பஞ்சபாண்டவர்கள் ஈசனை வழிபட்டு பேறு பெற்ற தலம், மூக்கனூர்.
கடன் தொல்லை நீக்கும் கால பைரவர் பஞ்சபாண்டவர்கள் ஈசனை வழிபட்டு பேறு பெற்ற தலம், மூக்கனூர். இந்தக் கோயில் சுவாமியின் பெயர், தாண்டவனேஸ் அம்பாள், சிவகாமசுந்தரி. இந்த ஊருக்கு 8 கி.மீ. உள்ள தேவபாண்டலம் என்ற ஊரில்தான் திரளபதி, சூரிய பகவானின் அருளால் அட்சய பாத்திரம் தொலைவில் பெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்தக் கோயில், முசுகுந்த சக்ரவர்த்தியால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள் காலத்தில் மூக்கனூரைச் சுற்றி உள்ள சிவத்தலங்கள் பஞ்சபூதத் தலங்களாக இருந்து வந்துள்ளன. ஜகத்குருவாகப் போற்றப்படும் காஞ்சி மஹா பெரியவர் இந்தக் கோயிலுக்கு 1928-ம் ஆண்டு விஜயம் செய்து, தாண்டவனேஸ்வரரை வழிபட்டு உள்ளார். சிருங்தேரி சுவாமிகளிடம் இந்தக் கோயிலைப் பற்றிய புகைப் படத்தினையும், செய்தியினையும் காண்பித்த போது, இந்த சிவலிங்கம் விசேஷமானது என்றும் ஒரு கால பூஜையாவது, தினமும் செய்ய வேண்டும் என்றும் கும்பாபிஷேகத்திற்குப் பின்பு இந்த ஊர் மிகச் செழிப்பாகும் என்றும் ஆசீர்வதித்து அருளினார். அவர் வாக்கு அப்படியே பலித்துள்ளது. வறண்டு கிடந்த இங்கு, கும்பாபிஷேகத்திற்குப் பின்பு நன்கு மழை பெய்து விவசாயம் நன்கு நடைபெறுகிறது. இந்தக் கோயிலின் அமைப்பு, நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் ஒன்பது படிகளுடன், 27 பக்கங்களுடன், மூன்று புறம் செல்லும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து சுமார் ஆறடி உயரத்தில் தாண்டவனேஸ்வரரின் சிவலிங்கத்திரு மேனி அமைந்து உள்ளது. இந்த சிவலிங்கத்தைச் சுற்றி எப்போதும் மிகப்பெரிய நாகம் இருந்ததை, புனருத்தாரணத்திற்கு முன்பு அந்தக் கிராமவாசிகள் பலர் கண்டுள்ளனர். இந்த சிவலிங்கம் - சிவபாகம் மூன்று பாகம், விஷ்ணுபாகம் இரு பாகம், பிரம்ம பாகம் ஒரு பாகமாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தல் கோயிலுக்கு பாலாலயம் செய்த போது லிங்கத் திருமேனியில் ஓம் என்ற வடிவில் ஒளி தோன்றியதை ஊர்மக்கள் யாவரும் கண்டுகளித்தனர். தேன் அபிஷேகம் செய்யும்போது இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜரைக் காண முடிகிறது. தன் அபிஷேகத்தில் ஐந்து தலை நாகமாக தயிர், லிங்கத் திருமேனியில் இறங்குவதைக் காணமுடிகிறது. மேலும், லிங்கத்திருமேனியில் கண்களுடன் உள்ள முக அமைப்பையும் காண முடிந்தது. இந்தக் கோயிலில் செய்யப்பட்ட ஹோமத்தில் அக்னி ஜுவாலையில் நாகம் போன்ற அமைப்புத் தோன்றியதை படம் பிடித்துள்ளார்களாம். சிவலிங்கத் திருமேனி ஆகமவிதிப்படி வர்த்தமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆவுடையார் பீடம் சக்தியைக் குறிக்கின்றது. கிழங்கு நோக்கி அருள்பாலிக்கிறார் தாண்டா னேஸ்வரர். தாண்டவம் ஆடும் தில்லையம்பதியைப் போலவே இங்கும் சிவபெருமான் உயரமான இடத்தில் இருக்கிறார். அம்பாள், சிவகாம சுந்தரி, சிவபெருமானின் இடப் பாகத்தில், அர்த்த மண்டபத்தில் அபயம் அஸ்த முத்திரையுடன், பாசாங்குசம் தாங்கி அருள்பாலிக்கின்றாள். இங்கு, சுக்ல சஷ்டியன்று லிங்கத் திருமேனிக்கும் நாகர் சன்னதியில் உள்ள நாகங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அவ்வாறு செய்வதால், திருமணத் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சன்னதி கோஷ்டங்களில், ஆனந்த நடனம் புரியும் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி சிலையும் அமைக்கப் பட்டுள்ளது. மனிதன் ஆணவம், மாயை, அகங்காரம் என்ற மூன்று அழுக்குகளை நீக்கி, இறைவனுடன் ஐக்கியமாக வேண்டும் என்பதை சின் முத்திரையின் மூலம் தட்சிணா மூர்த்தி அறிவுறுத்துகிறார். மேற்கு திசையில் லிங்கோத்பவராய் காட்சியளிக்கிறார். இறைவன். ஆதி, அந்தம் இல்லாத ஜோதி என்ப தற்காக, லிங்கோத்பவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. வடக்கு திசையை நோக்கி பிரம்மாவும் வடகிழக்கு திசையில் அஷ்டபுஜ துர்க்கையும் உள்ளனர். இந்த துர்க் கையை, சிவதுர்க்கையாக அழைக்கின்றனர். அம்பு, வில், கேடயம் ஏந்தி, மகிஷனை சம்ஹாரம் செய்த கோலமாக சிவதுர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளாள். இவள் சன்னதியில், ராகு கால பூஜை, செவ்வாய், வெள்ளியன்று நடைபெற்று வருகிறது. நிருதி மூலையில் வினைகளை வேரறுக்கும் விநாயகருக்கு தனிச் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. சங்க டங்களைத் தீர்க்கும் நாயகனுக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அக்னி மூலையில் ஆறுமுகங்களுடன் உள்ள சண்முகருக்கு தனிச் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி, தெய்வானை சமேதஷண்முகருக்கு கிருத்திகை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் வழியில், கடுவனூருக்கு மேற்கே சுமார் 4கி.மீ. தொலைவிலும், ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு 2 கி.மீ. தொலைவிலும் மூக்கனூர் உள்ளது. நாகருக்கு தனிச் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. நாகதோஷ நிவர்த்தியாக நாகங்களுக்கு சுக்ல ஷஷ்டி அன்று அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஈசான மூலையில் நவகிரகங்கள் தனிச் சன்னதியிலும் கால பைரவர் மேற்கு நோக்கி தனிச் சன்னதியிலும் அருள் பாலிக்கின்றனர். இந்த கால பைரவருக்கு அஷ்டமி திதியில் சிறப்பு அபிஷேகமும் பூஜையும் நடை பெறுகிறது. இந்த பூஜையினால் கடன் தொல்லை நீங்கி, வியாபாரம் நன்கு நடைபெறும் என்பது நம்பிக்கை. நவராத்திரியின் போது ஒன்பது நாட்களிலும் மஹா மேருவுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : கடன் தொல்லை நீக்கும் கால பைரவர் - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Debt Relief Term Biravar - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]