பொன்னான வாழ்வு அருளும் பாடகச்சேரி பெருமாள்

ஆன்மீக குறிப்புகள், அமைவிடம்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Pathakcheri Perumal, which gives golden life - Spiritual Notes, location in Tamil

பொன்னான வாழ்வு அருளும் பாடகச்சேரி பெருமாள் | Pathakcheri Perumal, which gives golden life

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடகச்சேரி ஒரு புனித தலமாகும். பாடகச்சேரி சுவாமிகள் என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீராமலிங்க சுவாமிகள் இவ்வூரில் நீண்ட நாட்களாக தங்கி இருந்து மக்களுக்கு நன்மை செய்தவர்.

பொன்னான வாழ்வு அருளும் பாடகச்சேரி பெருமாள்

 

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடகச்சேரி ஒரு புனித தலமாகும். பாடகச்சேரி சுவாமிகள் என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீராமலிங்க சுவாமிகள் இவ்வூரில் நீண்ட நாட்களாக தங்கி இருந்து மக்களுக்கு நன்மை செய்தவர்.

 

நாய்களை அழைத்து விதவிதமான உணவுகளை சமைத்து அவற்றை இலையில் பரிமாறியதால் இவர் பைரவ சித்தர் என்றும் அழைக்கப்பட்டார். இதே பாடகச்சேரியல் அமைந்துள்ள ஸ்ரீசவுந்திரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் ஆலயத்தையும், ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீ கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த பிரயாசைப்பட்டார். இதற்காக இரண்டு கோயில்களுக்கும் பாலாலயம் கூட நடைபெற்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் போய்விட்டது.

 

தற்போது பெருமாள் கோவில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் கீற்றுக்கொட்டகையில் வீற்றிருந்து வருகிறார். அதாவது பாலாலயம் செய்யப்பட்டு 200 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மூலவர்களின் இந்த கல் திருமேனிகள் தவிர கருடாழ்வார். தும்பிக்கை ஆழ்வார். ஸ்ரீராமானுஜர் ஆகியோரின் திருமேனிகளையும் இந்த கொட்டகையிலேயே தரிசிக்க முடிகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களின் உதவியோடு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இக்கோவில் தலபுராணம் ராமாயண காவியத்துடன் தொடர்புடையது.

 

ஸ்ரீராமனின் மனைவி சீதாதேவியை வஞ்சகமான திட்டத்துடன் புஷ்பக விமானத்தில் கவர்ந்து சென்றான் ராவணன். தன்னை விடுவிக்குமாறு கதறினாள் சீதை. ஆனால் அதை ராவணன் பொருட்படுத்தவில்லை. அப்போது சீதாதேவிக்கு ஒரு எண்ணம் உதித்தது. ராவணன் தன்னை எங்கே கடத்தி செல்கிறான் என்பதை தன்னை தேடி வரும் ராமன் தெரிந்து கொள்வதற்கு வசதியாக கழுத்திலும், கைகளிலும், கால்களிலும் தான் அணிந்து இருக்கும் ஆபரணங்களை கழற்றி அதை பூமியில் போட்டுக் கொண்டே சென்றாள். அப்படி அவள் காலில் அணந்து இருந்த பாடகம் எனப்படும் கொலுசை ஒரு இடத்தில் கழற்றிப் போட்டாள். அந்த இடமே பாடகச்சேரியாகும். பின்னர் சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள்.

 

சீதையை தேடி ராமன் புறப்பட்டு வரும்போது சீதாதேவி அணிந்திருந்த ஆபரணங்களை ஆங்காங்கே கண்டார். சீதாதேவி பாடகம் (கொலுசு) கிடந்த இடத்தை அடைந்தவுடன் ஸ்ரீராமன் அந்த கொலுசை கையில் எடுத்து அதை தம்பி லட்சுமணனிடம் காட்டினார். அதைப் பார்த்து முகம் மலர்ந்த லட்சுமணன். இது அண்ணியாருடையது. அவர் தன் திருப்பாதங்களில் அணிந்து இருப்பார். இதை நான் பார்த்திருக்கிறேன். என்று கூறினான். அதுவரை தரையில் கண்டெடுத்த ஆபரணங்களை காட்டி ராமன் கேட்டபோது, இது அண்ணியாருடையதுதானா என்று எனக்குத் தெரியாது என்று கூறிய லட்சுமணன், கொலுசை பார்த்ததும் இது அண்ணியாருடையது என்று உறுதிபட கூறியதை கேட்ட ராமன் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். லட்சுமணனின் பக்தியையும் பாராட்டினார்.

 

பாடகத்தை கண்டு எடுத்ததால் இந்த ஊருக்கு பாடகப்பதி என்று பெயர் ஏற்பட்டது. பின்னாளில் அது மருவி பாடகச்சேரி என்றானது. இங்கு அருள்புரியும் பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இந்த பெருமாள் பக்தர்கள் வேண்டும் பிரார்த்தனையை உள்ளம் மகிழும்படி நிறைவேற்றி பொன்னான வாழ்வை அருள்வதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். குறிப்பாக குழந்தை வரம் கொடுக்கும் தயாள மூர்த்தியாக இந்த பெருமாள் விளங்குகிறார். கொடுத்தக் கடன் தொகை வசூலாகாமல் இருந்தால் இவரை தரிசித்து வழிபடுவதன் மூலம் அந்த தொகை வசூலாகி பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

 

அமைவிடம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் இருந்து சுமார் கிலோமீட்டர் தொலைவிலும், குரு ஸ்தலமான 3 ஆலங்குடியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் – மன்னார்குடி செல்லும் வழித்தடத்தில் இங்கு வர பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன. மேலும் நீடாமங்கலத்தில் இருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : பொன்னான வாழ்வு அருளும் பாடகச்சேரி பெருமாள் - ஆன்மீக குறிப்புகள், அமைவிடம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Pathakcheri Perumal, which gives golden life - Spiritual Notes, location in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்