• தினமும் கடைப்பிடிக்கும் செயல்கள், நித்திய ஒழுக்கம் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய ஒழுக்க முறைகள் :
• தினமும் கடைப்பிடிக்கும் செயல்கள், நித்திய ஒழுக்கம் என்று அழைக்கப்படுகிறது. இதில், காலை
எழுவதிலிருந்து காலைக் கடன்கள், உடற்பயிற்சி, நீராடுதல், உடைகள் அணிதல், உணவு,
குடிக்கும் பானங்கள், தாம்பூலம், தூக்கம், ஓய்வு இவற்றைப் பற்றிய அனைத்தும் அடங்கும்.
• அதிகாலையில் விழிக்கும் போது, புத்தி
தெளிவும், புத்துணர்ச்சியும், வாத,
பித்தங்கள் தன்னிலையிலும் இருக்கும். மலம் கழிக்கும் போது வலது கையால்
இடப்பக்கத்து அடிவயிற்றை லேசாக அழுத்தும் போது மலம் முழுதும் கழியும். சிறுநீர் கழிக்கும்
போது, இடப்பக்க அடிவயிற்றில் லேசாக அழுத்துவது சிறுநீரை நன்றாகக்
கழியச் செய்யும். தினமும் இருமுறை மலமும், நான்கு முறை சிறுநீரும்
கழித்தல் நல்லது. காலையில் கண்விழித்தவுடன் வெந்நீர் அருந்தினால் மலம் கழிதல் எளி தாகும்.
மலச்சிக்கல் இருப்பவர்கள் மதிய உணவில் கீரைகளை யும், இரவு உணவுடன்
உலர் திராட்சை, கொய்யா, பப்பாளி,
பூவன் வாழை உண்பது நல்லது.
• பல் துலக்குவதற்கு, மருத்துவ
நூல்கள் பல்வேறு பல் குச்சிகளைச் சொல்லியிருந்தாலும் தற்காலத்தில் வாரம் ஒரு முறையாவது
இவற்றில் துலக்க நன்மை கிடைக்கும்.
‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி' என்ற
வாக்கின்படி, பல் இறுக வேலங்குச்சியும், அழுக்குக் கறை நீங்க வேப்பங்குச்சியும், ஆண்மை பெருக
பூலா குச்சியையும், ஈறு கெட்டிப்பட ஆலம் விழுதும், வசீகரமான அழகான பற்களுக்கு நாயுருவி வேராலும் பல் துலக்க வேண்டும். வாயில்
புண் உள்ளவர்களும், மிருதுவான ஈறு உள்ளவர்களும், இரைப்பை நோய், பக்கவாதம், நாக்கு
நோய்கள் உள்ளவர்கள் பல்குச்சியைப் பயன்படுத்தக் கூடாது. செங்கல். கரி. வைக்கோல்,
சாம்பல் இவற்றைப் பயன்படுத்த, நாளடைவில் பல் தேய்வு
(Atression) ஏற்படும்.
காலைக் கடன்களை முடித்த பிறகு, உடலுக்கும்
தசைகளுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் வன்மையும், இயல்பாக இயங்கும்
தன்மையையும் தரும் வகையில், யோகப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
யோகப் பயிற்சிகளில் நோயின்றிக் காக்கும் முறைகளும் (Prevention); நோய் வந்த பிறகு தீர்க்கும் முறைகளும் (Therapeutic); ஆயுளை நீட்டிக்கும் முறைகளும் (Rejuvination) உள்ளன.
தினமும் குளிக்கும் போது, உடலின் உஷ்ணம் குறைவதோடு, தோலில் உள்ள அழுக்குகள் நீங்கி தோல் புத்துணர்ச்சி பெறும். காலையில் குளிக்க
பல்வேறு நோய்கள் நீங்கி ஆயுள் நீடிக்கும். கழுத்து வரை குளித்தல் தீங்கு விளைவிக்கும்
என்று முன்னோர் கூறியள்ளனர். எனவே, தலை, உடல் முழுவதும் நனையும்படி குளிப்பதே நல்லது.
குளிர்ந்த இடங்களில் வாழ்பவர்களும், குழந்தைகளும், முதியவர்களும். எண்ணெய் தேய்த்துத் தலை
குளிப்பவர்களும், உடல் அதிகக் குளிர்ச்சி அடையாமல் இருக்க,
கபம் அதிகமாகி நோய் வராமல் இருக்க வெந்நீரில் குளிக்க வேண்டும். 'பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில், தினமும் குளிக்கும்
போது கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்பம் விதை,
கடுக்காய் தோல், நெல்லிப் பருப்பு இவற்றைப் பசும்பால்
விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, நோய்கள் வராது என்று
கூறப்பட்டுள்ளது.
வெட்டிவேர், விலாமிஞ்சு வேர்,
சந்தனம், கோரைக் கிழங்கு, கார்போக அரிசி, பாசிப்பயிறு, பூலாங்கிழங்கு,
கிச்சிலிக் திமங்கு. கஸ்தூரி மஞ்சள், சந்தனம்,
மணிப்புங்கு (பூவந்திகாய்) இவற்றை அரைத்துப் பூசிக் குளித்தால்,
தோல் பளபளப்பதுடன், தோல் நோயிலிருந்து தப்பிக்கலாம்.
இதை 'நலங்கு மா' என்றும் சொல்வார்கள். மேலும்
தினமும் பசு நெய், எள் நெய் இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பூசிக்
குளிக்க, தோல் வறட்சி நீங்கி பளபளப்பாக இருக்கும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது சீகைக்காய், அரப்புத்தூள், கடலை மாவு இவற்றில்
ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம். எண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகு எளிதில் செரிக்கக்
கூடிய உணவைச் சாப்பிட வேண்டும். தயிர், மாமிசம், தேங்காய், கீரைகள், வெங்காயம்,
குளிர்ந்த நீர், இனிப்பு வகைகள், கனிகள் இவற்றை சாப்பிடக் கூடாது. உணவில் அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, மணத்தக்காளி வற்றல், பாசிப்பயறு, துவரை, சுண்டை வற்றல்,
தூதுவளை போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
நாம் அணியும் உடை, சுற்றுச்சூழலின்
மாறுபாட்டிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதால், முக்கியத்துவம்
பெறுகிறது. பட்டுத் துணிகளை அணியும் போது கபம் நீங்குகிறது. வெண்பட்டு, வாதத்தை நீக்குகிறது. நார், பருத்தி ஆடைகளால் (வாதம்,
கபம், பித்தம் மூன்றும் நீங்குகின்றன.
தற்காலத்தில், தொற்றுகளினால் ஏற்படும்
நோய்கள் படிப் படியாகக் குறைந்து வாழ்வின் நடைமுறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களான
நீரிழிவு, அதிக உடல் எடை, அதிக ரத்த அழுத்தம்,
இதய நாள அடைப்பு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதால், உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
பொதுவாக, உணவில் இருக்கும் துவர்ப்புச்
சுவை - ஆற்றலும், கார்ப்புச் சுவை - வன்மையும், இனிப்புச் சுவை - வளமும், உப்புச்சுவை - தெளிவும்,
கசப்புச்சுவை - மென்மையும், புளிப்புச் சுவை -
இனிமையும் தருவதாகக் கருதப்படுகிறது.
சாப்பிடும் உணவிலுள்ள அன்னரசம்; உடலில்
உள்ள ரசம், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை,
விந்து இவற்றைப் படிப்படியாக விருத்தி செய்து உடலுக்கு வலிமை அளிக்கிறது.
எந்த உணவாக இருந்தாலும் அவற்றில் மிளகு, மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு, ஏலம்,
வெந்தயம், பூண்டு இவற்றில் அனைத்தையுமோ அல்லது
சிலவற்றையோ சேர்ப்பது நம் உடலில் வாத, பித்த, கபத்தை தன்னிலைப்படுத்தும். மேலும், பத்து மிளகு இருந்தால்
பகைவன் வீட்டிலும் உண்ண லாம்' என்பார்கள். ஏனெனில், உணவில் ஏற்படும் குற்றங்களை யும் கெடுதல்களையும் மிளகு நீக்கும். மஞ்சள்,
கல்லீரலுக்கு மிகவும் நல்லது. சீரகம், செரிமானத்தை
அதிகரிக்கும். பெருங் காயம், மலத்தை இளக்கி உடல் வெப்பத்தைச்
சீராக்கும். வயிற்றுப்புண், செரியாமை, கழிச்சல்,
இருமல் இவற்றுக்கு சுக்கு நல்லது. ஏலம், பசியை
அதிகரிப்பதுடன் உணவை எளிதில் ஜீரணமாக்கும். வெந்தயம், உடலுக்குக்
குளிர்ச்சி தரும் தாகத்தைப் போக்கும். பூண்டு, பசியை அதிகப்படுத்தி
உடலைத் தேற்றுவதுடன் மேலும் அதிக உடல் எடையைக் குறைக்கும்.
காலை உணவில், பயிறு வகைகள் மற்றும்
துவரை போன்ற பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பகல் உணவில், கருணைக் கிழங்கு, காய்கறிகள், பழங்கள்,
கீரைகள், தயிர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
இரவில், பசும்பால், பாசிப் பருப்பு ,
அவரைப் பிஞ்சு, தூதுவளை போன்றவற்றைச் சேர்த்துக்
கொள்ளலாம். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் பசியை மந்தப்படுத்தும்.
எந்தக் காலத்திலும், நீரை காய்ச்சியே
குடிக்க வேண்டும் என்பது சித்தர்களின் கருத்து. அவ்வாறு காய்ச்சும் போது, காய்ச்சும் அல்லது ஆறவைக்கும் பாத்திரத்தின் தன்மையைப் பொருத்து, நோய்களை நீக்கும் தன்மையை அந்த நீர் பெறுகிறது. நீரை மண் பாத்திரத்தில் காய்ச்சிக்
குடித்தால் செரியாமை, வயிற்றுப்புண், ஜுரம்,
இருமல் நீங்கும். மேலும், சுடவைத்து ஆறிய நீரால்
பித்தம், விக்கல், வாந்தி போன்ற நோய்கள்
நீங்கும். தாமிரப் பாத்திரத்தில் சுடவைத்து ஆறவைத்த நீர், கண்
நோய்களையும்; வெள்ளிப் பாத்திரத்தில் சுடவைத்த நீர், கபநோய்களையும்; பஞ்சலோகப் பாத்திரத்தில் காய்ச்சிய நீர்,
வாதம், பித்தம் மற்றும் கபத்தையும்; இரும்பு மற்றும் வெண்கலப் பாத்திரத்தில் காய்ச்சிய நீர், வாத நோய்களையும், உடல் வெப்பத்தையும் தவிர்த்து,
நல்ல ஆரோக்கியத்தையும் விந்து பெருக்கத்தையும் உண்டாக்கும்.
உணவு சாப்பிட்ட பிறகு வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் உள்ளவர்கள் காலையில், வெற்றிலையை அதிகமாகச் சேர்க்கும் போது கோழைக்கட்டுதல்,
சளி போன்றவை வராமல் தவிர்க்கப்படுவதுடன் வாயில் மணமும் உண்டாகும். மதியம்,
வெற்றிலையுடன் சற்று அதிகமாக சுண்ணாம்பு சேர்க்கும் போது செரிமானம் எளிதில்
நடைபெறுகிறது. இரவில், பாக்கை சற்று அதிகமாகச் சேர்க்கும் போது
நல்ல மலம் இளக்கியாகச் செயல்படுகிறது.
தூக்கம், எல்லா உயிரினத்துக்கும்
மிகவும் அவசியம். தூங்கும் போது, இடப்பக்கம் படுத்து இடது கையை
மடித்துத் தலையின் கீழ்வைத்து, இடது காலை மடித்து வலதுகாலை இடதுகாலின்
மேல் நீட்டி வைத்து, வலதுகையை வலது காலின் மேல் வைத்து உறங்கினால்
தூக்கத்தின் முழுப்பலனும் கிடைக்கும். இரவில் தூக்கமின்றி இருத்தலும், பகலில் தூங்குவதும், நோயை உண்டாக்கிவிடும்.
இரவில் தூக்கமின்றி இருந்தால் மனக்குழப்பம், உடல் இளைத்தல், உடல் சோர்வு,
பசியின்மை உண்டாகும். பகலில் உறங் கினால் உடல் வெப்பம் அதிகரித்தல்,
வாதம் அதிகரித்து உடல் வலி, சோம்பல், தலை பாரமாக இருத்தல் போன்றவை ஏற்படும். எனினும், தேவைப்படும்
போது நோயாளிகள் பகலில் உறங்கலாம் என்பது சித்தர்களின் கருத்து. உணவு சாப்பிட்ட உடனேயே
தூங்கச் செல்லாமல், சிறிது நேரம் உட்கார்ந்திருந்து பின்னர் சிறிது
நேரம் நடந்த பிறகு தூங்குவது நல்லது. மலர் பரப்பிய மெத்தையில் தூங்கினால் பசி அதிகமாகும்.
உடல் வலிமை பெறும். இலவம் பஞ்சு மெத்தை, உடல் சூட்டைத் தணிக்கும்.
பருத்தி மெத்தை, ரத்தம், விந்துவை அதிகரிக்கச்
செய்யும். கோரைப்பாயில் படுக்க, தேகக் குளிர்ச்சியும்,
சுகமான தூக்கமும், நல்ல ஜீரண சக்தியும் உண்டாகும்.
மேற்கூறிய, நாள் ஒழுக்கம் என்பது
ஒரு நாளில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளாகும். அதுபோலவே, ஓர்
ஆண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து, அக்காலங்களுக்கு ஏற்ப செய்ய
வேண்டிய, விளக்க வேண்டிய செயல்களை சித்தர்கள் வகுத்துள்ளனர்.
அவற்றைக் கால ஒழுக்கம்' என்று சொல்வார்கள்.
இளவேனில் காலம் :
இக்காலத்தில், கபம் வளர்ச்சியடைவதால்
எளிதாக ஜீரணமாகும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். வெந்நீரில் நன்னாரி வேர், வெட்டிவேர், சீரகம், சந்தன சிராய்
இவற்றில் ஒன்றை ஊற வைத்துக் குடிக்கலாம். கோதுமை மற்றும் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
முதுவேனில் காலம் :
இக்காலத்தில், வாதம் வளர்ச்சியடைவதால்
நெய்ப்பு, (எண்ணெய்ப் பசையுள்ள), இனிப்பு
மற்றும் திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாமிசம், வாழை, புழுங்கல் அரிசி மற்றும் பழங்களையும் சேர்க்கலாம். பகலில் கொஞ்சம் நேரம்
கிடைத்தால் சிறிது நேரம் தூங்கினால் நல்லது. சந்தனத்தை அரைத்துப் பூசுவதால்,
உஷ்ணத்தால் உண்டாகும் வியர்க்குருவைத் தடுக்கலாம்.
கார் காலம் :
பித்தம் குறைவதால் வெப்ப வீரியமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். பேதி
மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். குளிர்ச்சி தன்மையுள்ள உணவுகளான மோர், இளநீர் இவற்றைத் தவிர்க்க வேண்டும். உப்பு, புளி, தேன் கலந்த உணவுகள் உடலுக்கு ஏற்றவை.
கூதிர் காலம் :
இம்மாதங்களில் பித்தம் அதிகரிப்பதால், அதை நிலைப்படுத்த வாந்தி மருந்துகளைப் பயன்படுத்தலாம். நெய்ப்புத்தன்மையும்,
கசப்புச் சுவையும் உடைய மந்தமான உணவுகளைச் சேர்க்க வேண்டும். சம்பா அரிசி,
பனை வெல்லம், நெல்லிக்காய் தேனூறல், இஞ்சி தேனூறல் போன்றவைகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
முன்பனிக் காலம் :
இக்காலத்தில், உணவு விரைவில் ஜீரணமாகும்.
அதனால் இனிப்பு, புளிப்பு, உப்பு அதிகம்
சேர்த்த உணவுகள், மாமிசம், உளுந்து,
கோதுமை, கரும்பு, பனை வெல்லம்
போன்றவற்றை உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
பின்பனிக்காலம்:
இக்காலத்தில் உடல் வறட்சி அதிகரிக்கும். அதனால், முன் பனிக்கால உணவுகளையும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
பழைய அரிசி : இதுவே நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஏற்றது. எளிதில்
ஜீரணமாவதுடன் உடலுக் கும் குளிர்ச்சி தரும்.
பச்சரிசி : இது உடலுக்கு மிகுந்த வன்மை தரும். எனினும் வாதத்தையும், பித்தத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
புழுங்கல் அரிசி : நோயாளிகள், குழந்தைகள் மற்றும் எல்லோருக்
கும் ஏற்றது. பத்தியத்துக்கும் ஏற்றது.
கோதுமை : பலத்தையும் உஷ்ணத்தையும் கொடுக்கும். வாதத்தை நீக்கும்.
கேழ்வரகு : மெதுவாக ஜீரணமாகும். வாதத்தை உண்டாக்கும். கம்பு: வீரியமும், உடல் குளிர்ச்சியும் உண்டாகும். அதிகமாக உண்பதால் உடல்
அரிப்பும், தோல் நோயும் உண்டாகும்.
துவரை : நெய் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு பலம் தரும். மெலிந்த உடலைத் தேற்றும்.
பாசிப் பயறு : கபம் போகும். பசியைத் தூண்டும். எளிதில் செரிக்கும்.
உளுந்து : பெண்களுக்கான நோய்களுக்குச் சிறந்தது. ரத்தசோகை தீரும்.
பசும்பால் : நோயாளிகள், குழந்தைகள், பெரியவர்கள் எல்லாருக்கும் ஏற்றது.
தயிர் : அஜீரணம், தாகம், எரிச்சல் தீரும்.
மோர் : உடல் வீக்கம், உடல் வெப்பம்,
பேதி இவற்றுக்கு நல்லது.
நெய் : உடல் வெப்பம், வாந்தி,
வயிற்றுப்புண், மூலம், வாதம்
தீரும்.
யோகியர்கள் ஒருவேளையும், போகியர்
என்னும் இல்லத்தார் இருவேளையும், ரோகியர் (நோயாளிகள்) மூன்று
வேளையும் சாப்பிட வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை ஒரு வேளை மட்டும் சாப்பிடுதல் என்பது
செரிமான உறுப்புகளுக்கு ஓய்வும், அழுக்குகள் நீங்குவதற்கு உதவியாகவும்
இருக்கும்.
1. நீரைக் காய்ச்சியும், நெய்யை
உருக்கியும், மோரை நன்றாக நீர் விட்டுக் கலக்கியும் சாப்பிட வேண்டும்.
2. பசும்பால் உடலுக்கு மிகவும் நல்லது.
3. எண்ணெய் தேய்த்து தலை முழுகினால், வெந்நீரில் குளிக்க வேண்டும்.
4. பகலில் உறக்கமும் உடலுறவும் தவிர்க்க வேண்டும். வயதில் மூத்த மாதருடன்
உடலுறவும் தவிர்க்க வேண்டும்.
5. இளவெய்யிலில் அலைதல் கூடாது. மலம், சிறுநீர் அடக்குதல் கூடாது.
6. கருணைக் கிழங்கு தவிர, வேறு
கிழங்கு உண்ணக் கூடாது.
7. முதல் நாள் சமைத்த உணவை உண்ணக் கூடாது. பசித்த பிறகே சாப்பிட வேண்டும்.
8. சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடக்க வேண்டும்.
9. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்தும்; நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்தும்;
ஒன்றரை மாதத்துக்கு ஒருமுறை மூக்குக்கு மருந்தும்; வாரம் ஒருமுறை முக சவரமும்; நான்கு நாள்களுக்கு ஒருமுறை
எண்ணெய் தேய்த்து தலை முழுகவும்; மூன்று நாள்களுக்கு ஒருமுறை
கண்ணுக்கு மருந்திடவும் வேண்டும்.
10. வாசம் வீசும் மலர்களை நள்ளிரவில் முகரக் கூடாது. இரவில் மர நிழலில்
தங்கக் கூடாது. துடைப்பம், தூசி படும்படி இருக்கக்
கூடாது. உணவு ஜீரணமாகும் போது உடலுறவு கொள்ளக் கூடாது. மாலையில் உணவு, உறக்கம் கூடாது.
இவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வருபவர், நோய் அணுகாமல் நீண்டநாள் வாழ்வார்கள் என்பது சித்தர்களின்
கருத்து.
சித்த மருத்துவத்தில் பத்தியம் என்னும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் நோயாளிக்கு
வழங்கும் அறிவுரைகள், அதிக முக்கியத் துவம்
பெறுகின்றன. நோயின் தன்மைக்கும், மருந்தின் தன்மைக் கும் ஏற்ப
பத்தியம் அனுசரிக்கப்படுகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நாளை ஒரு நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சித்தா மருத்துவம் : ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய ஒழுக்க முறைகள் - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Morals to do every day - Siddha medicine in Tamil [ Health ]