குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்" என்பதற்கு இணங்க அமைந்துள்ளதுதான் விராலிமலை முருகன் கோவில்.
சுருட்டு நிவேதனம் பெறும் முருகப்பெருமான்! குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்" என்பதற்கு இணங்க அமைந்துள்ளதுதான் விராலிமலை முருகன் கோவில். இங்கு எழுந்தருளியுள்ள முருகப் பெருமானுக்கு தினமும் நிவேதனமாக சுருட்டு படைக்கப்படுகிறது. முருகன் கோவில்களில் வழக்கத்திற்கு மாறாகவும். விநோதமாகவும் படைக்கப்படும் இந்த நிவேதனத்திற்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. முன்பொரு காலத்தில் குமாரவாடி ஜமீன் நிர்வாகத்தில். நிர்வாகியாக பணிபுரிந்தவர் கருப்பமுத்துப் பிள்ளை. தீவிர முருக பக்தரான இவர், வெள்ளிக்கிழமைதோறும் விராலிமலை முருகப்பெருமானை தரிசித்த பின்பே சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தார். ஒருநாள், முருகப்பெருமானை தரிசிக்க, கருப்பமுத்துப் பிள்ளை விராலிமலை வந்தார். அப்போது திடீரென பெய்த பெருமழையால் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கோவிலுக்கு செல்ல வழியில்லாமல், ஒரு மேட்டுப் பகுதியில் தங்கினார். இரவாகியும் வெள்ளம் வடியாததால், அவருக்கு பசி ஏற்பட்டது. அடாத மழையால் முருகனையும் தரிசிக்க முடியவில்லை. பசியைப் போக்க உணவும் கிடைக்கவில்லை. பிடிப்பதற்கு ஒரு சுருட்டு கூட இல்லையே என்று வருந்தினார். அப்போது முருகப்பெருமான் அங்கு தோன்றி, கருப்பமுத்துப்பிள்ளைக்கு காட்சியளித்ததோடு, அவருக்கு சுருட்டும், நெருப்பும் கொடுத்து, பக்தனின் வருத்தத்தைப் போக்கினார். மறுநாள் காலையில் வெள்ளம் வடிந்தது. கருப்பமுத்துப்பிள்ளை விராலிமலை கோயிலுக்கு சென்றார். முருகனை தரிசித்து, அங்கிருந்தவர்களிடம் நடந்தவற்றை கூறி, முருகப்பெருமானுக்கு படைக்கப்படும் பொருட்களுடன் சுருட்டையும் நிவேதனமாக வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து அன்று முதல் மாலையில் நடைபெறும் சாயரட்சை பூஜையில், நிவேதனமாக சுருட்டும் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. வெகுகாலத்திற்கு பின்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒருமுறை விராலிமலை முருகன் கோவிலுக்கு வந்தார். அவர் முருகப்பெருமானை வழிபட்டபோது, நிவேதனமாக சுருட்டு வைக்கப்படுவதை கண்டு திடுக்கிட்டு, 'இனிமேல் நிவேதனமாக சுருட்டை படைக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். பின்னர் அவர் புதுக்கோட்டை அரண்மனைக்கு வந்தபோது, அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் வயிற்று வலி தீரவில்லை. அன்று இரவில் மன்னனின் கனவில் முருகப் பெருமான் தோன்றி, தனக்கு விருப்பமான சுருட்டை நிவேதனமாக வைக்கக்கூடாது என்று கூறியதால் வயிற்று வலியை உண்டாக்கியதாக கூறினார். இதையடுத்து தொண்டைமான் மன்னர் விராலிமலை கோவிலில் முருகப்பெருமானுக்கு மீண்டும், நிவேதனத்தில் சுருட்டையும் சேர்த்து வைக்க உத்தரவிட்டார். அதன் பின் மன்னரின் வயிற்றுவலி தீர்ந்தது. அன்று தொடங்கி இன்று வரை முருகனுக்கு தடையின்றி நிவேதனமாக 2 சுருட்டுகள் வைக்கப்படுகிறது. பூஜை முடிந்தவுடன் அந்த சுருட்டுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பிரசாதமாக பெற்ற சுருட்டுகளை பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று, பூஜையறையில் வைத்து வழிபடுகின்றனர். 'விராலிமலை' என்ற பெயர் வந்ததற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று... விராலிமலை அருகே விராலூர் என்று ஒரு ஊர் உள்ளது. அதனால் விராலூர் மலை என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி விராலிமலை என்று ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மற்றொன்று... மலையில் விராலிமரங்கள் நிறைந்து காணப்பட்டதாலும், அதில் ஒரு மரத்தின் அடியில் முருகன் சிலை அமைந்திருந்ததாலும், தல விருட்சமாக விராலி மரம் உள்ளதாலும், இப்பகுதி விராலிமலை என்று பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விராலிமலையில் தெற்கு, வடக்கு பகுதிகளில் குகைகள் உள்ளன. இந்த குகைகளில் சித்தர்கள் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தெற்கு பகுதியில் உள்ள குகையில் தங்கியிருந்த சாம்பசதாசிவ என்பவர் சித்து சுவாமிகள் வேலைகள் செய்து பக்தர்களுக்கு அருள் வழங்கி வந்தார். அவர் கும்பகோணத்தில் உள்ள திருபுவனத்தில் ஜீவசமாதி ஆகிவிட்டார். அங்கு இன்றும் அவருக்கு ஆசிரமம் உள்ளது. மேலும், வேறு எந்த முருகன் கோவில்களில் நடைபெறாத அளவில் ஆண்டுக்கு 2 முறை, அதாவது தைப்பூசம் மற்றும் வைகாசி விசாகத்தின்போது இங்கு தேரோட்டம் மற்றும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி மூலம், கார்த்திகை தீபத் திருவிழா, தைப்பூசம். பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களும் இங்கு சிறப்பு பெற்றவை. மேலும் மாதந்தோறும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வரும் வழக்கமும் உள்ளது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும் விராலிமலை அமைந்துள்ளது. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்பெயர் காரணம்:
அமைவிடம்:
ஆன்மீக குறிப்புகள் : சுருட்டு நிவேதனம் பெறும் முருகப்பெருமான்! - ஆன்மீக குறிப்புகள், பெயர் காரணம், அமைவிடம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Lord Muruga receiving the cigar! - Spiritual References, Name reason, location in Tamil [ spirituality ]