ஒவ்வொரு முயற்சியும் நமக்கான பயிற்சியே!

குறிப்புகள்

[ வெற்றியாளர்கள் ]

Every attempt is a training for us! - Tips in Tamil

ஒவ்வொரு முயற்சியும் நமக்கான பயிற்சியே! | Every attempt is a training for us!

இளைஞர்களே, உங்களின் நாளைய உலகம், சிறப்பாக அமைய வேண்டும். அது, உங்களால் மட்டுமே சாத்தியம். உங்களது குறிக்கோள் எதுவென்று நீங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும். பயிற்சியின் அத்தியாவசியத்தை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.

ஒவ்வொரு முயற்சியும் நமக்கான பயிற்சியே!

 

🌹

 

இளைஞர்களே, உங்களின் நாளைய உலகம், சிறப்பாக அமைய வேண்டும். அது, உங்களால் மட்டுமே சாத்தியம். உங்களது குறிக்கோள் எதுவென்று நீங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும். பயிற்சியின் அத்தியாவசியத்தை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.

 

இன்றைய நிலையில் வேலை கிடைப்பதே அரிதாகி விட்டது. அப்படியே கிடைத்தாலும்நிரந்தரமில்லாத ஒப்பந்த அடிப்படையில் தான் வேலை கிடைக்கிறது. அதிலும், சில தனியார் நிறுவனங்கள், அரசு விதிகளை மீறி 8மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்ய சொல்லி, தொழிலாளர்களை வேலைப்பளுவில்  மூழ்கடிக்கின்றனர்.

 

இன்றும் சில இளைஞர்களுக்கு தினந்தினம் ஊதியமில்லா நாளாகத் தான் கழிகிறது. வேலையில்லாததால் வாழ்வையே வெறுக்கும் இளைஞர்கள் ஏராளம். தன் வேதனையை வெளியில் சொல்வதற்கு கூட மனமில்லாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர்.

 

 

இளைஞனே! நம்பிக்கையோடு காத்திரு. உனக்கான வேலை நிச்சயம் உன் வசப்படும். நீ ஒவ்வொரு நேர்காணலை எதிர்கொள்ளும் போதெல்லாம் மனபயம் விடுத்து நம்பிக்கையோடு முயற்சி செய். ஒருவேளை உன் முயற்சி தோல்வியுற்றால், மனம் தளராதே. ஒவ்வொரு முயற்சியையும், பயிற்சியாக ஏற்றுக்கொள். தவறுகள் செய்யும்போது மனம் நோகாமல், தவற்றைத் திருத்திக் கொள்ளப் பழகிக் கொண்டால், அதுவே உனக்கு அனுபவமாக மாறும்.

 

"முயற்சி திருவினையாக்கும்" என்ற வான்புகழ் வள்ளுவரின் வாக்கினை நினைவில் கொள். முயற்சியை கைவிடாது, கண நேரம் கிடைத்தாலும் வீணடிக்காமல் பயன்படுத்து. உன்னையே நீ மெருகேற்றிக் கொள்.

 

உடனேயே, வெற்றி பெற்றால் அது, உன்னை பலவீனமாக்கி விடும். சில தோல்விகளை பரிசாகப் பெற்று வெற்றியை நெருங்கினால் அது உன்னை பலப்படுத்தும். இதனால் பயிற்சியின் பலனையும், முயற்சியின் வலிமையையும் நீ உணர்வாய்.

 

 

இளைஞர்களில், சிலரின் கனவு அரசு வேலையாக இருக்கலாம். சிலருக்கு சுயதொழில் தொடங்கி தொழிலதிபராய், வெற்றி நாயகனாய் வலம் வர வேண்டும் போன்ற ஆசைகள் இருக்கலாம். ஆசைகளுக்குத் தடையில்லை, ஆனால் உனது குறிக்கோளில் மாற்றம் நிகழக் கூடாது. நினைத்ததை முடித்துக் காட்டும் வரை மன உறுதியோடு போராடு.

 

முயற்சிக்குத் தோல்வியில்லை என்பதை உணர்ந்து, வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கும் வரை உனது முயற்சி தொடர வேண்டும். அரசு வேலைக்கு அயராது படித்து, போட்டித் தேர்வுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். சுயதொழில் தொடங்க முதலில் நிதானமாக இருக்க வேண்டும். என்ன தொழில் செய்யலாம், எப்படி சந்தைப்படுத்துவது, முதலீடு, மக்களுக்கு தரமான பொருளை அளித்தல் இவற்றையெல்லாம் ஆராய்ந்து கால்தடம் பதிக்க வேண்டும்.

 

மண்ணை முட்டி வெளிவரும் விதையே, மரமாய் உருவெடுக்க சிலகாலம் எடுத்துக் கொள்ளும் போது, வெற்றிக்காக போராடும் நாம், பயிற்சிக்காக சிலகாலம் செலவிடுவதில் தவறில்லை. நினைத்ததை முடித்து விட்டோம், இனியெல்லாம் சுகமே என்று முயற்சியை மட்டும் நிறுத்தி விட வேண்டாம்.

 

 

அடுத்த நிலைக்கு முன்னேறும் யுக்திகளை கண்டறிந்து, அதற்கான முயற்சியில் ஈடுபடு. தோல்வியால் முயற்சி தடைபடக் கூடாது, வெற்றியால் முயற்சி நிறுத்தப்படக் கூடாது. உன் வாழ்வு முடியும் தருவாயிலும், உன் முயற்சிக்கு பங்கம் விளையக்கூடாது. எந்நேரமும் முயற்சி தொடர வேண்டும்.

 

உனது ஒவ்வொரு முயற்சியும் உனக்கான பயிற்சியே!

 

🌹🌹


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

வெற்றியாளர்கள் : ஒவ்வொரு முயற்சியும் நமக்கான பயிற்சியே! - குறிப்புகள் [ ] | Winners : Every attempt is a training for us! - Tips in Tamil [ ]