குறை தீர்க்கும் படவேட்டம்மன்!

அம்மன்

[ அம்மன்: வரலாறு ]

Grievance solving padavettamman! - Amman in Tamil

குறை தீர்க்கும் படவேட்டம்மன்! | Grievance solving padavettamman!

சென்னை -ஆலந்தூரில், பரங்கி மலை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது படவேட்டம்மன் திருக்கோயில்.

குறை தீர்க்கும் படவேட்டம்மன்!

 

சென்னை -ஆலந்தூரில், பரங்கி மலை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது படவேட்டம்மன் திருக்கோயில்.

 

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் அன்னை நிலை கொண்டிருக்கக்கூடும் என்பது கணிப்பு.

 

பழவந்தாங்கல் வேம்புலியம்மன் - எல்லை முத்தம்மன், நங்கநல்லூர் பனச்சியம்மன், சிமெண்ட் ரோட்டிலுள்ள துலுக்கானத் தம்மன், மடுவங்கரை பெரிய பாளையத்தம்மன், சைதாப்பேட்டை இளங்காளியம்மன், ஸ்ரீ அம்மன் என இத்தலம் சுற்றி அமைந் திருக்கும் அன்னையின் ஆலய அணிவகுப்பைக் காணும் போது இந்தப் பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சக்தி வழிபாடு மிகச் சிறப்பாக நடந்திருக்கும் என்பது தெரிய வருகிறது!

 

இந்தப் படவேட்டம்மன் இளைய சகோதரி என்றும் பெரிய பாளையத்தில் உள்ள பவானியம்மன் அக்காள் என்றும் ஒரு வரலாறு உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை பவானியம்மன், தன் தங்கை பட வேட்டம்மனைக் காண இந்தச் சன்னிதிக்கு வருவதாக ஐதீகம்!!.

 

பெரிய பாளையத்து பவானியம்மனின் தங்கையான பட வேட்டம்மன், மக்களைத் தன் சக்தியால் அம்மை, காலரா போன்ற கொள்ளை நோய்களில் இருந்து காத்தருள்கிறாள்!.

 

பரபரப்பான பகுதியில் அமைந்திருக்கும் இவ்வாலயத்தின் உள்ளே பிரகாரத்தில், முதலில் நாம் காண்பது வேம்படி மாரியம்மனை. குடும்பப் பிரச்சனைகள் நல்லபடியாகத் தீர இந்த அன்னையை ஒரு பக்தர் பிரதிஷ்டை செய்து இருக்கிறார்!. அடுத்து அரசமரத்தடியில் வீற்றிருக்கும் ஈசனைத் தரிசிக்கலாம். தனது பணியிலிருந்த இடர்களைக் களைய அன்னையிடம் பிரார்த்தனை செய்து கொண்ட ஒரு ராணுவ அதிகாரி, தன் குறை நீக்கிய அன்னைக்கு செலுத்திய நன்றி காணிக்கை இந்த ஈசன் பிரதிஷ்டை. அதேபோல் அரனுக்கு அருகில் அருள் அங்காளபரமேஸ்வரி கோயில் உள்ளது. சர்க்கரை நோயினால் கண்பார்வை பாதிக்கப்பட்ட ஒருவர், பிரார்த்தித்துக் கொண்டு, நோய் நீங்கப் பெற்ற பிறகு இந்த அங்காளபரமேஸ்வரியின் சன்னிதியைக் கட்டியிருக்கிறார்

 

அதை அடுத்து, பிரம்மாண்டமான நாகம், அதன் மீதுள்ள நாகாத்தம்மன் மற்றும் லட்சுமி, நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி என்று நிறைய சன்னிதிகள் காணப்படுகின்றன. இந்த அருள்மிகு படவேட்டம்மனின் கோவிலுக்கு வந்து வேண்டிக் கொள்ள, அவை ஆதவனைக் கண்ட பனியாய் மறைகின்றன என்கிறார்கள்!!.

 

கருவறை வாயிலில் விநாயகரும், முருகனும் இருக்க உள்ளே அன்னை அழகின் வடிவாய் அமர்ந்து, குறை தீர்க்கும் அம்பாளாக அருள்பாலிக்கின்றாள்!. பேரரசியாய் வீற்றிருக்கும் இந்த அன்னை, பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் ஆயிரம், அவள் அமர்ந்திருக்கும் தோரணையில் அரசியின் கம்பீரம், கண்களில் தாய்மையின் கருணை!!.

 

வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமையில் இங்கே மகளிர் கூட்டம் ஏராளமாக வருகின்றது. புவனத்திற்கே தலைவியான இவளிடம் வேண்டுவது எதுவும் இல்லை. பக்தர் தம் முகம் பார்த்தே குறிப்பறிந்து குறை தீர்க்கும் கருணைக் கடல் இவள். அன்னையின் தரிசனம் பெற்ற அனைவரும் இதை உணர்வது திண்ணம்!!.

 

இங்கு வந்து வேண்டிக்கொண்ட பல பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கிச் சீரும் சிறப்புமாகக் கல்யாணம் நடைபெற்று உள்ளது. பருவ வயதை அடைந்தும் பருவமெய்தாத இளம் பெண்களையும் இங்கே அழைத்து வந்து, அன்னை படவேட்டம்மனை வேண்டிச் செல்கிறார்கள். சுபகாரியங்கள் உடனடியாக நடைபெறுகின்றனவாம். மிகுந்த சக்தி படைத்தவள் இந்த படவேட்டம்மன்!!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

அம்மன்: வரலாறு : குறை தீர்க்கும் படவேட்டம்மன்! - அம்மன் [ அம்மன் ] | Amman: History : Grievance solving padavettamman! - Amman in Tamil [ Amman ]