பெண்மையின் பெருமை

குறிப்புகள்

[ இல்லறம்: உறவுகள் ]

Pride of womanhood - Tips in Tamil



எழுது: சாமி | தேதி : 16-09-2023 02:33 pm
பெண்மையின் பெருமை | Pride of womanhood

குடும்ப வாழ்வில் கணவன் மனைவி உறவு புனிதமானது தெய்வீகமானது.

பெண்மையின் பெருமை:


"குடும்ப வாழ்வில் கணவன் மனைவி உறவு புனிதமானது தெய்வீகமானது. ஆண் பெண் இருபாலரும் வரையறையற்ற அன்பால் வாழ்க்கைத் துணைவர்களாகி ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் உலகில் வாழ்ந்து பேரின்ப நிலையை எய்த ஏற்றபடி இறை ஆற்றலால் அமைக்கபட்டிருப்பதே ஆண் பெண் எனும் இரண்டு வகையில் அமைந்த பால்வேறுபாடுள்ள பிறப்புகள். ஆண்களும் பெண்களும் அநேகமாக சரிபாதியாக உள்ள மனித குலத்தில் அந்த பாதி எண்ணிக்கையுடைய ஆண்களைப் பெற்றெடுத்தவர்கள் பெண்களேயாம். பெண்மையின் பெருமையினை உணர்வதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

 

எந்த ஒரு ஆணோ பெண்ணோ பிறக்க வேண்டும் என்றால் பெண்ணின் கருப்பையில் உருவாகி அவள் ரத்தத்தையே உடலில் ஏழு தாதுக்களாக ஏற்றுக் கொண்டு, முழு உருவம் பெற்று வெளி வருவது ஒரு வியப்பு அல்லவா. இறைநிலையின் பெருமையை அதன் பேரறிவின் தன்மையை எடுத்துக்காட்டுகின்ற இயற்கையின் வெளிச்சச் சுடர் பெண்மை ஆகும்.

 

மேலும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு பெண்ணின் துணையும் உதவியும் எந்த அளவு கலந்து இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு யாராலும் கூற முடியுமா? இத்தகைய பெரும் வியப்பான பெண்மையை மனித இனம் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக பெண்மைக்கு நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்று நான்கு குணங்களை வர்ணிப்பார்கள். மேலும் ஒரு தெய்வீகக் குணம், தியாகம் என்பது பெண்மையிலேயே இயல்பாக அமைந்திருக்கிறது என்பதும் நினைவு கொள்ள வேண்டும். மனித உற்பத்தி வாழ்க்கை இவற்றில் பெண்மையின் பங்கினை யூகித்துப் பார்ப்போம்.

 

கரு வளரும்போது பத்து மாதங்கள் வயிற்றுக்குள் பெண் தான் வைத்துச் சுமக்கிறாள். பிறந்த பிறகு அதன் வளர்ச்சியில் பெரும் பகுதி காலத்தில் அதே குழந்தையைச் சுமந்து கொண்டும் இருக்கிறாள். இவ்வாறு இன்னும் பல நிலைகளிலும் குடும்பப் பொறுப்பில் உள்ள எல்லாச் சிக்கல்களையும், துன்பங்களையும், கடமைகளையும் சுமந்து கொண்டிருப்பதிலும் ஆண்களை விடப் பெண்கள்தான் அதிகமாகப் பங்கு பெற்றிருக்கிறார்கள். இத்தகைய பெண்ணினத்திற்குப் பொருளாதாரத் துறையில் சமத்துவம் அளிக்காமல் எக்காலத்தும் அடிமையாகவே நடத்துகின்ற ஆண் மக்களின் செய்கை இறைநிலைக்கே செய்யக் கூடிய முரண்பட்ட காரியம் பாவ காரியம் ஆகும்.

 

பெண்களால் பெரிய நன்மைகளை எல்லாம் தொடர்ந்து பெற்ற ஆண்கள் கூட மனைவியை பாராட்டுவதற்கு ஒரு கஞ்சத்தனம்! ஒரு சிறிய பாராட்டு வாய் திறந்து சொன்னால் அவள் கை ஓங்கிவிடுமாம்! தானாக தன்னுடைய மனைவியைப் பாராட்டி அதிலே இருந்து அந்த மகிழ்ச்சியை அடையக்கூட மறுக்கக்கூடிய உள்ளங்களுக்கு  அன்பு என்பது எங்கே உண்டாகும்? இதற்கு அடிப்படை காரணம் என்ன என்றால் நீண்டகாலமாகப் பழக்கத்தில் பெண்களை சாதாரணமாக உபயோகப்படக்கூடிய பொருளாகவே மதித்து மதித்து அதே மாதிரி நிலையிலே பல நூல்கள் வந்ததனால் அந்தக் கருத்து இன்றும் நிலவி வருகிறது. பெண்களுக்குச் சமஉரிமை மாத்திரம் இல்லை, பெரிய மதிப்பும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதுதான் ஒரு கவியிலே எழுதி இருக்கிறேன்:

"பெண் வயிற்றி லுருவாகிப்

பெண் பாலுண்டே வளர்ந்தாய்

பெண் துணையால் வாழ்கின்றாய்

பெண்ணின் பெருமை உணர்,"

என்று தாய்க்குலத்திற்கு நாம் ஏன் அவ்வளவு மதிப்புத்தர வேண்டியதாக இருக்கிறது என்று உலக சமாதானம் என்ற நாலில் ஒரு இடத்தில் விளக்கம் கொடுக்கும்போது,

"பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்

பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்

பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறென்ன

பெருமை இதைவிட எடுத்துச் சொல்லுதற்கு?

பெண்ணினத்தின் இயல்புபெற்ற மக்கள் தம்மை,

பிறர் வளர்க்க அனுமதியார், மனமும் ஒவ்வார்,

பெண்ணினத்தின் விடுதலைக்கு இந்தத் தியாகம்,

பேருலக அமைதிக்கும் அவசியம் ஆம்."

என்று எழுதியுள்ளேன். வேறு என்ன பெருமை இதைவிட எடுத்துக்கூறுவதற்கு? வேறு ஒரு பெருமையும் நீங்கள் பேச வேண்டியதில்லை.   எல்லோருமே பெண்களால் அளிக்கப்பட்ட, பெறப்பட்ட பிள்ளைகள்தான் என்பதை உணர்ந்தாலே போதும். சம உரிமை மாத்திரம் அல்ல இன்னும் பிரத்தியட்சமாகச் சில உரிமைகள் கூட அவர்களுக்குக் கொடுத்து நாம் வாழவைக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

 

தியானம் செய்து முடிந்தவுடனே மனைவியைக் கணவனும், கணவனை மனைவியும் "வாழ்க வளமுடன்" என்று மூன்று முறை வாழ்த்த வேண்டும். வாழ்த்துதல் மிக்க நலமுடைய ஒரு செயல். ஏனென்றால் கணவன் மனைவி உறவு சரியாக இருந்தால்தான் இருவருடைய வாழ்க்கையும் அமைதியாக இருக்கும். எந்தக் காரியத்திற்கு எந்தச் செயலுக்குச் சென்றாலும் அது வெற்றியாக அமையும். மேலும் கணவன் மனைவி உறவு நல்ல முறையிலே இருந்தால், அமைந்தால் அவர்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகள் நல்ல குழந்தைகளாக சமுதாயத்திற்கு ஏற்ற குழந்தைகளாகப் பிறக்கும். எனவே தம்பதிகளுக்கிடையே இனிமையான உயிர்க்கலப்பு உணர்வு நல்லுறவு அவசியம்".

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏது?

பெண்ணின்றி ஆண் தான் உண்டோ உலகில்?

பெண்மை மதிப்போம்!

பெண்மையை காப்போம்!


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 பெண்கள் அனைவருக்கும்

ச     ம     ர்     ப்     ப     ண     ம்

"""""""""""""""""""""""""""""""


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

இல்லறம்: உறவுகள் : பெண்மையின் பெருமை - குறிப்புகள் [ இல்லறம் ] | Household: Relationships : Pride of womanhood - Tips in Tamil [ domesticity ]



எழுது: சாமி | தேதி : 09-16-2023 02:33 pm