கண்களைப் பற்றி சில விஷயங்கள் தெரியுமா?

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Do you know a few things about eyes? - Tips in Tamil

கண்களைப் பற்றி சில விஷயங்கள் தெரியுமா? | Do you know a few things about eyes?

கண்களைப் பற்றி சில விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கண்களைப் பற்றி சில விஷயங்கள் தெரியுமா?

கண்களைப் பற்றி சில விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

முதல் விஷயம்:

மனித உடலில் அதிகம் உடல் சாராத பகுதி கண், மிகக் குறைவாகவே உடல் ரீதியானது. கண்கள் பொருளே. ஆனால் அதேசமயம் அவை பொருளல்லாத தன்மையும் கொண்டுள்ளன. கண்கள், நீயும் உனது உடலும் சந்திக்கும் புள்ளியாக உள்ளது. உடலின் வேறு எந்தப் பகுதியும் இவ்வளவு ஆழமான சந்திப்பைக் கொண்டதாக இல்லை.

உனது உடலுக்கும் உனக்கும் மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது. இரண்டும் மிகவும் விலகியதாய் இருக்கிறது. ஆனால் கண்களைப் பொறுத்தவரையில், நீ உடலுக்கு மிக அருகில் இருக்கிறாய். உடல் உனக்கு மிக அருகில் இருக்கிறது. இதனால் தான் உள்முக பயணத்திற்குக் கண்கள் பயன்படுபவையாக உள்ளன. உனது கண்களிலிருந்து குதிக்கும் ஒரு குதி, உன்னை தோற்று வாய்க்கு கூட்டிச் சென்றுவிடும். இது கைகளிலிருந்து சாத்திய மில்லை; இதயத்திலிருந்து சாத்தியமில்லை; உடலின் வேறெங்கும் இருந்து சாத்தியமில்லை. வேறெந்த இடத்திலிருந்தும் நீநீண்ட பயணம் செய்ய வேண்டும். தூரம் மிகவும் அதிகம். ஆனால் உனக்குள் நுழைய, கண்களிலிருந்து ஒரே ஒரு அடி எடுத்து வைப்பதே போதுமானது. இதனால்தான் மதத் தன்மையோடு கூடிய யோகா மற்றும் தந்த்ரா பயிற்சிகளில் தொடர்ந்து கண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இதற்கு முதல் காரணம், அங்கிருந்து நீ மிகவும் அருகிலிருக் கிறாய். இதனால்தான், ஒருவரின் கண்களுக்குள் எப்படிப் பார்ப்பது என்று உனக்குத் தெரிந்திருந்தால், நீ அவரின் ஆழ்வரை பார்க்க முடியும். ஏனெனில் ஒருவன் அங்கு இருக்கிறான். ஒருவன் அந்த அளவு உடலின் வேறெந்தப் பாகத்திலும் இருப்பதில்லை. ஆனால் நீ அவன் கண்களுக்குள் பார்த்தால், அவனை நீ அங்கு காணலாம்.

 

வேறு ஒருவரின் கண்களுக்குள் பார்ப்பது ஒரு கடினமான கலை. நீ உனது கண்களிலிருந்து உனக்குள் குதித்திருந்தால் மட்டுமே அந்தக் கலை உனக்கு வரும். இல்லாவிட்டால் நீ அப்படிப் பார்க்க முடியாது. நீ உனது கண்களைத் தாண்டி உனக்குள் பார்த்திருக்க வில்லையானால், நீ வேறு ஒருவருடைய கண்களுக்குள் பார்க்க முடியாது. ஆனால் உனக்கு கண்களுக்குள் ஊடுருவி பார்க்கத் தெரிந்திருந்தால், நீ ஒருவரின் ஆழத்தைத் தொட முடியும்.

 

இதனால்தான், நேசத்தின் போது மட்டுமே நீ அடுத்தவரின் கண்களை இமைக்காமல் நேரடியாகப் பார்க்க முடிகிறது. மற்ற சமயங்களில் நீ யாராவது ஒருவரின் கண்களை உற்று நோக்கினால், அதைக் குற்றமாகவே அவர் உணருவார். நீ அத்துமீறுகிறாய். இது அத்துமீறல். நீ உடம்பைப் பார்க்கலாம். அதில் அத்துமீறல் எதுவு மில்லை. ஆனால் நீ ஒருவரின் கண்களை உற்றுப் பார்க்கும் கணமே, நீ அவருடைய தனித்தன்மைக்குள் அத்துமீறி நுழை கிறாய். அவருடைய தனிமனித சுதந்திரத்திற்குள் அத்துமீறி நுழைகிறாய். அவரின் எந்தவித அழைப்பும் இல்லாமல் நீ அவருக்குள் நுழைகிறாய். இதனால்தான் இதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. அந்த எல்லையை இப்போது கணக்கிட்டுள்ளனர். அதிக பட்சமாக நீ பார்ப்பதை மூன்று வினாடிகளுக்கு அனுமதிக்க முடியும். ஒரு சாதாரணப் பார்வை பார்ப்பதற்கு உன்னை அனுமதிக்கலாம். பிறகு நீ உன் கண்களை நகர்த்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதைக் குற்றமாகவே அடுத்தவர் உணருவார். உற்றுப் பார்ப்பது ஒரு வன்முறைச் செயல், ஏனெனில் நீ அடுத்தவரின் உள்ளிருக்கும் ரகசியங்களின் ஒரு மின்வெட்டுத் தோற்றத்தைப் பெற்றுவிட முடியும். ஆனால் இதை அனுமதிக்க முடியாது.

 

ஆழமான நேசத்தில் மட்டுமே நீ அடுத்தவரின் கண்களை உற்று நோக்கலாம். ஏனெனில் அன்பின் அர்த்தமே, நீ எந்த இரகசியத்தையும் காப்பாற்ற அப்போது விரும்புவதில்லை என்பதே. நீ இப்போது அடுத்தவருக்குத் திறந்திருக்கிறாய். மேலும் எப்பொழுதும் நீ அடுத்தவர் உன்னுள் வருவதற்கு அழைப்புவிடுபவராகவும், வரவேற்பவராகவும் இருக்கிறாய்.

 

மேலும் காதலர்கள் ஒருவர் கண்களை இன்னொருவர் உற்று நோக்கும் பொழுது, அங்கு ஒரு சந்திப்பு, உடல் கடந்த ஒரு சந்திப்பு நிகழ்கிறது. எனவே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம் ஒன்று உள்ளது.

 

இரண்டாவது விஷயம்:

உன்னுடைய மனம், உன்னுடைய தன்னுணர்வு, உன்னுடைய ஆன்மா, உனக்குள் எது இருந்தாலும் அவற்றை யெல்லாம், கண்களின் மூலமாக தரிசித்து விட முடியும்.

 

இதனால்தான் குருட்டு மனிதனின் முகம் இறந்து கிடக்கிறது. கண்கள் மட்டுமே இல்லாமல் போவதில்லை. முகம் முழுவதுமே உணர்ச்சியற்று, இறந்து போய் இருக்கிறது. முகத்தின் விளக்குகள் கண்கள், அவை உனது முகத்தை மிளிரச் செய்கின்றன. அவை முகத்திற்கு ஒரு உள்ளொளியை, உயிரோட்டத்தைத் தருகின்றன. கண்கள் அங்கு இல்லாதபோது, உனது முகம் உயிரோட்ட மில்லாமல் போகிறது. ஒரு குருட்டு மனிதன் உண்மையிலேயே அடைந்து கிடப்பவன் தான். நீ அவனுக்குள் சுலபத்தில் நுழைய முடியாது. இதனால்தான் குருட்டு மனிதர்கள் மிகவும் ரகசியத் தன்மை கொண்டவர்களாக உள்ளனர், நீ ஒரு குருட்டு மனிதனை நம்பலாம். நீ அவனிடம் ஒரு ரகசியம் சொன்னால், அதைக் காப்பாற்றுவான் அவன். அவன் அதை பாதுகாப்பான். அவனிடம் ரகசியம் ஏதாவது இருக்கிறதா என்று முடிவு செய்வது மிகவும் கடினம். ஆனால் உயிரோட்டமுள்ள கண்களையுடைய ஒருவனிடம், அவனிடம் ஏதோவொரு ரகசியம் இருக்கிறதென்பதை உடனடியாகக் கண்டுபிடித்து விடலாம்.

 

உதாரணமாக, நீ ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்கிறாய். உனது கண்கள் நீ டிக்கட் இல்லாமலிருப்பதைக் காட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அது ஒரு ரகசியம். வேறு யாருக்கும் தெரியாது. உனக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் உனது கண்களின் பார்வை வேறு மாதிரியாக இருக்கும். ரயிலில் நுழைபவர்களையெல்லாம் நீ வேறு விதமாகப் பார்ப்பாய். அடுத்தவரால் அந்தத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியுமானால், உடனே அவர் நீ டிக்கட் இல்லாமலிருப்பதை அறிந்து கொள்வார்.

 

உன்னிடம் டிக்கட் இருக்குமானால், உன் பார்வை வேறுவித மாயிருக்கும்.

 

எனவே நீ ஒரு இரகசியத்தை மறைத்து வைத்திருந்தால், உனது கண்கள் அதை வெளிப்படுத்திவிடும். மேலும் கண்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். உடலில் உள்ளவற்றில் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் கடினமானவை கண்கள் தான். எனவேதான் எல்லோரும் மிகப்பெரிய துப்பறிவாளர்கள் ஆக முடிவதில்லை. ஏனெனில் துப்பறிவாளனின் அடிப்படைப் பயிற்சி கண்களைக் கட்டுப்படுத்துவதுதான். அவனது கண்கள் எதையும் வெளிப்படுத்தக் கூடாது, அல்லது அவை நேர்மாறாகவே வெளிப்படுத்த வேண்டும். அவன் டிக்கட் இல்லாமல் பயணம் செய்யும்போது, அவன் கண்கள் அவனிடம் டிக்கட் இருப்பதைப் போல வெளிக்காட்ட வேண்டும். இது மிகவும் கடினம். ஏனெனில் கண்கள் இச்சைச் செயலல்ல; அவை அனிச்சையானவை.

 

தற்போது கண்களைக் குறித்து பல பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு பிரம்மச்சாரி சொல்கிறான், அவனுக்கு பெண்களிடம் எந்தக் கவர்ச்சியும் கிடையாதாம். ஆனால் அவனுடைய கண்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிடும். அவன் தனது கவர்ச்சியை ஒளித்துக் கொண்டிருக்கலாம். ஒரு அழகான பெண் அறைக்குள் நுழையும்போது, அவன் அவனைத் திரும்பிப் பார்க்காமல் போகலாம். ஆனால் அப்படி அவன் அவளைத் திரும்பிப் பார்க்காததே கூட அவனை வெளிப்படுத்தி விடும். அங்கு ஒரு முயற்சி ஒரு நுட்பமான அடக்கி வைத்தல் இருக்கும். அதைக் கண்கள் வெளிப்படுத்திவிடும். அது மட்டுமல்ல; கண்கள் விரியும். ஒரு அழகான பெண் உள்ளே நுழைந்தால், அந்த அழகான பெண் தன்னுள் வர கண்கள் பெரிதாக விரிவடையும். மேலும் நீ இதைக் குறித்து எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் விழிகளும், அவற்றின் விரிவடைதலும் தன்னிச்சையானவை. அவற்றைக் கட்டுப்படுத்துவது முற்றிலும் சாத்தியமற்றது.

 

எனவே நினைவில் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம் என்னவென்றால் உனது கண்கள் உனது ரகசியங்களின் வாயில்:

 

யாராவது ஒருவர் உன்னுடைய ரகசிய உலகத்தில், உன்னுடைய சொந்த இடத்தில் நுழைய விரும்பினால், அதற்கு உனது கண்களே வாயிலாக உள்ளது. அவற்றை எப்படித் திறந்து வைப்பது என்று உனக்குத் தெரிந்தால், நீ திறந்தவனாக, முகமூடியற்றவனாக இருப்பாய். உனது சொந்த வாழ்க்கையின் ரகசியங்களுக்குள், உனது உன் வாழ்க்கைக்குள், நீ நுழைய விரும்பினாலும் நீ இதே வாயிலைத் திறந்தே பயன்படுத்த வேண்டும். நீ உனது கண்களின் மூலமாக முயற்சிப்பதன் பலனாகவே நீ உனக்குள் நுழைய முடியும்.

 

மூன்றாவது விஷயம்:

கண்கள் மிகவும் திரவத்தன்மையானது. அசையக்கூடியது. அவை எப்பொழுதும் அசைந்து கொண்டே இருக்கின்றன. மேலும் அந்த அசைவு, தனக்கே உரித்தான லயத்தையும், தனத்தே சொந்தமான முறையையும், தனக்கேயான இயக்கத்தையும் கொண்டது. உனது கண்கள் கண்டபடியாக, எந்த ஒழுங்குமில்லாமல் அசைவது இல்லை. அவை தனக்கேயான லயத்தைக் கொண்டுள்ளன. மேலும் அந்த லயம் பல விஷயங்களை சுட்டிக்காட்டுகிறது. உனது மனத்தில் காம எண்ணங்கள் இருந்தால் அப்போது உனது கண்கள் வேறுவிதமாக அசையும். வேறு லயத்தில் நகரும். உனது கண்களின் அசைவைப் பார்த்து விட்டே, உனக்குள் என்னவிதமான எண்ணங்கள் ஓடுகிறதென்று கூறிவிடலாம். நீ பசியை உணர்கையில், உனக்குள் உணவு பற்றிய எண்ணமிருக்கையில், கண்கள் மற்றொரு விதமாக நகரும்.

 

இப்போது உனது கனவுகளைக் கூட ஊடுருவிப் பார்த்துவிட முடியும். இதயத்துடிப்பை பதிவு செய்வது போல, கனவுகளை ஒரு வரைபடத்தில் பதிவு செய்ய முடியும். முழு இரவின் உறக்கத்தின் போதும் உனது கண்களின் அசைவுகளை இடைவிடாது பதிவு செய்ய முடியும். மேலும் அதை வைத்து, நீ எப்பொழுது கனவு கண்டாய்... எப்பொழுது ஆழ்ந்து உறங்கினாய் என்பதைக் கண்டு கொள்ள முடியும், ஏனெனில் ஆழ்ந்த உறக்கத்தில் கண்கள் அசைவதில்லை. நீ கனவு காண்கையில் அவை அசைகின்றன. அந்த அசைவுகள், நீ எதையோ திரையில் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று இருக்கும். நீ ஒரு சினிமா பார்த்தால், உனது கண்கள் அசைந்துதான் ஆக வேண்டும். இதைப் போலவே கனவு காண்கையில் உன் விழிகள் அசைகின்றன, அவை எதையோ பார்க்கின்றன. அவை சினிமாவின் ஓட்டத்தைப் பின்தொடர் கின்றன. உன் கண்களைப் பொருத்தவரை, அதற்கு திரையில் காட்டப்படும் உண்மையான சினிமாவைப் பார்ப்பதற்கும், வெறும் கனவைப் பார்ப்பதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

 

இந்தக் கண்ணசைவு பதிவுக் கருவிகள், நீ எவ்வளவு நேரம் கனவு கண்டாய், எவ்வளவு நேரம் கனவில்லாமல் இருந்தாய் என்பதைக் காட்டிவிடும். ஏனெனில் நீ கனவு காணாதபொழுது கண்கள் அசையாமல் நின்று விடுகின்றன. நான் கனவு காண்பதில்லை என்று சொல்லும் பலர் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களின் ஞாபகசக்தி மிகவும் குறைவு. அவ்வளவு தான். அவர்களால் ஞாபகம் வைத்திருக்க முடிவதில்லை. அது ஒன்றுதான் விஷயம். அவர்கள் கனவு காண்கிறார்கள், முழு இரவும் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நினைவிருப்பதில்லை. அவர்கள் நினைவாற்றல் நன்றாக இல்லை. அவ்வளவுதான். எனவே காலையில் எழுந்து அவர்கள் எந்தக் கனவுமில்லை என்று சொன்னால், அவர்களை நம்பாதே. கனவு நிகழ்கையில் ஏன் கண்கள் அசைய வேண்டும், கனவு இல்லாத போது ஏன் கண்கள் அசையாதிருக்க வேண்டும்? கண்ணின் ஒவ்வொரு அசைவும் எண்ண ஓட்டத்தோடு இணைந்துள்ளது. யோசனை அங்கு இருந்தால், கண்கள் அசையும். எந்த யோசனையும் அங்கில்லையென்றால், கண்கள் அசையாது - அது அசைவதற்கான தேவையில்லை.

 

எனவே யோசனையும் கண்ணசைவும் ஒன்றோடொன்று இணைந்தது என்ற இந்த மூன்றாவது விஷயத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொள். இதனால்தான் உனது கண்ணை, அதன் அசைவுகளை நீ நிறுத்தினால், உனது எண்ண ஓட்டமும் உடனே நின்றுவிடுகிறது. அல்லது உனது எண்ண ஓட்டம் நின்றால், உனது கண்கள் தானாகவே நின்று விடுகின்றன. மேலும் நாலாவதாக ஒரு விஷயம் ஒன்று இறுக்கிறது.

 

நாலாவதாக ஒரு விஷயம் :

கண்கள் தொடர்ந்து ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிற்கு என்று நகர்ந்து கொண்டே இருக்கும். 1 லிருந்து 2க்கு, 2லிருந்து 3க்கு, இப்படி நகர்ந்து கொண்டே இருக்கும். நகர்தல் அதன் இயல்பு. ஆறு ஓடிக் கொண்டேயிருப்பது போல, நகர்ந்து கொண்டேயிருப்பது அவற்றின் இயல்பு. மேலும் இந்த இடைவிடாத நகர்தலினால்தான், அவை இவ்வளவு உயிரோட்டத்தோடு உள்ளன! நகர்தல் என்பது வாழ்தலும்தான்.

 

நீ ஒரு குறிப்பிட்ட புள்ளியில், ஒரு குறிப்பிட்ட பொருளில், உன் கண்களை அங்கிருந்து நகர விடாமல் நிறுத்தி வைக்க முயற்சிக்கலாம், ஆனால் நகர்தல் அவற்றின் இயல்பு. நகர்வை உன்னால் நிறுத்த முடியாது, ஆனால் கண்களை நீ நிறுத்த முடியும்; இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள். நீ உன் கண்களை ஒரு குறிப்பிட்ட புள்ளியில், அவற்றின் மேல் உள்ள ஒரு புள்ளியில் நிறுத்த முடியும். நீ அந்தப் புள்ளியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். நீ உனது கண்களை நிறுத்தி விடலாம். ஆனால் நகர்தல் அவற்றின் இயல்பு. அவை ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிற்கு நகராமலிருக்கலாம். ஏனெனில் நீ அவற்றை ஒரே பொருளின் மீது நகர விடாது நிறுத்தியிருக்கிறாய். ஆனால், அப்போது முற்றிலும் புதிய ஒரு விஷயம் நிகழும்.

 

நகர்தல் கண்டிப்பாக அங்கு இருக்கும். நீ அவற்றை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நகர விட வில்லையானால், அவை வெளியிலிருந்து உள் நோக்கி நகரும். ஒன்று அவை பொருள்களுக்கிடையில் நகர வேண்டும் அல்லது அப்படி நீ வெளியே அவை நகர்வதை அனுமதிக்கவில்லை என்றால், அவை உள் நோக்கி நகரும். நகர்தல் அவற்றின் இயல்பு; அவை நகர்ந்தாக வேண்டும். நீ திடீரென அவை வெளியே நகர முடியாமல் நிறுத்தி விட்டால், அவை உள்நோக்கி நகர ஆரம்பிக்கும். எனவே நகர்வதற்கு இரண்டுவித சாத்தியங்கள் உள்ளன. ஒன்று, ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிற்கு வெளியே நகர்வது. இயற்கையாக இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. மற்றும் யோகா கூறும் மற்றொரு சாத்தியம் உள்ளது, அது இந்த ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிற்கு வெளியே நகர்வதை நகர விடாமல் தடுப்பது. அப்போது கண்கள் வெளிப்புறப் பொருளிலிருந்து உள் தன்னுணர்விற்குத் தாவுகிறது, அவை உள்முகமாக நகர ஆரம்பிக்கின்றன.

 

இந்த நான்கு விஷயங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள். இந்த யுக்திகளைப் புரிந்து கொள்வதன் மூலம் உள் முக பயணத்தை உங்களால் சுலபமாக்க முடியும்...!!!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : கண்களைப் பற்றி சில விஷயங்கள் தெரியுமா? - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Do you know a few things about eyes? - Tips in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்