நவ நிதிகள். இவைகளில் முக்கியமானவை சங்க நிதி மற்றும் பதும நிதி. செல்வத்தை அள்ள அள்ள வற்றாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கும் அபூர்வ ஆற்றல் வாய்ந்தவை இந்த நிதிகள்.


அழகாபுரியின் அதிபதிதான் குபேரன். இவன் ஒரு முறை சிவபெருமானை வேண்டி கடும் தவத்தை மேற்கொண்டான். அவனது தவத்தைக் கண்டு மெச்சிய சிவ பெருமான், அன்னை பார்வதி தேவியுடன் அவனுக்கு காட்சியளித்தார்.


இறைவனும் இறைவியும் தரிசனம் தந்த போது தரியனின் பேரொளியைக் காட்டிலும் அதிகப்படியாக தோன்றிய பேரொளியைக் காண முடியாமல் குபேரனது கண்கள் கூசின. அடுத்த கணமே கண்களை மூடிக்கொண்டான்.


''உன் திருவடிகளைக் காணும் பார்வையைக் கொடு" என்று அவன் வேண்ட... சிவபெருமான் தன் உள்ளங்கையால் அவனைத் தொட... பார்வை பெற்றான் குபேரன்.


அப்போது அவனது பார்வை முதன் முதலாக பட்டது அன்னை பார்வதியின் மீதுதான். இறைவனின் பத்தினியான அன்னையின் ஒளியையும் அழகையும் கண்டு வியந்த குபேரன், 'சிவனுக்கு அருகில் இருக்கும் இந்தப் பெண்மணி யார்? என்னை விட எப்படிப்பட்ட பெருந் தவத்தை மேற்கொண்டதால் அவள் சிவனுக்கு அருகில் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள்?'' என்று வியந்து நின்றான். தேவியின் பேரழகும் அவனைக் கட்டிப் போட்டிருந்தது.


குபேரனின் பார்வை அன்னையை விட்டு அகலாமல் இருக்கவே தேவியின் பேரொளியால் அவனது இடது கண் வெடித்துத் தெறித்தது. ''இப்படியொரு பார்வை பார்க்கிறானே... இதற்கு பெயர் பொறாமையா என்ன?" என்று சிவபெருமானை நோக்கி கேட்டாள் அன்னை பார்வதி தேவி.


சட்டென்று சிரிப்பை உதிர்த்த இறைவன், "இல்லை தேவி! இவன் உனது மகன் தான். உன் தவத்தின் ஒளியைக் பூண்டு அவன் வியந்து, என்ன அழகு.. என்ன பேரொளி... என்ன உருவம்... என்று வியந்து புகழ்கிறான். அவ்வளவு தான்'' என்றார்.


தொடர்ந்து குபேரனை நவநிதிகளுக்கு நாயகன் ஆக்கினார் சிவபெருமான். ஒரே ஒரு கண்ணைக் கொண்டவன் என்பதால் ''ஏக பிங்களன்" என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு. அஷ்டதிக்கு பாலகர்களில் குபேரனும் ஒருவன். இவன் வடதிசைக்கு அதிபதி.


தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் வழக்கம் இந்தியாவில் உள்ளது. இத்தகைய வழிபாட்டு முறையை வட இந்தியர்களே அதிகம் பின்பற்றுகின்றனர்.


"ஓம் யக்ஷய குபேராய வைஸ்ரவணாய 

தந தாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே

தேஹி தாபய ஸ்வாஹா" 


என்ற குபேரனின் மந்திரத்தைத் தியானத்து, அவனை வழிபடுவது சிறப்பு.


மேலும், குபேரனுக்கு என்று தனிக்கோலம், பூஜை உண்டு என்பதுபோல் ஒரு மந்திரச் சதுரமும் உண்டு. எந்தப் பக்கம் கூட்டினாலும் 72 வரும் இந்த மாயச் சதுரம் குபேரனுக்குரியதாக நெடுங்காலமாக வழிபடப்பட்டு வருகிறது. வியாழக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் கூடிய நாளில் இந்த குபேர சக்கரத்தை அல்லது யந்திரத்தை, உரியவர்களைக் கொண்டு வீட்டில் பிரதிஷ்டை செய்வது நல்லது. குபேரன், இறைவன் சிவபெருமானின் உற்ற தோழன் என்பதால், 'சிவ சகா' என்றொரு பெயரும் அவனுக்கு உண்டு. அதனால், சிவ சகா என்று கூறி அந்த சிவபெருமானை வழிபட்டாலும் குபேரனது பார்வை சிவனின் பக்தர்களுக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: குபேரன் : இறைவனின் தோழன் - குபேரன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual notes: Kuberan : Companion of God - Kuberan - Spiritual notes in Tamil [ spirituality ]