மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது.
கூத்தனூர்: சரஸ்வதி கோயில்!
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும்
வழியில் சுமார் 23 கிலோ
மீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பஸ்நிலையத்தில் இறங்கி 5 நிமிட நடை பயணத்தில் கூத்தனூர் சரஸ்வதி
கோயிலை அடையலாம்.
கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்குப்
பூந்தோட்டம் வழியாகச் செல்லும் பஸ்சிலும் வரலாம். திருவாரூர்-மயிலாடு துறையில் இருந்து
நகரப் பேருந்துகளும் செல்கின்றன.
கல்விக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதி
தேவிக்குத் தமிழ் நாட்டிலேயே தனிக் கோயிலாகக் கூத்தனூரில் மட்டுமே பெரிய ஆலயம் அமைந்திருக்கிறது.
ஆய கலைகள் அறுபத்தி நான்கையும் கற்றுணர்ந்த
சரஸ்வதி தேவி, ஒரு முறை தவம் செய்ய நினைத்தாள். அதற்காக
பூவுலகில் அமைதியும், அழகும்
நிறைந்த கூத்தனூரைத் தேர்ந்தெடுத்தாள். அம்பாளே இங்கு தவம் புரிந்ததால், இந்த ஊர், 'அம்பாள் புரி என்றும் அழைக்கப்படுகிறது.
கவி பாடும் திறன் வேண்டி கலைமகளைப்
பூஜிக்க நினைத்தார். ஓட்டக்கூத்தர். கூத்தனூர் அருகில் பூந்தோட்டம் ஒன்று அமைத்து, தட்சிணவாகினியாய் ஒடுகின்ற அரிசொல்
மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின்
இந்தத் தொண்டில் மகிழ்ந்த நாமகள், தன்வாய்மணமாம்
தாம்பூலத்தை
அவருக்குக் கொடுத்து 'வரகவி'ஆக்கினாள் என்பது வரலாறு!. தனக்குப்
பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை 'ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய' என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர். குழந்தைகளுக்கு ஞானப்பால்
ஊட்ட திருவுளம் கொண்ட சரஸ்வதி தேவி, அமைதியே தவழும் வடிவம் கொண்டாள். வெள்ளை நிற ஆடை தரித்து, வெண்தாமரையில் பந்மாசனத்தில் அமர்ந்து
இங்கே அருள் பாலிக்கின்றாள்.கீழ் இடக்கையில் புத்தகமும், கீழ் வலக்கையில் சின்முத்திரையும், வலது மேல்கரத்தில் அட்சரமாலையும், இடது மேல்கரத்தில் அமிர்தகலசமும் தாங்கி
இங்கே காட்சி தருகின்றாள்!. மேலும், ஜடாமுடியுடன் கருணை புரியும் விழிகளும், 'ஞான க்ஷஷஸ்" என்ற மூன்றாவது திருக்கண்ணும், புன்னகை தவழும் திரு வாயுமாக கிழக்கு
முகமாக அருளாட்சி புரிகின்றாள் இந்த ஒப்புயர்வற்ற அன்னை சரஸ்வதி தேவி!/.
சிவன் கோயிலில் மகாதுர்க்கையும், பெருமாள் தலத்தில் ஸ்ரீ மகாலட்சுமியும்
தனிக் கோவில் கொண்டு - கூடவே மகாசரஸ்வதியும் விளங்குவதால் இங்கே நவக்கிரகங்கள் இல்லை!.
கூத்தனூர் சரஸ்வதி ஆலயம் அதி அற்புதமான ராஜ கோபுரத்தோடு பக்தர்களுக்குத் திருக்காட்சி
தருகின்றது. இங்கு வசந்த ராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
சாரதா நவராத்திரி 12 நாட்களும், அடுத்த
பத்து நாட்கள் ஊஞ்சல் உற்சவ வைபவமும் நடைபெறுகின்றன.
இந்த நாட்களில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, மலர் அலங்காரம் என்று பல்வேறு நிலைகளில்
அன்னை சரஸ்வதி தேவி பக்தர்களுக்குக் காட்சி தருவாள்!.. சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின்
பாதங்களில் பக்தர்களே மலரிட்டு அர்ச்சனை செய்யலாம். இந்த அரிய வாய்ப்பு அன்று ஒரு நாள்
மட்டும் அளிக்கப்படுகிறது. அனைவரும் அர்ச்சனை செய்ய வசதியாக அர்த்தமண்டபம் வரை பாதம்
இருக்குமாறு அன்னைக்கு அலங்காரம் செய்விக்கிறார்கள்!!.
விஜயதசமி தினத்தன்று புருஷோத்தம பாரதிக்கு
அம்பிகையின் அருள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அன்றைய தினம், குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கி
(வித்தியாப்பியாசம்) பக்தர்கள் இங்கே வருகிறார்கள்.
அதாவது பெற்றோர்கள் தங்களது குழந்தையின்
விரலைப் பிடித்து தட்டில் நிரப்பப்பட்ட நெல்லில் பிள்ளையார் சுழி போட்டு, 'அ' என்ற எழுத்தையும் எழுத வைக்கின்றனர். அதன் பிறகே குழந்தைகளைப்
பள்ளியில் சேர்க்கின்றனர்.
அன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும்.
இரவு நாதஸ்வர இன்னிசையுடன் அன்னை அன்னப்பட்சி வாகனத்தில் வீதி உலா வரும் காட்சி நடத்தப்படுகின்றது.
அன்றைய தினத்தில் நூற்றுக்கணக்கான கார், வேன் முதலானவைகளுக்கு ஆயுதபூஜை செய்வார்கள்.
அன்னைக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெறும்!. அதன் பின் விடையாற்றி விழாவும், பத்து நாட்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
அந்த நாட்களில் அம்பாளை ஊஞ்சலில் வைத்து நாளும் ஒரு அலங்காரம் செய்வார்கள்.
சித்திரை மாதம் முதல் தேதியில் தொடங்கி
45 நாட்கள் லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது.
இவை தவிர ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்
காப்பு, மஞ்சள் காப்பு அலங் காரங்களும் உண்டு.
மாதந்தோறும் கலைமகளுக்கு பவுர்ணமி அன்று மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்
படுகின்றது. மூல நட்சத்திரத்தில் நேர்த்தியாக ஆலயம் அலங்கரிக்கப்பட்டுப் பலவிதமான அபிஷேகங்கள்
நடைபெறுகின்றன. கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆனிமாதம் மக நட்சத்திரத்தன்று, 'ஸம்வத்ஸரா' அபிஷேகம் காணலாம்!.
இங்குள்ள மூலப்பிள்ளையார் எனப்படும்
நர்த்தன விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விநாயகர் சதுர்த்தியில் கணபதி ஹோமத்துடன்
அலங்கார அபிஷேகமும் நடைபெறுகின்றன. காலை, மாலை, அர்த்தஜாமம்
என்று சரஸ்வதி தேவிக்கு மூன்று கால பூஜைகள் திளமும் நடைபெறக் காணலாம். இங்குள்ள பிரம்மபுரீஸ்வரருக்கு
மகாசிவராத்திரி அன்று விசேஷ அர்ச்சனைகள், அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. இக்கோவில் இந்து சமய அறநிலைய
ஆட்சித்துறையின் கீழ் சிறப்பாக நடத்தப்படுகிறது!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : கூத்தனூர்: சரஸ்வதி கோயில்! - [ அம்மன் ] | Amman: History : Kuthanur: Saraswati Temple! - in Tamil [ Amman ]