பிரதோஷ பூஜை

சிவன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Pradosha Puja - sivan - Spiritual Notes in Tamil

பிரதோஷ பூஜை | Pradosha Puja

சிவபெருமானுக்கு உகந்தது பிரதோஷ வேளை.

பிரதோஷ பூஜை


சிவபெருமானுக்கு உகந்தது பிரதோஷ வேளை. இந்த வேளையில் சிவபெருமானை வழிபடுவது விசேஷம் என்று ஆகம சாஸ்திரங்கள் சொல்கின்றன. பிரதோஷ காலத்துக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?


சரஸ்வதி வீணை மீட்ட, இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, பிரம்ம தேவர் தாளம் போட, திருமால் மிருதங்கம் இசைக்க, லட்சுமிதேவி கானம் பாட, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடிய நாள் திரயோதசி (கார்த்திகை சனிக்கிழமை). இந்த திதியில் மாலை வேளையில் சூரியன் அஸ்தமனத்துக்கு மூன்றே முக்கால் நாழிகைகளுக்கு முன்னால் பிரதோஷ வேளை தொடங்குகிறது.

பிறை சூடிய சிவனுக்கு சோமவார வழிபாடு சிறப்பு என்பதால், திங்கட்கிழமை வரும் பிரதோஷத்தை சோம பிரதோஷம் என்கிறார்கள். சனி பிரதோஷத்தையும் ஆவணி, கார்த்திகை மாதங்களில் வரும் பிரதோஷங் களையும் புராணங்கள் மிகச் சிறப்பானதாகக் கூறுகின்றன.

பிரதோஷ காலத்தில் சிவ ஆலயங்களில் நந்தி தேவருக்கு நெய் விளக்கு ஏற்றி, அருகம் புல்லினால் அலங்கரித்து, வில்வ இலைகளால் அர்ச்சித்து, வெல்லம் கலந்த அரிசியை (காப்பரிசி என்று சொல்வார்கள்) நைவேத்தியம் செய்வார்கள். உளுந்துச் சுண்டலும் சிறப்பானதுதான்.

பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக் கிடையே சிவபெருமானைத் தரிசித்தால், எல்லா தேவதைகளையும் தரிசித்த பலன் உண்டு.

சிவகணங்களுக்குத் தலைவர் நந்திதேவர். சிவாலயங்களில் அதிகார நந்தியாக இருந்து, பக்தர்களின் மனங் களைப் பரிசோதித்து அனுப்பும் அதிகாரம் பெற்றவர். இதன் காரணமாகவோ என்னவோ...அன்று நந்தியின் காதுகளில் குறைகளைச் சொன்னால் அவை முற்றிலும் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாகத் திருமண மாகாத பெண்கள் அன்றைய தினத்தில் நந்தியின் காதில் மனமுருகப் பிரார்த்தித்தால் திருமணம் நடக்கும்!

பிரதோஷ பூஜையில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து பார்ப்பது முக்கியம்.

கிருஷ்ணபட்ச திரயோதசியில் பூஜையைத் தொடங்கி ஒரு வருடத்துக்குச் செய்வதே பிரதோஷ விரதம். இந்த நாட்களில் பகலில் உண்ணாவிரதம் இருந்து, மாலையில் பூஜை செய்த பிறகுதான் இறைவனின் பிரசாதத்தை ஏற்க வேண்டும்.

'தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி தந்நோ நந்தி, ப்ரசோதயாத்' என்ற சாண்டில்ய முனிவர் அருளிய ஸ்ரீநந்திகேஸ்வர காயத்ரி மந்திரத்தையும்,

'சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி 

சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி 

கவலைகளை என்னாளும் போக்கும் நந்தி 

கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி..'

என்ற பாடலையும் ஓதுவது உத்தமம்.

விரதத்தின்போது தாம்பூலம் தரிக்கக்கூடாது. மதியத் தூக்கம் கூடாது. இல்லற உறவு கூடாது. மாமிசம் கூடாது. ருத்ரம், சமகம் தெரிந்தவர்கள் அவற்றையும், மற்றவர்கள் 'ஓம் நமசிவாய' என்ற திருமந்திரத்தையும் தொடர்ந்து கூறலாம்.

சிவபெருமானை ஆஷுதோஷி' என்பார்கள். அதாவது, அவரை எளிதாகத் திருப்திப்படுத்த முடியும். பிரதோஷ வேளையில் அவரை வழிபட்டு மன அமைதியும் பெரும் பலனும் பெறலாம்.

சிவாலயங்களில் பிரதோஷ பூஜையின் போது சுவாமி திருக்கோயிலை வலம் வருவதை அவசியம் தரிசிக்க வேண்டும். அப்போது சிவபுராணம் எல்லோரும் சேர்ந்து பாடுதல் நலம்.

இந்தச் சமயத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் ஜெபம் செய்வது, ஒன்றுக்கு ஆயிரமாக நற்பலன்களை அளிக்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷ பூஜை - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Pradosha Puja - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]