இரத்த அழுத்த நோய் தொடர்ந்து ஒரு மனிதனுக்கு இருந்தால் அவனுக்கு நரம்பு இயல் பாதிப்புக்களும் இருக்கும்.
நரம்பு நோய்களும் இரத்த அழுத்தமும் இரத்த அழுத்த நோய் தொடர்ந்து ஒரு மனிதனுக்கு இருந்தால் அவனுக்கு நரம்பு இயல் பாதிப்புக்களும் இருக்கும். இரத்த அழுத்த நோய் தோன்றுவதனால் நரம்புத் தளர்ச்சி போன்ற குறைபாடுகள் ஏற்பட வழியுண்டு. இதே போன்று நரம்பு தொடர்புடைய கோளாறுகள் வலுவடையும் காரணத்தாலும் நரம்புத் தளர்ச்சி ஏற்பட வழியுண்டு. இரத்த அழுத்த நோய் குறித்து பின்னால் விரிவாகக் காணலாம். அதற்கு முன்னால் இரத்த அழுத்த நோய்க்கும் நரம்புக் கோளாறுகளுக்கும் எவ்வாறு தொடர்பிருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம். இரத்த அழுத்த நோய் தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் உண்டு. 1. சீரான உணவு முறை இல்லாமை. குறிப்பாக மிகையான உணவு, உடற்பயிற்சி இல்லாமை போன்ற உடலியல் காரணங்கள் ஒருவகை. 2. மனத்திலே ஏற்படும் அதிர்ச்சி, நரம்பியல் சீர்குலைவுகள் போன்றவை மற்றொரு வகைக் காரணம். ● எப்போதும் பரபரப்புடனும், உணர்ச்சிக் கொந்தளிப்புடனும், கோபதாப உணர்ச்சிகளுடனும் செயற்படுபவர்கள் எளிதாக இரத்த, அழுத்த குறைபாட்டிற்கு இலக்காகி விடுகிறார்கள். ● மேற்சொன்ன உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு நரம்பு மண்டல அதிர்ச்சி - அல்லது கிளர்ச்சி தான் முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே தான் நரம்பியல் பிணிகளைப் பற்றிக் கூறும் போது இரத்த அழுத்தப் பிணி பற்றியும் விளக்கம் தர வேண்டி உள்ளது. ● நாம் முன்னரே கூறியிருப்பது போல் நரம்பு தொடர்பான பிணிகள் தோன்றுவதற்குப் பல காரணங்கள் இருப்பினும் இரத்த அழுத்த நோயும் ஒரு காரணமாக இருப்பதால் இரத்த அழுத்த நோயைக் குணப்படுத்திக் கொண்டால்தான் அது தொடர்பாக ஏற்பட்ட நரம்பு நோய்களும் குணமாகும். இந்தக் காரணத்தால் இரத்த அழுத்த நோய் குறித்தும் விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ● 'இரத்த அழுத்தம்' என்ற நிலை நோயைக் குறிப்பதல்ல. நமது உடலில் இரத்த ஒரு அழுத்த அடிப்படையில் தான் இரத்த ஓட்டமே நடைபெற்று வருகிறது. ● இரத்த அழுத்தம் சரியாக இருக்கும் போது தான் உடலின் எல்லா உறுப்புக்களிலும் இரத்தம் சீராகப் பாய்ந்து உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கிறது. ● உடலின் தேவைக்கு ஏற்ற இரத்த அழுத்தம் ஏற்பட சில காரணங்கள் உண்டு. இருதயமானது இரத்தக் குழியினுள் இரத்தத்தை அழுத்தமான விசையுடன் பாய்ச்சுகின்றது. இவ்வாறு இரத்தம் இரத்தக் குழாயினுள் விசையுடன் பிரவேசிப்பதனால், அந்த வேகம் காரணமாக இரத்தம் இரத்தக் குழாய்கள் வழியாக உடலின் எல்லா உறுப்புக்களிலும் பாய்ந்து சென்று சேர முடிகின்றது. ● இரத்த அழுத்தத்தின் அடுத்த பணி வாய்க்காலில் நீர் ஓடுவது போல இரத்தக் குழாயில் இரத்தம் சரளமாக ஓடாமல் பாய்ந்து பாய்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும். இவ்வாறு இரத்தம் எந்தக் குழாய்களுக்கும் செல்லாமல் வாய்க்காலில் நீர் ஓடுவது போல நிதானமாக ஓடினால் இரத்தம் உடலின் மேற்பகுதியிலிருந்து கீழ் உறுப்புகளுக்குள் தான் பாயுமே தவிர அக்கம் பக்கத்து உறுப்புகளில் பாய முடியாது. இதில் மற்றொரு அபாயமும் உண்டு. இரத்தக் குழாய்களுக்குள் அழுத்தத்துடன் பாய்ந்து பாய்ந்து செல்லா விட்டால், இருதயத்திலிருந்து புறப்படும் இரத்தம் இரத்தக் குழாய் வழியாக நேரே கீழிறங்கி கால் பாதங்களில் வந்து தேங்கி நின்று விடும் மற்ற உறுப்புகளுக்கு இரத்தம் செல்ல முடியாது. உதாரணமாக இருதயத்திற்கு மேலே உயரத்திலிருக்கும் தலைப்பகுதிக்கு இரத்தம் செல்லவே முடியாது போய் விடும். ● இரத்தம் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தேவையான அளவு மட்டுமே சீராகச் சென்று அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இரத்தக் குழாய்களில் இரத்தம் அழுத்தத்துடன் பாய்ந்து செல்லுமாறு அமைந்துள்ளது. இந்த இயல்பான இரத்த அழுத்தம், அதிகமாகும்போதோ, குறையும் போதோ அது ஒரு நோய் என மதிப்பிடப்படுகிறது. ● இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதைவிட அதிகமாக இருப்பதுதான் ஆபத்தான ஒரு நிலை என மருத்துவ இயல் அறிஞர்கள் கூறுகின்றனர். ● ஒரு மனிதருடைய இரத்த அழுத்தத்தை இரண்டு வகையான எண்களின் மூலம் மருத்துவர்கள் குறிப்பார்கள். 1. ஓர் எண் "ஸிஸ்டாலிக்' அழுத்தத்தைக் குறிக்கும். இருதயம் சுருங்கும்போது ஏற்படக்கூடிய அழுத்தத்தை இந்த எண் குறிக்கிறது 2. டையஸ்டாலிக் அழுத்தத்தை மற்றோர் எண் குறிக்கின்றது. இருதயம் விரியும்போது ஏற்படும் அழுத்த அளவே இது. ● இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் இரத்த அழுத்தம் ஏறி இறங்குகிறது. பெரிய இரத்தக் குழாய்கள் இருதயத்தின் உள்ளே இரத்தத்தைச் செலுத்தும் அழுத்தத்தைப் பெரிய எண் குறிக்கும். ● இருதயத் துடிப்புக்களுக்கு இடையே உள்ள இரத்த அழுத்தத்தைச் சிறிய எண் குறிக்கும். சாதாரணமாக. இரத்த அழுத்தத்தின் அளவைக் குறிக்கும்போது 120/75 என்று மருத்துவர்கள் எழுதுவார்கள். ஆறு வயது சிறுவனுக்கு 9௦/6௦ ஆக இருக்கும். கொஞ்சம் ஏற்றம் இறக்கம் இருப்பதும் இயல்பான நிலை தான். படபடப்பு நிலையில் ரத்த அழுத்தம் உயரும். பல்வேறு காரணங்களால் இந்த இரத்தநாளங்களின் உள்ளளவு சுருங்கி விடக் கூடும். அப்படிப்பட்ட சமயங்களில் அந்த நிலையைச் சமாளித்து இரத்தம் செலுத்த இருதயம் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மிகையாக இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு இது ஒரு காரணம். சிம்பதெட்டிக் நரம்புகள் வலிய தூண்டப்பட்டு அவை கிளர்ச்சி - அல்லது அதிர்ச்சி அடைவதனால்தான் இந்த மாதிரிக் குறைபாடு ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது. மனத்தில் ஏற்படக் கூடிய அதிர்ச்சியும் குழப்பங்களுமே இதற்கான காரணங்களாக அமைகின்றன. மனக்கவலை, கோபத்தால் போட்டி உணர்ச்சிகள் மனப்பான்மையுடன் செயற்படுதல், பொறாமை உணர்ச்சி போன்ற மனவியல் உத்வேகம் காரணமாகவே சிம்பதெட்டிக் நரம்புகள் செயற்கையான அதிர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் உள்ளாகின்றன. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன என்று கூறினோம். குறிப்பாக மனமும் மனம் தொடர்பான நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுவதனால் இரத்த அழுத்த நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதைக் கவனிப்போம். தற்கால சூழ்நிலையில் மக்கள் எளிதாக உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு இலக்காக வேண்டியிருக்கிறது. சிலருடைய வாழ்க்கை ஒருவித முன்னேற்றமும் இன்றி நெடுநாட்களாக ஒரே தேக்க நிலையில் இருக்கும். இதன் காரணமாக அவர்கள் ஒருவித விரக்தி நிலைக்கு உள்ளாகியிருப்பார்கள். சிலர் சின்ன வயதிலிருந்தே மாறி மாறி கஷ்டங்களை. தொல்லைகளை அனுபவித்து வந்தவர்களாக இருப்பார்கள். ஏமாற்றத்தையன்றி சிலர் வாழ்க்கையில் எந்தவித இன்பத்தையும் காணாதவர்களாக இருப்பார்கள். இவர்களது மன நிலை மிகவும் பலவீனமடைந்து இருக்கும். சிறிய மாற்றம் அதிர்ச்சிகளைக் கூட இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. மிகவும் அற்பமான ஒரு நிகழ்ச்சி கூட இவர்கள் மனத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்பினை உண்டாக்கிவிடும். இவ்வாறு அடிக்கடி ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பு இருதயத்தின் சீரான செயற்பாட்டைப் பாதித்து மிகு இரத்த நோயில் கொண்டு சென்று விட்டு விடும். தற்கால நமது சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதனும் நாள் முழுவதும் டென்ஷன் என்று சொல்லப்படும், பதற்றத்துக்கு இலக்காக வேண்டி உள்ளது. குடும்பத்திலே தோன்றும் பிரச்சினைகள் தொடர்பாக பதற்றம், நாம் செல்ல வேண்டிய வழித்தடத்துக்கான பேருந்துகளுக்காக மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியதால் ஏற்படும் பதற்றம், பஸ்ஸைப் பிடித்து ஏறி விட்டால் பஸ் கண்டக்டருடன் கருத்து வேறுபாடு - மோதல், அலுவலகத்திற்குச் சென்றால் அங்கே தோன்றும் பிரச்சினைகளால் பதற்றம் இவ்வாறு காலை படுக்கையிலிருந்து எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை உணர்ச்சி மோதல்களுடன் மனிதன் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. இந்த மாதிரியான பதற்றம் சூழ்ந்த வாழ்க்கை மனத்திலே அதிர்ச்சியை கிளர்ச்சியைத் தோற்றுவித்து அதன் காரணமாக உயர் இரத்த அழுத்த நோய் தோன்றுகிறது. உயர் இரத்த அழுத்த நோய் தொடர்பாக இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வேறு எந்தக் காரணத்தினால் உயர் இரத்த அழுத்த நோய் தோன்றினாலும் அதன் விளைவாக நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுப் பிணியுறும். ஏதாவது காரணங்களால் நரம்பு மண்டலம் கடுமையான பாதிப்புக்கு இலக்கானாலும் உயர் இரத்த அழுத்த நோய் தோன்றும். இதைச் சிந்தையில் கொண்டு நரம்பியல் பிணிகள் தோன்றாதவாறு தற்காத்துக் கொள்ள வேண்டும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
மருத்துவ குறிப்புகள் : நரம்பு நோய்களும் இரத்த அழுத்தமும் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Nervous diseases and blood pressure - Medicine Tips in Tamil [ Medicine ]