கடவுளிடம் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா?

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Do you know what blessing to ask God for? - Tips in Tamil

கடவுளிடம் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா?  | Do you know what blessing to ask God for?

நமக்கு இந்த அருமையான மனிதப் பிறவியை கொடுத்து, சிறு வயது முதலே நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மை பல கஷ்டங் களிலிருந்து காப்பாற்றிவரும் அந்த பகவானுக்கு நம்மால் ஆன ஏதோ ஒரு செயலை எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு அர்ப்பணிப்பாக செய்வது தான் கைங்கர்யம்.

கடவுளிடம் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா

பகவானே, உனக்கு கைங்கர்யம் செய்யும் வரத்தை கொடு என்றுதான்.

 

 நமக்கு இந்த அருமையான மனிதப் பிறவியை கொடுத்து, சிறு வயது முதலே நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மை பல கஷ்டங் களிலிருந்து காப்பாற்றிவரும் அந்த பகவானுக்கு நம்மால் ஆன ஏதோ ஒரு செயலை எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு அர்ப்பணிப்பாக செய்வது தான் கைங்கர்யம். இறைவன் நமக்கு செய்த பல உதவிகளுக்கு கைமாறாகவும் அதைக் கொள்ளலாம் அல்லது பகவான்மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாடாகவும் அதைச் செய்யலாம்.

 

 திருக்கோயில்களைச் சுத்தம் செய்வது, கோலம் போடுவது, பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பது இப்படி நம்மால் முடிந்த சிறுசிறு கைங்கர்யங்களை செய்வதை சிரமேற் கொள்ள வேண்டும். நல்ல வசதி வாய்ப்பு உள்ளவர்களாக நாம் இருக்கும் பட்சத்தில், கோயில் உற்சவங்களில் பணமோ பொருட்களோ கொடுத்து கலந்து கொள்வது கைங்கர்யமே.ராமாயணத்தில் ஒரு ரசமான கட்டம் உண்டு. அது அணில்கள் ராமபிரானுக்கு செய்த கைங்கர்யம் பற்றியது.

 

 ராமபிரான் இலங்கைக்குச் செல்வதற்காக இக்கரையிலிருந்து அக்கரைக்கு சேது பாலம் அமைத்துக்கொண்டிருந்த சமயம் அது. கடலின் நடுவே பாலம் அமைக்க வானரங்கள் எல்லாம் பெரிய பெரிய பாறைகளையும், மலை களையும் கடலின் நடுவே போட்டு பாலம் கட்ட உதவிபுரிந்துகொண்டிருந்ததாம்.

 

 அணில்கள் எல்லாம் இதைப் பார்த்துக்கொண்டே இருந்ததாம். ஆஹா, இந்த வானரங்கள் எல்லாம் எவ்வளவு ஜோராக ராமபிரானுக்கு கைங்கர்யம் செய்கிறது, நாமும் ஏதாவது கைங்கர்யம் செய்ய வேண்டுமே என நினைத்து கூடிக்கூடி பேசி சரி இப்படி செய்வோம் என முடிவெடுத்து, கூட்டம் கூட்டமாக கடலில் சென்று குளித்து விட்டு மணலில் புரண்டு அந்த பாறைகளின் நடுவே மணலைச் சிந்திவிட்டு வந்ததாம். இதைப் பார்த்துக்கொண்டிருந்த வானரங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

 இந்த அணில்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று ஆவல் மேலிட அணில்களை பார்த்து, “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டதாம். அதற்கு அணில்களோ, “நாங்கள் ராமபிரானுக்கு எங்களால் இயன்ற சிறு உதவியை கைங்கர்யமாக செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறியதாம். ‘‘என்னது கைங்கர்யமா? நீங்களா?” என்று சிரித்தனவாம் வானரங்கள். “ஆமாம், ஆமாம். இதோ பாருங்கள் அந்தக் கடலில் சென்று நாங்கள் குளித்து விட்டு வருவதால், கடல் தண்ணீர் வற்றிவிடும்.

 

 இதோ அந்தக் கடலில் குளித்து இந்த மண்ணில் புரண்டு எழுவதால், அந்த மண் எங்கள் முதுகில் ஒட்டிக் கொண்டுவிடும். அந்த மண்ணை இதோ இந்த பாறைகளின் இடுக்கில் உதறும்போது அது பாறைகளை பிடித்துக் கொள்ளும் பூச்சு வேலையாகப் போய்விடும். மேலும் பாறைகள் கடினமானதாக இருக்கும். ராமபிரானின் மென்மையான பாதங்கள் இதில் படும்போது அவரது கால்களுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வரும் அல்லவா? அப்படி வராமல் இருக்க இதோ நாங்கள் சிந்தும் இந்த மண் உதவுமே” என்று கூறியதாம்.

 

 அணில்கள் பேசுவதை கவனித்த ராமபிரான் அந்த அணில்களை அன்போடு தடவி தந்தாராம். அன்று ராமபிரானுக்கு கைங்கர்யம் செய்த அணில்களின் மீது ராமரின் கைகள் பட்டதால் ஏற்பட்ட அந்த மூன்று கோடுகளைத் தான் இன்றளவும் அணில்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன தன் முதுகில். அணில்களைப்போல ஏதாவது ஒரு சிறிய சீரிய கைங்கர்யத்தையாவது நாமும் செய்வோமே.

 

 திருமலையில் இப்படி எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், கைங்கர்யம் செய்தவர்கள் பலர். தம் குருவான ராமானுஜர் சொல்லிவிட்டார் என்பதற்காக, தம் நிறைமாதக் கர்ப்பிணியோடு திருமலைக்கு சென்று வன விலங்குகள் சூழ்ந்து கொண்டிருந்த அந்த இடத்தில் அழகாக ஒரு நந்தவனம் அமைத்து திருமலையப்பனுக்கு தினமும் பூக்கள் கொண்டு புஷ்ப கைங்கர்யம் செய்த ஆனந்தாழ்வார்.

 

 அதேபோல தம் தள்ளாத வயதிலும் ஆகாச கங்கையிலிருந்து, திருவேங்கடமுடையானின் திருமஞ்சனத்திற்கென்று (அபிஷேகத்திற்காக) தினம் தீர்த்தம் கொண்டு வந்து அந்த திருமலையப்பனாலேயே ‘‘பிதாமகர்” என்றழைக்கப்பட்ட பெரிய திருமலை நம்பிகள், பூவிருந்தவல்லியில் தன் அப்பா தனக்கு தந்த நிலத்தில் அழகாய் ஒரு நந்தவனம் அமைத்து, அந்த நந்தவனத்திலிருந்து, பூக்களைப் பறித்து அதைக் காஞ்சிவரதராஜருக்கு எடுத்துச் சென்று புஷ்ப கைங்கர்யமும், அந்த காஞ்சி வரதருக்கு தினமும் திரு ஆலவட்டம் வீசுவது, அதாவது விசிறி வீசும் கைங்கர்யத்தையும் செய்து வந்தாராம்.

 

 எத்தனை எத்தனையோ வழிகள் இருக்கின்றன, பகவானைச் சென்று அடைய, அவனின் பிரியத்தை சம்பாதித்துக் கொள்ள... அந்த வழிகளில் எல்லாம் மிகச் சிறந்த எளிமையான வழி என்பது, கைங்கர்ய பக்தி எனும் வழிதான். இறைவனிடம், “உனக்கு கைங்கர்யம் செய்யும் வரத்தைத் தா” என்றே வேண்டி பெற்றிடுவோம் வாருங்கள்.

 

*******ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்*******


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : கடவுளிடம் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா? - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Do you know what blessing to ask God for? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்