மக்கட்பேறு

அதிகாரம் : 7

[ திருக்குறள்: பொருளடக்கம் ]

Makkadperu - Authority : 7 in Tamil



எழுது: சாமி | தேதி : 15-07-2023 09:31 pm
மக்கட்பேறு | Makkadperu

61. பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த மக்கட்பேறு அல்ல பிற.

மக்கட்பேறு

அதிகாரம் : 7

61. பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த

மக்கட்பேறு அல்ல பிற. 

பெறுவதற்குரிய பேறுகளுள் அறிவனவற்றை அறிந்து மக்களைப் பெறுவதை விட மற்றப் பேறுகளை யாம் மதித்தல் இல்லை.


62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழியிறங்காப்

பண்புடை மக்கள் பெறின்.

பிறரால் பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய மக்களைப் பெறுவராயின் அவரை ஏழு பிறவியிலும் துன்பம் தொடராது. 


63. தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.

தம் மக்கள் தாம் தேடிய செல்வங்களாவார். அம்மக்கட்செல்வம் அவரவர் செய்த நல்வினைக்கு ஏற்றபடி கிடைக்கும்.


64. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.


தம் மக்களின் சிறு கைகளினால் கலக்கப்பட்ட உணவு அமிழ்தத்தை விடச் சுவையானது ஆகும். 


65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்; மற்றுஅவர்

சொல்கேட்டல் இன்பம் செவிக்கு. 

மக்களது உடலைத் தொடுவது உடலுக்கு இன்பம், அவர்களது சொற்களைக் கேட்டல் காதுகளுக்கு இன்பம். 


66. கழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 

மழலைச்சொல் கேளாதவர்.

தம் மக்களுடைய மழைலைச் சொற்களைக் கேளாதவர்கள், குழலிசை இனியது யாழிசை இனியது என்பர். 


67. தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல். 

தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை. கற்றார் அவையில் கல்வியறிவால் முதன்மைக் கொள்ளச் செய்தலாம்.


68. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.

தம்மைவிடத் தம் மக்களின் அறிவுடைமையானது உலகத்தில் நிலைப் பெற்றுள்ள உயிர்கட்கெல்லாம் இன்பத்தைத் தரும்.


69. ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச் 

சான்றோன் எனக்கேட்ட தாய்.

தாயானவள் பெற்றநாளில் கொண்ட மகிழ்ச்சியை விட மகனை மற்றவர் சான்றோன் எனக்கூறக் கேட்ட நாளில் பெறுமகிழ்வெய்துவாள். 


70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல். 

மகன் தந்தைக்குச் செய்யும் உதவி இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்னும் புகழ்ச் சொல்லாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

திருக்குறள்: பொருளடக்கம் : மக்கட்பேறு - அதிகாரம் : 7 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Makkadperu - Authority : 7 in Tamil [ Tirukkural ]



எழுது: சாமி | தேதி : 07-15-2023 09:31 pm