கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தேக்கம்பட்டி செல்லும் சாலையில் ஸ்ரீ வன பத்ரகாளியம்மனின் திருக்கோயில் அமைந்துள்ளது.
தாலியை உண்டியலில் போட்டு...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து
ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தேக்கம்பட்டி செல்லும் சாலையில் ஸ்ரீ வன பத்ரகாளியம்மனின்
திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த வன பத்ரகாளியிடம் குழந்தை வரம்
வேண்டி வரும் பெண்கள் ஏராளம். இந்தக் கோயிலில் உள்ள தொரத்தி மரத்தின் நுனியில் கல்லை
வைத்து தொட்டில் கட்டுவதை பெண்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழிபாட்டால்
குழந்தை பாக்கியம் வேண்டும் என்று கேட்கும் அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறி அன்னையின்
திருவருள் சித்திக்கின்றது!
மேலும் இந்தக் கோயிலில் புதிதாகத் தொழில்
தொடங்கும் நபர்கள், திருமணம்
பற்றி கேட்கும் நபர்கள், அம்மன்
முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம். அவர்கள் சிவப்பு, வெள்ளைப் பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு அவற்றை அம்மனின்
காலடியில் வைத்து எடுத்துப் பிரித்துப் பார்க்கிறார்கள்.
மனதில் எந்தப் பூவை நினைக்கிறார்களோ
அந்தப் பூ வந்து விட்டால் அம்மன் உத்தரவு தந்து விட்டதாகக் கருதி அந்தச் செயலை நிறைவேற்றுகிறார்கள்.
மனதில் நினைக்காத பூ வந்து விட்டால், அந்தச் செயலை விட்டு விடுகிறார்கள்.
அதேபோல், வேண்டிய காரியங்கள் நன்றாக முடிந்தால், பெண்கள் தங்களது தாலியை உண்டியலில்
போட்டு நேர்த்திக் கடன் செலுத்துவதும் இங்கு வழக்கமாக உள்ளது.
இந்த வன பத்ரகாளி கோயிலில் ஆடிக்குண்டம்
திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது. விழாவின் இரண்டாம் செவ்வாய் கிழமை பூக்குண்டம் அமைத்து.
மூன்றாம் செவ்வாய் மறுபூஜை செய்து, விழா மிகப் பிரம்மாண்டமாய் நடைபெறும். இதற்காக 36 அடி நீளமுள்ள பூக்குண்டம் அமைக்கப்படும்.
இந்தப் பூ மிதி திருவிழாவில் இரண்டு லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கு பெறுவது கண்கொள்ளாக்
காட்சியாக இருக்கும்!
ஆடி அமாவாசை இந்தக் கோயிலில் விசேஷமான
நாள் ஆகும். வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. ஆயிரம்
ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் வனப்பகுதியில் இருப்பதால், ‘வன பத்ரகாளியம்மன் கோவில்' என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் மூலத்
திருமேனி சுயம்பு லிங்க வடிவில் அமைந்துள்ளது. கோவிலின் தல விருட்சம் தொரத்தி மரம்.
தீர்த்தம் பவானி தீர்த்தம்.
இங்கு அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ வனபத்ரகாளியை
அமாவாசை தோறும் வந்து வழிபடுவோர் பில்லி, சூன்யம், பெரும்
பகை போன்ற இடர்பாடுகள் நீங்கி வாழ்வில் சுகம் பெறுவார்கள் என்பதும் திருமணம், குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பதும்
ஐதீகமாக உள்ளது. இங்கு ஆடு பலியிடுதல் விசேஷம். ஞாயிறு, செவ்வாய், புதன்கிழமைகளில் அந்த நேர்த்திக் கடனை
நிறைவேற்றுகிறார்கள்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : தாலியை உண்டியலில் போட்டு... - வன பத்ரகாளியம்மன் கோவில் [ அம்மன் ] | Amman: History : Put the thali in the piggy bank... - Vana Bhadrakaliamman Temple in Tamil [ Amman ]