பிரதோஷ காலம்

பட்சப் பிரதோஷமும் மாதப் பிரதோஷமும், மகா பிரதோஷம்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Pradosha period - Bachap Pradosha and Mada Pradosha, Maha Pradosha in Tamil

பிரதோஷ காலம் | Pradosha period

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பிறகு பௌர்ணமிக்கு முன்பாக வரக்கூடிய திரயோதசி தினமே பட்சப் பிரதோஷ தினம் எனப்படுகிறது.

பிரதோஷ காலம்


ஆரம்பத்திலேயே பார்த்ததுபோல், பிரதோஷம் என்பதற்கு, அளவுக்கு அதிகமான தீமைகள் ஏற்படும் காலம் என்பது அர்த்தம்.

தினமுமே, காலை சந்தி, உச்சிகால சந்தி, மாலை சந்தி என மூன்று வேளைகளில் திரிசந்தி காலம் என்பார்கள். இந்த மூன்று நேரத்திலும் அதாவது விடியலின் தொடக்கம், உச்சிப் பொழுதின் ஆரம்பம், மாலையில் தொடக்கம் ஆகிய சமயங்களில் உணவு உண்பதைக் கூட தவிர்க்க வேண்டும் என்பார்கள் நம் முன்னோர்.

இந்த மூன்று சந்தியா காலங்களிலும் முக்கியமானதாகச் கூறப்படுவது, மாலை சந்தியா காலமே ஆகும். சூரியன் மறைந்து சந்திரன் எழத் தொடங்கும் அந்த வேளையே பிரதோஷ காலம். (விளக்கு வைக்கும் நேரத் தில் சாப்பிடாதே எனவும், திரிசந்தி வேளையில் சாப்பிடக் கூடாது என்றும் பெரியவர்கள் சொல்வதைக் கேள்விப் பட்டிருப்பீர்களே!)

ஒவ்வொரு ஊழியின் போதும், உலக உயிர்களை தன்னுள் ஒடுக்கிக் காத்து, பின் மீண்டும் உயிர்த்தெழச் செய்கிறார் உமாகாந்தன் என்கின்றன புராணங்கள். அப்படி ஊழிக்காலம் ஆரம்பமாவதும் பிரதோஷவேளை ஒன்றில் தான். எனவேதான் அந்த நேரத்தில் இறைவனை சிந்தையில் இருத்தி, அவனோடு அவன் நினைவோடு ஒன்றி இருப்பது சிறப்பானது என்கிறார்கள். அப்படி நம் முன்னோர் ஏற்படுத்தி வைத்த பூஜை முறையே பிரதோஷ வழிபாடு.

திரயோதசி திதி தினமே பிரதோஷ தினம் என்று சொல்லப்பட்டாலும், தினமுமே மாலையில் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தை, பிரதோஷ காலம் என்றே சொல்கின்றனர் பெரியோர்.

இரவிலே சகல உயிர்களும் ஒடுங்கி (உறங்கி). விடியலில் எழுவதும் இறைவனின் செயலே... அதுவும் பிரளயத்திற்குப் பிறகு பிரபஞ்சம் தழைப்பது போன்றதே என்பது ஐதிகம். அதனால் தினமும் வரும் பிரதோஷம், நித்ய பிரதோஷம் என்பார்கள். தினமும் சாயங்காலத்தில் விளக்கேற்றி வைத்து கடவுளை வழிபடச் சொல்வது, நித்ய பிரதோஷம் என்பதால்தான்.


பட்சப் பிரதோஷமும் மாதப் பிரதோஷமும்

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பிறகு பௌர்ணமிக்கு முன்பாக வரக்கூடிய திரயோதசி தினமே பட்சப் பிரதோஷ தினம் எனப்படுகிறது. பௌர்ணமிக்குப் பின், அமாவாசைக்கு முன்பாக வரக்கூடிய திரயோதசி தினத்தின் மாலை நேரமே மாதப் பிரதோஷம்.

இப்படி பட்சப் பிரதோஷமும், மாதப் பிரதோஷமும் மாறி மாறி வந்தாலும், மகா பிரதோஷம் என்ற மிகச் சிறப்புமிக்க பிரதோஷ தினமும் ஒன்று உண்டு.


மகா பிரதோஷம்

பௌர்ணமிக்குப் பிறகான, கிருஷ்ணபட்ச காலத்தில் வரக்கூடிய திரயோதசி தினம் சனிக்கிழமையாக அமைந்தால், அதுவே மகாபிரதோஷ தினம்.

அகிலத்தைக் காத்திட அரன் ஆலாலம் உண்டு நீலகண்டனாக மாறியது, சனிக்கிழமையன்று அமைந்த திரயோதசி தினத்தில்தான் என்று நம்பப்படுவதால், அப்படி சனிக் கிழமைகளில் வரும் பிரதோஷம், மகா பிரதோஷம் என்று மகிமைக்கு உரியதாகப் போற்றப்படுகிறது.

இவை அனைத்தையும்விட மிக மிக முக்கியமானது பிரளயப் பிரதோஷம், இந்தப் பிரதோஷத்தின் போது, உலக உயிர்கள் முழுமையாக இறைவனுள் ஒடுங்குகின்றன. அதுவே ஊழிக்காலம். அதன்பிறகு மீண்டும் உயிர்கள் தோன்று கின்றன. அதுவே காலை சந்தி நேரம். இப்படிக் காலை சந்திக்கும் பிரதோஷத்திற்கும் இடையே நிகழ்வதே உயிர்களின் தோற்றமும் நிறைவும். பிரதோஷத்தைப் பற்றியும் அதன் பெருமையைப் பற்றியும் தெரிந்து கொண்டாயிற்று, இனி, பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய பிரத்யேக வழிபாட்டு முறைகளைப் பார்க்கலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷ காலம் - பட்சப் பிரதோஷமும் மாதப் பிரதோஷமும், மகா பிரதோஷம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Pradosha period - Bachap Pradosha and Mada Pradosha, Maha Pradosha in Tamil [ spirituality ]