வாழ்க்கை பயணம் மகிழ்ச்சியாக இருக்கும்.

குறிப்புகள்

[ மனம் ]

Life journey will be happy. - Tips in Tamil

வாழ்க்கை பயணம் மகிழ்ச்சியாக இருக்கும். | Life journey will be happy.

நம்முடன் பயணிக்கும் மனிதர்கள் எல்லோரும் நல்லவரே. அதேநேரம், எல்லா மனிதர்களிடம் குற்றம், குறைகள் இருப்பதும் இயல்பான ஒன்றுதான். அந்த குறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களை திருத்துகிறேன் என்ற முயற்சியில் இறங்குவதுதான் மோசமான பின்விளைவுகளைத் தருகிறது.

வாழ்க்கை பயணம் மகிழ்ச்சியாக இருக்கும்.

நம்முடன் பயணிக்கும் மனிதர்கள் எல்லோரும் நல்லவரே. அதேநேரம், எல்லா மனிதர்களிடம் குற்றம், குறைகள் இருப்பதும் இயல்பான ஒன்றுதான். அந்த குறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களை திருத்துகிறேன் என்ற முயற்சியில் இறங்குவதுதான் மோசமான பின்விளைவுகளைத் தருகிறது.

 

கணவன், மனைவி, சகோதரர், உறவினர், நண்பர், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர், உடன் பணியாற்றுபவர் ஆகியோர் மீது அக்கறை காட்டுவதாக நினைத்து, அவர்களுடைய சில குற்றங்களைக் களைய முயற்சிகள் எடுப்பதுதான், அந்த உறவையே சிதைத்துவிடுகிறது.

எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்கான ஒரு சம்பவம் இது.

 

சரியான நேரத்துக்கு ஸ்டேஷனை அடையமுடியாத காரணத்தால் ரயிலை கோட்டைவிட்ட மகேந்திரன், வேறு வழியில்லாமல் அரசு பேருந்தில் ஏறி சொந்த ஊருக்குக் கிளம்பினார். கிட்டத்தட்ட 10 மணி நேர பயணம். ரயிலில் நிம்மதியாக தூங்கியடடி செல்லலாம் என்று படுக்கைக்கு புக் செய்திருந்த மகேந்திரனுக்கு உட்கார்ந்தபடி பயணம் செய்வது கொடுமையான தண்டனையாக இருந்தது.

 

இவருக்குப் பக்கத்தில் இருந்த சீட்டில் அமர்ந்திருந்த நபர் கொஞ்சநேரம் செல்போனை பார்த்துக்கொண்டு இருந்தார். அதன்பிறகு உட்கார்ந்த இடத்திலேயே தூங்கத் தொடங்கிவிட்டார். இதை பார்த்த மகேந்திரனுக்கு தேவையே இல்லாமல் கோபம் வந்தது.

 

லொடலொடவென பஸ்ஸின் குலுக்கல், அருகருகே செல்லும் வாகனங்களின் இரைச்சல், பஸ்ஸில் பயணிகளின் பேச்சு இவற்றை எல்லாம் மீறி எப்படி தூக்கம் வருகிறது என்று பொறாமையாகவும், எரிச்சலாகவும் மகேந்திரனுக்கு இருந்தது. நேரம் செல்லச்செல்ல பயணிகள் பலரும் தூங்கத் தொடங்கினார்கள், ஆனால், மகேந்திரனுக்கு மட்டும் ஏனோ தூக்கம் வரவே இல்லை.

 

கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்குப் பிறகு ஒரு மோட்டலில் பஸ் நின்றது. ஒருசிலர் மட்டும் இறங்கி டீ குடித்து விட்டு வண்டியில் ஏறினார்கள். மகேந்திரனும் டீ குடித்துவிட்டு ஏறினார். அப்போது பக்கத்து சீட்காரர் விழித்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

"கொடுத்து வைச்சவர் நீங்க... எப்படி இந்த இரைச்சலில் தூங்க முடிகிறது?” என்று கேட்டார் மகேந்திரன்.

 

அதற்கு அவர், "நீங்கள் தூங்கப் போகிறீர்கள் என்றால் தூக்கத்தைப் பற்றி மட்டுமே யோசிக்க வேண்டுமே தவிர, சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கத் தேவையில்லை. ஏனெனில் இந்த வண்டியின் குலுக்கலை, இரைச்சலை உங்களால் தவிர்க்கவே முடியாது. எனவே, இவற்றை எல்லாம் உங்களுக்கான ஒரு தாலாட்டு போன்று ரசித்துப் பாருங்கள். நிச்சயம் தூக்கம் வந்துவிடும் என்று சொல்லிவிட்டு தூங்கப் போனார்.

 

அவர் சொல்வதில் மகேந்திரனுக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அப்படியே முயற்சி செய்து பார்த்தார். குலுக்கலையும் இரைச்சலையும் ரசித்தபடி தூங்குவதற்கு முயற்சி செய்தவர், காலையில் சொந்த ஊர் வந்தபோதுதான் கண் விழித்தார்.

 

இந்த சம்பவம் சொல்ல வரும் செய்தி இதுதான். சூழலை மட்டுமல்ல, எந்த ஒரு மனிதரையும் மாற்றுவதற்கு முயற்சி செய்யாதீர்கள். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும், நீங்கள் நீங்களாகவே இருங்கள். அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டு பயணம் செய்யுங்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

மனம் : வாழ்க்கை பயணம் மகிழ்ச்சியாக இருக்கும். - குறிப்புகள் [ ] | The mind : Life journey will be happy. - Tips in Tamil [ ]