ஒரு மனிதனின் ருசி, அடிப்படையிலேயே நோய்கள் பட்டியலிடப்படுகின்றன. நோய்களுக்கு உணவு ஒரு காரணம். அவர்கள் சார்ந்துள்ள தொழில் ஒரு காரணம். தனி மனித நடத்தையும் ஒரு காரணம்.
மூல நோயும் முறையான உணவுகளும்
மனிதர்கள் பலவிதம். அவர்களின் அறிதிறன், வாழ்க்கை முறை, சமூகப் பங்கெடுப்பு, முரண்பாடு கள், உணவருந்தும் பாங்கு, இவையனைத்தும் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
ஒருவருக்குக் கோழிக்கறி பிரியாணி தேவாமிர்தமாகிறது. இன்னொருவருக்குக் கத்தரிக்காய்க் குழம்பு கண் கண்ட சொர்க்கமாய்த் தெரிகிறது. வேறொருவருக்குப் பச்சைக் கேரட் உண்பது தங்க பஸ்பம் சாப்பிட்ட உணர்வைத் தருகிறது. ஆக ருசி என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது.
ஒருவர் காரக் குழம்பில் நீச்சலடிக்க விரும்புகிறார். மற்றொருவர் சாம்பாரில் வீடு கட்டுகிறார். இன்னொருவர், ஊர்வன, பறப்பன, நகர்வன இவையனைத்தையும் எண்ணெய் சொட்டச் சொட்ட வறுத்து, 'உஷ்' என்ற பேரிரைச்சலுடன், கண்ணில் கண்ணீர் வர உள்ளே தள்ளுகிறார்.
ஆக ஒரு மனிதனின் ருசி, அடிப்படையிலேயே நோய்கள் பட்டியலிடப்படுகின்றன. நோய்களுக்கு உணவு ஒரு காரணம். அவர்கள் சார்ந்துள்ள தொழில் ஒரு காரணம். தனி மனித நடத்தையும் ஒரு காரணம்.
மலச்சிக்கலின் பங்காளிதான் மூலம். பரவலாக, அதாவது மூன்றில் ஒரு நபருக்கு என்ற அளவில் காணப்படுகிறது. அதுசரி.-- இந்த மூலநோய் எப்படி உண்டாகிறது?
1. பித்தத்தை அதிக அளவில் தூண்டும் உணவுகளால் மூலநோய் உண்டாகலாம்.
2. அதிக நேரம் வெய்யிலில் அலைவதால், உஷ்ணம் அதிகப்பட்டு மூலநோய் உண்டாகலாம்.
3. அரசு ஊழியர்களைப் போல் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரிவதாலும் மூலநோய் உண்டாகலாம்.
4. வாயுவை அதிகப்படுத்தும் உணவுகள், எண்ணெய்யில் பொறித்த உணவுகள், வயிற்றைக் கெடுக்கும் மாவுப் பொருட்களை அதிக அளவில் உண்ணுதல், அளவுக்கதிகமாய் மாமிச உணவுகளை உட்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் மூலநோய் உண்டாகலாம்.
5. குடிவெறியில், தொடர்ந்து காம இச்சைக்கு உட்படுவதாலும் மூலநோய் உண்டாகலாம்.
6. அதிக அளவில் மசாலா கலந்த பொருட்களை உண்ணுதல், நேரந்தவறி உண்ணுதல், உணவைத் தவிர்த்து நொறுக்குத் தீனிகளையே (உதாரணம்: வடை, போண்டா, பஜ்ஜி) உணவாகக் கொள்ளுதல் போன்ற காரணங்களாலும் மூலநோய் உண்டாகலாம்.
மூலநோயில் பல வகைகள் உண்டு. அவைகளில் சில: 1.உள் மூலம், 2. வெளி மூலம், 3. சீழ் முலம், 4. இரத்த மூலம், 5. ஆசன அரிப்பு, 6. ஆசன வெடிப்பு, 7. பௌத்திரக் கட்டி, 8. முளை மூலம், 9. செண்டு மூலம்.
நோயின் பாதிப்பிற்கேற்ப மூல நோய் இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.
மூல நோய் என்பது மலக்குடலை ஒட்டி உள்ள நரம்பில் ஏற்படும் ஒருவகை (Enlarged vein disease) பிதுக்க நோய் என்பதாகும். இப்பிதுக்கம் அதிகமாகும் போது மலக்குடல் கிழிந்து, ரத்தப்போக்கு உண்டாகலாம். இதனையே இரத்த மூலம் என்கிறோம் பெரும்பாலும் மூலநோய்க்கு மலச்சிக்கலே மூலகாரணமாயுள்ளது.
முக்கி, முனகி மலம் கழித்தல் என்பது தொடரும்பொழுது, மூலநோய் தொடர்கதையாகிவிடுகிறது. மலக்குடலில் உண்டாகும். கட்டிகளாலும் (Cyst) இந்நோய் உண்டாவதுண்டு. கர்ப்பமுற்ற பெண்களுக்குப் பெரும்பாலும் இந்நோய் ஏற்பட ஏதுவாகிறது
அதுசரி... மூலநோயை முற்றிலும் குணப்படுத்த முடியுமா....? உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது.
கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும். நீங்கள் தான் உங்கள் நாக்கைக் கட்டுப்படுத்தி உணவுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
நண்பர் ஒருவர் அவசரமாய்ப் போன் செய்து வரச்சொன்னார். நானும் சென்றேன். அவர் படுக்கையில் குப்புறக் கவிழ்ந்த நிலையில், முட்டுக்கால் போட்டு முனகிக்கொண்டிருந்தார்.
என்னய்யா... ஆச்சு...? என்றேன்.
“மதுரைக்குப் போயிருந்தேன்.. ஒரே டிராவல்ஸ்” ஹோட்டல் சாப்பாடு... தினமும் சிக்கன், டிரிங்ஸ், பைல்ஸ் சூட்டப் ஆயிடுச்சு” என்றார்.
அவர் வேதனை எனக்குப் புரிந்தது. நான்கு நாட்களாய்ப் படாதபாடு படுவதாகவும், எவ்வளவோ அலோபதி மருந்துகள் எடுத்தும் துளி பிரயோசனம் கூட இல்லை என்றார். தனக்குச் சிகிச்சை தரும்படி மனமுருக வேண்டினார்.
என்னுடைய சிகிச்சையை ஆரம்பித்தேன். முதலில் அவருடைய பித்தத்தைக் குறைக்க உணவைச் சீர்திருத்தினேன்.
இரண்டு மாதுளம் பழம் வாங்கி, சுளைகளையும், அதன் தோலையும் நன்கு அரிந்து, சிறிது வெந்தயம், ஒரு டம்ளர் மோர் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொடுத்தேன்.
“இதுதான் உமக்குக் காலை ஆகாரம்.”
சிறிது நேரம் கழித்து, “இப்பக் கொஞ்சம் பரவாயில்லை” என்றார்.
அவருக்கான மதிய உணவாக இரண்டு வெள்ளரிக்காயைக் கொடுத்தேன். முழு கேரட் ஒன்றைச் சிறிதாக அரிந்து, சிறிது மிளகுத்தூள் கலந்து கொடுத்தேன்.
வலி குறைந்துவிட்டது. ஆனால் அரிப்பு இருக்கிறது என்றார்.
நான்கு கைப்பிடி அகத்திக் கீரையுடன் 1 ஸ்பூன் சமையல் மஞ்சள் தூள் சேர்த்து, இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியபின் பேசினில் (Basin) ஊற்றி, அவரை அதில் உட்காரச் சொன்னேன்.
அரிப்பு சுத்தமாக நின்றுவிட்டது என்றார். இரவில் கருணைக்கிழங்கை நெய்விட்டு வதக்கிச் சாப்பிடச் சொன்னேன். பின்னர் கடுக்காய்ப் பொடியை இரண்டு ஸ்பூன் அளவில் சாப்பிடும்படி சொன்னேன்.
இதே உணவுமுறையை மறுநாளும் கடைப்பிடிக்கச் சொன்னேன்.
அவருடைய மூல அவஸ்தை முற்றிலுமாகத் தணிந்தது. நண்பரே! தயவு செய்து மதுரைக்குப் போங்கள். ஹோட்டலில் சாப்பிடுங்கள். சிக்கனும், டிரிங்ஸும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
இப்பொழுது நண்பர் நலமாய் இருக்கிறார். மூலநோய் என்பது குணமாகக் கூடிய நோயே. நமது உணவுகளை முறைப்படுத்துவதிலும், நமது பழக்கவழக்கங்களை முறைப் படுத்துவதிலும்தான் மூலநோய்க்கு முடிவுரை எழுத முடியும்..
கீழ்க்காணும் உணவுகளைத் தேவையானவற்றை அதிகளவில் சேர்த்தும் தேவையற்றவைகளை நீக்கியும், மூலநோயிலிருந்து முழுமையாய் விடுபடலாம். மூலம் நீங்க உணவில் எண்ணெயைக் குறையுங்கள். புளிப்பு உணவுகளைத் தவிருங்கள். காரம், மாவு உணவுகள் வேண்டவே வேண்டாம்.
1. உணவில் அகத்திக்கீரை, துத்திக்கீரை, பிரண்டை , பொடுதலை, முடக்கத்தான், சுண்டைக்காய், மாம்பிஞ்சு, பலாப்பிஞ்சு, பப்பாளிக்காய், சிறுகீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, இந்துப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.
2. அசைவ உணவில் வெள்ளாட்டுக்கறி கொழுப்பு நீக்கி, சிறு அளவில் மாதம் ஒருமுறை சேர்த்துக் கொள்ளவும்.
3. பழவகைகளில் மாதுளம்பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், அத்திப்பழம் நிறைய சேர்க்கவும்.
1. கருணைக்கிழங்குத் தவிர பிற கிழங்கு வகைகள் கூடாது.
2. கடலை மாவுப் பதார்த்தம், ஊறுகாய் வறுத்தப் பொருள்கள் கூடாது.
3. மீன், கருவாடு, கோழி கூடாது.
4. மூலத்தில் அரிப்பு இருந்தால் கத்தரிக்காய். காராமணி, மொச்சைக்கொட்டை நீக்கவும்.
1. அதிகக் காரம் கூடாது.
2. அதிகப்படியான புளிப்பு, இனிப்பு கூடாது.
3. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
4. நெடுநேரம் கண்விழித்தல், நீண்ட நேரம் பிரயாணம் ஆகியவற்றைத் தவிர்த்தல் நலம்.
5. மிகுபோகம் கூடாது.
மூலநோய் மலமந்தம் இல்லாமல் இருந்தாலே, நோயின் தாக்கம் சற்று குறைந்துவிடும். இளம் பிரண்டைத் தண்டை , நார் நீக்கி நெய்விட்டு வதக்கி, அத்துடன் உப்பு, புளி, மிளகாய், பூண்டு, இஞ்சி, மல்லி சேர்த்து அரைத்து, உணவில் அடிக்கடி சேர்க்க மலச்சிக்கல் தீரும். மூலத்தில் நமைச்சல் குறையும். இதேபோல் பொடுதலை, துத்தி ஆகியவற்றையும் துவையலாக அரைத்துச் சாப்பிடலாம்.
பொடுதலை, துத்தி ஆகியவற்றுடன் வறுத்த சீரகம் சேர்த்து, தோசைமாவுடன் கலந்து அடைசெய்தும் சாப்பிடலாம்.
வெந்தயம் - 100 கிராம்,
வெண்டைக்காய் - 5 கிராம்,
சிறுபருப்பு - 50 கிராம்,
சீரகம் - 10 கிராம்,
உளுத்தம் பருப்பு - 50 கிராம்,
புதினா இலை - 25 கிராம்
இவையனைத்தும் சேர்த்து ஒன்றாக வேகவைத்து, கடைந்து களிபோல் சாப்பிடவும்.
மூலநோயினால் ஏற்படும் முதுகுவலி, அதிக உஷ்ணம், ஆசனவாய் எரிச்சல், ஆசனக்குழாய் சுருக்கம் தீரும். மலச்சிக்கல் அறவே நீங்கும்.
1. மாம்பருப்பு, மாதுளை ஓடு, கொய்யா இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்துப் புளிப்புத் தயிரில் கலந்து சாப்பிட இரத்தம் உடனே நிற்கும்.
2. ஆவாரம்பூவைச் சிறுபருப்புடன் சேர்த்துக் கடைந்துச் சாப்பிட இரத்தம் நிற்கும்.
3. நாவல் கொட்டை , அதிவிடயம் சமஅளவு கலந்து சாப்பிட இரத்தம் நிற்கும்.
மருத்துவ குறிப்புகள் : மூல நோயும் முறையான உணவுகளும் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Hemorrhoids and proper diets - Medicine Tips in Tamil [ Medicine ]