
நான் ஒரு ஆத்மா, சரீரத்தின் மூலம் இயங்குகிறேன் என்று சுயம் ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் மூழ்குவது தியானத்தின் முதல்படியாகும்.
கடவுள்
நான் ஒரு ஆத்மா, சரீரத்தின் மூலம்
இயங்குகிறேன் என்று சுயம் ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் மூழ்குவது தியானத்தின்
முதல்படியாகும். பிறகு புத்தி சம்ஸ்காரத்தைப் பற்றி சிந்திக்கிறது. இதனால் அமைதி
மற்றும் தூய்மையின் சக்திவாய்ந்த உணர்வுகள் வெளிப்படுகின்றன. இப்பயிற்சியை
நிரந்தரமாக்கிக் கொள்வதற்கு புத்தி சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். வெறும் ஞானம்
மட்டும் போதாது.
தியானத்தின் அடுத்தபடி, மன ஒருமைப்பாடு. இந்த மன
ஒருமைப்பாடு புத்தியை சுத்திகரித்து, கூர்மையாக்குகிறது. மன
ஒருமைப்பாட்டின் போது மனம் எந்த ஒரு எண்ணத்தில் மூழ்கி இருக்கிறதோ அதன் சொரூபமாகி
விடுகிறது.
இராஜயோக தியானம் என்பது பரவிக்கிடக்கும்
எண்ண சக்தியை ஒருங்கிணைத்து தன் சுயம் (ஆத்மா) மீது செலுத்திய பின் இறைவனோடு தொடர்பு
கொள்வதாகும். கவனம் எளிதில் சிதறுவதால் ஆரம்பத்தில் தியானம் கற்றுக் கொள்பவருக்கு
மனதை ஒருமுகப்படுத்துவது கடினமாகத் தோன்றலாம். இது இயற்கையே! ஆனால் அம்முயற்சியில்
கிடைக்கும் ஒரு துளி வெற்றியின் அனுபவம் கூட விலைமதிப்பற்றதாகும். ஏனெனில் மனதின்
அந்த ஒரு கண ஆனந்த பரவச அனுபவமானது, மேலும் மனம் ஒருமுகப்படுவதற்கு உதவக் கூடும். எனவே
இப்பயிற்சி காலத்தில் மனம் தளர்ந்து விடக் கூடாது.
பழைய சம்ஸ்காரம் அச்சமயத்தில் மேலெழும்பி
வரும். எந்த ஒரு தனிநபரின் எண்ணமும், பாரமான சிந்தனைகளும் மிகவும் தடையாக அமையும்.
அச்சமயத்தில் முயற்சியாளர் ஞானக் கருத்துக்களின் மீது கவனம் செலுத்தி, அத்தடைக்கு அணை போடலாம். மனம் தூய்மை மற்றும் சக்திவாய்ந்த எண்ணங்களை எண்ணும்
பொது ஆத்மாவின் குணங்கள் பற்றிய தூய்மையான அனுபவம் ஏற்படும். சில முயற்சியாளர்கள்
மனதை காலியாக வைத்திருப்பதே யோகம் என தவறாக எண்ணுகின்றனர். மனதை காலியாக
வைத்திருப்பது என்பது தற்காலிகமானது, மனதில் எழும் கெட்ட
எண்ணங்கள் கூடவே நல்ல எண்ணங்களும் வெளியே சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. தூய்மையான
எண்ணங்கள் ஆத்மாவிற்கான சத்துணவு, அதன் மூலம் ஞானத்தை மிகச்
தெளிவாகப் புரிய வைக்கிறது.
கடவுளின் நினைவில் ஒருமுகப்படுதல்
கடவுளின் உருவம் மற்றும் அவரது
குணாதிசயங்களில் சிந்தையை ஒருமுகப்படுத்துதல் தியானத்தின் அடிப்படை அம்சமாகும்.
அவரோடு உறவு சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் போது தியானிப்பது இயற்கையானதாகவும், எளிதாகவும் அமைகிறது. இந்த
அத்தியாயத்தில் தியானத்தில் எளிதில் இறைவனின் தொடர்பை ஏற்படுத்த உதவும் வகையில்
இறைவனின் பெயர், உருவம், இருப்பிடம்,
குணாதிசயம் மற்றும் செயல்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளன.
கடவுள் என்பவர் யார்?
அவருக்கும் எனக்கும் உள்ள உறவு என்ன?
இக் கேள்விக்கு விடை அனேகருக்குத் தெரியாததால், கடவுளின் அனுபவம் முற்றுப்
பெறாமலேயே உள்ளது. அவரவரது சம்ஸ்காரங்களின் அடிப்படையிலும் கடவுளைப் பற்றி பல்வேறு
கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் கடவுள் எங்கும் நிறைந்திருக்கின்றார் என்கின்றனர்,
அவர் எங்குமே இல்லை என்கின்றனர் வேறு சிலர். இன்னும் சிலரோ ஒன்றுமே
இல்லாது நிலையிலிருந்த அனைத்தையும் இறைவனே உருவாக்கினார் என்றும், அவரிடமிருந்தே அனைத்தும் உருவானது என்றும் கூறுகின்றனர். இப்படியெல்லாம்
நடக்கவே முடியாது என தர்க்கம் செய்வோரும் உண்டு. இறைவன் மனித அறிவுக்குப் புலப்படாதவர்
என்று அனேகரும், ஒரு சிலர் நாங்கள் கடவுளைப் புரிந்து கொண்டு
விட்டோம்: எனவே தன்னை உணர்ந்த புனிதர்கள் எனவும், இன்னும்
வெகு சிலர் தாங்களே கடவுள் என நினைத்துக் கொண்டு, பிறரை
தங்களை பூஜிக்கவும் வைக்கின்றனர். நல்லதையே கடவுள் படைக்கிறார் என சிலரும் தீயவைகளையும்
அவரே படைக்கிறார், நடப்பதெல்லாம் அவனது திருவிளையாடலே என்று
வேறு சிலரும் கருதுகின்றனர். காற்றில் இலை அசைவதும், புல்
பூண்டுகள் வளர்வதும் அவராலேயே! மேலும் மனசாட்சியின் குரல் மற்றும் உள்ளத்தின்
ஒலியும் அவரே என்கின்றனர் ஒரு சாரார். இன்னும் ஒரு சாரார், இறைவன்
அனைவருக்கும் மேலான அவர் சதா அமைதியின் உறைவிடமாக உள்ளார். இது பிரபஞ்ச உணர்வுணி
ஏனெனில் இறைவன் பிரபஞ்சத்தோடு இரண்டறக் கலந்தவர் என்பாரும் உளர்.
இவ்வாறு இறைவனைப்பற்றி உலகில் முடிவில்லாத
பல்வேறு கருத்துக்கள் நிலவுவதால் குழப்பமும், விருப்பு - வெறுப்புகளும் அதிகமாகி வருவது கண் கூடு.
இறுதியில் நான் கடவுளின் சக்திகளையும், குணங்களையும் எந்த
அளவு அனுபவம் செய்து வருகிறேன் எனபதே கேள்வி.
எவருடனும் உறவை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டுமாயின் அவர்கள் யார்? எங்குள்ளவர்கள்? எப்படி இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பவைகளை அறிந்திருக்க வேண்டும்.
அதனடிப்படையில் நான் ஒரு ஆத்மா என்றும் அதனைத் தொடர்ந்து இறைவனோடு நெருங்கிய
தொடர்பு கொள்ள வேண்டுமாயினும் கீழ்க்கண்டவைகளைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள
வேண்டும்.
* அவர் யார்?
* அவருடைய
உருவம் எது?
* அவருடைய
உறைவிடம் எது?
* அவருடைய
குணநலன்கள் யாவை?
* அவருடைய
தொழில் எது?
* அவருக்கும்
எனக்கும் என்ன உறவு?
* இறைவன்
சைதன்யமானவர். (உயிரோட்டமானவர்) இறைவன் என்பவர் ஒரு வெறும் கற்பனை அல்லது கோட்பாடு
அல்ல. அவருடன் நான் சம்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்றால், அவரைப்
பற்றிய முழு ஞானம் எனக்குத் தேவை, மூட நம்பிக்கை மற்றும்
அச்சத்தின் காரணமாக அவருடன் நான் சம்பந்தத்தை உருவாக்குவது சரியல்ல.
இறைவனைப் பற்றி அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள
கருத்துக்கள்:
* அவர் தான் படைப்பவர், போற்றிப் பாதுகாப்பவர்.
* அவர் தான் உயர்ந்தவர்களிலும் உயர்ந்தவர்.
* அவரே மேலான தந்தை,
* அவர் பௌதீக உருவம் கொண்டவரல்ல,
* அவர் சர்வசக்திவான் மற்றும்
சைத்தன்யமானவர்.
* அவர் அனைத்தையும் அறிந்தவர்.
* அவர் அனைவரின்மீதும் அன்பு கொண்டிருப்பவர்.
* அவர் சாசுவதமானவர்.
* அவர் தான் பேரோளி.
* அவர் சம்பூர்ணமானவர்.
* அவர் நியாயமானவர்.
* அவர் தான் மேலான உதவியாளர், நன்மை செய்பவர்.
* அவர் தான் அனைவரையும் தடுத்தாட்கொள்பவர்.
* அவரே அனைவரையும் தூய்மைப்படுத்துபவர்.
* அவருடைய செயல்கள் அனைத்தும் அலாதியானவை.
* அவர் தான் பரம்பொருள்.
எண்ணற்ற தர்மங்கள் உலகில் இப்போது
இருந்துவருகின்ற போதிலும், அனைத்தும் ஒருவரையே இறைவன் என்று கருதுகின்றன. இதிகாசங்கள், புராணங்கள், வழிபாடுகள், பூஜை
புனஸ்காரங்கள், வேதங்கள், நினைவுச்
சின்னங்கள், கோவில்கள், தேவாலயங்கள்,
மசூதிகள் என்று பல வழிகளில் மனிதர்கள் இறைவனைத் தேடிவந்தாலும். அவை
அனைத்துமே, ஒன்றே இறைவன், ஒருவனே தேவன்
என்பதை ஏற்றுக்கொள்கின்றன. அவர் தான், ஞானக்கடல், சக்திக்கடல், கருணைக்கடல், துக்கத்தை
நீக்கி, சுகத்தைக் கொடுப்பவர் என்பதையும், பாவத்தை நீக்குபவரும் அவரே என்றும் உணர்ந்துள்ளன,
இறைவன் எல்லையற்றவர் என்கிறோம். ஆனால் அவர்
பௌதீக ரீதியாக எல்லையற்ற விசாலமானவர் என்று கருதாது, அவரை எந்த அளவுகோலாலும்
அளக்கமுடியாத துல்லி யமானவர் என்று உணர்வதே சரியானது ஆகும். இறைவனும் ஒரு
ஆத்மாதான். மற்ற மனித ஆத்மாக்களைப் போன்றே புள்ளி வடிவானவர். பரமாத்மாவுக்கும்
மனித ஆத்மாவுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு உருவில் அல்ல, மாறாக குணங்களில்தான் அது இருக்கிறது. அவர் ஒப்பற்றவர் என்றால் அவர் இந்த
பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளவர் என்பதல்ல.
ஒரு புறம் இறைவனுக்கு உருவம் இல்லை என்றும்
மறுபுறம் அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பது முரண்பாடாக உள்ளது.
எந்த ஒரு பொருளுக்கும் உருவம் உண்டு. குணநலன்கள் எல்லையற்றதாக இருக்கலாம். ஆனால்
உருவம் எவ்வாறு எல்லையற்றதாக இருக்கமுடியும்? குணம்
உருவமற்றதாக இருக்கலாம், ஆனால் அந்த குணம் எதிலிருந்து
தோன்றுகிறதோ அதற்கு ஒரு உருவம் இருக்கவே செய்யும். உதாரணமாக, நறுமணம். இதற்கு உருவம் இல்லை. ஆனால் அதை உருவாக்கும் மலருக்கு உருவம்
உண்டு. சூரியனுக்கு உருவம் உண்டு. ஆனால் அதிலிருந்து வெளிப்படும் ஒளி மற்றும்
வெப்பத்திற்கு உருவம் இல்லை. அவ்வாறே, இறைவனுக்கும் உருவம்
உண்டு. ஆனால் அவரிடம் உள்ள குணநலன்களுக்கு உருவம் இல்லை. இறைவன் அன்பு அல்ல;
அவர்தான் அன்புக்கு ஆதாரம். றைவன் சத்தியம் என்பதல்ல; அவர்தான் சத்தியத்திற்கு ஆதாரம். இறைவன் உருவமற்றவர் என்றால் அவருடன்
எவ்வாறு சம்பந்தத்தை ஏற்படுத்தமுடியும்? இரண்டுபேரின்
சந்திப்புதான் யோகம் என்பதாகும்.
*என்னைப் போன்றே, இறைவனும் ஒரு ஒளிப்புள்ளி. இறைவனின் உருவத்தை அறிந்துகொண்டபிறகு, அவருடைய உருவத்தை எனது மனத்திரையில் கொண்டுவந்து, அவருடைய
சக்திகள் மற்றும் திவ்யகுணங்களை நான் அனுபவம் செய்ய இயலுகிறது. இவ்வாறு இத்தகைய
இறைவனை நினைவு செய்வதன் மூலமாக நான் யோகம் செய்வது, வெறும்
விளக்கு ஒளியின் ஆதாரத்தில் யோகம் செய்வதைவிட உயர்ந்த பலனை அளிக்கிறது.
ஆன்மீக பணியில்!
தமிழர் நலம்
நன்றி...🙏
ஞானம் : கடவுள் - தியானம், இறைவனைப் பற்றிய உலகளாவிய கருத்துக்கள் [ ஞானம் ] | Wisdom : God - Meditation, universal ideas about God in Tamil [ Wisdom ]