கடுமையான உழைப்பு என்று கூறும்போது வெறும் உடல் உழைப்பை மட்டுமே நாம் குறிப்பிட வில்லை.
கடுமையான உழைப்பும் நரம்பு நோய்களும் கடுமையான உழைப்பு என்று கூறும்போது வெறும் உடல் உழைப்பை மட்டுமே நாம் குறிப்பிட வில்லை. மூளை தொடர்புடைய உழைப்பினையும் சேர்த்துத் தான் கூறுகிறோம். எந்த ஒரு விஷயமும் அளவுக்கு மிஞ்சும்போது அது அமுதமாக இருந்தாலும் விஷமாகிவிடும் என்று கூறப்படுவதுண்டு அல்லவா? உழைப்பு விஷயத்திற்கும் இது பொருந்தும். மனிதன் உழைத்துத்தான் ஆக வேண்டும். உழைப்பின் மூலம் அவன் பெருகிற வருமானத்துக்கு மட்டுமே உழைப்பு உதவவில்லை. மனிதனுடைய ஆரோக்கியத்துக்கும், நீண்ட ஆயுளுக்கும் கூட உழைப்பு உதவுகிறது. உழைக்காமல் கூட வேறு நடைமுறைகளைக் கையாண்டு ஒரு மனிதன் பணத்தைச் சம்பாதித்து விட முடியும். ஆனால் உழைக்காமல் உடல் ஆரோக்கியத்தைப் பெறவே முடியாது. கடுமையான உழைப்பு என்று இல்லாவிட்டாலும் நல்ல உடற்பயிற்சி மூலமாகவாவது உழைப்பினை நல்கினால்தான் ஓரளவுக்காவது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் உடலின் சக்தியையே வீணாக்குகிற அளவுக்கு உழைப்பு மிதமிஞ்சி இருந்து விடக் கூடாது. நாம் சொன்னதுபோல மூளை உழைப்புக்கும் ஓர் எல்லையுண்டு. எல்லை கடந்து மூளை உழைப்பினை நல்கினாலும் அதுவும் பலவிதத்தில் உடல் நலத்துக்கும் மனநலத்துக்கும் கேடு விளைவிப்பதாகவே அமையும். கடுமையாக உழைக்கும்போது உடல் உறுப்புக்கள் அழற்சியடைகின்றன. அவற்றின் இயல்பான சக்தி வீணாக விரையமாகிறது. பொதுவாக நரம்பு மண்டலம் பாதிப்புக்கு இலக்காகிறது. நீண்ட நேரம் உழைத்துப் பணி புரிந்தால் களைப்பும் சோர்வும் ஏற்படுகிறதல்லவா! இந்தச் சோர்வுக்கும் களைப்புக்கும் நரம்பு மண்டல சக்தி அதிகமாக விரையமாவதுதான் காரணம். நரம்புகள் சோர்வடையும் போதுதான் உடல் சோர்வும் களைப்பும் ஏற்படுகிறது. நாம் அதிகமாக உழைத்துப் பணி புரிந்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உடல் நலம் பாதிக்கப்படக்கூடும் என்பதற்காக வேலையே செய்யாமல் இருக்க முடியுமா? அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நமது உழைப்பைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். தொடர்ந்து நீடித்துப் பணி செய்ய வேண்டி வந்தால் குறைந்த பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவையாவது சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சோர்வும் களைப்பும் ஏற்படாத வகையில் நீண்ட நேரம் பணி புரிய முடியும். ஓய்வு என்று சொல்லும் போது சற்று நேரம் ஓய்வாக அமர்ந்திருத்தல் அல்லது சில நிமிடங்கள் படுத்து எழுந்திருத்தல் கொள்வது வழக்கம். என்று பொருள். இது தவறல்ல என்றாலும் உழைப்பின் இடையே கிடைக்கும் ஓய்வினை, ஓய்ந்து அமர்ந்து பொழுது போக்காமல் அந்த நேரத்தில் நாம் செய்யும் பணிக்கு முற்றிலும் மாறிய வேறு ஏதாவது ஒரு பணியில் மனத்தை ஈடுபடுத்தலாம். நல்ல புத்தகம் எதையாவது அந்த நேரத்தில் படிக்கலாம். அந்த நூல் நீங்கள் தொடர்பு கொண்டிருக்கும் தொழிலைப் பற்றி மேலும் அறிவு பெறக் கூடியதாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்ள உதவக்கூடிய நூலாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு புதிய தொழிலைக் கற்றுக் கொள்ள உதவும் நூலாக இருக்கலாம். மூளை தொடர்புடைய பணி புரிபவராக நீங்கள் இருப்பினும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் உங்கள் தொழிலைச் செய்வதற்குப் பதில் இடையிடையே சற்று ஓய்வாக இடை வெளி விட்டு பிறகு அந்த வேலையைத் தொடர் வேண்டும். நீங்கள் ஒரு நூலைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். படிக்கும் நூல் சுவையாக இருக்கிறது என்பதற்காக மணிக் கணக்கில் தொடர்ந்து படித்தால் உங்கள் கண்கள் பெரிதும் பாதிக்கப்படும். பிடிவாதமாக இந்த வழக்கத்தைக் கையாண்டால் நாளடைவில் உங்கள் பார்வை பெருமளவு பழுதடைவதற்கு வழி பிறக்கும். உங்கள் பணி எதுவாக இருந்தாலும் அதற்காக நீங்கள் செலவிடும் உழைப்பை திட்டமிட்டுப் பணி யாற்றுங்கள். நீங்கள் கடுமையாக உழைக்கலாம் ஆனால் அதனை ஒரு வரைமுறைப்படுத்திச் செய்யலாம். உங்கள் உடல் உறுப்புக்கள் அதிகமாகக் களைப்படையும் வரை வேலையைத் தொடர்ந்து செய்யாதீர்கள். உங்கள் உழைப்புக்கு இடையே முறையான இடைவெளி விடுங்கள். அவ்வாறு செய்யாவிட்டால் அதிகமாக களைப்பு தோன்றும் போது உங்கள் பணியை நிறுத்தி விட்டு இளைப்பாறி பிறகு உங்கள் பணியினைத் தொடருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நரம்புகள் அதிர்ச்சியும் பலவீனமும் அடைவதைத் தடுக்க முடியும். இதன் மூலம் நரம்பு தொடர்பான பிணிகள் தோன்றுவதைத் தடுக்க முடியும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
மருத்துவ குறிப்புகள் : கடுமையான உழைப்பும் நரம்பு நோய்களும் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Heavy exertion and Nervous diseases - Medicine Tips in Tamil [ Medicine ]