அழகு தரும் இயற்கை உணவுகள்

ஆரோக்கிய குறிப்புகள்

[ ஆரோக்கிய குறிப்புகள் ]

Natural beauty foods - Health Tips in Tamil

அழகு தரும் இயற்கை உணவுகள் | Natural beauty foods

அழகு என்பது மிகவும் அழகான விஷயம். ஒவ்வொருவரும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதை மிக முக்கியமான வேலை என்று கருதக்கூடிய காலமிது.

அழகு தரும் இயற்கை உணவுகள்

 

அழகு என்பது மிகவும் அழகான விஷயம். ஒவ்வொருவரும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதை மிக முக்கியமான வேலை என்று கருதக்கூடிய காலமிது. ஏனெனில் மாறிவரும் நாகரிகச் சூழல், அழகைப் பற்றிய விரிவான ஆய்வு, மற்றும் அதன் தேவைக்காக Cosmetology என்ற தனித்துறையே செயல்பட்டுவருகிறது.

மூலைமுடுக்கெல்லாம் காணப்படும் அழகு நிலையங்கள், தனிமனித அழகைப் பேண முழுமையாகச் செயல்பட்டு வருகின்றன.

மேலைநாடுகளில் அழகினைப் பேண, இராசயனப்பூச்சுக்களை மிகவும் அதிகமாக உபயோகிக்கின்றனர். இந்தியா போன்ற கீழைநாடுகளில் மூலிகைகள் மற்றும் இயற்கை உணவுகள் மூலம் அழகைப் பேணும் முறை பரவலாக உள்ளது.

இராசயன அழகுப் பூச்சுகள் பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் மூலிகைகள் தரும் அழகு நிரந்தரமானது. பக்கவிளைவுகளற்றது. பொதுவாக உடலின் தோலை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

அவை.

1. வறட்சியான தோல் (Dry Skin)

2. எண்ணெய்ப்பிசுப்புள்ளதோல் (Oil Skin)

3. சாதாரண தோல் (Normal Skin)

வறட்சியான தோல் அமைப்பைக் கொண்டவர்களின் முகம் கறுத்து களையிழந்து காணப்படும். இவர்களுக்கு வழவழப்புத் தன்மையுள்ள சில மூலிகைகளை, முகப்பூச்சு (facial) செய்வதன் மூலம் குறைகளை நீக்கலாம். பின்வரும் குறிப்புகள் வறட்சியான தோல் அமைப்பைப் கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

1) பிஞ்சு வெண்டைக்காய், கேரட் இரண்டையும் சமமாய் எடுத்து, தேங்காய்ப் பால்விட்டு அரைத்து, முகப்பூச்சு செய்ய, முக வறட்சி நீங்கும். இதேபோல் உடல் முழுமைக்கும் பூசிக் குளிக்க, உடல் வறட்சி நீங்கி மேனி அழகாகும்.

2) அகத்திக்கீரையைத் தேங்காய்ப்பால் விட்டரைத்து, முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க, முகம் வசீகரம் ஆகும். கண் கருவளையங்கள் நீங்கும். தோல் சார்ந்த படை, அரிப்பு போன்ற வியாதிகள் மறையும்.

3) செம்பருத்தியிலை, பச்சைப்பயிறு சமமாய் எடுத்து விழுதாய் அரைத்து, முகப்பூச்சு செய்ய முகம் ஜொலிக்கும்.

4) துத்தி இலையைப் பசும்பால் விட்டரைத்து முகப்பூச்சு செய்ய வறண்ட தோல் மாறும்.

5) சீமைஅகத்தியிலையைப் பச்சைப்பயிறு சேர்த்து விழுதாய் அரைத்துப் பூச முகம் பளபளக்கும்.

வறட்சியான தோல் அமைப்பைக் கொண்டவர்கள் புளிப்புச்சுவையுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, எலுமிச்சை, தக்காளி, புளி இவற்றை உணவில் குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரி இரண்டு டம்ளர் பால் அருந்துதல் வேண்டும்.

பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற பருப்பினங்களை உணவில் மிதமான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அழகு தரும் சூப்

வெண்டைக்காய் - 100 கிராம்

சிறுபயிறு - 25 கிராம்

துத்தி இலை – 1 கைப்பிடி

ஆவாரம்பூ - 1 கைப்பிடி

மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு...

மேற்கண்டவற்றை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, சாற்றினை வடிகட்டிச் சாப்பிட, வறட்சியான உடலமைப்பு, முகவறட்சி நீங்கும். தேகம் பளபளக்கும். 15 தினங்கள் தொடர்ந்து சாப்பிட, தேவதைபோன்ற அழகினைப் பெறலாம்.

உணவில் பச்சைக்காய்கறிகள், கீரைகள், பழங்கள் நிறைய சேர்த்துக் கொண்டால், அளவான உடலமைப்பையும், தேக பளபளப்பையும் பெறலாம். இயற்கை உணவுகள், உடல் அழகை மேலும் மெருகூட்டும் என்பது உலகறிந்த விஷயம்.

எண்ணெய்ப் பிசுபிசுப்புத் தன்மை உள்ளவர்களுக்குக் கீழ்கண்டக் குறிப்புகள் பொருந்தும்.

1. கடைகளில் கிடைக்கும் முல்தானிமட்டியைப் பன்னீரில் குழைத்துப் பூசிட எண்ணெய்ப் பிசுபிசுப்புத்தன்மை தீரும்.

2. தக்காளிச் சாற்றினை முகத்தில் தேய்த்து, முகப்பூச்சு செய்தாலும், எண்ணெய் வழியும் முகம் மாறும்.

3. வெள்ளரிக்காயை எலுமிச்சை சாறு கலந்து விழுதாய் அரைத்து முகப்பூச்சு செய்தாலும் முகத்தில் காணும் எண்ணெய் வழிச்சல் தீரும்.

4. சிறிய வெங்காயத்தை அரைத்து வேகவைத்து, தயிருடன் சேர்த்து முகத்தில் தேய்த்தால், முகம் பளபளக்கும்.

5. சாமந்திப் பூவை சிறிது சிறுபருப்பு சேர்த்தரைத்து முகப்பூச்சு செய்ய, முகம் வசீகரமாகும். கன்னங்கள் ஆப்பிள்போல் செழுமையாய் மாறும்.

அழகு தரும் இயற்கை பானம்

நெல்லிக்காய் சாறு - 100 மி.லி

எலுமிச்சைசாறு - 100 மி.லி

ஆரஞ்சுசாறு - 100 மி.லி

புதினாசாறு - 100 மி.லி

சாத்துக்குடிசாறு - 100 மி.லி

அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பாதியாகச் சுண்டக் காய்ச்சவும். பின்னர் அரை லிட்டர் தேனைக் கொதிக்க வைத்து, அத்துடன் இச்சாற்றினை சேர்த்து, பதமாய்க் காய்ச்சி இறக்கவும். இதில் காலை, மாலை 15 மி.லி வீதம் ஒரு டம்ளர் நீரில் கலந்து சாப்பிட்டு வர, தேகம் பளபளக்கும். இரத்தம் ஊறி முகம் ஜொலிக்கும்.

எண்ணெய் பிசுபிசுப்புத்தீர

துத்தி இலை காய்ந்தது - 100 கிராம்

வேப்பிலை காய்ந்தது - 100 கிராம்

சிறுபயறு - 1/2 கிலோ

வெள்ளை மிளகு - 20 கிராம்

முல்தானி மட்டி - 1/4 கிலோ

இவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொள்ளவும்

தேவையான அளவு எலுமிச்சை சாற்றில் கலந்து முகத்தில் பூசிவர முகம் பளபளக்கும். அழகாகும். ஜொலிக்கும்!

அழகுக்குச் சில குறிப்புகள்: (கூந்தல் பட்டுப்போல் மிளிர)

தேயிலையை நன்கு கொதிக்க வைத்து, அத்துடன் ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து, ஷாம்பூ குளியலுக்குப்பின் தலையில் தேய்த்து அரைமணிநேரம் கழித்து கழுவிவிடுங்கள். கூந்தல் பட்டுப்போல் ஜொலிக்கும்.

முடி உதிர்வதை தடுக்க:

தேயிலையுடன், சம அளவு நெல்லிக்காய்ச் சாறு சேர்த்து கொதிக்க வைத்து, அந்தச் சாற்றினால் வெள்ளைக்கரிசாலை இலையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, முடி கொட்டுதல் நீங்கும். கூந்தல் பளபளப்பாகும்.

இளநரை மாற:

1) நெல்லிக்காய் சாற்றையும், அவுரி இலைச்சாற்றையும் சம் அளவு கலந்து தினசரி 30 மி.லி அளவில் 41 நாட்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட, இளநரை மாறும்.

நரை மாற கூந்தல் தைலம்

தேங்காய் எண்ணெய் - 1/2 லிட்டர்

வெள்ளைக் குங்கிலியம் - 50 கிராம்

முதலில் வெள்ளைக் குங்கிலியத்தைத் தூள் செய்து, எண்ணெயுடன் கலந்து பதத்தில் இறக்கிவிடவும். பின்னர்,

கரிசாலைச்சாறு - 100 மி.லி

நெல்லிக்காய்ச்சாறு - 100 மி.லி

அவுரிச் சாறு - 100 மி.லி

வாழைத்தண்டுச் சாறு - 100 மி.லி

பசும்பால் - 100 மி.லி

இவற்றை ஒன்றாக்கி நன்கு கொதிக்க வைக்கவும், பாதியாக சுண்டிய பிறகு, முன்னர் தயாரித்து வைத்துள்ள எண்ணெயுடன் கலந்து, பதமாகக் காய்ச்சி இறக்கவும். இதனைத் தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர நரை மாறும். கூந்தல் கறுப்பாகும்.

உடம்பில் வியர்வை நாற்றம் தீர

ரோஜாப்பூ - 1 கைப்பிடி

ஆவாரம்பூ - 1 கைப்பிடி

சந்தனத்தூள் - 1 ஸ்பூன்

சிறுபயிறு - 1 ஸ்பூன்

இவற்றை விழுதாய் அரைத்து உடம்பில் பூசிக் குளிக்க, உடம்பில் காணும் வியர்வை நாற்றம் நீங்கி, வாசனையோடு வலம் வருவீர்கள்.

அழகு என்பது நம் எண்ணம், சிந்தனை, உணவுப்பழக்கங்கள், உடற்கூறு இவற்றைச் சார்ந்தும் உண்டாகின்றன. மன அழுத்தம், வேண்டாத மனபயம், இரத்த அழுத்த நோய், சில மன நோய்கள் போன்றவற்றால் முகப்பொலிவு குன்றிவிடுகிறது.

ஆக,

கோபப்படாதீங்க? –

மன இறுக்கம் தீர

யோகா செய்யுங்க ! –

 தியானம் பண்ணுங்க .... அழகா இருப்பீங்க...

 

ஆரோக்கிய குறிப்புகள் : அழகு தரும் இயற்கை உணவுகள் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Natural beauty foods - Health Tips in Tamil [ Health ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்