கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் வடக்கிலும், விவேகானந்தபுரம் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலுக்கு தெற்கில் ஒரு கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு மிக அருகிலும் குகநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
குகநாதீஸ்வரர் திருக்கோவில் - கன்னியாகுமரி
கன்னியாகுமரியில்
முருகப்பெருமான் வழிபட்ட ஈசன் மூலவராக ‘குக நாதீஸ்வரர்’ என்ற திருநாமத்தில்
கிழக்கு நோக்கி மிகப்பெரிய லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.
அப்பனுக்கு பாடம்
சொன்னவர் முருகப்பெருமான். அதுவும் உலகாளும் ஈசனை, தன் தகப்பனை, சீடனாக வைத்து, பிரணவத்தின் அர்த்தம்
சொன்னவர் முருகப்பெருமான். இதனால் முருகப்பெருமானை தோஷம் பற்றியதாம். அந்த தோஷம்
அகல தன் அன்னை பார்வதியின் வழிகாட்டல் படி, உமையவள் குமரியாக அருளும் கன்னியாகுமரியில், குகன் என்ற
முருகப்பெருமான் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். அவ்வளவு புகழ்பெற்ற திருத்தலம்
இதுவாகும்.
இங்கு முருகப்பெருமான்
வழிபட்ட ஈசன் மூலவராக ‘குக நாதீஸ்வரர்’ என்ற திருநாமத்தில் கிழக்கு நோக்கி
மிகப்பெரிய லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். குகநாதீஸ்வரர் உடனுறை சக்தியாக, அம்பிகையானவள் பார்வதி
தேவி என்னும் திரு நாமத்திலேயே தெற்கு நோக்கி அருள்கிறார். இங்கு 11 திங்கட்கிழமை
தொடர்ந்து வந்து,
குமரி முக்கடல் திரிவேணி
சங்கமத்தில் நீராடி கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து சுவாமி, அம்பாள், பைரவரை வழிபட குரு சாபம், மாத்ரு சாபம், பித்ரு சாபம், சுமங்கலி சாபம், முதியவர்களை
மதிக்காததால் வரும் தோஷம் ஆகியவை அகலும் என்கிறார்கள். முக்கடல் சங்கமத்தில்
நீராடி குமரி பகவதியை வழிபட்டு, பின்பு குகநாதீஸ்வரர் ஆலயம் வந்து வழிபட வேண்டும்.
இங்கு ஆலய
உட்பிரகாரத்தில் சுவாமி சன்னிதி வாசலில் மிகப்பெரிய கணபதி இருக்கிறார். கருவறை
கோஷ்டத்தில் லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. ஆலய வெளி பிரகாரத்தில் கன்னிமூலை
கணபதி, மகாலட்சுமி சன்னிதிகள்
உள்ளன. அதோடு வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானும் அருள்கிறார். திருமணத் தடை
உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் இங்குள்ள துர்கை அம்மனுக்கு எலுமிச்சை
விளக்கு ஏற்றி,
முருகர் சன்னிதியில்
தீபம் ஏற்றி,
பைரவர் சன்னிதியில்
சிவப்பு அரளிப்பூ கொண்டு அர்ச்சித்து, தொடர்ந்து 9 வாரங்கள் வழிபட்டு வந்தால் திருமண
பாக்கியம் விரைவில் அமையும் என்பது நம்பிக்கை.
இங்கு நவக்கிரக சன்னிதி
அருகில், பைரவருக்கு தனிச்
சன்னிதி உள்ளது. செவ்வாய்க்கிழமையும், பூச நட்சத்திரமும் கூடிய நாளில் இங்கு வழிபடுவது
சிறப்பாகும். ஆலயம் தினமும் காலையில் திறக்கும் போதும், திருநடை இரவில் சாத்தும்
போதும் ஆலய சாவியை பைரவரிடம் வைத்து பூஜை செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல புதிய
வாகனம் வாங்குபவர்கள், இங்கு வந்து வாகனத்தின் சாவியை பைரவரிடம் வைத்து பூஜித்து பெற்றுக்
கொள்கிறார்கள்.
ஆலய வளாகத்தில் உள்ள
நந்த வனத்தில் அரசமரம் அடியில் நாகர் சிலைகள் உள்ளன. இந்த நாகர் சிலை களுக்கு
மஞ்சள் பொடி தூவி, பசும் பால் அபிஷேகம் செய்து, பைரவரையும் பால், விபூதி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், தயிர், நெய் என எட்டு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தால், காரிய அஷ்ட அபிஷேகம்
செய்து வழிபட காரிய தடை அகலும். ராகு, கேது தோஷங்களும் அகலும். சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, விசாகம், சஷ்டி, பஞ்சமி, திருவாதிரை, பிரதோஷம், சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி நாட்களில் இங்கு
சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஆனி மாத பவுர்ணமி நாளில்
‘மாங்கனித் திருவிழா' நடைபெறும். அதுசமயம் குகநாதீஸ்வரர் பிட்சாடனர் வடிவில் வந்து
காரைக்கால் அம்மையாரிடம், மாங்கனி கேட்கும் வைபவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஈசன்
‘அம்மையே' என அன்புடன் அழைத்த
காரைக்கால் அம்மையார் இத்தலத்தில் வீற்றிருக்கிறார். இத்தல நடராஜரின் தூக்கிய
திருவடி எனும் குஞ்சித பாதத்தின் கீழ் காரைக்கால் அம்மையார்
பாடிக்கொண்டிருக்கிறார். ‘அடியேனுக்கு இறவாத இன்ப அன்பு வேண்டும். பிறவாமை
வேண்டும், மீண்டும்
பிறப்புண்டேல்.. என்றும் உம்மை மறவாமை வேண்டும், ஐயன் நடம் புரியும் போது அடியேன்
மகிழ்ந்து பாடி,
ஐயன் திருவடியின் கீழ்
இருத்தல் வேண்டும்' என்று கேட்டு, திருவாலங்காடு திருத்தலத்தில் நடராஜர் பாதத்தில்
அமர்ந்திருக்கிறார். அதே திருக்கோலத்தில்தான் இந்த ஆலயத்திலும் காரைக்கால்
அம்மையார் அருள்கிறார்.
இல்லறத்திற்குப் பிறகு
துறவறம் பூண்ட முதல் தமிழ் பெண்மணி காரைக்கால் அம்மையார்தான். சிவபெருமானின்
அற்புதத்தை வியந்து ‘அற்புதத் திருவந்தாதி'யும், ‘சிவாய நம' எனும் திருவைந்தெழுத்தின் பெருமையை புகழ்ந்து ‘திருவிரட்டை மணிமாலை'யும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும்
தேவாரப் பதிகம் பாடுவதற்கு முன்பே ஈசனைப் போற்றி ‘திருவாலங்காடு மூத்த
திருப்பதிகம்'
எனும் பதிகமும்
பாடியருளி,
பதிக நிறைவில் தம்மை
‘காரைக்கால் பேய்' எனப்பாடி பரவசம் ஆனவர் காரைக்கால் அம்மையார்.
காரைக்கால் அம்மையார்
சிவனடியாருக்கு மாங்கனி படைத்த நிகழ்வும், சிவபெருமான் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள்
கொடுத்த நிகழ்வும் ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில் காரைக்காலில் ‘மாங்கனித்
திருவிழா' எனும் பெயரில்
வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நாளில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள
இந்த ஆலயத்திலும் ‘மாங்கனித் திருவிழா' வெகுசிறப்பாக அந்திப் பொழுதில் கொண்டாடுகிறார்கள்.
இந்த விழாவில்
கலந்துகொண்டு காரைக்கால் அம்மையாருக்கும், ஈசனுக்கும் மாங்கனி படைத்து வழிபட்டால் வாழ்வில்
வளங்கள் நம்மை வந்தடையும் என்கிறார்கள்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவிலில்
இருந்து ஒரு கிலோமீட்டர் வடக்கிலும், விவேகானந்தபுரம் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி
திருக்கோவிலுக்கு தெற்கில் ஒரு கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரி ரெயில்
நிலையத்திற்கு மிக அருகிலும் குகநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : குகநாதீஸ்வரர் திருக்கோவில் - கன்னியாகுமரி - குறிப்புகள் [ ] | Spiritual Notes: Temples : Kuganatheeswarar Temple - Kanyakumari - Tips in Tamil [ ]