அற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன்

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Halfpenny goddess who gives wonderful boons - Spiritual Notes in Tamil

அற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன் | Halfpenny goddess who gives wonderful boons

அம்பிகையை சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது நம்பிக்கை.

அற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன்

 

அம்பிகையை சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது நம்பிக்கை. ஒரே இடத்தில் சுற்றிலும் நூற்றியேழு அம்மன்கள் அருள, நடுநாயகமாக அரைக்ககாசு அம்மன் எனும் பிரகதாம்பாள் கொலு வீற்றிருக்கும் ஆலயத்தை தரிசித்தால் வரமருளும் அன்னையின் பாசத்தில் மூழ்கலாம் என்பதும் பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

 

கை தவறியோ, அல்லது மறந்தோ எங்கேனும் வைத்துவிட்ட பொருளை, இந்த அரைக்காசு அம்மனை நினைத்து, அம்மா, உனக்கு வெல்லம் கரைத்து வைக்கிறேன். தொலைந்த பொருள் கிட்டவேண்டும் என மனமுருகி நேர்ந்து கொண்டால் தொலைந்த பொருள் உடனே கிட்டிவிடும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.

 

ஆலயத்தில் நுழைந்ததும் வலதுபுறம் தல விநாயகர் அருள்கிறார். அவர் திருவுருவிற்கு நேர் எதிரே பதினெட்டாம்படி கருப்பர் கோயில் கொண்டுள்ளார். வருடத்திற்கு ஒரு முறை ஆடி மாதம் 18ம் தேதி அன்று மட்டும் இவருடைய சந்நதியின் கதவைத் திறக்கச் செய்து விமரிசையாக வழிபாடு செய்கிறார்கள். மற்ற நாட்களிலெல்லாம் பூட்டிய கதவிற்கே வழிபாடு.

 

அரைக்காசு அம்மனைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் அருளாட்சி செய்து வரும் 107 தேவியர்கள் அங்கே எந்தெந்த திருவுருவில் அருள் செய்கிறார்களோ அதே வடிவிலே வரிசையாக பிரதிஷ்டை செய்யப்படுகின்றார்கள். ஒவ்வொரு தேவியருக்கும் விமான கலசம் உள்ளது. இதில் கொடியிடை, வடிவுடை, திருவுடை போன்ற மூன்று தெய்வங்களையும் பௌர்ணமி அன்று தரிசிப்பது தான் விசேஷம் என்று சொல்கிறார்கள். அதேபோல காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி மற்றும் பெண்களின் சபரிமலை தெய்வம் என்று சொல்லப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன், சக்குளத்துக்காவு பகவதியையும் இங்கே தரிசனம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அம்மன்களுக்கு குங்குமம் அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பாக ஒரு முறத்தில் மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், மஞ்சள் கயிறு, ரவிக்கைத் துணி, கருப்பரின் பிரசாதமான சந்தனம் மற்றும் அம்பாளுக்குப் பிடித்த நிவேதனமான பனை வெல்லம் ஆகியவற்றை வைத்து பிரசாதமாகத் தருவது வழக்கமாக இருக்கிறது.

 

தேவியின் கருவறை முன் ஓங்காரமான பஞ்சலோகத்தினாலான திரிசூலத்தை தரிசிக்கிறோம். அதன் முன் பலிபீடமும், சிம்ம வாகனமும் உள்ளன. அம்பிகையின் நேர் எதிரே கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் வடிவான மேரு அமைந்துள்ளது. இந்த மேருவிற்கு வரும் பக்தர்கள் தாங்களாகவே அபிஷேகம் செய்து பிரார்த்தனை வழிபடலாம்.

 

அர்த்த மண்டபத்தில் இருக்கிற விதானத்தில் 1 முதல் 108 வரை நம்பர்கள் கொண்ட ப்ரச்ன யந்திரம் எழுதப்பட்டு உள்ளது. செவ்வாய், வெள்ளி, சனி, பௌர்ணமி, அமாவாசை நாட்களில் அன்பர்கள்  அந்த யந்திரத்தின் கீழே நின்று, கீழே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் ஒரு திருவுளச்சீட்டை வேண்டியபடி மற்றும் அன்னையை தியானித்தபடி எடுக்கலாம். அதில் எந்த நம்பர் வருகிறதோ, அதற்கான பலன் பற்றியும், அந்த திருவுளச் சீட்டிலேயே சொல்லப்பட்டு இருக்கும். இதன்படி பயன் அடைந்த பக்தர்கள் பல என்று சொல்கிறார்கள்.

 

கருவறையில் துவாரபாலகிகளாக பத்ரிணி, தீப்தா எனும் தேவியின் தோழியர் வீற்றிருக்கின்றனர். அரைக்காசு அன்னை பாசம, அங்குசம், வரத, அபயம் தாங்கி அர்த்த பத்மாசனத்தில் சாந்தவடிவினளாய் பொலிகிறாள். அன்னையின் திருவடியின் கீழ் உற்சவ விக்ரகம் உள்ளது.

 

கருவறையை வலம் வரும்போது கோஷ்டத்தில் முதலில் ஹயக்ரீவ சரஸ்வதியை தரிசிக்கிறோம். அம்பாள் சரஸ்வதி தேவியை தன்னுடைய மடியில் உக்கார வைத்து வேதங்களை தானே குருவாக இருந்து கொண்டு தேவிக்கு உபதேசித்தார் ஹயக்ரீவர் என்பது ஒரு செய்தி ஆகும். அப்படிப்பட்ட ஒரு அரிய திருக்கோலம் இது. மேலும் இந்த ஹயக்ரீவ சரஸ்வதிக்கு ஒவ்வொரு ஆவணி மாதம் சிரவண நட்சத்திரத்து அன்று விசேஷமான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நாளே ஹயக்ரீவ ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்த மூர்த்திக்கு கடலைப்பருப்பு, நெய், வெல்லம், தேங்காய், முந்திரி ஆகியவை கலந்த ஹயக்ரீவ பிண்டி எனும் நைவேத்யம் படைக்கப்படுகிறது. அடுத்து சுயம்வரா பார்வதி தேவியை தரிசிக்கிறோம். மதங்க முனிவரின் மகளான மாதங்கியாக, மலையத்துவஜ பாண்டியனின் மகளாக மீனாட்சியாக, ஒரு பருக்கை கூட உண்ணாமல் தவமிருந்த அபர்ணாவாக, இப்படி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தன் மனதிற்குப் பிடித்த ஈசனையே மணாளனாகப் பெற்றவள் இந்த தேவி. அதனால் தொடர்ந்து 12 வாரங்கள் இந்த அன்னையை தரிசிக்கும் திருமணமாகாத கன்னியருக்கு, உடனே திருமணம் கூடி வருகிறது. மணவாழ்வில் அமைதி இல்லமால், விரக்தி கண்டு, பிரியும் நிலையில் உள்ள தம்பதியர்கள் இந்த அம்மனை தரிசித்திட சண்டைகள் சமாதானம் ஆகி, பிரச்சனைகள் மறைந்து இல்வாழ்வில் சந்தோசமாக இருக்கலாம்.

 

மூன்றாவதாக லட்சுமி நாராயணர். தன் கால் கட்டைவிரலை அழுத்தி ஊன்றி நின்ற நிலையில் அருள்கிறார். லட்சுமி தேவியும் அவ்வண்ணமே காட்சி தருகிறாள். லட்சுமிதேவி அஷ்டோத்திரத்தில் சபலாய நமஹ என்றும் சஞ்சலாய நமஹ என்றும் நாமங்கள் வரும். ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பவள் இவள். ஆனால் திருமால் உள்ள இடத்தில் நிலைகொள்பவள். அதன்படி இங்கு திருமாலோடு அருள்புரிகிறாள்.

 

மேலும் தொலைந்த பொருள் திரும்பக் கிடைக்க பிரார்த்தனை செய்யலாம். மற்றும் மனநிலை, உடல்நிலை சரி செய்யவும், நிம்மதியான வாழ்க்கை, குழந்தைப்பேறு, வளங்கள். மறுமையில் மோட்சம் என்று எல்லாமும் அருள்பவள் இந்த அன்னை. அம்பிகை உபாசனையை பரப்பியவர் ஹயக்ரீவர். ஸ்ரீசக்ரமேருவில் உள்ள வசின்யாதி வாக்தேவதைகள்தான் திருமீயச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றினர். அந்த லலிதா துதிக்கப்பட்ட திருமீயச்சூர் லலிதாம்பிகையும் இத்தலத்தில் அருள்கிறாள். இப்படி மூவரும் ஓரிடத்தில் அருளும் அற்புத தலம் இது.

 

வண்டலூர் மிருகக்காட்சி சாலையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் கேளம்பாக்கம் போகும் பாதையில் தாகூர் இன்ஜினியரிங் கல்லூரியின் அருகில் செல்லும் வழிகளின் சற்றே அரை கிலோமீட்டர் தூரத்தில் ரத்ன மங்கலம் என்கிற ஊரில் இருக்கிறது இத்தலம் ஆகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : அற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Halfpenny goddess who gives wonderful boons - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்