ஆஸ்துமா நோயில் அவஸ்தைப்படுபவர் களுக்கான சில உணவுச் சீர்திருத்த முறைகளையும், அவர்களுக்கான சில மாதிரி உணவுகளையும் பட்டியலிடுகிறேன்.
ஆஸ்துமா நீங்க உணவே மருந்து
அன்றாட உணவே ஆஸ்துமா எனப்படும் ஒவ்வாமைக்குக் காரணம் என்பதையும்; ஆஸ்துமாவின் அறிகுறிகள் முதற்கொண்டு, யாருக்கெல்லாம் ஆஸ்துமா வரும் என்ற விவரங்களையும், ஆஸ்துமா நோயாளிகள் கொள்ளவேண்டிய உணவுகளையும், தள்ள (ஹஸ்ர்ண்க் ) வேண்டிய உணவுகளையும் விளக்கமாய் எழுதியிருந்தேன்.
ஆஸ்துமா நோயில் அவஸ்தைப்படுபவர் களுக்கான சில உணவுச் சீர்திருத்த முறைகளையும், அவர்களுக்கான சில மாதிரி உணவுகளையும் பட்டியலிடுகிறேன்.
தூதுவளையைப் பற்றி தெரியாதவர்கள் இருப்பது மிகவும் அரிது! சளியை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை தூதுவளைக்கு உண்டு. மூச்சிரைப்பினால் கஷ்டப்படுகிற ஆஸ்துமா நோயாளிகளுக்கு தூதுவளை அற்புத மருந்தாய் வேலை செய்யும்.
தூதுவளை - 1 கைப்பிடி, உளுந்து - 10 கிராம், சீரகம் - 10 கிராம், தோசைமாவு - 7 கரண்டி (நடுத்தரமானது)
தூதுவளைக் கீரையை முள்நீக்கி எடுத்து சிறிது நெய்விட்டு வதக்கவும். பின்னர் கீரையுடன் உளுந்து, சீரகம் சேர்த்து விழுதாய் அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை வார்க்கவும். இந்தத் தோசை, ஆஸ்துமாவைக் குணப்படுத்துகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.....?
இன்றைய உணவுகளில், மருத்துவக் குணம் கொண்ட கீரை உணவுகள் முழுவதுமாய் மறக்கப்பட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
முசுமுசுக்கை என்றொரு கீரை, வேலிகளில் படர்ந்த நிலையில் காணப்படும். இதையும் உணவாகக் கொண்ட சூழல் முன்பு இருந்தது. இன்று வெகு சிலரே இதன் மருத்துவப்பயன் அறிந்து உணவாகக் கொள்கின்றனர்.
முசுமுசுக்கை கீரை - 1 கைபிடி, ஏலக்காய் - 2, சீரகம் - 10 கிராம், மிளகு - 5 எண்ணிக்கை, தோசை மாவு - 7 கரண்டி (நடுத்தரமான கரண்டி)
1 முதல் 4 வரை உள்ள சரக்குகளை விழுதாய் அரைத்து தோசைமாவுடன் கலந்து தோசை வார்க்கவும்.
நெஞ்சில் உறைந்து கிடக்கும் கபம் வேரோடு வெளிப்படும். வறட்டு இருமல், தலைவலி உடனே தீரும்.
'கல்யாண முருங்கை' - கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜீரண சக்தி தரும் அற்புத மூலிகை. இரத்தத்தில் சிவப்பணுக்களை (Red Blood Cells) அதிகரிக்கச் செய்யும். ஆஸ்துமாவை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரும். இதனை அடை செய்து சாப்பிட, மிக்க சுவையும், மிகுந்த சுகமும் கிடைக்கும்.
கல்யாண முருங்கை இலை - அரை கிலோ, சீரகம் - 10 கிராம், தண்ணீர் - அரை லிட்டர்
மூன்றையும் ஒன்று சேர்த்து அரைத்து வடிகட்டி சாறெடுக்கவும். பின்னர் சாற்றினை ஒரு அகன்ற பாத்திரத்திலிட்டு அதில் ஒரு கிலோ பச்சரிசியை இட்டு, பாத்திரத்தின் மீது வெள்ளைத் துணியைக் கட்டி வெய்யிலில் காய வைக்கவும். சாறெல்லாம் சுண்டி அரிசி நன்கு காய்ந்த பிறகு அரைத்து மாவாக்கி உட்கொள்ளவும்.
உங்களுக்குத் தேவையான அளவு மாவினை எடுத்து, சாம்பார் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து அடை தயார் செய்யவும்.
ஆஸ்துமா நோயில் வியத்தகு குணம் தரும் சுவையான உணவு.
இதேபோல் இஞ்சியை உணவாக அடிக்கடி சேர்த்துக் கொள்ளவேண்டும். இஞ்சியில் செரிக்கும் தன்மையும், எலும்புகளுக்கு ஊட்டம் தரும் தன்மையும் வெகுவாக உள்ளது. வாங்க! இஞ்சியில் ஒரு துவையல் அரைப்போம்.
இஞ்சி - 25 கிராம், முழுப்பூண்டு - 2 எண்ணிக்கை, பச்சைமிளகாய் - 5 எண்ணிக்கை, உளுத்தம் பருப்பு - 5 கிராம், தேங்காய் - 10 கிராம் (துருவலாக), நல்லெண்ணெய் - 20 மி.லி.
இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி, சிறுதுண்டுகளாக அரிந்து கொள்ளவும். இஞ்சி, பூண்டு, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், சிறிது கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் நல்லெண்ணெயிலிட்டு பச்சை வாசம் போகும் வரை நன்கு கிண்டவும். பின்னர் சிறிது உப்புச் சேர்த்து விழுதாய் அரைத்து எடுக்கவும்.
இத்துவையலை தோசை, சப்பாத்தி, இடியாப்பம் போன்றவைகளுடன் இணைத்துச் சாப்பிட ஜீரணம் முறையாய் நடைபெறும் ஆஸ்துமா நோயாளிகள் அடிக்கடி இஞ்சித் துவையலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆஸ்துமாவை குணப்படுத்தும் மூலிகைகள்
1. அதிமதுரம், 2. ஆடாதொடா, 3. கண்டங்கத்தரி 4.கருஞ்சீரகம், 5. கற்பூரவல்லி, 6. கறிவேப்பிலை, 7. கஸ்தூரி மஞ்சள், 8. கொத்தமல்லி கீரை, 9. திருநீற்றுப் பச்சிலை, 10. துளசி, 11. தூதுவளை, 12. நிலவேம்பு, 13. நெல்லிக்கனி, 14. மாசிக்காய்.
இரைப்பு நோயில் காணப்படும் மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் போன்ற குறைகளுக்கு ஆவிப்பிடித்தல் மிகச் சிறந்த முறையாகும்.
எருக்கு இலை - 10 எண்ணிக்கை, ஊமத்தம் இலை - 3 எண்ணிக்கை , ஓமம் - 25 கிராம்
இவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, மூடிவைத்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் பாத்திரத்தை இறக்கி, அதில் 5 மி.லி. அளவில் நீலகிரி தைலம் சேர்த்து, உடம்பை முழுவதும் போர்வையால் மூடி ஆவி பிடிக்கவும். பத்து நிமிடங்கள் விடாதுபிடிக்க உடம்பில் வியர்த்துக் கொட்டும்.
வியர்வையை நன்கு துடைத்துவிட்டு, கீழ்கண்ட கசாயத்தை உடனடியாகச் சாப்பிட வேண்டும்
சுக்கு - 50 கிராம், மிளகு - 50 கிராம், திப்பிலி -- 50 கிராம், வால்மிளகு - 50 கிராம், சதகுப்பை - 50 கிராம், சித்தரத்தை - 50 கிராம், மல்லி (தனியா) - 50 கிராம், ஜாதிக்காய் - 50 கிராம், அக்ரகாரம் - 50 கிராம்
இவற்றை ஒன்றாக்கி அரைத்து தூள்செய்து வைத்துக் கொள்ளவும்.
இதில் தேவையான அளவு பொடியை எடுத்து, பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து, கசாயமாகச் சாப்பிட, கபம் இளகி வெளிப்படும். ஆஸ்துமா குணமடையும்.
ஆஸ்துமாவின் சார்பு நோய்களில் ஒன்றான இருமலுக்கும் வைத்தியம் சொல்கிறேன். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
சித்தரத்தை - 25 கிராம், பேரீச்சங்காய் - 25 கிராம், காய்ந்த திராட்சை - 25 கிராம், சுக்கு - 25 கிராம், சோம்பு - 25 கிராம், அதிமதுரம் - 25 கிராம், அத்திப்பழம் - 25 கிராம், ஏலக்காய் - 25 கிராம்
இவையனைத்தையும் ஒன்றிரண்டாய் நறுக்கி, ஒரு துணியில் முடிந்து, அதனுடன் 12 லிட்டர் பால், 12 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நாலில் ஒரு பங்காய் சுண்டக்காய்ச்சவும். இதில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, காலை - மாலை 7 முதல் 12 நாட்கள் தொடர்ந்து சாப்பிட எப்படிப்பட்ட இருமலும் உடனே குணமாகும்.
முறையான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்டு வந்தால் ஆஸ்துமாவை எளிதில் விரட்டலாம் எந்தவொரு நோயையும் நோயாகக் கருதாமல், உடற்குறைபாடாய்க் கருதினால், நிவாரணம் எளிதில் கிடைக்கும்
ஒரு நோய் என்பது, ஒரே நாளில் ஏற்பட்டுவிடுவதல்ல. நோய்க்கான மூலக்கூறு பல வருடங்களுக்கு முன்பே விதைக்கப்படுகிறது. அதுபோல் ஒரு நோயை மருந்தானது உடனே குணப்படுத்தி விட முடியாது.
உணவை மருந்தாகக் கொள்கிற போது நிவாரணம் பெற கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். காத்திருந்தால் காலத்துக்கும் நோய்வராது. முதலில் பழக்கப்படுத்துங்கள். எந்த நோயானாலும் விரட்டியடிக்கலாம்.
மருத்துவ குறிப்புகள் : ஆஸ்துமா நீங்க உணவே மருந்து - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Food is the medicine to cure asthma - Medicine Tips in Tamil [ Medicine ]