நேந்திரம் வாழைக்கு பெயர் தந்த பெருமாள்

ஓணம் வழிபாடு, அமைவிடம்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Perumal gave the Nendram banana its name - Onam worship, location in Tamil

நேந்திரம் வாழைக்கு பெயர் தந்த பெருமாள் | Perumal gave the Nendram banana its name

பெருமாளின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று கேரளாவில் உள்ள திருக்காட்கரை.

நேந்திரம் வாழைக்கு பெயர் தந்த பெருமாள்


பெருமாளின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று கேரளாவில் உள்ள திருக்காட்கரை. ஓணம் திருவிழா இங்குதான் முதன் முதலில் நடந்தது என்கிறார்கள்.

வாமன் மூர்த்தியாக இங்கு எழுந்தருளியிருக்கும் மூலவரான பெருமாள், காட்கரையப்பன் என்று அழைக்கப்படுகிறார். நின்ற நிலையில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தாயார் பெயர் பெருஞ்செல்வ நாயகி. வாத்சல்யவல்லி நாச்சியார் என்ற பெயரும் உண்டு.

மூலவரான பெருமாள் நான்கு கரங்களில், சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை ஏந்தியுள்ளார். கோவில் கி.பி.604ல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கேரள பகுதியில் அதிக அளவில் விளையும் சுவை மிகுந்த நேந்திரம் வாழைக்கும் இந்தக் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகச் சொல்கின்றனர்.

ஒரு காலத்தில் இந்த பகுதியில் வாழ்ந்த பக்தர் ஒருவர் தனது விளைநிலத்தில் நிறைய நேந்திரம் வாழை மரங்களை சாகுபடி செய்திருந்தார். அந்த வாழை மரங்கள் அனைத்தும் வளர்ந்தும் பலன் தராமல் அழிந்து போயின. ஒருமுறை அல்ல, பலமுறை இவ்வாறு நிகழ. பயந்துபோன விவசாயி, இக்கோயிலுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட வாழைக்குலை ஒன்றை காணிக்கையாக்கி தனது குறையை முறையிட்டார். அவரது வேண்டுகோளை ஏற்ற பெருமாள், அதன் பிறகு அந்த விவசாயியின் வாழைத்தோட்டத்தில் நிறைய மகசூல் கிடைக்குமாறு செய்தார்.

பெருமாளின் நேத்திரங்களின் (இதற்கு கண்கள் என்றும் பொருள் உண்டு) அருட்பார்வை பெற்று செழித்து வளர்ந்த இந்த வாழை மரங்கள் அன்று முதல் நேத்திரம் வாழை என்று அழைக்கப்பட்டு, அதுவே பின்னாளில் நேந்திரம் வாழை ஆகிவிட்டது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

இதன் காரணமாக இத்தலத்து பெருமாளுக்கு செய்யப்படும் வாழைக்குலை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது.


காணாமல் போன பொன்வாழை

ஒருமுறை இக்கோவிலுக்கு வழங்கப்பட்ட தங்கத்தால் ஆன வாழைக்குலை காணாமல் போனது. இதையறிந்த அந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னன், இந்த கோவிலுக்கு தினந்தோறும் வந்து வழிபட்டுச் செல்லும் யோகி ஒருவரின் மீது சந்தேகப்பட்டான்.

அந்த யோகி மீது திருட்டுக் குற்றம் சுமத்தி, தண்டனையும் வழங்கினான். இந்த சம்பவத்திற்கு பிறகு ஒருநாள், காணாமல் போன தங்கத்தால் ஆன வாழைக்குலை சுவாமி சந்நதியிலேயே கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றம் காரணமாக, மனம் வருந்திய யோகி, மன்னனை சபித்து விட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அதேநேரம் அவர் பிரம்ம ராட்சஸனாகி இத்தலத்தில் திரிந்து கொண்டிருந்தாராம். பின் பக்தர்கள் அனைவரும் தங்கள் சாபம் தீர வேண்டி யோகியை வழிபட்டு, இத்தலத்தில் யோகிக்கு கோவில் கட்டி தினமும் வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். அதன் பின்னரே அவரது ஆத்மா சாந்தி அடைந்ததாம்.

இதன் காரணமாக இப்போதும் திருக்காட்கரை பெருமாளை வழிபடச் செல்லும் பக்தர்கள், முதலில் இந்த யோகியின் சந்நதிக்குச் சென்று வழிபட்டுவிட்டே செல்கின்றனர்.


ஓணம் வழிபாடு:

ஓணம் பண்டிகை அன்று இங்கு நடைபெறும் நேந்திரம் வாழைக்குலை வழிபாடு பிரசித்தி பெற்றது. அந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால் அதிகாலையிலேயே பக்தர்கள் நேந்திரம் வாழைக்குலைகளுடன் நீண்ட வரிசையில் நின்று இடம் பிடித்துக்கொள்கிறார்கள். அதன்பின், தாங்கள் கொண்டு வந்த வாழைக்குலையை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வழிபடுகிறார்கள். பக்தர்களால் தரப்படும் வாழைக்குலைகள் இக்ககோவில் வாயிலில் வரிசையாக கட்டித் தொங்க விடப்படும்.

ஓணம் பண்டிகை முதன்முதலில் இந்த திருத்தலத்தில்தான் கொண்டாடப்பட்டது என்கிறார்கள். அதன் பின்னர் தான் கேரளாவின் மற்ற பகுதிகளுக்கு பரவியதாகக் கூறுகிறார்கள்.

கபில முனிவர் இத்தலத்துப் பெருமாளை வழிபட்டதால். இங்குள்ள தீர்த்தம் கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கபில தீர்த்தத்திலுள்ள நீரை தான் மகாபலி கமண்டலத்தில் எடுத்து வாமனருக்கு மூன்றடி நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள்.


அமைவிடம்: 

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில், இடப்பள்ளி ரெயில் நிலையத்திலிருந்து கிழக்கே 6 கி.மீ. தொலைவிலும், கொச்சியில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் திருக்காட்கரை அமைந்துள்ளது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்


ஆன்மீக குறிப்புகள் : நேந்திரம் வாழைக்கு பெயர் தந்த பெருமாள் - ஓணம் வழிபாடு, அமைவிடம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Perumal gave the Nendram banana its name - Onam worship, location in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்