காயகல்பம்

சித்தா மருத்துவம்

[ சித்தா மருத்துவம் ]

Kayakalpam - Siddha medicine in Tamil

காயகல்பம் | Kayakalpam

நரை, திரை, பிணி, மூப்பு, சாவு இவற்றிலிருந்து உடம்பைக் காத்து கல்போல் ஆக்குவதே காயகற்பம் என்பதாகும்.

காயகல்பம்

 

நரை, திரை, பிணி, மூப்பு, சாவு இவற்றிலிருந்து உடம்பைக் காத்து கல்போல் ஆக்குவதே காயகற்பம் என்பதாகும். கொங்கணர், போகர், திருமூலர் போன்ற சித்தர்களின் நூல்களில், கற்பங்களின் செய்திகள் காணக்கிடக்கின்றன.

பொது கற்பம், சிறப்பு கற்பம் என இருவகை கற்பங்கள் உள்ளன. ஒன்று, பொதுவான நோயற்ற நிலையில் உண்ணுகிற கற்ப முறை ஆகும். மற்றொன்று, ஒரு குறிப்பிட்ட நோயை நீக்கி உடலைக் கற்பமாக்கும் முறையாகும்.

பொதுவாக மிளகு, சீந்தில், வேம்பு, நெல்லி, கடுக்காய், குமரி, வில்வம், கரிசாலை, தூது வளை இவை மூலிகைக் கற்பங்களுக்கும், அண்டம் என்னும் முட்டை ஓடு கற்பம், உப்புக் கட்டு, வங்கச்சுண்ணம் போன்றவை தாது மற்றும் ஜீவ கற்பங்களுக்கும் உதாரணமாகும். கற்ப மூலிகைகள் அறுபதும்; தாது கற்பங்கள் அறுபதும்; உலோகங்களான தங்கம், பாதரசம் சேர்த்து 122 காயகற்பங்கள் ஆகும்.

மூலிகைக் கற்பங்களை உண்ணும் போது, அவற்றில் கருநிற மூலிகைகளையே சித்தர்கள் பயன்படுத்தினார்கள். அவ்வாறு, கருமூலிகைகள் கிடைக்காதபோது, ஏழு முறை பயிரிட்டு ஒவ்வொரு முறையும் சேங்கொட்டையையே உரமாகப் போட்டு அதைக் கற்ப மூலிகையாகப் பயன்படுத்தினர்.

இன்று, உலகம் முழுவதும் உடலை நோயின்றிப் பாதுகாக்கும் முறைகளில் ஒன்றாகக் கருதப்படும் யோக முறைகள், கற்ப முறைகளில் ஒன்றாகும். யோகம் என்று சொல்லப்படும் ஆசன முறைகளும், யோக முறைகளில் ஒன்றாகும்.

நாம் சுவாசிக்கும் காற்றை முறைப்படுத்தி 'பிராணாயாமம்' என்னும் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும் போது உடல் கற்பமாகும். மூச்சை உள்ளிழுக்க 16 மாத்திரை அளவும், மூச்சை நிறுத்த 64 மாத்திரை, வெளிவிட 32 மாத்திரை என 'வாசி' என்னும் காற்றை, யோக முறைப்படி செய்வது 'பிராணாயாமம்' என்னும் மூச்சுப் பயிற்சியில் ஒன்றாகும். ஒரு மாத்திரை என்பது கண் இமைக்கும் நேரமாகும்.

காயத்தைக் கற்பமாக்குவதன் மூலம், வாத சித்தி என்னும் ரச வாதத்தையும், வாத சித்தியால் யோக சித்தி என்னும் இறை நிலையை அடைதலையும் 'சமாதி' என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உடலைப் பாதுகாக்காமல் அழியவிட்டால், உடம்பில் உள்ள உயிரும் அழியும். அவ்வாறு உடலும் உயிரும் அழிய நேரிட்டால், இறைநிலையை அடைய முடியாது. எனவே, காயகற்ப முறைகள் மூலமாக உடலின் நரை, திரை, பிணி, மூப்பு போன்றவற்றை நீக்கி இறப்பைத் தடுத்திடலாம் என்பது சித்தர்களின் வாக்கு.

பொதுவாக, மூலிகைக் கற்பங்களை நாற்பது நாள்கள் சாப்பிட வேண்டும் என்றும் அவ்வாறு சாப்பிடும்போது மலச்சிக்கல், தொண்டையில் வழவழப்பு, இவற்றை நீக்குவதற்கு ஒருசில கற்ப மூலிகைகளை முதலில் சாப்பிட்டு பிறகு முறையான கற்பத்தைச் சாப்பிட வேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் முறையாகும். அத்தகைய கற்ப மருத்துகளைச் சாப்பிடும் போது புளி, உப்பு, எள்நெய், மீன், மாமிசம், மோர், கடுகு, பூண்டு, உடலுறவு, பகல் தூக்கம் இவற்றை நீக்கி பிராணாயாமம், தியானம் செய்து வரவேண்டும்.

கற்ப மருந்துகளைச் சாப்பிடும் போது பசுவின் பாலும் நெய்யும் சேர்த்து ஒருபொழுது மட்டுமே உணவு சாப்பிட வேண்டும். இரவில் சிறிது பசும்பாலை மட்டுமே உணவாகக் கொள்ள வேண்டும். பச்சைப்பயிறு, தேன், பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

கடல் உப்பைச் சேர்க்காமல், போகர் என்னும் சித்தர் சொல்லிய முறைப்படி உப்புக் கட்டு செய்து அதை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். புளிக்குப் பதிலாக புளியாரை, புளியரணை, நெல்லிக்காய், பசலைக்கீரை, சீகைக்காய் செடியின் கொழுந்து இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை பசுவின் நெய்யை தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். பாசிப் பயறு மாவைத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

 

கடுக்காய் கற்பம் :

கடுக்காய் என்ற மூலிகையின் கற்பத்தை,

சித்திரை, வைகாசி மாதங்களில் சுக்கு நீரோடும்;

ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வெல்லம் கலந்தும்;

புரட்டாசி மாதத்தில் தேன் கலந்தும்;

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் குமரிச்சாறு (கற்றாழைச்சாறு) கலந்தும்;

மார்கழி, தை, மாசி மாதங்களில் கற்கண்டு சேர்த்தும்;

பங்குனி மாதத்தில் நெய் சேர்த்தும்;

சாப்பிட வேண்டும் என்று போகர் 70000 என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு சாப்பிட்டால், வாதம், பித்தம், கபம் மூன்றும் நீங்கி உடல் வனப்பு உண்டாகும்.

 

மிளகுக் கற்பம் :

பொதுவான கற்ப விதிகளுடன், முதல் நாள் ஐந்து மிளகு சாப்பிடத் தொடங்கி, ஒவ்வொரு நாளும் ஐந்து மிளகு கூட்டிக் கொண்டே வந்து 100 மிளகு ஆகும் வரை, அமுரியில் கலந்து காலையில் 20 நாள்களுக்குச் சாப்பிட வேண்டும். பிறகு ஒவ்வொரு நாளும் ஐந்து மிளகு வீதம் குறைத்து 20 நாள்களுக்குக் காலையில் சாப்பிட வேண்டும். அத்துடன், மாலையில் அருகம்வேர் 35 கிராம், 25 மிளகைச் சேர்த்து இடித்து தண்ணீரில் கரைத்து சிறிது வெண்ணெய் சேர்த்து உட்கொள்ள வேண்டும். மேற்கூறிய அமுரி என்பது சிறுநீர், பனிநீர், இளநீர், பழைய சோற்றின் நீர், எலுமிச்சம் பழச்சாறு என்று பலவகையாகச் சொல்லப்பட்டாலும் பொதுவாக மொத்தன் வாழை மரத்தில் துருசுச்சுண்ணம் என்ற மருந்தை வைக்க அதனால், அடித்தண்டில் வடியும் நீர்தான் அமுரி எனப்படுகிறது. இருந்தாலும், எலுமிச்சம் பழச்சாறு, பழைய சோற்றின் நீரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

 

சிவகரந்தைக் கற்பம் :

சிவகரந்தைச் செடியை வேருடன் எடுத்து நிழலில் உலர்த்தித் தூளாக்கி பால், நெய், தேன் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து தினமும் சிறிது அளவு சாப்பிட்டு வந்தால் உடல் கற்பமாகும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் - முதல் மாதம், உடல் நாற்றம் நீங்கும் என்றும்; இரண்டாம் மாதம், வாத நோய்கள் நீங்கும் என்றும்; மூன்றாம் மாதம், பித்த நோய்கள் நீங்கும் என்றும்; நான்காம் மாதம், தோல் நோய்கள் நீங்கும் என்றும்; ஐந்தாம் மாதம், பசி கூடும் என்றும்; ஆறாம் மாதம், அறிவும், தெளிவும் உண்டாகும் என்றும்; ஏழாம் மாதம், உடல் வனப்பு உண்டாகும் என்றும்; எட்டாம் மாதம், உடல் தோல் உரியும் என்றும்; ஒன்பதாம் மாத முடிவில் நரை, திரை, பிணி நீங்கும் என்றும் யோகம் சித்தியாகும் என்றும் சித்தர் காயகற்பம்' விளக்குகிறது.

 

வேம்புக் கற்பம் :

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வேப்ப மரத்தின் உள்பட்டையை எடுத்து நன்கு உலர்த்தி பொடியாக்கவும். பிறகு, அப்பொடியை கருங்குன்றி இலைச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி என ஐந்து முறை உலர்த்தி எடுத்து பத்திரப்படுத்தவும். பிறகு, நான்கு பங்கு பொடிக்கு ஒரு பங்கு கற்கண்டு சேர்த்து நாற்பது நாள்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வைரம் போல் இறுகும் என்றும்; நரம்புகள் வலிமை பெறும் என்றும்; நரை, திரை மாறும் என்றும்; உடல் நெடுநாள் வாழலாம் என சட்டைமுனி கற்பவிதி' கூறுகிறது.

 

பஞ்ச கற்பம் :

கரிசாலை, கரந்தை, பொற்றலைக் கையாந்தகரை, நீலி , வல்லாரை இவற்றைச் சம அளவு சூரணமாகச் செய்து பாக்கு அளவு எடுத்து பாலில் கலக்கி நாற்பது நாள்கள் சாப்பிட்டால் உடல் தங்கம் போல் பளபளப்பாகும். இங்கு பொற்றலைக் கையாந்தகரை என்பதை ஆவாரை என்று சொல்வதும் உண்டு.

 

நெல்லிக் கற்பம் :

பெரு நெல்லிக்காயை உலர்த்தி பொடித்து அதில் ஒரு பங்கு நெல்லிப்பொடிக்கு எட்டில் ஒரு பங்கு அப்ரகச் செந்தூரம் சேர்த்து தேனில் கலந்து நாற்பது நாள்கள் சாப்பிட்டால் உடல் இறுகும், நோய் நீங்கும்.

 

நெல்லிப்பூ கற்பம் :

பெருநெல்லிப்பூவை நிழலில் உலர்த்திப் பொடித்து கொஞ்சம் போல் பாலில் கலக்கிக் குடிக்க வேண்டும். அதில், அயபற்பம் சேர்த்து தேனோடு சாப்பிட உடல் எரிச்சல், கழிச்சல், ரத்த சோகை, உடல் ஊதல், வாந்தி, மயக்கம் நீங்கும். இது போலவே ஒவ்வொரு கற்பமும் உண்ணும் முறைகளை சித்தர்கள் விரிவாக விளக்கியுள்ளனர்.

 

தொக்கணம் :

சித்த மருத்துவத்தில், உள்பிரயோக மருந்துகள், அதாவது உள்ளுக்குச் சாப்பிடும் மருந்துக்கள், முப்பத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வெளிப்பகுதியில் பூசும் மருந்துகளை புற மருந்துகள் என்றும் சொல்வார்கள். புறமருந்துகளில் ஒன்றான தொக்கணம் என்பது, உடலில் மருந்து எண்ணெய்களை ஒரு குறிப்பிட்ட வெதுவெதுப்பான பதத்தில் தேய்த்து அழுத்துவதும், பிடித்து விடுவதும் ஆகும்.

தொக்கணம் செய்யும் போது பயன்படுத்தும் மருந்து எண்ணெய்களைப் பொறுத்து வாத, பித்த, கப நோய்கள் தீரும் என்றாலும், வாத நோய்களுக்கென்றே சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.

தொக்கணத்தை ஒன்பது வகைகளாக விளக்கியுள்ளனர்.


1. தட்டுதல் அல்லது குத்துதல் : நோயுற்ற இடத்துக்குத் தகுந்தவாறு நோயாளியை உட்கார வைத்தோ, படுக்க வைத்தோ, ஒரு பக்கமாகப் படுக்கவைத்தோ , மருத்துவ எண்ணெய்களைத் தடவி தட்டவோ, குத்தவோ செய்யலாம். இந்தத் தட்டுதலை மந்தம், மத்திமம், சண்டகம் என, கொடுக்கப்படும் வேகத்தைப் பொறுத்து மூன்றாகப் பிரிக்கலாம்.

 

2. இறுக்குதல் : குறிப்பிட்ட பாகங்களில் மருந்துத் தைலங்களைத் தடவி இறுக்குவதாகும். மென்மையான பாகங்களையும், மெலிந்த எலும்புகளை உடைய பகுதிகளை இறுக்குவது கூடாது.

 

3. பிடித்தல் : மருந்துத் தைலங்களைத் தடவி, பாதிக்கப்பட்டுள்ள தசைகளையோ அல்லது உறுப்புகளையோ பிடித்து விடுவதாகும்.

 

4. முறுக்கல் : கை, கால்களையோ, பாதிக்கப்பட்ட பிற பகுதிகளையோ, நோயாளியை உட்காரவைத்து அல்லது படுக்க வைத்து முறுக்குவதாகும்.

 

5. கைகட்டல் : மருந்து எண்ணெய்களைப் பூசி கைகளால் இறுக்கிக் கட்டுவதாகும். பழு (விலா) எலும்புகளை இறுக்கிக் கட்டுதல் கூடாது.

 

6. அழுத்துதல் : உடலில் பாதிக்கப்பட்ட இடத்தில் அழுத்துவது. நோயாளிகளை உட்காரவைத்து, நிற்க வைத்து, படுக்க வைத்து இவ்வாறு செய்யலாம். ஆனால், விலா எலும்புகள், உச்சந்தலை, கணுக்கால் போன்ற பகுதிகளில் அழுத்தக் கூடாது.

 

7. இழுத்தல் : தைலங்களைப் பூசி பாதிக்கப்பட்ட இடங்களை இழுப்பது. வாயுப் பிடிப்புகள், சுளுக்குகள், தசை பிறழ்ச்சி போன்றவை நீங்கும்.

 

8. மல்லாத்துதல் : உட்கார்ந்திருக்கும் போதுதான் இதைச் செய்ய வேண்டும். இதன்மூலம் உடல் நன்றாக வளைக்கப் படுவதால் வாதம், பித்தம், கபம் தன்னிலைப்படும். மலடு நீங்கும்.

 

9. அசைத்தல் : நோயாளியைப் படுக்கவைத்தும், உட்காரவைத்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அசைக்கலாம். தைலம் தேய்த்தும், தேய்க்காமலும் செய்யலாம். இதனால் உடல் வலி, உடல் கடுப்பு, திமிர்த்தல் (மந்தமாக இருத்தல்) போன்றவை நீங்கும்.

நாள்பட்ட பக்கவாதம், முகவாதம், கை கால்களில் தோன்றும் வாதம் இவற்றுக்கு உள்மருந்துகளுடன், தொக்கணத்தையும் சேர்த்துச் செய்யும் போது மிக எளிதிலும், விரைவாகவும் நோய் தீரும்.

தொக்கணம் செய்யும் இடம், எப்போதும் சுத்தமான, வெது வெதுப்பான, காற்றோட்டமுள்ள, போதுமான வெளிச்சமுள்ள, தூசுகள் அற்ற, ஈரப்பதம் இல்லாததாக இருக்க வேண்டும்.

தொக்கணம் செய்யும் காலத்தில், நோயாளி எளிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். பாசிப் பயறும், பசும் பாலும் சேர்த்துச் செய்த கஞ்சி, அவரை, கத்தரி, முருங்கைப் பிஞ்சுகளை சேர்க்கலாம். கால் வயிறு உணவும் கால்வயிறு நீரும் குடித்திருக்க வேண்டும்.

தொக்கணம், உடலுக்கு ஈரப்பதம், லேசான தன்மை, மனத்துக்கு மகிழ்ச்சி, வலிமை, அமைதி, மனத்தெளிவு, ஞாபக சக்தி போன்றவற்றை அளிக்கும்.

தொக்கணத்தின் போது நரம்புகள், தசைகள், எலும்புகள் வலிமை பெறுவதோடு, ரத்தம், நிணநீர் இவற்றின் ஓட்டமும் அதிகரிக்கும்.

மேலும், உடலில் நரம்புகளையும், ரத்த ஓட்டத்தையும், உள் உறுப்புகளையும், முக்கியத் தசைகளையும் கட்டுப்படுத்தும் நிலைகளை வர்மங்கள் எனப் பார்த்தோம். அகநிலைகளில் 365 நிலைகள் முக்கிய நிலைகளாகும். அவற்றில் நாற்பத்து ஐந்து நிலைகள், நாம் தொக்கணத்தின் போது தடவவும், அழுத்தவும் பயன்படுத்தக் கூடிய இடங்களாகும். மேலும், அவற்றில் 108 நிலைகள் (படு வர்மங்கள், தொடு வர்மங்கள்) நோய் நிலையையோ, செயல் இழப்பையோ, உயிரிழப்பையோ ஏற்படுத்தி விடும். அதனால், ஒரு மருத்துவர் இதைத் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகும்.

பொதுவாக, தொக்கணத்தின் போது அதிக அழுத்தம் கொடுத்து மருந்து எண்ணெய்களால் தேய்த்துவிட வேண்டும். சில குறிப்பிட்ட நோய்களில் அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக தடவி விடுவதையும், பிடித்து விடுவதையும் செய்ய வேண்டும். வாத, பித்த நோய்களுக்கு, அதிக அழுத்தமும், நீவி விடுவதையும் சேர்த்துச் செய்ய வேண்டும். கப நோய்களுக்கு, எண்ணெய் தேய்த்து லேசாகப் பிடித்தும், திருகியும், லேசாக அழுத்தியும் விட வேண்டும். மருந்து எண்ணெய்களைத் தேய்க்கும் போது, லேசான வெது வெதுப்பாகத் தேய்க்கும் போது அதிக பலன் தரும். நோயாளி யும், நோயைத் தீர்க்கும் மருத்துவரும், மாதவிலக்கான காலங் களிலும் பசியுடனிருக்கும் போதும், பயம், கவலை, கோபம் போன்ற எண்ணங்களில் இருக்கும் போதும், சாப்பிட்ட உடனே யும், வயிற்று நோய்கள் இருக்கும் போதும், சிறுநீர்ப்பை நிறைந் திருக்கும் போதும், மலம் கழிக்காத நிலையிலும் தொக் கணத்தைச் செய்யக் கூடாது.

 

கழிச்சல்

நோயாளிக்குக் கழிச்சலுக்கான மருந்துகளைக் கொடுக்கும் போது, அதை, மருத்துவரின் மேற்பார்வையிலேயே நோயாளி எடுத்துக் கொள்ள வேண்டும். நோயாளியின் உடல்நிலை, நோயின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து தக்க கழிச்சல் மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

ஒருமுறை கழிச்சலுக்கு மருந்து கொடுத்து கழிச்சல் ஆக வில்லை என்றால், உடனே வேறு கழிச்சல் மருந்துகளைக் கொடுக்கக் கூடாது. கர்ப்பிணிகள், மாதவிலக்கான பெண்கள், உடல் வலிமை குறைந்தவர்கள், உடலில் புண் உடையவர்கள், வயிற்றுப் புண் உடையவர்கள், அதிக பசியில் இருப்பவர்கள், செரிமான பாதிப்பு டையவர்கள், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் பகுதிகளில் ரத்தக் கசிவு உடையவர்கள், மூலநோய் உடையவர்கள், காய்ச்சல் இருப்பவர்கள், போதை மருந்துகள் அருந்தியவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், காச நோயாளிகள், வயிற்றுப்போக்கு உடையவர்கள், குழந்தைகள், மனநோயாளிகள், உடலுறவுக்கு முன் அல்லது பின் ஆகிய நிலைகளில் உள்ளவர்கள் கழிச்சல் மருந்துகளைச் சாப்பிடக் கூடாது.

கழிச்சல் மருந்துகளைக் கொடுத்த பிறகு நோயாளியின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை நன்கு கவனிக்க வேண்டும். ரத்தம் வெளிப்படுதல், அதிக அடிவயிற்று வலி, மூச்சு வாங்குதல் போன்றவை இருந்தால், அதன் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளித்து நோயாளியின் உள் உறுப்புகளை தெளிவாகப் பரி சோதித்து அதற்கான மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

வயிறு வீக்கமாக இருந்தால், வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். வாதத்தைக் குறைக்கும் மருத்துவம் செய்யவேண்டும்.

 

வாந்தி

பொதுவாக, பித்த நோய்களுக்கான சிகிச்சை முறை என்றாலும், நோய் வராமல் பார்த்துக் கொள்ள ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்தி செய்யும் மருந்தைச் சாப்பிட்டால் அது உடலுக்கு நன்மை தரும். ஜீரண மண்டலத்தின் மேல்பகுதியில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்குவதில் வாந்தி முக்கியமான ஒன்றாகும்.

வாந்தி எடுப்பதற்கான மருந்தைக் கொடுப்பதற்கு முன், நோயாளியின் உடல்நிலை, நோயின் தீவிரம், நோயாளியின் மனநிலை , நோயாளியின் வயது மற்றும் காலநிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

உடல் வலிமை குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், உடலில் அடி பட்டவர்கள், இதய நோயாளிகள், அதிகம் உடல் பருமன் உடையவர்கள், அதிகம் மெலிந்த உடல் அமைப்பைக் கொண்டவர்கள் விரைவீக்கம் உடையவர்கள், மண்ணீரல் வீக்கம் உடையவர்கள், ஜீரண மண்டலத்தில் மேல் உறுப்புகளில் ரத்தப் போக்கு நோய் உடையவர்கள், குழந்தைகள், வயது முதிர்ந்த பெரியவர்கள் ஆகியவர்களுக்கு வாந்தி எடுப்பதற்கான மருந்துகளைக் கொடுக்கக் கூடாது.

வாந்தி எடுப்பதற்கான மருத்துகளைக் கொடுப்பதற்கு முன், நோயாளிக்கு மருந்து எண்ணெய்களால் தொக்கணம் செய்ய வேண்டும். பிறகு மூன்று நாள்கள் கழித்து, மூன்று நாள்களுக்கு ஒத்தடம் கொடுத்து ஏழாவது நாள் வாந்தி எடுப்பதற்கான மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

 

வாந்தி எடுக்க வைக்கப் பயன்படும் மருந்துகள் :

1. வசம்பு சேர்ந்த குடிநீரைப் பாலில் கலந்து குடிக்கக் கொடுக்கலாம்.

2. வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்துக் கொடுத்தால் வாந்தி உண்டாகும்.

3. கடுகை தண்ணீர் விட்டு அரைத்து, தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

4. மலைவேப்பிலையை அரைத்து, தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

மேற்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் கொடுத்து வாந்தி எடுக்க வைத்த பிறகு, பசும் பால், பாசிப் பருப்பு, அரிசிக் கஞ்சி கொடுக்கலாம். இஞ்சி, மிளகு சேர்ந்த தண்ணீரும் கொடுக்கலாம்.

 

நசியம்

மருந்துகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மூக்கில் இடுவதையே நசியம் என்பார்கள். சித்த மருத்துவம், ஒன்றரை மாதங்களுக்கு ஒருமுறை மூக்கில் மருந்து இடுவதை வலியுறுத்துகிறது. அனு தைலம், தும்பைப் பூச்சாறு, நொச்சி இலைச்சாறு, போன்றவற்றை நசிய மருந்துகளாகப் பயன்படுத்தலாம். மூக்கில் நீர் ஒழுகும் போது, நசிய மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.

 

சித்தா மருத்துவம் : காயகல்பம் - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Kayakalpam - Siddha medicine in Tamil [ Health ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்