இதயத்தின் செயல்பாடுகள் என்ன? இதயநோய் வகைகள் என்ன? மாரடைப்பு உண்டாக காரணங்கள்தான் என்ன? மாரடைப்பு வராமல் தடுக்க இயற்கை மருத்துவத்தால் முடியுமா? மாரடைப்பை தடுக்க தள்ள வேண்டிய உணவுகள்?
இதயம் காக்கும் இயற்கை உணவுகள்
மானுட உடலின் மிகவும் சக்தி வாய்ந்த உறுப்புகளின் முன்னோடியாய் இதயத்தைக் குறிப்பிடலாம். தாயின் கருப்பையிலேயே இதயத்தின் வேலை ஆரம்பமாகி விடுகிறது. இரவு, பகல் பாராது இடைவிடாது மனிதனின் ஆயுள்காலம் முழுவதும் இயங்கிக் கொண்டே இருக்கும் இனிய தோழன்தான் இந்த இதயம். இதன் துடிப்பு நின்றுவிட்டால், நாடித்துடிப்பு ஏற்படவில்லை என்றால் வாழ்க்கை முடிந்துவிட்டதாய் அர்த்தம்.
'நேற்று நானும் அவரும் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். மதிய உணவு ஒன்றாகச் சாப்பிட்டோம். லேசாய் நெஞ்சு வலிப்பதாய் சொன்னார். மருத்துவமனை செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது.'
இதுபோன்ற நெஞ்சை உலுக்கும் நிகழ்வுகளை நாம் கண்கூடாய் கண்டும் கேட்டும் வருகிறோம். இப்பொழுது இதயம் காக்கும் இயற்கை உணவுகளைப் பற்றி அறிவோம்.
'இதயம்' என்பது உடலின் அனைத்து உறுப்புகளும் ஒழுங்கே இயங்க உதவிபுரியும் உற்ற நண்பன். அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான இரத்தத்தை இரத்த நாளங்கள் வழியாகத் தொடர்ச்சியாக இறைந்து விடும் ஒரு அற்புதக் கருவி.
ஒவ்வொருவரின் இறுக மூடிய கையளவே கொண்ட இதயத்தில் (1.) இதயவெளியுறை (Pericardium), (2.) இதய மேலுறை (Epicardium) (3.) இதயத்தசை (Myocardium) இதய உள்ளுறை ஆகிய பகுதிகளைக் கொண்டது. மனிதன் உயிர் வாழ்வதற்கு தமனிகளிலும், சிரைகளிலும் இரத்தச் சுழற்சி இருந்து கொண்டே இருக்க வேண்டும். இரத்தச் சுழற்சி செய்யும் முக்கியப் பணியினை இதயமும் இரத்தக் குழாய்களும் முறையே செய்து வருகின்றன.
நுரையீரல்களிலிருந்து பிராணவாயுவையும், ஜீரண உறுப்புகளிலிருந்து சத்துப் பொருள்களையும் உடலின் எல்லா உறுப்புகளுக்கும், எல்லா திசுக்களுக்கும் இரத்த சுழற்சியின் மூலம் கொண்டு செல்வதுதான் இதயத்தின் முக்கிய பணியாகும்.
1) இதய நோயில் ஒருவகை பிறப்பிலேயே உண்டாகிறது (Congenital Heart Diseases)
2) முடக்குவாத நோயினால் உண்டாகும் இதய நோய்கள் (Rheumatic Heart Diseases)
3) இதயத்தசைகளில் உண்டாகும் நோய்கள் (Cardiomyopathies)
4) இதய வெளி, உள்ளுறை நோய்கள் (Pericardial Diseases)
5) இரத்தத்தில் கொழுப்பு மிகுதலால் உண்டாகும் இதயநோய்கள் (hyperlipidea mias)
இவ்வாறு பல்வேறு பரிமாணங்களை இதயநோய் கொண்டுள்ளது. இந்நோயின் இறுதிக்கட்டம் மாரடைப்பு என்னும் கொடுமையான நிகழ்வு - நோயாளிக்கு எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம்.
1) சர்க்கரை வியாதி மற்றும் இரத்தக் கொதிப்பு மாரடைப்பிற்குக் காரணமாகலாம்.
2) இரத்தத்தில் கொழுப்பு மிகுதல் மற்றும் இரத்தநாள உட்சுவர்களில் கொழுப்புத் திவலைகள் படிவதாலும் மாரடைப்பு உண்டாகலாம்.
3) மது, புகை, புகையிலை இவையும் மாரடைப்புக்கு முன்னுரையாய் இருக்கலாம்.
4) முதுமை மற்றும் பாரம்பரிய மரபுத்தன்மையும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
5) மன உளைச்சல் நிறைந்த வாழ்க்கைச்சூழல் மாரடைப்பை வரவேற்கலாம்.
6) அதிக உடற்பருமன், ஊளைச்சதையும், பெருந்தீனியும் மாரடைப்புக்கு முக்கிய காரணமாகலாம்.
கண்டிப்பாய் முடியும். இயற்கை மருத்துவம் என்பது மருத்துவ முறை என்பதைவிட, அதை ஒரு வாழ்வியல் நெறி என்றே சொல்லலாம். இங்கே உணவுதான் மருந்தாக்கப்படுகிறது.
உடலோம்பல் செய்யும் நல்உணவுகள் அனைத்தும் உயிரை பேணுமேயொழிய போக்காது. இதய நோய்களின் மூலம் தனிமனித ஒழுக்கமின்மை , உணவில், உடலில் கவனமின்மை , மெத்தனம் - இவற்றைச் சொல்லலாம்.
பிறவிலேயே உண்டாகும் இதய நோய்களைத் தவிர, பிற இதய நோய்கள் திடீரென உண்டாகிவிடுவதில்லை. முதலில் பிற றோய்களாய் உருவெடுத்து, சார்பு நோய்களாய் இதய நோய்களையும் உண்டாக்கிவிடுகிறது.
இதய நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டு, முறையாய் உணவை உண்டு, தனிமனித ஒழுக்க முறைகளைக் கையாண்டால் கண்டிப்பாய் இதயநோய் குணமாகும்.
இங்கே இதய நோயினை குணமாக்கும் வல்லமை பெற்ற சில உணவு முறைகளை வகைப்படுத்துகிறேன். இதைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் இதயங்கள் கண்டிப்பாய் வலிமை பெறும்; ஐயமில்லை !
1) வெண்ணெய், நெய், வனஸ்பதி, தாவர எண்ணெய்கள், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் கூடவே கூடாது.
2) எண்ணெயில் வறுத்த உணவுகள், அசைவ உணவுகள், கடலைமாவுப் பதார்த்தங்கள் அறவே கூடாது.
3) மதுபானங்கள், புகையிலை, சிகரெட் போன்ற போதை வஸ்துகளை தூக்கி எறிய வேண்டும்.
4) முட்டை, உப்பு ஆகியவற்றை வெகுவாய்க் குறைக்க வேண்டும்.
5) அளவுக்கதிகமாய் டீ, காபி அருந்துதலை தவிர்த்தல் வேண்டும்.
6) உடலுறவில் அதிக வேகம் காட்டுவது, உறவுக்காக ஊக்க மருந்துகள் எடுத்துக் கொள்வது அறவே கூடாது.
இதயம் காக்கும் இயற்கை உணவுகள் கீழே வகைப்படுத்தப்படுகின்றன.
'ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ' என்ற பழமொழியின் மூலம் இதன் சிறப்பை உணரலாம். ஆவாரம்பூ துவர்ப்புச்சுவை மற்றும் மலமிளக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது. இதயத்தை வலுவாக்கும் தன்மை ஆவாரம்பூவிற்கு உண்டு.
புத்தம் புதிய ஆவாரம்பூ 100 கிராம் அளவில் எடுத்து, காம்பினை எடுத்து, சூடான நீரில் அரைமணி நேரம் ஊறப்போடுங்கள். பின்னர் அதனை லேசாக அலம்பி எடுத்து,
தண்ணீர் - அரை லிட்டர்
சிறுபருப்பு - 200 கிராம்
மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் - தேவையான அளவு. இவற்றுடன் ஆவாரம்பூவையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இறக்கி கீரையைக் கடைவது போல் கடைந்து விடவும். இதனை உணவாகச் சாப்பிட, உடலில் அதிகப்படியான கொழுப்பு கரைகிறது. இரத்தக் குழாய்களில் உண்டாகும் வைரஸ்தொற்று நோய் சரியாகிறது. இருதய வீக்கம், இதயவலி ஆகியன குணமாகிறது.
ஆவாரம்பூ - 100 கிராம்
ரோஜாப்பூ - 50 கிராம்
சுக்கு - 25 கிராம்
மிளகு - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
துளசி - 50 கிராம்
இவற்றை ஒன்றிரண்டாய் இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு நீர் எடுத்து கொதிக்க வைத்து தேனீர் போல் தினசரி சாப்பிட்டு வர இதயம் வலுவாகும். உடல் பருமன், ஊளைச்சதை குறையும்.
செம்பருத்திப்பூ - 10 எண்ணிக்கை
துளசியிலை - ஒரு கைப்பிடி அளவு
சுக்கு - 5 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
இவற்றை 1/2லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி சாப்பிட, இதயநோய்கள் அனைத்தும் தீரும்.
1) வாதநாராயணா இலை கைப்பிடி அளவு எடுத்து அதில் ஒரு பல் பூண்டு, சிறிது பெருங்காயம் சேர்த்து அரைத்து பட்டாணி அளவு மூன்று வேளையும் சாப்பிட முடக்குவாத நோயினால் உண்டாகும் இதயநோய்கள் (Rheumatic heart Diseases) குணமாகும்.
2) துளசியிலை - 100 கிராம், வில்வம் - 100 கிராம், சர்ப்பகந்தா - 100 கிராம், அஸ்வகந்தா - 100 கிராம்.
இவற்றை ஒன்றாகக் கலந்து தூள் செய்து, 2 கிராம் அளவில் தினசரி இருவேளை தேனில் சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் (Blood Pressure) மிகுதலால் உண்டாகும் இதயநோய்கள் குணமாகும்.
வேப்பம்பூ - 50 கிராம், வெல்லம் - 30 கிராம், வறுத்த பச்சரிசி - 10 கிராம், காய்ந்த மிளகாய் - 3 எண்ணிக்கை, பூண்டுப்பற்கள் - 3 எண்ணிக்கை, உப்பு, புளி, எண்ணெய் தேவையான அளவு.
முதலில் வேப்பம்பூவை சுத்தம் செய்து, எண்ணெய் விட்டு வதக்கவும். பின்னர் பிற சரக்குகளையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சிறந்த சுவையான உணவு. வைரஸ் தொற்றால் உண்டாகும் இதய நோய் தீரும். கொழுப்பு கரையும். இதய நோய் உள்ளவர்கள் நெல்லிக்காய், கடுக்காய், பிரண்டை , தூதுவளை, பொடுதலை, கொள்ளு, வல்லாரை, முருங்கை இலை, புதினா, கறிவேப்பிலை, முள்ளங்கி, இஞ்சி ஆகியவற்றை துவையல், சூப், அல்லது பிற உணவு முறைகளுடன் இணைத்து அடிக்கடி சாப்பிட வேண்டும்.
தேர்ந்தெடுத்து உண்ணும் நல் உணவால் தேகத்தில் நல்உணர்வும், நல்உணர்வால் நல்ல சிந்தனையும் உண்டாகி, இதயமும், மூளையும் குளிர்ச்சியடைந்து, இந்த உடலை நீட்டிக்கிறது. இனி சிறுநீரக வியாதிகளைத் தீர்க்க உதவும் இயற்கை உணவுகள் பற்றி சற்று அறிவோம்.
ஆரோக்கிய குறிப்புகள் : இதயம் காக்கும் இயற்கை உணவுகள் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Natural foods that protect the heart - Health Tips in Tamil [ Health ]