நரியும் எருமையும்

குறிப்புகள்

[ சிந்தனை சிறு கதைகள் ]

Fox and buffalo - Tips in Tamil

நரியும் எருமையும் | Fox and buffalo

காட்டிலே வாழ்ந்த நரி ஒன்றுக்கு அங்கே போதிய உணவு கிடைக்கவில்லை. அதனால் பசியும் பட்டினியுமாக வாடியது.

நரியும் எருமையும்

காட்டிலே வாழ்ந்த நரி ஒன்றுக்கு அங்கே போதிய உணவு கிடைக்கவில்லை.

அதனால் பசியும் பட்டினியுமாக வாடியது.

அதன் உடம்பு மெலிந்து போய் எலும்பும் தோனுமாக ஆகிவிட்டது. அந்தக் காட்டில் மேய்ந்து திரிந்த காட்டெருமை ஒன்று நரியைப் பார்த்து. "நீ ஏன் இப்படி மெலிந்து போய் இருக்கிறாய்?" என்று கேட்டது. "நல்ல உணவு கிடைக்கவில்லை. வயிறாரச் சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன” என்றது நரி.

ஏன் காட்டிலே உணவுக்கு என்ன பஞ்சம்" என்றது எருமை. ''உனக்கென்ன புல்லும் இலை குழைகளும் தானே உன் உணவு. அதற்குத்தான் இங்கு குறைவில்லையே" என்றது நரி.

ஏன், வேட்டையாடி உன்னால் உண்ண முடியாதா?” என்றது எருமை. "என் உடலைப் பார். என்னால் எந்த விலங்கை எப்படித் துரத்திப் பிடிக்க முடியும்?" என்றது நரி.

சரி உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. உனக்கு என்னால் என்ன உதவியைச் செய்ய முடியுமோ அந்த உதவியை நான் நிச்சயமாகச் செய்வேன். உனக்கு என்ன உதவி வேண்டும்?" என்று எருமை கேட்டது.

"இந்தக் காட்டை விட்டு, ஊருக்குள் சென்று, அங்கு நல்ல உணவு கிடைக்குமா என்று பார்க்க ஆசையாக இருக்கிறது" என்றது நரி. "சரி ஊருக்குள் சென்று வா" என்றது எருமை.

"எப்படி ஊருக்குள் போவது. பெரிய ஆறு ஓடுகிறதே, ஆழமான அந்த ஆற்றை நான் எப்படிக் கடப்பேன்? எனக்கு நீந்தத் தெரியாதே" என்றது நரி.

''ஓம்... ஓம்.. அது ஒரு பிரச்சினை தான்” என்றது எருமை.

"நீ மனம் வைத்தால் எனக்கு உதவ முடியும்" என்றது நரி. "நிச்சயமாக உதவி செய்வேன்” என்றது எருமை.

ஊருக்குள் உனக்கும் நல்ல உணவு கிடைக்கும்."

"இருவரும் சேர்ந்து போவோம்." என்றது நரி.

எனக்கும் இந்தக் காட்டுப் புல்லையும், இலை குழைகளையும் சாப்பிட்டு அலுத்து விட்டது. ஊருக்குள் சென்று வேறு ஏதாவது உணவு கிடைக்குமா என்று பார்க்க ஆசை தான்” என்றது எருமை.

"நீ நீந்துவாய் தானே. உன் முதுகில் நான் ஏறி இருந்து கொள்கிறேன்.''

''நீ ஆற்றை நீந்திக் கடந்தால் நான் உனக்கு நல்ல உணவு கிடைக்க வழி செய்வேன்" என்றது நரி.

எருமையும், புதுவகை உணவுகளை உண்பதில் உள்ள ஆசையினால் நரியோடு சேர்ந்து கொண்டு ஆற்றங்கரைக்கு வந்தது.

எருமை மாடு படுத்துக் கிடந்தது.

நரி அதன் முதுகின்மேல் ஏறி இருந்து கொண்டது.

எருமை மாடு நீந்தி அடுத்த கரையை அடைந்தது.

நரி இறங்கி முன்னே செல்ல எருமை மாடு பின்னால் சென்றது. ஊருக்குள் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் காய்கறித் தோட்டம் இருந்தது.

'நண்பா! இதோ பார். காய்கறித் தோட்டம் இருக்கிறது.இந்தக் காய்கறிச் செடிகளை நீ காட்டிலே கண்டிருக்கவேமாட்டாய். நீ இங்கே நின்று வயிறு நிறையச் சாப்பிடு. நான் ஊருக்குள் சென்று வருகிறேன்.'' என்று சொல்லிவிட்டு நரி ஊருக்குள் சென்றது.

எருமை மாடு வேலியைப் பிய்த்துக் கொண்டு உள்ளே சென்றது.

அங்கே செழித்து வளர்ந்திருந்த செடி கொடிகளை எல்லாம் பெரும் விருப்பத்தோடு கடித்துத் தின்றது.

முன்னொருபோதும் அப்படிச் சாப்பிட்டறியாத எருமை மாடு செடி கொடிகளை உழக்கிக் கொண்டு நன்றாகக் கடித்து மேய்ந்தது.

ஊருக்குள் சென்ற நரிக்கு ஒரு வீட்டின் பின்புறத்தில் கொட்டிக் கிடந்த எச்சில் சோறுகறி கிடைத்தது.

வயிறு வெடிக்கும் வரைக்கும் நன்றாகச் சாப்பிட்டது.

வயிறு நிரம்பிய உடன் நரிக்கு உலகமே மறந்து விட்டது.

சொந்தக் குணம் வந்து விட்டது.

நரி வயிறு நிறைந்தாலும் ஊளையிடும். வயிறு பசித்தாலும் ஊளையிடும்.

இப்போது வயிறு நிரம்பிய மகிழ்ச்சியில் தலையை உயர்த்தி ஊளை யிட்டது.

நரி ஊளையிடும் சத்தம் கேட்டு வீட்டுச் சொந்தக்காரர் வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.

நரியைக் கண்டு தடியை எடுத்துக் கொண்டு நரியை அடிப்பதற்காகத் துரத்தினார்.

நரியைக் கலைக்காது விட்டால் தங்களது கோழிகளைப் பிடித்துத் தின்று விடும் என்று நினைத்து ஊர் மக்கள் யாவரும் தடிகளை எடுத்துக் கொண்டு வந்து நரியைத் துரத்திக் கலைத்தனர்.

நரி தப்பிப் பிழைத்து ஓடிச் சென்று, ஆற்றங்கரையை அடைந்து பதுங்கி ஒளித்திருந்தது.

நரியைத் துரத்திக் கொண்டு வந்த ஊர் மக்கள் தங்கள் தோட்டத்தில் நின்று மேய்ந்துகொண்டிருந்த காட்டெருமையைக் கண்டனர்.

மிகுந்த கோபத்தோடு எருமையைத் துரத்தி அடித்தனர்.

நரியைப் போல வேகமாக ஓடித் தப்ப எருமையால் முடியவில்லை.

ஊரவர்கள் தாங்கள் கொண்டுவந்த தடிகள் முறியும் வரையில் அடி அடியென்று அடித்தனர்.

இரத்தம் வழிந்தோட உடம்பு முழுவதும் பெரும் வலியோடு ஒருவாறு எருமை மாடு தப்பி ஓடி ஆற்றின் கரைக்கு வந்தது. புதருக்குள் மறைந்து கிடந்த நரி வெளியே வந்து எருமை மாட்டைப் பார்த்து.

என்ன நடந்தது" என்று கேட்டது.

எருமை மாட்டுக்குக் கோபம் வந்துவிட்டது. நரியைப் பார்த்து, “எல்லாம் உன்னால் வந்தது தான்" என்றது வெறுப்போடு. "எப்படி?" என்று கேட்டது நரி.

''நீ ஊளையிட்டதால் தான் ஊரவர்கள் என்னைக் கண்டு அடிஅடியென்று அடித்து விட்டார்கள். நீ சாப்பிட்டு விட்டுச் சத்தம் போடாமல் வந்திருக்கலாமே" என்றது எருமை.

''நண்பா! இப்படியெல்லாம் நடக்குமென்று எனக்குத் தெரியுமா.வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டால் ஊளையிடுவது என் சுபாவம்” என்றது நரி.

நரி.

"இருந்தாலும் நீ ஊளையிடாது விட்டிருக்கலாம்." என்றது எருமை. "இது எங்கள் பரம்பரைக் குணம். இதை மாற்ற முடியுமா" என்றது

"இனியும் இங்கிருப்பது சரியல்ல. யாராவது கண்டுவிட்டால் அடித்துக் கொன்றுவிடுவார்கள். வா! நாங்கள் அக்கரைக்குச் செல்வோம்" என்றது

எருமை.

எருமை கால்களை மடித்துப் படுத்துக் கொண்டது.

நரி எருமையின் முதுகில் ஏறி இருந்து கொண்டது. எருமை நீந்திச் சென்றது.

நடு ஆற்றில் வந்ததும் நீந்தாமல் நீருக்குள் படுத்துக் கொண்டது. நரிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை.

''நண்பா! இப்படிச் செய்யாதே. நீ தண்ணீருக்குள் படுத்துக் கிடந்தால் நான் அமிழ்ந்து விடுவேன் செத்துவிடுவேன்.தயவு செய்து நீந்திச் செல்" என்றது நரி.

எருமை கேட்கவில்லை.

தண்ணீருக்குள் மூழ்கியது.

நரி எருமையின் முதுகில் ஏறி நின்றது.

அப்படி நின்றாலும் தண்ணீரில் அமிழ்ந்து சாக வேண்டிய நிலை ஏற்பட்டதை உணர்ந்த நரி.

''நண்பா! தயவுசெய்து எழுந்துகொள்" என்று கெஞ்சிக் கேட்டது. அப்போது எருமை சொன்னது.

'நண்பா! எனக்கு ஒரு சுபாவம் உண்டு. தண்ணீரைக் கண்டால் விழுந்து படுத்துவிடுவேன்.இது என் பரம்பரைக் குணம். பரம்பரைக் குணத்தை மாற்ற முடியுமா?" என்றது எருமை.

"ஐயோ! உன் சுபாவத்தை மாற்றிக் கொள். இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன்' என்றது நரி.

"இதை நீ ஊளையிடும்போது நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்" என்றது எருமை.

"இனி இப்படிச் செய்ய மாட்டேன். தயவு செய்து என்னைக் காப்பாற்று" என்றது நரி.

சரி உன்னைப் பார்த்தால் பாபமாக இருக்கிறது"

என்று சொல்லி எழுந்து நீந்திக் கரையை அடைந்தது எருமை.

நரியும் தப்பிப் பிழைத்துத் தரையில் குதித்தது.


வாசித்துப் பயனடைக.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

சிந்தனை சிறு கதைகள் : நரியும் எருமையும் - குறிப்புகள் [ ] | Thought short stories : Fox and buffalo - Tips in Tamil [ ]