புரட்டாசி மாதச் சிறப்புக்கள்

பெருமாள்

[ பெருமாள் ]

Puratasi month specials - Perumal in Tamil

புரட்டாசி மாதச் சிறப்புக்கள் | Puratasi month specials

மாதங்களில் மிகவும் சிறப்புமிக்க புரட்டாசி மாதம் பெருமாளுக்குப் பெரிதும் உகந்தது.

புரட்டாசி மாதச் சிறப்புக்கள்...

 

மாதங்களில் மிகவும் சிறப்புமிக்க புரட்டாசி மாதம் பெருமாளுக்குப் பெரிதும் உகந்தது. இம்மாதத்தில் ஒவ்வொரு சனிக் கிழமையும் நாராயணா... கோபாலா..... என்ற திருநாமத்தைக் கூறி, 'தளியல்' என்னும் பெருமாள் விரதம் இருந்து பெருமானை வழிபடுவது மிகச்சிறப்பு!.

 

இந்த வழிபாட்டால் குசேலரின் வறுமை நீங்கியது போன்று நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது ஐதீகமாக உள்ளது!!.

 

பொன்னுருக காய்ந்து, மண் உருக மழை பொழியும் விந்தை மாதமே புரட்டாசி. பன்னிரு ஆழ்வார்கள் பயபக்தியுடன் தொடுத்த பாமாலையில் திருமாலின் திருப்பெருமை குறித்த அற்புதப் பாசுரங்களின் தொகுப்பே நாலாயிர திவ்விய பிரபந்தம்.

 

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார். "படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே...' என்று தன் உள்ளக்கிடக்கையைக் கூறி மகிழ்கின்றார். திருமலை திருப்பதியில் பக்தர்களின் பாதங்கள் தன் தலைமேல் பட வேண்டும் என்ற பேராவல் குலசேகர ஆழ்வார்க்கு இருந்ததைக் காண முடிகிறது.

 

பெருமாளுக்கு உகந்த மாதம் இந்தப் புரட்டாசி மாதம். இந்த மாதத்தின் சிறப்பே பெருமாள் வழிபாடுதான்!!. நலம் தரும் சொல்லே 'நாராயணா' என்னும் அமுதமொழியாகும். அனந்த பத்ம நாபன் ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றார். 'ஸ்ரீ' என்கிற மஹாலக்ஷ்மியை தன் நெஞ்சக் கமலத்தில் தாங்கி, செந்தாமரைக் கண்ணனாக திருமால் திருக்காட்சி தருகின்றார்.

 

அவர் அருட்கருணையோடு எடுத்த அற்புத அவதாரங்களே தசாவதாரங்கள். ஒவ்வொரு அவதாரமும் ஒப்பற்றவை!!. இவைகளில் மிகவும் புகழ் வாய்ந்த அவதாரம் என்று சொன்னால், ஸ்ரீ ராமாவதாரம், ஸ்ரீ கிருஷ்ணாவதாரம், ஸ்ரீ நரசிம்ம அவதாரம், ஸ்ரீ வாமன அவதாரம் என்று சொல்லலாம்!.

 

வாமன அவதாரம் எடுத்து மூன்று உலகங்களையும் அளந்தவர் பெருமாள். ஸ்ரீ ராம அவதாரத்தில் தென் இலங்கை சென்று அரக்கர் கூட்டத்தையே அழித்து புத்தி புகட்டினார்.

 

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து, மக்களைக் காத்தார். தேவகியின் மகனாகத் தோன்றினாலும், ஒரே இரவில் யசோதையின் மகனாக மாறி வளர்ந்த விந்தைக் குரியவர் ஸ்ரீ கிருஷ்ணர் . மாயவன் - மாதவன் - மாலவன் - மணி வண்ணன் - மதுசூதனன் என்றெல்லாம் ஆண்டாள் தனது திருப்பாவை பாசுரத்தில் பெருமாளைப் போற்றுகிறாள். புரட்டாசியில் பெருமாளை வணங்கினால் இல்லத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : புரட்டாசி மாதச் சிறப்புக்கள் - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Puratasi month specials - Perumal in Tamil [ Perumal ]