பிரதோஷம் உருவான வரலாறு

சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது?

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

History of formation of pradosha - How did Shiva get the name Neelakandan? in Tamil

பிரதோஷம் உருவான வரலாறு | History of formation of pradosha

அமரர்களும், அசுரர்களும் அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்த காலம் அது!

பிரதோஷம் உருவான வரலாறு


அமரர்களும், அசுரர்களும் அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்த காலம் அது! தீவினைகளின் மொத்த உருவமான அசுரர்கள், சளைக்காமல் சண்டை போட்டதால், சமாளிக்க முடியாமல் தவித்தனர் தேவர்கள். குறையாத பலமும் குன்றாத ஆரோக்யமும் பெற வேண்டுமானால், பரந்தாமன் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலைக் கடைந்து, வெளிப்படும் அமுதத்தை அருந்த வேண்டும் என்று ஆலோசனை சொன்னார், பிரம்மா.

முப்பத்து முக்கோடி தேவர்களும் உடனடியாகச் செயலில் இறங்கினர். பிரம்மன் வழிகாட்டி விட்டார். பரந்தாமன் பாற்கடலைக் கடைய அனுமதியளித்து வழிவிட்டு விட்டார். முமூர்த்தியரில் இருவரை வேண்டியாகி விட்டது. அதே சமயம், எப்படியாவது அசுரர்களை வெல்ல வேண்டும் என்ற அவசரத்தில் தேவர்களுக்கு, அதிமூலனான சிவபெருமானை வணங்கி, செயலில் இறங்க வேண்டும் என்ற நினைவு அற்றுப் போய்விட்டது. பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும் என்ற யோசனை கிடைத்த மகிழ்ச்சியில், மகேசனை மறந்தே விட்டனர். பாற்கடலில் யோகத்துயில் புரிபவன் திருமால் அல்லவா? அந்த மாதவனிடம் சென்று, அவன் ஆணை பெற்றதுமே பாற்கடலைக் கடையலாம் என்ற துணிவு துளிர்த்தது தேவர்களுக்கு. கடையப் போவதோ பாற்கடல். சாதாரண காரியமா? அதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரிக்க வேண்டுமே?

மந்திர மலையே மத்தாகியது. அட்ட நாகங்களுள் ஒன்றான வாசுகி, கடைய உதவும் தாம்புக் கயிறாகியது. கடைய ஆரம்பித்தனர் அமரர்கள். அடிவாங்கியே அல்லல் பட்டுக் கிடந்த தேவர்கள், அரைக்கணம் கூட பாற்கடலைக் கடைய முடியாமல் பரிதவித்தனர். களைத்தனர். தேவகுரு அவர்களைத் தேற்றினார். மந்த குணம் உள்ள அசுரர்களை உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம். பங்கு பிரிக்கும் போது சமாளித்துக் கொள்ளலாம் என்று யோசனை சொன்னார்.

'சரி' என்று சம்மதித்தார்கள், தேவர்கள். அசுரர்களிடம் கேட்டார்கள். அவர்களும் 'சரி' என்று சொல்ல, வாசுகியின் வால்புறம் தேவர்களும் தலைப்புறம் அசுரர்களும் பிடித்துக் கடைய, மத்து கடலினுள் அமிழ்ந்து விடாதிருக்க, மகா விஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, மலையின் அடியையும் முடியையும் தன் முதுகினாலும், கைகளாலும் பற்றிக் கொண்டார். பாற்கடலுள் மத்து அமிழ்ந்து கடைதல் ஆரம்பமாகியது. ஆயிரம் தலைகளும் கொடிய நஞ்சும் கொண்ட வாசுகி என்னும் நாகத்தை கயிறாகச் சுற்றிக் கடைந்தனர் அல்லவா? மலையின் மீது சுற்றி இழுக்கப்பட்டதால், வாசுகிக்கு உடல் தேய்ந்து, மூச்சு முட்ட, களைப்பு மேலிட்டது. வாயில் நுரை தள்ளியது. வியர்வை வழிந்து ஓடியது. அந்த வேதனையைத் தாங்க முடியாமல் பெரு மூச்சுடன் நஞ்சையும் வெளிப்படுத்தியது, வாசுகி. அதன் ஆயிரம் வாய்களிலிருந்தும் விஷம் வெளிப்பட்டது. அகிலத்தையே அச்சுறுத்தியது அந்த விஷம்.

உலகம் இருண்டது. தேவர்களும் அசுரர்களும் பயந்து ஓடினார்கள். உலக உயிர்கள் எல்லாம், ஊழிக் காலம் உதித்து விட்டதோ என்று பயந்து அலறின. அதைக் கண்ட மகாவிஷ்ணு, அந்த விஷத்திற்கெதிரே தன் ஆயுதங்களுடன் புகுந்தார். ஆனால் அந்தக் கொடிய நஞ்சு அவர் மேல் பரவி அவர் உடலைக் கருப் பாக்கிவிட்டது. விஷ்ணு கரிய மேனி கொண்டவன் (நீலமேக சியாமளன்) என்று புராணங்கள் வர்ணிக்கின்றனவே, அதற்குக் காரணம் இதுதான். விஷ்ணுவின் அம்சம்தான் கிருஷ்ணன். கிருஷ்ணன் என்றால் கருமை நிறம் கொண்டவன் என்றும் ஒரு பொருள் உண்டு. அதே சமயத்தில், பாற்கடலில் அந்த நஞ்சின் வெம்மை படர்ந்து, அதிலிருந்தும் ஒருவித விஷம் வெளிப்பட்டது. ஆலம் என்றால் நஞ்சு. வாசுகி கக்கிய ஆலமும், பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட ஆலமும் ஒன்றாகக் கலந்து ஆலாலம் எனும் கொடிய நஞ்சாகியது. வேதனையும் சோதனையும் இருமடங்கானது. ஆலாலம் வாட்டிய அந்த சமயத்தில்தான் தேவர்களுக்கு ஞாபகம் வந்தது. சூலாயுதபாணியை மறந்து போனது.

கயிலையங்கிரியை நோக்கி ஓடினார்கள். கையில் வெள்ளிப் பிரம்பு, உடைவாள் கொண்டு சிவபெருமானின் வாசஸ்தலத்தை நந்தி தேவர் காத்து நிற்பது தெரிந்தது. அவர் உத்தரவின்றி எவரும் நுழைய முடியாது. (ராவணன் போன்றவர்கள் தடையை மீறி நுழைந்ததால் ஏற்பட்ட துன்பங்களை நாம் புராண வாயிலாக அறிகிறோம்.) தடுப்பாரோ நந்தி? தாமதமாகுமோ தயாபாரனை தரிசிக்க, தவிப்போடு விரைந்தனர் தேவர்கள்.

குறிப்பால் அவர்களின் குறை உணர்ந்தார் நந்தி. தடுக்காமல் வழி விட்டார். நந்தியின் ஆணை கிடைத்ததும் உட்புகுந்து நெற்றிக் கண்ணனை தரிசித்து, அவரை வணங்காமல் பாற்கடல் கடையப் புகுந்ததன் விளைவை விரிவாக எடுத்துரைத்தனார். மேலும் தங்கள் காரியம் தடையின்றி முடிந்து அமுதம் பெற அருள வேண்டும், எனக் கூறி வணங்கி நின்றனர். நஞ்சணிநாதன், அஞ்சிட வேண்டாம் என்று அபயம் அளித்தார். அருகில் நின்ற சுந்தரரை நோக்கி, "சுந்தரா, அந்த ஆலாலத்தைக் கொணர்க" எனக் கட்டளையிட்டார். சுந்தரர் அவ்வாணையின்படி சூழ்ந்து சென்று சுட்டெரித்த அந்த விஷத்தை குளிர்ப்பந்துபோல் ஏந்தி வந்தார், நந்தி அதை வாங்கி மகாதேவனிடம் அளிக்க, தேவதேவன் தன் கையில் வாங்கிக்கொண்டார்.

மறுபடி ஒரு சிக்கல் எழுந்தது. ஏந்திய நஞ்சை என்ன செய்வது? எங்காவது கீழே விட்டு விடுவதா? என்பது தான். இவ்வினா எழுந்ததும், தேவர்களுக்கு மறுபடியும் நடுக்கம். சிவபெருமானை நோக்கி, "தேவ தேவனே, இது கொடிய நஞ்சு. இதை இப்படியே கீழே விட்டுவிட்டால், உலகமே இதன் முன் பஞ்சாகப் பற்றி எரிந்து அழிந்து விடும். பசுபதியான தாங்களே, சகல ஜீவராசிகளுக்கும் தலைவர். அனைத்துமே தங்களிடத்தில்தான் உற்பத்தி ஆகின்றன. அந்த வகையில் இந்த நஞ்சுக்கும் பிறப்பிடம் தாங்களே. எனவே விஷம் தங்களுக்கு முன் நசிந்துவிடும். ஆகையால் தயவு செய்து தாங்களே இதனை விழுங்கி இப்பிரபஞ்சத்தைக் காத்தருள வேண்டும்'' என்று வேண்டி நின்றனர். அதைக் கேட்ட சிவபெருமான், உலகை உய்விக்க, தானே அந்தக் கொடிய நஞ்சை விழுங்கிட முன் வந்தார்.


சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது?

சகல தேவர்களும் காண, சம்ஹரிக்க வந்த அவ் விஷத்தை சட்டென்று விழுங்கினார் சங்கரன். அருகில் அமர்ந்திருந்த உமை நடுக்க முற்றாள். இக்கொடிய நஞ்சு தன் பதிக்கு எக்கெடுதல் புரியுமோ என்று பதைபதைத் தாள். அதற்கேற் றாற்போல், பரமசிவன் சற்று சாய்ந்து படுக்கலானார். (அப்படி பரமன் பள்ளி கொண்ட தலமே சுருட்டப்பள்ளி என்பர்) நஞ்சு உள்ளே புகாவண்ணம், பார்வதி தன் கரங்களால் சிவபெருமானின் கழுத்தில் அமுக்க, அவ்விஷம் அங்கேயே தங்கிவிட்டது. காளம் தங்கியதால் ஈசனின் கழுத்து நீலநிறமாக மாறியது. அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் ஏற்பட்டது. மகாகொடிய விஷத்தினால், மகேசன் சிறிதும் துயரமோ துன்பமோ அடையவில்லை. பயமுறுத்திய நஞ்சைப் பரமன் விழுங்கியதும், அபயம் என்று வந்த அனைவரும் நன்றி சொல்லவும் மறந்து மீண்டும் பாற்கடலைக் கடைய ஓடினார்கள். அன்றைய தினம் ஓர் ஏகாதசி நாள். மறுநாளான துவாதசியன்று அமுதம் வெளிப்பட, ஆனந்தம் அடைந்தார்கள். அச்சுதன் உதவியால், அமரர்கள் மட்டும் அதனை உண்டார்கள். அன்றைய தினம் ஆடல், பாடலில் கழிந்து, அடுத்த நாள் ஆரம்பித்தது.

திரயோதசி நாளின் உதயத்தில் தான் தேவர்களுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அது, வேத தேவனான மகாதேவனை மறந்து விட்டோம் என்பது. நஞ்சை உண்டு நம்மைக் காத்தவனை நெஞ்சில் வைக்க மறந்து விட்டோமே!' என்ற பதைபதைப்போடு, கயிலைக்கு ஓடினார்கள் எல்லோரும். அங்கே, நஞ்சின் வீரியத்திற்குக் கொஞ்சமும் வாடாமல், அமர்ந்திருந்தார் அரன்.

நஞ்சினை உண்டு காத்திட்ட தன்னை மறந்து விட்டார்களே! என்று வஞ்சம் கொஞ்சமும் கொள்ளாமல், வாஞ்சையோடு அவர்களை வரவேற்றார் வாமதேவன். மன்னிப்பு கேட்டார்கள் எல்லோரும். அதோடு நீலகண்டனின் நெஞ்சிலே இருக்கும் நஞ்சு தீங்கு ஏதும் புரிந்திருக்குமோ அவருக்கு என்று நினைத்தார்கள். அவரிடமே கேட்டார்கள். அப்படி எதுவும் இல்லை என்றார் அரன். ஆனால், முக்கண்ணன் முன்பு போலவே இப்போதும் நம் நலம் நினைத்து, தன் தவிப்பைக் கூறாது தவிர்க்கிறாரோ என நினைத்துத் தவித்தார்கள். கேட்கவும் தயங்கினார்கள்.

அவர்களின் தவிப்பை தயாபரன். ஆடல் வல்லானான தான் ஆடிய திருவிளையாடலே யாவும் என்பதை உணர்த்தும் விதமாக, திருநடனம் ஒன்றை ஆடிட முடிவு செய்தார்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷம் உருவான வரலாறு - சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது? [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : History of formation of pradosha - How did Shiva get the name Neelakandan? in Tamil [ spirituality ]