விநாயகர் புராணம்

குறிப்புகள்

[ விநாயகர்: வரலாறு ]

Ganesha legend - Tips in Tamil

விநாயகர் புராணம் | Ganesha legend

சிறுவனே! ஏன் சிரிக்கிறாய்? நீ கணங்களுக்கு அதிபதி என்ற கர்வமா? அல்லது தேவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியமா? இந்தக் கோழைகளை நம்பி மோசம் போய் விடாதே! என்று கஜமுகாசுரன் சொல்லவும், கணபதி பதிலேதும் சொல்லாமல் மீண்டும் சிரித்தார்.

விநாயகர் புராணம்

 

சிறுவனே! ஏன் சிரிக்கிறாய்? நீ கணங்களுக்கு அதிபதி என்ற கர்வமா? அல்லது தேவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியமா? இந்தக் கோழைகளை நம்பி மோசம் போய் விடாதே! என்று கஜமுகாசுரன் சொல்லவும், கணபதி பதிலேதும் சொல்லாமல் மீண்டும் சிரித்தார். கஜமுகாசுரனுக்கு கோபம் அதிகமாயிற்று. கோபமாக பேசுபவர்களைப் பார்த்து சிரிப்பது என்பது ஒரு வகையான கலை. இந்த சிரிப்பு மேலும் கோபத்தைத் தூண்டும். கோபம் எங்கே அதிகமாகிறதோ, அங்கே தோல்வி உறுதிப்படுத்தப்பட்டு விடுகிறது. சின்னஞ்சிறுவா! என்னையே கேலி செய்கிறாயா? நான் சிவபெருமானின் அருள் பெற்றவன். மிருகங்களோ, பறவைகளோ, தேவர்களோ என்னை ஏதும் செய்ய முடியாது. அந்தச் சிவனின் சக்தியைத் தவிர வேறு எதுவுமே என்னை அழிக்க முடியாது. என்பதை அறியாமல், இந்த தேவர்களின் ஆயுதங்களை நம்பி வந்து விட்டாய். நீ சிறுவனாய் இருப்பதால் மீண்டும் மன்னிக்கிறேன். போய்விடு, என கர்ஜித்தான்.

 

கணபதி கலங்கவில்லை. இந்த கர்ஜனைக்கும் தனது களங்கமற்ற சிரிப்பினையே பதிலாகத் தந்தார். கோபம் உச்சியைத் தொட, தன்னிடமிருந்த சில அம்புகளை கணபதியின் மீது எய்தான் கஜமுகன். கணபதி அவற்றைத் தன் கையில் இருந்த கதாயுதத்தால் தட்டியே நொறுக்கி விட்டார். உம்...உம்... சூரனாகத்தான் இருக்கிறாய். இதோ! இந்த நாகாஸ்திரத்துக்கு பதில் சொல், இந்த இந்திராஸ்திரத்துக்கு பதில் சொல், இந்த வருணாஸ்திரத்துக்குப் பதில் சொல், இந்த வாயுவாஸ்திரம், நரசிம்மாஸ்திரம், பிரம்மாஸ்திரம் ஆகியவற்றுக்கு பதில் சொல், என ஒவ்வொரு அஸ்திரமாக அனுப்பினான் கஜமுகன். அவை அனைத்துமே, சிவசொரூபரான கணபதியின் காலடியைத் தழுவி பாவ விமோசனம் அடைந்தன. கஜமுகாசுரன் யோசிக்க ஆரம்பித்து விட்டான். வந்திருப்பவன் சிறுவன் என்றாலும் சாதாரணமானவன் அல்ல. அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை அறிந்து, சிறுவனே! இந்த மாயவித்தை கண்டெல்லாம் நான் நடுங்கி விட மாட்டேன். யார் நீ, தைரியமிருந்தால் சொல், என்றான்.

 

கஜமுகா! உனக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். நீ என் தந்தையின் பக்தன் என்பதால், இவ்வளவு நேரமும் பொறுத்திருந்தேன். தேவர்களும், மனிதர்களும், பறவைகளும், மிருகங்களும், அம்பு முதலான ஆயுதங்களும் உன்னை அழிக்க முடியாது என்பது வாஸ்தவம் தான். இந்த வரத்தையே என் தந்தையிடமிருந்து நீ பெற்றிருக்கிறாய். நான் சிவபுத்திரன். அவரது சக்தி. சிவனின் அம்சத்தால் உனக்கு அழிவு என்பதை மறந்து விட்டாயே. மேலும், நானும் மிருக வடிவினனும் அல்ல. தேவனும் அல்ல, பறவையும் அல்ல, மனிதனும் அல்ல. மிருகமும், தேவவடிவும் கலந்தவன். ஒருவேளை, இந்த வடிவாலும் நீ அழிய முடியாது என்ற வரமிருந்தாலும் கூட ஆயுதங்களால் தான் நீ அழிய முடியாது என்று வரம் பெற்றிருக்கிறாயே ஒழிய.. இதோ... என் உறுப்பான தந்தத்தால் அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற வில்லையே. எனவே, உனக்கு சக்தியிருந்தால் இதைத் தடுத்துப்பார், என்ற கணபதி, ஆவேசம் பொங்கியவராக தன் வலதுபுற கொம்பை ஒடித்தார்.

 

அப்போது அண்டசராசரமும் கிடுகிடுத்தது. கஜமுகன் முதலான அசுரர்கள் நடுநடுங்கினர். அவர்களால் ஓரிடத்தில் நிற்க முடியாத படி உலகம் அங்குமிங்கும் தள்ளாடியது. கணபதியே சாந்தம் கொள்வீர்! என தேவர்கள் வேண்டிக் கொண்டனர். ஒடித்த கொம்பை கணபதி, கஜமுகாசுரன் மீது வீசி எறிந்தார். அது அவன் உடலை இருகூறாகக் கிழித்தது. ஆனாலும், கணபதியின் தந்தம் பட்டதால் அவனுக்கு ஞானம் பிறந்தது. அது மீண்டும் அவரையே வந்து சேர்ந்து ஒடிந்த பகுதியில் ஒட்டிக் கொண்டது. என்னை மன்னிக்க வேண்டும் பெருமானே! தாங்கள் சிவாம்சம் என்பதை அறியாமல் தங்களுடன் மோதி விட்டேன். எனக்கு முக்தி தர வேண்டும், என அவரது கால்களில் வந்து விழுந்தான். தனது பாதத்தை கஜமுகன் பற்றியதும், கணபதி அமைதியானார்.

 

கஜமுகனே! மனதில் அசுர குணங்களுடன் இறைவனை வழிபட்டு என்ன பலன்? நீ சிறந்த பக்தன் தான், ஆனால், கெட்ட குணங்கள் உன்னை ஆக்கிரமித்திருந்தன. என் நல்லாசியால், நீ ஞானம் பெற்றாய். பிளவுபட்ட உன் யானை முக உடல், இனி மூஞ்சூறாக மாறும். நீயே எனக்கு வாகனமாக இருந்து என்னை உலகெங்கும் சுமந்து செல்வாய், என அருள்பாலித்தார். கஜமுகாசுரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். கணபதியின் வாகனமாகும் பாக்கியம் பெற்றமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தான். கருணைக்கடலே! தங்களால் என் உயிரை எடுத்து நரகத்திற்கு அனுப்ப முடியும் என்றாலும் கூட, உம் அருள் எம்மைக் காத்தது. பகைவர்க்கும் அருளிய பரம்பொருளே! ஆதியந்தம் இல்லாதவரே! முதல்வரே! உம்மை வணங்குகிறேன், என அவர் முன்னால் தோப்புக்கர்ணம் போட்டான். பின்னர் அவனை மூஞ்சூறாக மாற்றிய கணபதி, அதில் ஏறி, தேவர்கள் புடைசூழ வடதீவுக்குச் சென்றார். அங்கே திருமால், பாம்பாய் மாறி கிடந்தார்.

 

கணபதியின் காலடி அங்கு பட்டதும், விமோசனம் பெற்று சுயரூபம் அடைந்தார். மருமகனின் வெற்றியைப் பாராட்டினார். வந்த வேலை சுபமாக வந்த மகிழ்ச்சியில், அவர் வைகுண்டம் திரும்பினார். கணபதியை வணங்கிய தேவர்கள், இதுவரை கஜமுகாசுரனுக்கு போட்ட தோப்புக்கர்ணத்தை தங்களுக்கு போடுகிறோம். இவ்வாறு செய்பவர்களுக்கு தாங்கள் அருள் செய்ய வேண்டும், என வேண்டிக் கொண்டனர். அப்படியே ஆகட்டும், என அருள் செய்த கணபதி, தாய், தந்தையிடம் வெற்றி செய்தியை அறிவித்தார். அவர்கள் அவரை வாழ்த்தினர். இந்நேரத்தில் காஷ்யப முனிவரின் மனைவியான அதிதி, விநாயகரை எண்ணி பூலோகத்தில் தவமிருந்து கொண்டிருந்தாள். விநாயகப் பெருமானே! நீர் என் வயிற்றில் பிறக்க வேண்டும், என்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

விநாயகர்: வரலாறு : விநாயகர் புராணம் - குறிப்புகள் [ ] | Ganesha: History : Ganesha legend - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்