வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.
பிரதோஷம் விரதம் அனுஷ்டிக்கும் முறை வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாஸம் இருக்க வேண்டும். பிரதோஷ வேளை என்பது மாலை மணி 4.30 முதல் 6.00 மணி வரையுள்ள காலமாகும். பிரதோஷ வேளையில் சிவலிங்க மூர்த்தத்தை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும். ஐந்தெழுத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவபெருமான் பிரதோஷ காலத்தில் இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே உயிர்கள் உய்யும் பொருட்டு திருநடம் புரிகின்றார். அப்போது சரஸ்வதி வீணை வாசித்தாள். இந்திரன் புல்லாங்குழல் ஊதினார். பிரம்மதேவர் தாளம் போட்டார். இலட்சுமி தேவி பாடினாள். திருமால் மிருதங்கம் வாசித்தார். தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், சின்னரர்கள். திசை பாலர்கள் முதலிய அனைவரும் வந்து பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபட்டார்கள். பிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும். 1. நித்திய பிரதோஷம் 2. பக்ஷப் பிரதோஷம் 3. மாதப் பிரதோஷம் 4. மஹாப் பிரதோஷம் 5. பிரளயப் பிரதோஷம் சுக்லபக்ஷ சதுர்த்தி மாலைக் காலம் பக்ஷ பிரதோஷம் எனப்படும். கிருஷ்ண பக்ஷ திரயோதசி மாதப் பிரதோஷம் என வழங்கப்படும். கிருஷ்ண பக்ஷ திரயோதசி, ஸ்திரவாரமாகிய சனிக் கிழமை தினம் வந்தால் அதுவே மிக்கச் சிறப்புடைய மஹா பிரதோஷம் எனப்படும். பிரளய காலத்தில், எல்லாம் சிவனிடம் ஒடுங்கும். அதுவே பிரளயப் பிரதோஷமாகும். இந்த ஐந்து பிரதோஷ விசேஷ காலங்களில் எம்பெருமான் ஆனந்தத் தாண்டவம் புரிந்து, அகில லோகங்களுக்கும் அருள்புரிகின்றனர். இத்தகைய மகிமை மிக்க பிரதோஷ விரதத்தை அனைவரும் அனுஷ்டித்து சர்வேசுவரனுடைய அருளைப் பெற்று சகல சௌபாக்கியங்களையும் பெற வேண்டும். இவ்விரதம் அனுஷ்டிப்பதால் பாபம் விலகி புண்ணியம் சேரும், சர்வ சௌபாக்கியங்களும் தானே வந்து நம்மைச் சேரும். ஈசனைப் பிறை அணிந்த பெருமானாக தேவி யோடும் முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாக தரிசித்து வழிபடுவோர், தேவலோகத்தில் இந்திரனுக்கு சமமாக வாழ்வர். திரிசூலம் தாங்கி, நான்கு கைகளுடனும் மூன்று கண்களுடனும் ஏகபாதத்துடனும் விளங்கும் ஈசனை ஏகபாத மூர்த்தியாக வழிபடுவோர் முக்தி பெறுவர். நந்தியுடன் சிவகணங்கள் ஈசனைப் பணிந்து வணங்கும் உருவிலே ஆராதிப்பவர், கணங்களுக்குத் தலைவனாக விளங்குவர். ரிஷபத்தில் மதிசூடிய மஹேசுவரனை தேவியுடன் ரிஷபாருட மூர்த்தியாக பிரதோஷ காலத்தில் வழிபடுவோர் ஆயிரம் அசுவமேத யாகங்களைச் செய்த பலனைப் பெறுவர். மானிடப் பிறவி எடுத்த பயன் வீணாகாமல் இருப்பதற்கு இப்பிரதோஷ விரதத்தை நமது நித்ய கர்மா போல் அவசியம் அனுஷ்டிக்க வேண்டும். சிவகணத்தவர்களுக்குத் தலைவராக விளங்கும் நந்தி தேவர் ஒப்பற்ற பெருமையைப் பெற்றவர். தர்மமே உருவானவர். சிவாய நம: எனும் ஸ்ரீபஞ்சாக்ஷர வடிவ மானவர். எம்பெருமானுக்கு வாகனமாக இருக்கும் பேறு பெற்றவர். அயன், அரி, இந்திரன், தேவர்கள், முனிவர்கள் முதலியோரால் போற்றப்படுபவர். பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு நெய் விளக் கேற்றி, வெல்லம் கலந்த அரிசியை நிவேதிப்பர். அருகம் புல் ஆராதனையும் நடைபெறும். வில்வதளத்தால் அர்ச் சனையும் அலங்காரமும் செய்வர். திருக்கயிலை மாமலையில் ஐயன் உமையம்மை யுடன் நவரத்தினமணி பதித்த மரகத ஊஞ்சலில் எழுந் தருளுவர். அதுசமயம் எதிரிலே காட்சி தரும் ரிஷப தேவரின் மூச்சுக்காற்று பட்டு ஊஞ்சல் மிக அழகாக ஆடும். இக்காரணம் பற்றியே சிவசன்னதிக்கு முன்னால் நந்தி தேவர் திருத்தோற்றமளிக்கிறார். ஊழிக்காலத்தில், ஏழு கடலும் ஒரு கடலாகி பிரபஞ் சமே ஒன்றினுள் ஒன்று அடங்கி அடங்கி, இறுதியிலே அனைத்துமே சிவனுள் அடக்கம் என்னும் நிலையில், பிரம்மாதி தேவர்கள், முனிவர்கள் கூட சிவசக்தியினுள் அடங்கி ஒடுங்கி விடுகின்றனர். அதுசமயம் நந்திதேவர் மட்டும் எம்பெருமான் திருக் கருணையால், சிவனுள் ஒடுங்காமல் சிவனின் வாகனமாய் விளங்குகிறார். பிரதோஷ வேளைகளில், பரமேஸ்வரன் உலக சக்தி முழுவதையும் தம் வசம் ஒடுக்கிக் கொண்டு நர்த்தனம் செய்யும் வேளையில் நாம் ஈசுவரனை வழிபட வேண்டும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷம் விரதம் அனுஷ்டிக்கும் முறை - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Pratosham is the method of fasting - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]