மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, வடக்கே 14 கிலோ மீட்டர் தூரத்தில் 'பத்து குகை' என்ற இடம் அமைந்துள்ளது.
மலேசிய முருகன்!
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில்
இருந்து, வடக்கே 14 கிலோ மீட்டர் தூரத்தில் 'பத்து குகை' என்ற இடம் அமைந்துள்ளது. இந்தப் பத்துகுகை
மலையில் உள்ள ஒரு சிறிய குகையில் வேல் போன்ற உருவம் கல்பாறையில் தெரிவதைக் கண்டார்
மலேசியத் தமிழர் ஒருவர். அந்தக் காட்சியை கண்டு பரவசம் ஆன அவர், அந்த இடத்தில் ஒரு மூங்கிலைப் பிரதிஷ்டை
செய்து, அதை வேலாகக் கருதி வழிபட ஆரம்பித்தார்!
நாளடைவில், உலோகத்தினால் ஆன வேல், மூங்கிலுக்குப் பதிலாக நிறுவப்பட்டு
முருகப் பெருமானுக்கு ஆலயமும் ஏற்படுத்தப் பட்டது!
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வந்தர்
ஒருவரது முயற்சியில் ஆலயம் அமைக்கும் பணி சிறப்பாக நடந்து முடிந்தது. மலேசியாவில் பத்து
குகை என்ற இடத்தில் இப்படித்தான் முருகன் கோவில் உருவானது.
கடல் கடந்து அருள்பாலிக்கும் தமிழ்க்
கடவுள் முருகப் பெருமான், மிக
பிரம்மாண்டமான தோற்றத்தில் தரிசனம் தரும் திருத்தலமாக இவ்வாலயம் அமைந்து இருக்கிறது.
தரை மட்டத்திலிருந்து 400 அடிஉயரத்தில் அமைந்திருக்கும் பத்துமலையில், இரண்டு குகைகள் காணப்படுகின்றன. இதில்
ஒன்று மிகவும் ஆழமாகச் செல்கிறது. அதற்குள் சென்று திரும்ப வசதியில்லை. மற்றொரு குகையில்தான் முருகப்பெருமான்
ஸ்ரீசுப்ரமணிய சுவாமி'யாக
எழுந்தருளி கோவில் கொண்டிருக்கிறார்! இந்த முருகனைத் தரிசித்து வர 272 படிக்கட்டுகள் கொண்ட சிறப்பு பாதை
வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலுக்கு மேலும் பெருமை சேர்க்கக்
கூடியது, கோயிலின் நுழைவு வாயில் அருகில் தங்கம்
போல் ஜொலிக்கும் மிகப் பிரமாண்ட முருகன் சிலை ஆகும்! தனது வலது கையில் மிகப் பெரிய
வேலைத் தாங்கி நிற்கும் நிலையில் இந்தச் சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் உயரம் 42.7 மீட்டர். அதாவது 140.09 அடி. 2003ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தச் சிலை
அமைக்கும் பணி 2006ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இச்சிலையை
அமைக்க சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டது.
இந்த பிரமாண்ட முருகன் சிலை அமைக்கப்பட்ட
பிறகு, மலேசியாவிற்கு சுற்றுலா வரும் உலகச்
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது.
முருகப் பெருமானுக்கு உகந்த எல்லா விசேஷ
நாட்களிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. தைப்பூசம் வெகு விமரிசையாக இங்கே கொண்டாடப்படுகிறது.
காவடி எடுப்பவர்கள் தைப்பூசம் அன்று
காலையில் கோலாலம் பூரில் உள்ள மகாமாரியம்மன் கோவிலுக்கு வந்து குவிகிறார்கள். அங்கிருந்து
காவடி எடுத்தபடியும், அலகு
குத்திக் கொண்டும் பக்திப் பரவசத்துடன் பாத யாத்திரையாகப் புறப்படுகிறார்கள். இந்த
ஊர்வலம் எட்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, பத்து குகையை அடைகிறது.
தொடர்ந்து, பத்து குகை முன்புள்ள பிரமாண்ட முருகன்
சிலை முன்பு காவடியாட்டம் ஆடுகிறார்கள். அதன் பின், மலையேறி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்கிறார்கள்.
இங்கு நடைபெறும் தைப்பூச விழாவில் காவடி
எடுத்தல், அலகு குத்துதல் ஆகியவற்றுடன் பால் குடம்
எடுத்தலும் மிகப் பிரபலம். இந்துக்கள் மட்டுமின்றி சீனர்கள் உள்ளிட்ட பிற நாட்டினரும்
இங்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
பத்துகுகை தைப்பூசத் திருவிழாவில் இந்துக்கள்
மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான உலக சுற்றுலாப் பயணிகளும் திரண்டு விடு வதால், அன்றைய தினம் அரசு விடுமுறை அளித்து, இந்த விழாவிற்கு மேலும் பெருமை சேர்க்கிறது
மலேசிய அரசாங்கம். மலேசியா செல்லும் வாய்ப்பு உங்களில் யாருக்காவது வாய்த்தால், அவசியம் இந்த மலேசிய முருகனையும் தரிசித்துவிட்டு
வாருங்கள்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
முருகன் : மலேசிய முருகன்! - முருகன் [ முருகன் ] | Murugan : Malaysian Murugan! - Murugan in Tamil [ Murugan ]