விடாது பெய்த அடைமழைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் பளிச்சிடும் பனிப்பொழிவுக்கு சொந்தக்கார மாதம் மார்கழி.
தெய்வீக மார்கழி: விடாது பெய்த அடைமழைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் பளிச்சிடும் பனிப்பொழிவுக்கு சொந்தக்கார மாதம் மார்கழி. எலும்பை உருக்கி விடும் அளவுக்கு அம்மாத அதிகாலைப் பொழுது புலர்ந்தாலும், இறைநாமம் தேடி பயணிக்கும் பக்தர்கள் ஏராளம். மார்கழியின் பரவசங்களும், கொண்டாட்டங்களும் கிராமங்களில் தான் உச்சகட்டமாய் பளிச்சிடும். சேவல் கூவிய மாத்திரத்தில் துயில் கலைந்து, வெந்நீரில் நீராடி முடிக்கும் மங்கையர் தங்கள் இல்ல முகப்புகளை அழகழகாய் மாக்கோலம் இட்டு அலங்கரிப்பார்கள். பல இடங்களில் உன் வீட்டு கோலம் அழகா? என் வீட்டு கோலம் அழகா? என்று ஒரு கை பார்த்துவிடுவோம் என்று சண்டை போடாத குறையாக கோலம் போடும் பெண்கள் ஏராளம். அவர்கள் போடும் கோலங்களும் தாராள ரகம் தான்! ஆனால், இன்றைய நாகரீக வளர்ச்சி அதிகாலை துயிலெழுதலுக்கு மட்டுமின்றி, பச்சரிசி மாவு கொண்டு போடப்படும் கோலங்களையும் கனவாக்கி விட்டது. மேலும் அதிகாலையிலேயே இல்லங்கள் தோறும் விளக்கேற்றுவதும், ஆண்களும் சிறுவர்களும் வீதிகள் தோறும் பக்தி பஜனை பாடல்களை பாடியபடி வலம் வருவதும் ஆன்மீக ரசனையை அதிகப்படுத்தும். இப்போது அதுவும் அரிதான காட்சியாகிவிட்டது. மார்கழி மாதத்தை நாம் தெய்வங்களுக்கு உரிய மாதமாக கொண்டாடுவதால், அந்த மாதத்தில் சுபநிழ்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு பூஜை, பஜனை வழிபாடுகளில் இறங்கி விடுகிறோம். பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூட, மாதங்களில் நான் மார்கழி என்று கூறுகிறார். இந்த மாதத்தில்தான் தேவலோகத்தில் பகல் பொழுது ஆரம்பிக்கிறது. நமக்கு 24 மணி நேரம் என்பது ஒரு நாள் என்றால், தேவர்களின் உலகத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடமாகும். இத்தகைய சிறப்புமிக்க மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் நீராடி இறைவழிபாட்டில் லயித்து இருப்பது சிறப்பு. பொதுவாக மார்கழி மாதத்தில் குளிர் அதிகமாக இருக்கும். அதனால் உடலில் உள்ள மூட்டுப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம். அந்த சூழ்நிலையில் அதிகாலையில் எழுந்தால் உடலுக்கு நல்லது என்பதற்காக, அந்த மாதம் முழுவதும் அதிகாலையில் பூஜை, பஜனைகளில் ஈடுபட வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். மேலும் இந்த மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு அலங்கரிப்பார்கள். இதில்கூட, உடற்பயிற்சி செய்த அனுபவம் அவர்களுக்கு கிடைக்கிறது. மார்கழி மாதத்திற்கு தனுர் மாதம் என்ற பெயரும் உண்டு. இந்த மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் அந்த பெயர் ஏற்பட்டது. மார்கழி மாதத்தில்தான் சிதம்பரம் நடராஜபெருமாள் ஐந்தொழில்களையும் புரிகிறார். இந்த மாதத்தில் அங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவும் சிறப்பு பெற்றவை. • சபரிமலை அய்யப்பன் அவதரித்ததும் மார்கழி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தன்றுதான். • திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்ததும் ஓர் மார்கழி மாதம் தான். • மார்கழி மாதத்தில்தான் மகாவிஷ்ணுவை மகாலட்சுமி மணந்து கொண்டார். • மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியல் காலம் என்பதால் இந்த மாதம் முழுவதும் இறைவழிபாடுகளில் ஈடுபடுவது சிறப்பு. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்மார்கழி மாதம் மட்டும் அதிகாலையில் ஏன் வழிபாடு செய்ய வேண்டும்?
ஆன்மீக குறிப்புகள் : தெய்வீக மார்கழி - மார்கழி மாதம் மட்டும் அதிகாலையில் ஏன் வழிபாடு செய்ய வேண்டும்? [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Divine path - Why worship early in the morning only in the month of March? in Tamil [ spirituality ]