மாங்கனி திருவிழா

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Mangani festival - Spiritual Notes in Tamil

மாங்கனி திருவிழா | Mangani festival

காரைக்காலில் அவதரித்த, இறைவனால் அம்மையே... அன்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்காக கொண்டாடப்படும் திருவிழாதான் மாங்கனி திருவிழா.

மாங்கனி திருவிழா


காரைக்காலில் அவதரித்த, இறைவனால் அம்மையே...

அன்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்காக கொண்டாடப்படும் திருவிழாதான் மாங்கனி திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பௌர்ணமி அன்று இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

காரைக்கால் அம்மையாருக்கும், மாங்கனிக்கும் என்ன தொடர்பு? அங்கேதான் இறைவன் திருவிளையாடல் நிகழ்த்துகிறார்.

முன்னொரு காலத்தில் இன்றைய காரைக்காலில் வசித்த தனதத்தன், தர்மவதி தம்பதியியருக்கு புனிதவதியாக பிறந்தவர்தான் காரைக்கால் அம்மையார். சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்த புனிதவதிக்கும், பரமதத்தன் என்ற வணிகனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகும் சிவன் மீதான பக்தியில் தீவிர நாட்டம் காட்டிவந்தார் புனிதவதி.

ஒருநாள் சிவபக்தர் மூலமாக, இரண்டு மாங்கனிகளை பரமதத்தனிடம் கிடைக்கும்படி செய்தார் சிவன். கனிகளை பெற்ற பரமதத்தன். அதனை வீட்டிற்கு கொடுத்து விட்டான். சிவன், அவனது வீட்டிற்கு அடியார் வேடத்தில் சென்றார். கணவன் இல்லாத வேளையில் வந்த அவரை வரவேற்ற புனிதவதி, அன்னத்துடன் ஒரு மாங்கனியையும் கொடுத்தார்.

பிறகு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு அன்னம் பரிமாறினார் புனிதவதி. மீதம் இருந்த ஒரு மாங்கனியையும் வைத்தார். அதன் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் கேட்டான் பரமதத்தன். கணவனிடம் இல்லை என்று கூற மனமில்லாத புனிதவதி. சமையலறைக்குள் சென்று, தனக்கு ஒரு கனி கிடைக்க சிவனிடம் வேண்டினார். என்ன ஆச்சரியம்... அவர் கையில் ஒரு மாம்பழம் வந்து அமர்ந்தது. அதனை கணவனிடம் கொடுத்தார்.

முதலில் தந்த மாங்கனியை விட இது அதிக சுவையுடன் இருந்ததால் சந்தேகமடைந்தான் பரமதத்தன். அதுபற்றி கேட்டபோது, பொய் சொல்லாமல் உண்மையை கூறினார் புனிதவதி. கணவன் விருப்பத்தின் பேரில் மறுபடியும் அவர் சிவனிடம் வேண்ட... அவரது கையில் இன்னொரு மாங்கனியும் வந்து சேர்ந்தது. ஆனால் சட்டென்று மறைந்து விட்டது.

தனது மனைவி தெய்வ சக்தி கொண்டவள் என்று உணர்ந்த பரமதத்தன் அவரை விட்டு பிரிந்தான். பொருள் தேட பாண்டிய நாட்டுக்கு சென்ற இடத்தில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து, தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்ற பெயரையே சூட்டினான்.

புனிதவதி பரமதத்தனை தேடிச் சென்றபோது, மனைவி, குழந்தையுடன் அவரது காலில் விழுந்து வணங்கினான். கணவனுக்கு பயன்படாத தனது அழகும், உடலும் தனக்கு வேண்டாம் என்று சிவனை வேண்டிய புனிதவதி, சதையை உதிர்த்து, எலும்பாகி முதிய உருவம் பெற்றார். இறைவனை தரிசிக்க கைலாயம் சென்றபோது, அங்குள்ள கற்களை எல்லாம் சிவலிங்கமாக கருதியதால் கால் ஊன்றாமல் தலைகீழாக நடந்து சென்றார். அப்போதுதான் அவரை, அம்மையே... என்று அழைத்து பெருமை சேர்த்தார் சிவபெருமான்.

அப்படிப்பட்ட புனிதவதியார், காரைக்காலில் அவதரித்த காரணத்தால் காரைக்கால் அம்மையார் என்றும் அழைக்கப்படுகிறார். அங்கு அவருக்கு என்று தனிக்கோவிலும் உள்ளது. இங்குதான் ஆனி பவுர்ணமியில் மாங்கனி திருவிழா கொண்டாடப் படுகிறது. 

இந்த விழாவில், காரைக்கால் அம்மையாரிடம் மாங்கனி வாங்க அடியாராக சிவன் வீதி உலா வரும்போது, ஒவ்வொரு வீடுகளின் மாடியில் இருந்தும் மாங்கனிகளை எடுத்து வீசுவார்கள். மாங்கனி மழையை நினைவுபடுத்துவது போல் இருக்கும் இந்தத் திருவிழா.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்


ஆன்மீக குறிப்புகள் : மாங்கனி திருவிழா - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Mangani festival - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்