நெற்றியில் திருநாமம் பூசுவதின் விளக்கம் தெரியுமா?

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீகம் ]

Do you know the explanation of Tirunamam on the forehead? - Spiritual Notes in Tamil



எழுது: சாமி | தேதி : 30-10-2022 01:51 am
நெற்றியில் திருநாமம் பூசுவதின்  விளக்கம் தெரியுமா? | Do you know the explanation of Tirunamam on the forehead?

வைணவர்கள் திருநாமம் நெற்றியில் இடுவது ஒரு புனித சின்னம் என்றே பார்க்கப்படுகிறது.

நெற்றியில் திருநாமம் பூசுவதின்  விளக்கம் தெரியுமா?



 

வைணவர்கள் திருநாமம் நெற்றியில் இடுவது ஒரு புனித சின்னம் என்றே பார்க்கப்படுகிறது. மேலும் இதை திருமண் காப்புத் தரித்தல் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் இடும் திருநாமம். வைணவர்களின் முதல் கடவுள் என்று வணங்கப்படுகிற ஸ்ரீமன் நாராயணன் பகவானின் திருவடிகளையே குறிப்பது ஆகும். அதை நிரூபிக்கும் வகையில் தான் வெள்ளை நிறக்கோடுகள் இரண்டு பக்கமும் இருக்கிறது. நடுவிலே இடுகிற சிவப்பு நிறம் ஸ்ரீ சூர்ணம் (திருமண்) மகா லட்சுமியை குறிப்பது ஆகும். அதாவது தான் திருமாலின் அடியவர் என்பதைக் காட்டுவதிலும், திருமாலின் திருவடியை தன்னுடைய தலைக்கு மேல் ஏந்திக் கொள்கிறேன் என்று அர்த்தம் சொல்லி கூறுவதையும் குறிக்கும். அதுமட்டும் அல்லாமல் மண்ணோடு மக்கி போகும் இந்த உடம்பை திருமாலின் திருப்பாதங்களை மனதிலே பற்றிக்கொண்டு அதை குறிக்கும் திருமண்ணை பூசி தூய்மையுடன் வாழுங்கள் என்ற தத்துவத்தையும் குறிப்பது ஆகும்.

திருநாமமும் பாதம் வைத்து போடுவது தென்கலை திருமண் என்றும், பாதம் இல்லமால் வளைவாக போடுவது நேர்கோடு போல் பூசுவது வடகலை திருமண் நாமம் ஆகும். மேலும் முன்னோர்கள் அறிவியல் கூற்றின் படி நெற்றி மத்தியில் தான் நாடிகளின் சங்கமம் ஆன ஆக்யா சக்கரம் இருக்கிறது என்றும் திருநாமம் அணியும் போது குளிர்ச்சி அடைந்து நல்ல ஆரோக்யத்தையும், நீண்ட வாழ்வையும் தரும் என்று சொல்லப்படுகிறது. “நீரில்லா நெற்றி பாழ்” என்ற பழமொழியே நமக்கு உணர்த்துகிறது. ஆனால் தற்போது இது அசிங்கம் என்றும் சிலர் கருதுவதினால் நாமம் இட்டுக் கொள்வது குறைந்து வருகிறது. அதுமட்டுமல்ல கடன் கொடுத்தவர்கள் திரும்ப வராது என்று சொல்வதற்கான சின்னமாகவே இதை எடுத்து கேலி செய்வதால் என்னவோ இதன் மகிமை புரியாமல் போய் விடுகிறது. சைவம், வைணவம் இரண்டுமே கடவுளை அடைய வேண்டி வாழ்பவர்கள் தான். இருவருமே ஆன்மீக பூமியின் இரண்டு கண்கள் என்று கருதப்படுகிறவர்கள். வைணவர்கள் திருநாமமும், சைவமானவர்கள் திருநீறும் அணிந்து ஆன்மீகத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவ்வளவே தான் வித்தியாசம்.


நெற்றியுள்நின்றென் னையாளும் நிரைமலர்ப் பாதங்கள்சூடி,

 

கற்றைத்துழாய் முடிக்கோலக் கண்ணபிரானைத் தொழுவார்,

 

ஒற்றைப் பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,

 

மற்றைய மரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே.

 

என்று நம்மாழ்வார் நெற்றியில் திருநாமம் இட்டுக்கொள்வதில் பெருமையை பறைசாற்றுகிறார். திருநாமம் அணியும்போது நடுவில் பூசும் ஸ்ரீ சூர்ணம் மகாலட்சுமியோடு பகவான் ஒன்றாகி இருக்கிறார் என்பதையும் இது குறிக்கிறது. திருநாமத்தை இடும்போது கீழியிருந்து மேல் நோக்கி இடுகிறோம். இது நாமம் இடுபவருக்கு அவர்களுடைய சிந்தனைகள் மேன்மையான எண்ணங்களை உருவாக்கி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அதாவது அவரது வாழ்க்கை நிலையும் மேல்நோக்கி கொண்டு செல்லும் என்பதையும் குறிக்கிறது. திருநாமத்தை நெற்றியில் மட்டுமன்றி உடலில் பல்வேறு இடங்களில் இட்டுக்கொள்ளலாம். அதாவது திருநாமம் உடம்பில் 12 இடங்களில் இடவேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் திருநாமம் இடும்போதே பகவான் நாமத்தை சொல்லிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நாமம் ஆகும்.

 

நெற்றி - கேசவன்

 

வயிற்றின் மையப் பகுதி - நாராயணன்

 

மார்பு மத்தியப் பகுதி - மாதவன்

 

கழுத்து மத்தியப் பகுதி - கோவிந்தன்

 

வயிற்றின் வலது புறம் - விஷ்ணு

 

வலது தோள் பகுதி - மதுசூதனன்

 

வலது கழுத்து பகுதி - திருவிக்ரமன்

 

இடது வயிறு பகுதி - வாமனன்

 

இடது தோள் பகுதி - ஸ்ரீ தரன்

 

இடது கழுத்து பகுதி - ரிஷிகேசன்

 

கீழ்முதுகு பகுதி - பத்மநாபன்

 

கழுத்துக்கு பின்புறப் பகுதி - தாமோதரன்

 

என்று சொல்ல வேண்டும். அதே மாதிரி தான் ஸ்ரீ சூர்ணம் இடும்போதும் மகாலட்சுமி தாயாரின் பன்னிரெண்டு நாமங்களையும் சொல்லி அணிய வேண்டும்.

நெற்றி - ஸ்ரீ

 

வயிற்றின் மத்தியப் பகுதி - அம்ருத்தோற்பவா

 

மார்பு மத்தியப் பகுதி - கமலா

 

கழுத்து மத்தியப் பகுதி – சந்திர சோபனா

 

வயிற்றின் வலதுப் பகுதி - விஷ்ணு பத்தினி

 

வலது தோள் பகுதி  - வைஷ்ணவி

 

வலது கழுத்துப் பகுதி - வராரோஹா

 

இடது வயிறு பகுதி - ஹரிவல்லபா

 

இடது தோள் பகுதி - சார்ங்கிணி

 

இடது கழுத்துப் பகுதி - தேவதேவிகா

 

கீழ் முதுகுப் பகுதி - மகாலட்சுமி

 

கழுத்துக்கு பின்புறப் பகுதி - லோகசுந்தரி

 

திருநாமம் அணிந்த பிறகு கை அலம்புதல் கூடாது. மேலும் திருமாலும் திருநாமம் இடுவதன் காரணம், தன்னுடைய பக்தர்கள் எதைச் செய்தாலும் அதை தானும் செய்து பார்த்து மகிழ்வது மட்டும் தான் திருமாலுக்கு விருப்பமானது ஆகும். அந்த வகையில் அவரும் நாமம் இட்டுக்கொள்கிறார். பகவான் தன்னைத் தானே தனது திருவடிகளை நெற்றியில் நாமமாக இட்டுப் பார்க்கிறார் என்பதும் ஒரு ஆன்மீகக் கருத்து ஆகும்.

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்


ஆன்மீகம் : நெற்றியில் திருநாமம் பூசுவதின் விளக்கம் தெரியுமா? - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality : Do you know the explanation of Tirunamam on the forehead? - Spiritual Notes in Tamil [ spirituality ]



எழுது: சாமி | தேதி : 10-30-2022 01:51 am

தொடர்புடைய வகை



தொடர்புடைய தலைப்புகள்