சிவகாசியில் சங்கரன் கோயில் செல்லும் சாலையில் செவல் பட்டி கிராமத்தில் சுமார் 300 அடி உயரமலை உள்ளது.
சிவகாசி அருகேயுள்ள பாம்பாலம்மன் குகைக்கோயில்!
சிவகாசியில் சங்கரன் கோயில் செல்லும்
சாலையில் செவல் பட்டி கிராமத்தில் சுமார் 300 அடி உயரமலை உள்ளது. இந்த மலையில் பாறையைக் குடைந்து குடைவரைக்
கோயிலை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்
பட்ட அதிசயக் கோயிலிது!
பாம்பாலம்மன் கோவில் என அழைக்கப்படும்
இந்த குடைவரைக் கோவிலில் அமர்ந்த நிலையில் விநாயகரும், நின்ற திருக்கோலத்தில் பெருமாளும் அருள்பாலிக்கின்றனர்.
அத்துடன் ஒரு பெண் தெய்வச் சிலையும் உள்ளது. பெருமாள் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் சக்கரமும் வைத்துள்ளார்.
மலையைக் குடைந்து இந்தச் சிற்பங்களை வரிசையாகச் செதுக்கியுள்ளனர். இவை அனைத்தும் ஒரே
கல்லில் உருவாக்கி இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால் யார் உருவாக்கினார்கள் என்ற
குறிப்பு இல்லை.
கோயிலைப் பற்றிய கல்வெட்டும் காணப்படவில்லை.
கோவிலின் தென்கிழக்கு மூலையில் தண்ணீர் தானே பெருக்கெடுத்து வரும் ஊற்று உள்ளது. பெண்சிற்பத்துக்கு
முன்னால் விளக்கு வைக்க மலையைக் குடைந்து ஒரு சிறிய குழி போடப்பட்டுள்ளது. இதில்தான்
திருவிழாக் காலங்களில் விளக்கு ஏற்றி வைப்பார்களாம்!!
இந்தக் கோவிலுக்கு மூன்று வாசல்கள்
உள்ளன. பத்து அடி உயரத்தில் நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தூண் ஒவ்வொன்றிலும்
நந்தி, சிங்கம், யானை, அன்னம் போன்ற சிற்பங்கள் கலைநயத்துடன்
வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தொல்பொருள்
ஆய்வாளர்கள் இங்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது இந்தக் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு
முந்தைய பழமையான குடைவரைக் கோயில் என்று கண்டறிந்தனர். இங்கு உள்ள சிலைகள் பல நூற்றாண்டுகளைக்
கடந்தாலும் அதன் பொலிவை இழக்காமல் இருக்கின்றன. இவை சேரமன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு
இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தக் குடைவரைக் கோயிலில் இருந்து
சிறிது தூரம் நடந்து சென்றால், ஒரு
குகை காணப்படுகிறது. முதலில் நடந்தும், குனிந்தும், பின்னர் தவழ்ந்தும் செல்லும் வகையில் இந்த குகை உள்ளது.
குகைக்குள் சிறிது தூரம் சென்றதும்
அமர்வதற்கு வசதியாக கல்லில் மேடை போல் நீளமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்துதான்
சித்தர்கள், முனிவர்கள் தவமிருந்து இருக்கலாம் எனச்
சொல்லப்படுகிறது.
இக்கோவிலின் மலையடிவாரத்தில் தவக்கிரகச்
சன்னிதிக்கு முன்பாக தட்சிணாமூர்த்திக்கு தனியாகக் கோயில் எழுப்பி இருக் கிறார்கள்.
இந்தக் கோவில் உள்ள மலையில் பாறைகள் ஒவ்வொன்றும் அடுக்கி வைத்தது போல் தோற்றம் தருகிறது.
மேலே சென்று விட்டு இறங்கி
வரும்போது திரும்பிப் பார்த்தால் அதன் பிரமிப்பை உணர முடியும்.
இங்கு சிவகாசி மற்றும் செவல்பட்டி கிராம
மக்கள் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகளில் வந்து விளக்கேற்றி
வணங்கிச் செல்கிறார்கள். மலையின் உச்சியிலிருந்து பார்த்தால், சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் கோவில்
மலை நமக்குத் தெரிகின்றது.
தை மாதம் பொங்கல் வைத்து மக்கள் வழிபடுகிறார்கள்.
சிவகாசியிலிருந்து சங்கரன் கோயில் செல்லும் பஸ்ஸில் செவல் பட்டியில் இறங்க வேண்டும்.
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டரில் கோவில் அமைந்துள்ளது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : சிவகாசி அருகேயுள்ள பாம்பாலம்மன் குகைக்கோயில்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Pambalamman cave temple near Sivakasi! - Tips in Tamil [ spirituality ]